ஜமாஅத் அணியில் இமாம், மஃமூம்கள் எப்படி நிற்க வேண்டும்? | பிக்ஹுல் இஸ்லாம் – 37

இமாம் உயர்ந்த இடத்தில் நிற்பது:
மஃமூம்கள் அனைவரை விடவும் பிரத்தியேகமாக இமாம் மட்டும் உயர்ந்த இடத்தில் இருந்து தொழுவிப்பதை பெரும்பாலான அறிஞர்கள் வெறுக்கத்தக்கதாகப் பார்க்கின்றனர். எனினும் பின்னால் இருப்பவர்களுக்கு தொழுகையைக் கற்றுக் கொடுத்தல் போன்ற காரணங்களுக்காக உயர்ந்த இடத்தில் இருந்து தொழுவதில் குற்றமில்லை.

‘நபி(ச) அவர்களின் மிம்பர் எந்த மரத்தினாலானது என்று சர்ச்சை செய்த நிலையில் சில மனிதர்கள் ஸஹ்ல் இப்னு ஸஃது(ர) அவர்களிடம் வந்து இது பற்றிக் கேட்டனர். அதற்கு ஸஹ்ல் இப்னு ஸஃது(ர) ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக அது எந்த மரத்தினாலானது என்பதை அறிவேன். அது தயாரிக்கப்பட்ட முதல் நாளிலேயே அதை நான் பார்த்துள்ளேன். நபி(ச) அவர்கள் முதன் முதலில் அதில் அமர்ந்த நாளிலும் அதை நான் பார்த்திருக்கிறேன்’ என்று கூறிவிட்டுப் பின்வரும் நிகழ்ச்சியைக் கூறலானார்கள்.

நபி(ச) அவர்கள் ஒரு பெண்மணியிடம் -அப்பெண்மணியின் பெயரையும் ஸஹ்ல் குறிப்பிட்டார்கள். – ஆளனுப்பி ‘நான் மக்களிடம் பேசும் போது அமர்ந்து கொள்வதற்காகத் தச்சு வேலை தெரிந்த உன் வேலைக்காரரிடம் எனக்கொரு மேடை செய்து தரச் சொல்!’ எனச் சொல்லியனுப்பினார்கள். அப்பெண்மணி அவ்வாறே தம் ஊழியரிடம் கூறினார். மதீனாவின் சமீபத்தில் காபா எனும் பகுதியிலுள்ள கருவேல மரத்திலிருந்து அதைச் செய்து அவர் அப்பெண்ணிடம் கொண்டு வந்தார். உடனே அப்பெண் அதை நபி(ச) அவர்களிடம் அனுப்பி வைத்தார். நபி(ச) அவர்கள் உத்தரவிட்டதற்கேற்ப இவ்விடத்தில் அது வைக்கப்பட்டது. அதன் பிறகு நபி(ச) அவர்கள் அதன் மீதே தொழுததையும் அதன் மீதே தக்பீர் கூறியதையும் அதன் மீதே ருகூஃ செய்ததையும் அதன் பிறகு மிம்பரின் அடிப்பாகத்திற்குப் பின் பக்கமாக இறங்கி அதில் ஸஜ்தா செய்துவிட்டு மீண்டும் மேலேறியதையும் நான் பார்த்துள்ளேன். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி, ‘மக்களே நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டுமென்பதற்காகவும் என் தொழுகையை நீங்கள் அறிந்து கொள்வற்காகவுமே நான் இவ்வாறு செய்தேன்’ என்று குறிப்பிட்டார்கள். ‘
அறிவிப்பவர்: அபூ ஹாஸிம் இப்னு தீனார்
நூல்: புகாரி: 917

இமாமை விட மஃமூம் உயர்ந்த இடத்தில் நிற்பது:
இமாமை விட மஃமூம் உயர்ந்த இடத்தில் நின்று தொழுவதைத் தடுக்கக் கூடிய எந்த செய்தியும் வரவில்லை. இமாம் கீழ்தளத்திலும் மஃமூம் மேல் தளத்திலும் தொழுவதில் தவறில்லை.

திரைக்கு அல்லது இடைவெளிக்குப் பின்னால் இருந்து பின்பற்றித் தொழுதல்:
சில வேளை பள்ளிக்கு வெளியில் நின்று இமாமைப் பின்பற்றும் நிலை ஏற்படுகின்றது. இந்நிலையில் தொழும் ‘ஸப்’ அணி தொடராக இருந்தால் தொழுகை செல்லும் என்பதே அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.

ஆயிஷா(ர) அறிவித்தார்: ‘நபி(ச) அவர்கள் இரவில் தம் அறையில் தொழுபவர்களாக இருந்தனர். அவர்களின் தலையை மக்கள் பார்க்கும் அளவுக்கு அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்தது. மக்கள் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். மறுநாள் காலையில் மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். இரண்டாம் நாளில் நபி(ச) அவர்கள் தொழுதபோது மக்களும் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இவ்வாறு இரண்டு மூன்று இரவுகள் செய்யலானார்கள். அதன்பின்னர் நபி(ச) அவர்கள் தொழவராமல் உட்கார்ந்துவிட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ளலானார்கள். ‘இரவுத் தொழுகை உங்களின் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன்; (அதனாலேயே வரவில்லை.)’ என்று கூறினார்கள்.’ (புகாரி: 729)

இந்த நபிமொழியில் நபியவர்கள் தனது வீட்டில் இருந்து தொழுததை மக்கள் பின்துயர்ந்து தொழுதுள்ளனர். எனவே, இமாமுக்கும் மஃமூமுக்கும் இடையில் தடை இருப்பதில் பிரச்சினையில்லை. இந்த நபிமொழியில் சுவர் கட்டையாக இருந்ததாகவும் நபியவர்களை மக்கள் பார்த்ததாகவும் குறிப்பிடப் படுவது கவனிக்கத்தக்கதாகும். இமாம் அல்லது இமாமைப் பார்த்தவரைப் பார்க்கும் விதத்தில் நின்று தொழ வேண்டும்.

தொழுகைக்காக மக்கள் ஸப்பில் நிற்கின்றனர். மக்கள் தொகை அதிகமானதால் மக்கள் வெளியில் நிற்கின்றனர். அதற்குப் பின்னால் மக்கள் செல்லும் பாதை உள்ளது பாதையின் மறு பக்கம் நின்று தொழலாமா அல்லது இடையில் ஆறு ஓடுகின்றது. ஆற்றில் ஒரு பக்கத்தில் இமாம் இருக்கின்றார். மறு பக்கத்தில் இருப்பவர் அவரைப் பின்பற்றித் தொழலாமா?

இது குறித்து அபூ ஹனீபா(ரஹ்) அவர்கள் கூடாது என்றும் ஷாபி மற்றும் மாலிக் இமாம்கள் கூடும் என்றும் கூறியுள்ளனர். இதுவே சரியானதாகும். ஏனெனில், இதைத் தடுக்கக் கூடிய எந்த ஆதாரமும் இல்லை.

ஹஸன்(ர) அவர்கள் இது பற்றிக் கூறும் போது, ‘உனக்கும் இமாமுக்கும் இடையில் ஒரு ஆறு இருந்தால் பிரச்சினையில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

‘இமாமுடைய தக்பீர் செவியில் விழுமானால் இருவருக்கிடையே சுவரோ நடைபாதையோ இருந்தாலும் பின்பற்றலாம்’ என அபூ மிஜ்லஸ் கூறுகின்றார். (புகாரி)

இமாம் அல்லது இமாமைப் பின்பற்றுபவர் தெரியும் விதத்தில் இருக்க வேண்டும். எந்தத் தொடர்பும் இல்லாமல் இமாமைப் பின்பற்றித் தொழுவதைத் தவிர்க்க வேண்டும். இடப் பற்றாக்குறை, மக்கள் தொகைப் பெருக்கம் போன்ற நிர்ப்பந்த நிலைகளின் போதுதான் இது கூட கடைப்பிடிக்கப்படும். சாதாரண நிலைகளில் ஸப்புகள் தொடராக முறிவின்றி இருப்பதே மிகச் சரியானதாகும்.

தொழுகையின் ஸப்பும் அதற்கான சட்டங்களும்:
தொழும் வரிசையின் அமைப்பு, ஒழுங்கு முறை என்பது மிகவும் முக்கியமானதாகும். தற்போது பள்ளிகளில் தொழுபவர்கள் ஸப்புகளை சரி செய்வதில் அதிக அக்கறை செலுத்தாதுள்ளனர்.

முதல் ஸப்பின் சிறப்பு:
இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: (ஜமாஅத் தொழுகைக்கு) முந்தி வருவதில் உள்ளதை (சிறப்பை) மக்கள் அறிந்தால் அதற்காகப் போட்டி போடுவார்கள். சுபஹ், இஷாத் தொழுகைகளின் சிறப்பை மக்கள் அறிந்தால் தவழ்ந்தேனும் அதற்காக வந்து சேர்வார்கள். முதல் வரிசையின் சிறப்பை அவர்கள் அறிந்தால் (போட்டி ஏற்படும் போது) சீட்டுக் குலுக்கி (யார் முதல் வரிசையில் நிற்பது என்பதை)த் தீர்மானிப்பார்கள்.’
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ர)
நூல்: புகாரி: 721

முதல் வரிசையில் நின்று தொழுவது இங்கே மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துப் பேசப்படுகின்றது. எனவே, ஸப்பில் நிற்கும் போது முதல் வரிசையில் நின்று தொழ முற்பட வேண்டும்.

நபி(ச) அவர்கள் வந்து எமது முதுகுகளையும் நெஞ்சுகளையும் தடவி சரிபார்த்தவராக, ‘உங்கள் தொழுகை வரிசைகளில் நீங்கள் முரண்படாதீர்கள். உங்கள் உள்ளங்கள் முரண்பட்டுவிடும். அல்லாஹ்வும் மலக்குகளும் முதல் வரிசையில் தொழுபவர்கள் மீது ஸலவாத்துக் கூறுகின்றனர்’ என்று நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அல் பராஉ(ர)
நூல்: இப்னு ஹிப்பான் – 2154, அபூ தாவூத் – 670
(அறிஞர் அல்பானி (ரஹ்) இதனை ஸஹீஹ் என்கின்றார்.)

முதல் வரிசையில் மார்க்கத்தில் அறிவும் தெளிவும் உள்ளவர்கள் இருப்பது வரவேற்கத் தக்கதாகும்.

‘நபி(ச) அவர்கள் அணியில் தனக்குப் பின்னால் முஹாஜிர்களும் அன்ஸார்களும் இருப்பதை விரும்பினார்கள்.’
அறிவிப்பவர்: அனஸ் இப்னு மலிக்(ர)
நூல்: இப்னு ஹிப்பான் 7214
(அறிஞர் அல்பானி (ரஹ்) இதனை ஸஹீஹ் என்கின்றார்.)

முதல் வரிசையைப் பூரணப்படுத்த வேண்டும்:
முதல் வரிசையில் இடமிருக்கும் போது அடுத்த வரிசையை ஆரம்பிக்கக் கூடாது. ‘முதல் வரிசையைப் பூரணப்டுத்துங்கள். அதன் பின் அடுத்த வரிசையைப் பூரணப்படுத்துங்கள். அணியில் குறையிருந்தால் அது கடைசி வரிசையில் இருக்கட்டும்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.

தொடரும்…
இன்ஷா அல்லாஹ்

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *