பித்அதுல் ஹஸனா (தொடர்-1)

கடந்த பல இதழ்களில் பித்அத் குறித்து பல்வேறுபட்ட அம்சங்களை நாம் விளங்கி வந்தோம். கடந்த இரு இதழ்களிலும் பித்அத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்துப் பார்த்தோம். பித்அத் கூடாது என்று எவ்வளவுதான் கூறினாலும் “நல்ல பித்அத்தும் இருக்கிறதுதானே” என்ற ஒரு வசனத்தில் அவ்வளவு ஆதாரங்களையும் சில உலமாக்கள் மழுங்கடித்துவிட முயல்கின்றனர்.

பொதுமக்களும் பித்அதுல் ஹஸனா பற்றி அறியாமல் இவர்கள் உளறுகின்றனர் என எண்ணிவிடுகின்றனர். எனவே பித்அதுல் ஹஸனா (நல்ல பித்அத்) குறித்து விரிவாக விளக்குவது அவசியமாகின்றது.
“எல்லா பித்அத்துக்களும் வழிகேடுகளே” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது நல்ல பித்அத்துக்கள் எனப் பேச முற்படுவது ஆச்சரியமாக உள்ளது. எல்லா பித்அத்துக்களும் வழிகேடு என நபி (ஸல்) அவர்கள் கூறும் போது இல்லை இல்லை நல்ல பித்அத்துக்களும் இருக்கின்றன என நபி (ஸல்) அவர்களுக்கே இவர்கள் பாடம் நடத்த முற்படுகின்றனரா?
பித்அத்துக்கள் பார்ப்பதற்கு நல்லதாகத்தான் இருக்கும். குடி, களவு, விபச்சாரம் போன்று கெட்டதாக இருக்காது. மார்க்கம் விதித்த நல்ல அம்சங்களில் தான் பித்அத் உருவாகும். எனவே “நல்ல பித்அத்” அதாவது “நன்மையின் பெயரில் மக்களை வழிகெடுக்கக்கூடியது” என்று வேண்டுமானால் இதற்கு அர்த்தம் செய்யலாம்.
மற்றும் சில மெத்தப் படித்த மேதாவிகள் உள்ளனர். இவர்கள் “குல்லு” என்ற அரபுச் சொல்லுக்கு “எல்லாம்” என்று அர்த்தம் இருப்பது போன்றே சிலது என்றும் அர்த்தம் இருக்கிறது. எனவே எல்லா பித்அத்தும் வழிகேடு என்று இதற்கு அர்த்தம் செய்வது தவறு “குல்லு பித்அதின் ழழாலா” என்பதற்கு சில பித்அத்துக்கள் வழிகேடு என்று தான் அர்த்தம் செய்ய வேண்டும். என்று கூறுவர். இவர்கள் கூறுவதை ஒரு வாதத்திற்காக நாம் ஏற்றுக் கொண்டு அவர்கள் கூறுவது போன்று அர்த்தம் செய்து பார்ப்போம்.
“எல்லா பித்அத்துக்களும் வழிகேடுகளே! எல்லா வழிகேடுகளும் நரகத்திற்கே இட்டுச் செல்லும்” இது ஹதீஸாகும். இந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ள “குல்லு” என்ற அரபுப் பதத்திற்கு எல்லாம் என்று பொருள் செய்யாமல் சிலது என்று பொருள் செய்ய வேண்டும் என்பது இவர்களது வாதம். அதன்படி,
சில பித்அத்துக்கள் வழிகேடுகளே! இவர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்வர். ஹதீஸின் அடுத்த பகுதியை இவர்கள் கூறுவது போன்று “குல்லு” என்ற அரபுப் பதத்திற்கு “சிலது” என்று அர்த்தம் செய்து மொழிபெயர்த்தால்,
“சில வழிகேடுகள் நரகத்திற்கு இட்டுச் செல்லும்” என்று அர்த்தம் செய்ய நேரிடும்.
சில வழிகேடுகள் நரகத்திற்;;கு இட்டுச் செல்லும் என்றால் சில வழிகேடுகள் சுவனத்திற்கு இட்டுச் செல்லும் என்று அர்த்தமாகிவிடும். அதாவது தாம் செய்யும் பித்அத்தை நியாயப்படுத்துவதற்காக இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கவும் இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதையே இவர்களது இந்த வாதம் எடுத்துக்காட்டுகிறது.
எனவே “குல்லு” என்ற அரபுப் பதத்திற்கு “எல்லாம்” என்றுதான் அர்த்தம் செய்ய முடியும். “சிலது” என்று அர்த்தம் செய்ய முடியாது. எனவே, நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாகவே எல்லா பித்அத்துக்களும் வழிகேடுகளே! என்று கூறியிருக்கும் போது சில பித்அத்துக்கள் வழிகேடுகள் என அர்த்தம் செய்ய எவருக்கும் எள்ளளவும் எள்ளின் முனையளவும் அருகதையோ அதிகாரமோ கிடையாது.
பித்அதுல் ஹஸனா வாதத்தை வலுப்படுத்த மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள் மற்றும் சில வாதங்களை முன்வைப்பர்.
“எவரேனும் இஸ்லாத்தில் அழகிய நடைமுறை ஒன்றை நடைமுறைப்படுத்தினால் அதற்குரிய கூலியும் அவனுக்குப் பின் அதைச் செய்வோரின் கூலியும் அவனுக்குக் கிடைக்கும் அதற்காக அதைச் செயல்படுத்துவேரின் கூலிகளில் குறைவு ஏற்படமாட்டாது. இஸ்லாத்தில் கெட்ட நடைமுறை ஒன்றை ஒருவன் நடைமுறைப்படுத்தினால் அதற்குரிய பாவமும், அவனுக்குப் பின் அதைச் செயல்படுத்துவோரின் பாவமும் அவனைச் சேரும். அதற்காக அதைச் செயல்படுத்தியோரின் பாவத்தில் குறைக்கப்படமாட்டாது.” (முஸ்லிம்)
இந்த ஹதீஸை எடுத்துக் காட்டி இஸ்லாத்தில் நல்ல நடைமுறையை ஏற்படுத்த அனுமதி உள்ளது. அப்படி ஏற்படுத்தினால் யாரெல்லாம் அதைப் பின்பற்றுகின்றார்களோ அவர்களுக்குக் கிடைப்பது போன்ற நன்மை உண்டாக்கியவருக்கும் கிடைக்கும். எனவே நல்ல பித்அத்தை உருவாக்க அனுமதி உள்ளது என சிலர் வாதிடுகின்றனர்.
இந்த வாதம் தவறானதாகும். இவர்கள் பித்அத் பற்றி செய்யப்பட்டுள்ள எச்சரிக்கைகளை அலட்சியம் செய்துவிட்டே இப்படி பேசுகின்றனர். இந்த ஹதீஸ் மர்க்கத்தில் இல்லாத ஒன்றை அவரவர் தமது சுய விருப்பத்திற்கு உருவாக்குவது குறித்துப் பேசவில்லை.
இங்கு “ஒருவன் நடைமுறைப்படுத்தினால்” என்று வரும் வாசகம் புதிதாக ஒன்றை மார்க்கமாக்கி நடைமுறைப்படுத்துவதைக் குறிக்கப் பயன்படுத்தப்படவில்லை. மாறாக மார்க்கத்தில் உள்ள ஒன்றை நடைமுறைக்குக் கொண்டு வருவதையே குறிப்பிடுகிறது. அந்த வாசகத்தின் கருத்தும் அதுதான். ஏனெனில் பின்வரும் வரலாறு அதை மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.
“நபி (ஸல்) அவர்கள் எ ங்களுக்குப் பிரசங்கம் (குத்பா) செய்தார்கள். அதில் தான தர்மம் கொடுக்கும்படி மக்களைத் தூண்டினார்கள். மக்களோ அமைதியாகக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் முகத்தில் கோபத்தின் அறிகுறிகள் தென்பட்டன. பின்னர் அன்சாரிகளில் ஒருவர் கொஞ்சம் பொருட்களைக் கொண்டு வர அதைத் தொடர்ந்து மக்கள் கொண்டு வர ஆரம்பிக்க, நபி (ஸல்) அவர்களின் முகம் சந்தோஷத்தால் குளிர மோற்சொன்ன பொன் மொழியைக் கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்”
இச்சம்பவம் “முஸ்லிம்”, “தாரமீ” போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“இஸ்லாத்தில் அழகிய நடைமுறை ஒன்றை ஒருவர் நடைமுறைப்படுத்தினால்.. ..” என்று சொன்ன அதே நபி (ஸல்) அவர்கள்தான் “சகல பித்அத்துக்களும் வழிகேடு” எனவும் கூறியுள்ளார்கள். வாய்மையே வாக்காகக் கொண்ட ஒருவரிடமிருந்து ஒன்றை ஒன்று பொய்யாக்கும் விதமாக வாசகங்கள் வெளியாக முடியாது. நபி (ஸல்) அவர்களின் சொற்கள் ஒன்றுக்கொன்று முரண்பாடானவைகளாக இருக்கவே முடியாது.
எனவே ஒரு நபிமொழியை எடுத்துக் கொண்டு மற்றொரு நபி மொழியை புறக்கணிக்க எமக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. அப்படிச் செய்வது வேதத்தில் சிலதை விசுவாசித்து சிலதை நிராகரிப்பது போலாகிவிடும்.

“யாராவது ஒரு நன்மையை நடைமுறைப்படுத்தினால்.. “என்றுதான் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்களேயன்றி “யாராவது புதிதாக உருவாக்கினால்….” எனக் கூறவில்லை. அடுத்து அப்பொன்மொழியின் தொடரில் “இஸ்லாத்திலே…” எனவும் கூறியதால், புதிதாக உருவாகியவைகள் இஸ்லாத்தில் உள்ளவைகளல்ல. மேலும் “(நல்ல) அழகிய நடைமுறைகள்…” எனக் கூறியிருப்பதால் புதிதாக உருவாகியவைகள் அழகிய நடைமுறைகள் அல்ல.
“சுன்னா”வுக்கும், “பித்ஆ”வுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் மிகத் தெளிவானவை. “சுன்னா” என்பது பின்பற்றப்பட வேண்டிய பாதை “பித்ஆ” என்பது மார்க்கத்தில் புதிதாக உண்டானவைகள்.
மக்கள் தாங்களாக உருவாக்கிக் கொள்ளும் நூதன அனுஷ்டானங்களுக்கு “அழகிய நடைமுறை” என்று விளக்கமளித்ததாக முன்னோர்களின் வரலாற்றுக் குறிப்புக்களில் காணப்படவில்லை.
“யாராவது நடைமுறைப்படுத்தினால்.. ..” என நபிமொழியில் வந்திருக்கும் வாசகம் தெளிவுபடுத்துவது என்னவெனில், இஸ்லாத்தில் உள்ள ஒரு விடயம் மக்களால் கைவிடப்பட்ட நிலையில் அதை மீண்டும் உயிர்ப்பிப்பதையே சுட்டிக்காட்டுகின்றது. இதற்கு ஆதாரமாகப் பின்வரும் நபிமொழியைக் கூறலாம்.
“எனது நடைமுறையில் ஒரு நடைமுறையை யாராவது உயிர்ப்பித்து மக்கள் அதன்படி செயற்பட்டால், அவருக்கு செயற்பட்ட அனைவரின் கூலியும் உண்டு. அவர்களது கூலிகளிலும் குறைவு ஏற்படாது. யாராவது புதிதாக ஒன்றை உருவாக்கி செயற்படுத்தினால், அதைச் செய்தவர்களின் தீமைகள் அனைத்தும் இவருக்கும் உண்டு. அவர்களுக்குரிய தீமைகளில் எதுவும் குறைக்கப்பட மாட்டாது. (இப்னுமாஜா)
“யாராவது நல்ல நடைமுறையை நடைமுறைப்படுத்தினால்…” என்ற நபிமொழி வாசகங்களில் “கெட்டது, நல்லது” என இரு விடயங்கள் கூறப்பட்டுள்ளன. இந்த இரண்டையும் மார்க்கத்தின் ஒளியில் தான் பார்க்க வேண்டுமே தவிர, இது கெட்டது. இது நல்லது என தீர்ப்புக் கூற எம்மால் முடியாது.
உமர் (ரழி) அவர்களது காலத்தில் மக்கள் ரமழான் மாத இரவுத் தொழுகையைத் தனித் தனியாகவும், சிறுசிறு குழுக்களாகவும் தொழுது வந்தனர். இந்த ஒழுங்கற்ற நிலையை நீக்க அனைவரையும் ஒரே இமாமின் பின்னால் தொழுவதற்கான ஒரு ஏற்பாட்டை உமர் (ரழி) அவர்கள் செய்துவிட்டு, மக்கள் ஒரே இமாமின் கீழ் தொழுவதைப் பார்த்து “இந்த புதிய ஏற்பாடு நல்லதாக உள்ளதே” என்ற கருத்தைக் கூறி “நிஃமல்பித்ஆத்” இது நல்ல பித்அத்தாக உள்ளது என்று கூறினார்கள்.
இதை ஆதாரமாக வைத்து உமர் (ரழி) பித்அத்தில் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு எல்லா பித்அத்தும் கெட்டது அல்ல என்ற கருத்திலே இதனைக் கூறினார்கள். என்று மாற்றுக் கருத்துடையோர் கூறிவருகின்றனர்.
ஒரு வாதத்திற்காக – உண்மையில் அல்ல – அதை நாம் ஒப்புக் கொண்டாலும், அல்லாஹ்வுடைய தூதருடைய பேச்சுக்கு எந்த மனிதனுடைய பேச்சும் குறுக்கீடு செய்ய முடியாது. அவர் எவராக இருந்தாலும் சரிதான்.

நபி (ஸல்) அவர்களுக்குப் பின் இந்த சமுதாயத்தின் சிறந்த மனிதரான அபூபக்கர் (ரழி) அவர்களின் பேச்சோ, நபி (ஸல்) அவர்களுக்குப் பின் இச்சமுதாயத்தின் இரண்டாவது சிறந்த மனிதரான உமர் (ரழி) அவர்களின் பேச்சோ அல்லது வேறு எவரின் பேச்சுமோ நபி (ஸல்) அவர்களின் பேச்சுக்கு குறுக்கீடாக அமைய முடியாது.
“அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள் என நான் கூறும் போது நீங்களோ அபூபக்கர், உமர் கூறினார்கள். எனக் கூறுகின்றீர்களே! உங்களின் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழியக் கூடும்” என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரிழி) அவர்கள் கூறுகின்றார்கள்.
“இதுதான் அல்லாஹ்வுடைய செயன்முறை எனத் தொளிவாகத் தெரிந்த பின், வேறொருவரின் சொல்லுக்காக அதை விட்டுவிடுவது கூடாது என முஸ்லிம்கள் அனைவரும் ஏகோபித்து முடிவெடுத்துள்ளனர்” என இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
“நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியை எவன் தட்டிக் கழிக்கிறானோ அவன் அழிவின் விளிம்பில் இருக்கிறான்” என இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அடுத்து, தராவீஹ் தொழுகையில் மக்கள் ஒன்று சேர்ந்தபொழுதுதான் மேற்சொன்ன அவ்வாசகத்தை உமர் (ரழி) பயன்படுத்தினார்கள். தராவீஹ் தொழுகை “பித்அத்”தான ஒரு செயலல்ல. ஏனெனில் பின்வரும் விடயத்தை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
“நபி (ஸல்) அவர்கள் ஒரு இரவு பள்ளியில் தொழுதார்கள். அவர்களுடைய தொழுகையுடன் மக்களும் தொழுதார்கள். பின்னர் அடுத்த இரவும் நபி (ஸல்) அவர்கள் தொழ மக்கள் தொகை அதிகரித்துவிட்டது. மூன்றாவது அல்லது நான்காவது இரவிலும் அவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு மத்தியில் வரவே இல்லை. விடிந்ததும்,
“நீங்கள் செய்தவற்றை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். இது உங்கள் மீது கட்டாயக் கடமையாக ஆக்கப்பட்டுவிடுமோ எனப் பயந்ததனால் உங்கள் மத்தியில் வராமல் வீட்டிலேயே இருந்து விட்டேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இது நடந்தது ரமழான் மாதத்திலாகும். (புஹாரி)
தராவீஹ் தொழுகையில் எதற்காக ஜமாஅத்தை விட்டார்கள் என்ற காரணத்தை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறுகிறார்கள். அக்காரணம் இப்போது இல்லை என்பதை விளங்கிக் கொண்ட உமர் (ரழி) அவர்கள், தராவீஹ் தொழுகையை மீண்டும் ஜமாஅத்தாகத் தொழ ஆரம்பித்தார்கள். உமர் (ரழி) செய்த அச்செயலுக்கு நபி (ஸல்) அவர்களின் செயல் அடிப்பiயாக அமைந்திருக்கிறது.
உமர் (ரழி) அவர்கள் செய்தது “பித்அத்” அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிந்தாலும் அவர்களது பேச்சில் வந்த குறிப்பிட்ட அந்த “பித்அத்” என்ற பதத்தின் பொருள் யாது?
இங்கு உமர் (ரழி) அவர்கள் கூறியதன் கருத்து அறபு மொழி வழக்கமே தவிர, மார்க்க அடிப்படையில் அல்ல.
அறபு மொழி வழக்கில் “பித்அத்” என்பது புதிதாகச் செய்யப்படும் ஒரு செயலுக்குப் பயன்படுத்தப்படுவதாகும். இத்தொழுகையோ அபூபக்கர் (ரழி) அவர்களது காலத்திலும் உமர் (ரழி) அவர்களின் ஆட்சியின் ஆரம்ப காலத்திலும் ஒரே இமாமின் கீழ் கூட்டாகச் செயற்படவில்லை. எனவே தான் மொழி வழக்கின் அடிப்படையில் பொருள் கொள்ள வேண்டி இருக்கிறது.
இவ்வாறு நோக்கும் போது உமர் (ரழி) அவர்கள் நல்ல பித்அத் உண்டு என்ற கருத்தில் இருந்தார்கள் என்ற வாதம் வலுவற்றுவிடுகின்றது. எனவே, பித்அத்தில் நல்லது, கெட்டது என்ற பேதம் இல்லை. அனைத்து பித்அத்துக்களும் வழிகேடுகளே என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *