பீ.ஜே. யின் கருத்துக்களை மீளாய்வு செய்யுங்கள்| தொடர் 02 | கட்டுரை.

குர்ஆனின் நேரடி அர்த்தத்திற்கு மாற்றமாகத் தனது விளக்கத்தை முற்படுத்துதல்.

இவரது தர்ஜமா விளக்கக் குறிப்புக்களில் அநேகமாக இந்தத் தவறைச் செய்துள்ளார்.

உதாரணமாக:

ஆதம், ஹவ்வா இருவரையும் அல்லாஹ் சுவர்க்கத்தில் நிர்வாணமாக விடவில்லை. ஆடையுடன்தான் விட்டான் என குர்ஆன் கூறுகின்றது.

‘நிச்சயமாக அதில் நீர் பசித்திருக்க மாட்டீர். மேலும், நீர் நிர்வாணமாக இருக்கவும்; மாட்டீர்.”
(20:118)

‘சுவர்க்கத்தில் நிர்வாணமாக மாட்டீர்கள்” என அல்லாஹ் கூறுகின்றான். அவர்கள் தடுக்கப்பட்ட கனியைப் புசித்ததும் நிர்வாணமானார்கள். ஆனால், அவர் தனது 174 விளக்கக் குறிப்பில் அவர்கள் சுவர்க்கத்தில் நிர்வாணமாக இருந்ததாகவும் அவர்கள் கனியைக் உண்டதும் பாலுணர்வு ஏற்பட்டதாகவும் பதிகின்றார். அவர்கள் நிர்வாணமாகவே இருந்தனர். கனியை உண்ட பின்னர்தான் தாம் நிர்வாணமாக இருப்பதை அறிந்தனர் என்பது அவரது கருத்தாகும். தடுக்கப்டபட் மரத்தை பாலுணர்வை ஏற்படுத்தும் மரம் என இவராக விளக்கம் எடுத்து குர்ஆனின் நேரடிக் கருத்துக்கு மாற்றமாக தர்க்க வாதங்களை முன்வைக்கின்றார்.

கொள்கைக் குழப்பங்கள்:
இவர் தனது விளக்கக் குறிப்புக்களில் யூகத்தின் அடிப்படையில் பேசி பல கொள்கைக் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளார்.

1.மலக்குகள்:
மலக்குகள் தப்புத் தவறு செய்யமாட்டார்கள் என்பது இஸ்லாமிய அகீதாவாகும். இது ஈமானின் முக்கிய பகுதியாகும்.

இவர் தனது தர்ஜமா விளக்கக் குறிப்பு 395- ஹாரூத், மாரூத் எனும் தலைப்பில் இந்த இஸ்லாமிய அகீதாவுக்கு மாற்றமாக எழுதுகின்றார்.

மனித சமூகத்தை இறைவன் படைக்க விருப்பதாக அறிவித்தவுடனேயே மலக்குகள் தங்கள் ஆட்சேபனையை வெளியிட்டார்கள்.

முன்பு ஆட்சேபனை செய்த போது அவர்களுடன் ஷைத்தான் இருந்தான். மேற்கண்டவாறு ஆட்சேபனை செய்யுமாறு அவர்களை அவன் தூண்டி விட்டிருக்க முடியும் எனக் கூறி ஒட்டுமொத்த மலக்குகளும் ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டு அல்லாஹ்வுக்கு ஆட்சேபனை செய்ததாகக் கூறுகின்றார்.

அது மட்டுமன்றி மனிதனுக்காக அவர்கள் ஸஜ்தாவும் செய்து தங்கள் தவறுக்குப் பரிகாரம் தேடிக் கொண்டனர்.

இவ்வாறு எழுதி மலக்குகள் மனிதனுக்காக ஸஜ்தா செய்ததாகவும் தாம் செய்த தவறுக்குப் பரிகாரத்திற்காக ஸஜ்தா செய்ததாகவும் கூறி இஸ்லாமிய அகீதாவுக்கு முரணாக எழுதுகின்றனர். (குறிப்பு: அண்மைக் கால வெளியீட்டில் சில மாற்றங்களைச் செய்துள்ளார்.)

2. நபிமார்கள்:
இவர் தனது தர்ஜமாவிலும் விளக்கக் குறிப்புக்களிலும் நபிமார்களின் கண்ணியத்திற்கு கலங்கம் கற்பித்துள்ளார்.

உதாரணம்:

‘(யூனுஸ் ஆகிய) மீனுடையவரையும் (நபியே! நீர் எண்ணிப் பார்ப்பீராக!) ‘அவர் கோபத்துடன் சென்ற போது நாம் அவரை நெருக்கடிக்குள்ளாக்கமாட்டோம்” என அவர் எண்ணிக் கொண்டார். எனவே, அவர் இருள்களில் இருந்து கொண்டு ‘(உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் உன்னையன்றி வேறு யாருமில்லை. நீயே தூய்மையானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஆகிவிட்டேன்” என (பிரார்த்தித்து) அழைத்தார்.” (21:87)

இதை பீ.ஜே. மொழியாக்கம் செய்யும் போது, ‘அவர் மீது நாம் சக்தி பெறமாட்டோம் என்று நினைத்தார்.” என மொழியாக்கம் செய்துள்ளார். ஒரு நபி அல்லாஹ்வின் ஆற்றலைக் குறைத்து மதிப்பிட்டிருந்ததாகக் கூறுகின்றார். இது யூனுஸ் நபியின் இறை நம்பிக்கைக்கு களங்கம் கற்பிக்கும் மொழியாக்கமாகும்.

இவர் தனது விளக்கக் குறிப்புக்களில் நபிமார்களின் மீது கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளார். உதாரணமாக, 337 ஆம் இலக்க விளக்கக் குறிப்பில் தவூத் நபி செய்த தவறு என்ற தலைப்பில்,

‘தாவூத் நபியவர்கள் மன்னராக இருந்ததால் அரண்மனையை விரிவுபடுத்துவதற்காக சாதாரண மக்களின் நிலத்தைக் கையகப்படுத்தியது போன்ற ஒரு ஒரு தவறைச் செய்திருக்கக் கூடும் என்று குறிப்பிடுகின்றார். அண்மைக்கால வெளியீடுகளில் சில வாசக மாற்றங்களை இதில் செய்துள்ளார்.

இவ்வாறான இஸ்லாமிய அகீதாவுக்கு முரணான பல அம்சங்களை இவரது தர்ஜமா கொண்டுள்ளது. அதுவே சிங்களத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரது தமிழ் மற்றும் சிங்களத் தர்ஜமாக்களைப் பொதுமக்கள் படிக்காமல் இருப்பதே ஏற்றமானதாகும்.

இவர்,

அல் குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருப்பதாகச் சொல்கின்றார்.
இலக்கணப்பிழைகள் இருப்பதாகவும் பேசியுள்ளார்.
சூனியம் இருக்கிறது, அல்லாஹ் நாடினால் அதற்குப் பாதிப்பும் உண்டு என்ற அஹ்லுஸ் சுன்னாவின் கருத்தில் இருப்பவர்களை முஷ்ரிக்குகள் என்றும் அவர்களுக்குப் பின்னால் தொழக் கூடாது என்றும் கூறுகின்றார்.
குர்ஆனுக்கு முரண்படுவதாகவும், அறிவுக்கும் விஞ்ஞானத்திற்கும், நிகழ் கால நடத்தைக்கும் முரண்படுவதாகவும் கூறி ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுப்பதுடன் அவர் மறுத்த ஹதீஸ்களை ஏற்பதை வழிகேடாகவும் சித்தரித்து வருகின்றார்.
நபித்தோழர்களை கிரிமினல், ஆட்சி மோகம் கொண்டவர்கள் என்றெல்லாம் பேசியுள்ளார். நபியவர்கள் எப்போது மரணிப்பார்கள், ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தது போல் அன்ஸாரிகளைச் சித்தரிக்கின்றார். உஸ்மான்(ர) அவர்களுக்கு நிர்வாகம் செய்யத் தெரியாது, மாமன் மச்சானுக்கெல்லாம் பதவி கொடுத்தார், பைத்துல்மால் பொது நிதியைக் குடும்பத்திற்குக் கொடுத்தார் என்றெல்லாம் உஸ்மான்(ர) அவர்களைக் கொலை செய்த குழப்பக்காரர்கள் கூறிய குற்றச்சாட்டுக்களையெல்லாம் நியாயப்படுத்திக் கூறுகின்றார்.
நபித்தோழர்களை விட நாமே அதிகமாக மார்க்கத்தை அறிந்தவர்கள் என்கின்றார். குளிப்பின் சட்டம், வுழூவின் சட்டம் போன்ற சின்னச் சின்ன விடயங்கள் கூட அவர்களுக்குத் தெரிந்திருக்க வில்லை என அவர்களை விமர்சிக்கின்றார்.
குறைந்த எண்ணிக்கையானவர்களே ஹதீஸ்களை அறிவித்துள்ளனர் எனத் திரும்பத் திரும்ப எழுதியும் பேசியும் ஒட்டு மொத்த ஹதீஸ்கள் மீதும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி வருகின்றார்.
ஹதீஸ் கலை அறிஞர்கள் போதிய கவனத்துடன் ஹதீஸ்களை ஆய்வு செய்யவில்லை என ஹதீஸ்கலை அறிஞர்கள் அனைவர் மீதும் அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றார்.
இப்படியான எண்ணற்ற கொள்கைக் குழப்பங்கள் இவரிடம் காணப்படுவதனால் இவரும் இவரைப் பின்பற்றுகின்றவர்களும் வழிகெட்ட கொள்கையில் இருக்கின்றார் என்பதில் ஐயமில்லை.

எனவே, இவரது கருத்துக்களைச் சரிகாணும் சகோதரர்கள் நடுநிலையோடு இவரது கருத்துக்களின் உண்மைத் தன்மை பற்றி மற்றைய மார்க்க அறிஞர்களிடமும் கேட்டுத் தெரிந்து தீர்க்கமான முடிவை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.