போதையில்லாத உலகம் காண்போம்

போதையில்லாத உலகம் காண்போம்

போதைவஸ்துப் பாவனை இன்றைய உலகை அழிவின் விளிம்பை நோக்கி அழைத்துச் செல்கின்றது. இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பாதாள உலக சாம்ராஜ்யத்தின் வருமானத்திற்கான வழியாகவும் இது அமைந்துள்ளது. உலகை அழிவிலும், இழிவிலும் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றால் அரச அங்கீகாரம் பெற்ற, பெறாத அனைத்துவகை போதை பாவனைகளும் முற்றாகத் தடுக்கப்பட வேண்டும்.

போதை பாவனை என்றதும் எவரும் எடுத்த எடுப்பிலேயே சாராயத்தையோ, ஹெரோயினையோ பாவிக்கப் போவதில்லை. சிகரட், பான்பராக் போன்ற தீய பழக்கங்கள் ஊடாகத்தான் போதையின் பக்கம் இன்றைய சமூகம் ஈர்க்கப்படுகின்றது. எனவே, புகைத்தல், பான்பராக் போன்றவற்றிலிருந்தும் மக்களைப் பாதுகாக்க வேண்டியுள்ளது.

இன்றைய சினிமாக்களும், விளம்பரங்களும் புகைத்தலை ஒரு ஸ்டைலாகக் காட்டுகின்றன. அதன் மூலம் இளம் சமூகம் கவரப்படுகின்றது. புகைத்தல் தொடர்பான புள்ளிவிபரங்களை ஆராய்ந்தால் போரினால் ஏற்படும் உயிர் இழப்புக்களை விட புகைத்தல் ஏற்படுத்தும் உயிரிழப்புக்கள் அதிகம் என்று கூறுமளவுக்கு இதில் பாதிப்புள்ளது.

உயிரிழப்பு சுகாதாரக் கேடு மட்டுமன்றி பாரிய பொருளாதார இழப்பையும் சிகரட் மற்றும் போதைப் பாவனையாளர்கள் அனுபவித்து வருகின்றனர்.

ஒரு சிகரட் பத்து ரூபாய் என்றால் சராசரியாக ஒரு நாளைக்கு ஒருவன் ஏழு சிகரட் பாவித்தால்,

ஒரு நாளைக்கு 7 x 10 = 70
ஒரு மாதத்திற்கு 70 x 30 = 2100
ஒரு வருடத்திற்கு 12 x 2100 = 25,200
பத்து வருடத்திற்கு 10 x 25,200 = 2,52,00

இப்படியே கணக்குப் பார்த்தால் பல இலட்சம் ரூபாய்கள் வீணாக விரயமாக்கப்படுகின்றன.
மதுப்பாவனை, குடு பாவனை என்பது இதை விட ஆபத்தானதும், அழிவைத் தரக் கூடியதுமாகும்.

அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்துள்ள மிகப்பெரும் அருளே பகுத்தறிவுதான். கொஞ்ச நேரம் தனது பகுத்தறிவை இழப்பதற்காக பணம் கொடுத்து மது அருந்துவது எவ்வளவு பெரிய பைத்தியகாரத்தனம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்!

மது தீங்கு விளைவிக்கக் கூடியது. அது அரச அங்கீகாரம் பெற்ற விற்பனை நிலையத்தில் வாங்கினாலும் தீங்குதான். மதுப் பாவனையினால்தான் களவு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு – பெற்ற பிள்ளையை தந்தையும், சகோதரியை உடன் பிறந்த சகோதரனும் பாலியல் பலாத்காரம் செய்வது போன்ற மிகப் பெரும் கொடூர குற்றச் செயல்கள் பெருகி வருகின்றது.

மதுப்பாவனை முற்றாகத் தடுக்கப்பட்டால் சிறைச்சாலைகள், வைத்தியசாலைகள் என்பவற்றில் பாரிய வெற்றிடத்தைக் காணமுடியும். பெருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். அது மட்டுமன்றி சேமிப்புப் பழக்கம், நல்ல பண்புகள் கொண்ட உள்ளம் கொண்ட புதிய உலகத்தைக் காணலாம்.

இன்று வாகன விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இவ்விபத்துக்களுக்கு வேறு காரணங்கள் இருந்தாலும் பெரும்பாலான விபத்துக்களுக்கு போதைப் பாவனையே முக்கிய காரணமாகத் திகழ்கின்றது.

மதுபான விற்பனையால் ஒரு கூட்டம் இலாபம் அடைகின்றது. அந்த ஒரு சிரிய கூட்டத்தின் நலனுக்காக நாடு, சமூகம், குடும்பம், பாரம்பரியம்,… போன்றன நாசமாக இடமளிப்பது மேற்கூறிய நாடு, சமூகம், குடும்பம், பாரம்பரியம்,.. போன்ற அனைத்துக்கும் நல்லதல்ல.

இந்த அடிப்படையில் மதுபானத்தை அரசு முற்றாகத் தடை செய்ய வேண்டும். அரசு தடுக்காவிட்டால் கூட சுய புத்தியும், மார்க்க போதனையும் எமக்கு மதுவைத் தடுக்கின்ற காரணத்தினால் மது வகைகளை மனித இனம் முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும்.

நற்புக்காவோ, நாகரிம் என்ற போர்வையிலோ, சும்மா இன்று மட்டும் நாளை இல்லை என்ற எண்ணத்திலோ, இதில் அப்படியென்ன சுகம் இருக்கின்றது என்றுதான் ஒரு முறை பார்ப்போமே என்ற எண்ணத்திலோ சிகரட், மது, மற்றும் உள்ள இன்னோரன்ன போதைப் பொருட்களைப் பாவித்துவிடக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். இப்படி ஆரம்பித்தவர்கள்தான் இப்போது அதை விட முடியாமல் கொடூர நோயினாலும், கேவலத்தினாலும் அசிங்கப்பட்டும், அவஸ்தைப்பட்டும் கொண்டிருக்கின்றனர்.

மது போதை என்பது எல்லா வகையிலும் தீமையானது. எனவே, இஸ்லாம் போதையை முற்றாகத் தடுப்பதுடன் போதை பரிமாறப்படும் சபையில் இருப்பதையும் கண்டிக்கின்றது.

மது குடிப்பது மட்டுமன்றி அடுத்தவருக்குக் கொடுப்பது, உற்பத்தி செய்வது, விற்பனை செய்வது, வாங்குவது, குடிப்பதற்கு உதவி செய்வது… போன்ற அனைத்துமே இஸ்லாத்தின் பார்வையில் ஹராமாகும்.

எனவே, முஸ்லிம்களாகிய நாம் போதையை விட்டும் முழுமையாக விலகி இருப்பதுடன் மாற்றுமத சகோதரர்களையும் இந்த அழிவில் இருந்து பாதுகாக்க முயற்சிப்போமாக! அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள்பாளிப்பதுடன் போதையின் கொடூரத்தை விட்டும் எம்மைப் பாதுகாப்பானாக!

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *