பொதுச் சட்டத்தில் விதிவிலக்கு | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-30 [சூறா அந்நிஸா–07]

பொதுச் சட்டத்தில் விதிவிலக்கு

“இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்.” (4:11)

உங்கள் குழந்தைகளில் பெண்ணுக்குக் கொடுப்பது போன்ற இரண்டு மடங்கு ஆண் பிள்ளைக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று இந்த வசனம் கூறுகின்றது. உங்கள் பிள்ளைகள் என்று இங்கு குறிப்பிடப்படுகின்றது. இந்தப் பொதுச் சட்டத்தில் இருந்து சிலர் விதிவிலக்காகுவார்கள்.

நபிமார்களின் வாரிசுகள்:
ஒரு நபிக்குக் குழந்தை இருந்தால் அவரது சொத்துக்கு அந்தக் குழந்தை வாரிசாக மாட்டாது. அவரது சொத்துக்கள் (ஸதகா) தர்மமாகவே அமையும். “உங்கள் குழந்தைகள்” என்பதில் நபிமார்களும் அவர்களது பிள்ளைகளும் அடங்குவார்கள் என்றாலும், ஹதீஸ் அவர்களை இந்த பொதுச் சட்டத்தில் இருந்து விதிவிலக்காக்குகின்றது.

இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: “(இறைத்தூதர்களான) எங்களுக்கு யாரும் (சொத்தில்) வாரிசாவதில்லை. நாங்கள் விட்டுச் செல்பவை யெல்லாம் தர்மமேயாகும்.”
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) | நூல்: புகாரி – 6727

இவ்வாறே ஒரு மகன் தனது தந்தையின் சொத்தை அடைந்து கொள்வதற்காக அவரைக் கொலை செய்தால் அவனுக்கு சொத்தில் பங்கு கொடுக்கப்படமாட்டாது. இவ்வாறே, முஸ்லிமான தந்தைக்கு காபிரான மகனோ, அல்லது காபிரான மகனுக்கு முஸ்லிமான தந்தையோ வாரிசாக முடியாது.

“நபி(ச) அவர்கள், ‘இறை நம்பிக்கையாளர், இறைமறுப்பாளருக்கு வாரிசாக மாட்டார். அவ்வாறே இறைமறுப்பாளரும் இறைநம்பிக்கையாளருக்கு வாரிசாகமாட்டார்’ என்று கூறினார்கள். ஸுஹ்ரீ(ரஹ்) அவர்களிடம், ‘அபூ தாலிபுக்கு யார் வாரிசானார்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அவருக்கு அகீலும், தாலிபும் வாரிசானார்கள்’ என்று பதிலளித்தார்கள்.” (நூல்: புகாரி 4283, 6764)

உங்கள் குழந்தைகளுக்கு சொத்தைக் கொடுங்கள் என குர்ஆன் பொதுவாகக் கூறும் போது காபிரான உங்கள் குழந்தைக்கு வாரிசுரிமை இல்லையென ஹதீஸ் கூறுகின்றது. இதை வைத்து இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரணானது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. குர்ஆன் பொதுவாகச் சொன்ன சட்டத்தில் சுன்னா சில விதிவிலக்குகளைக் கூறி விளக்குவதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *