இறைவனிடம் கையேந்துங்கள்!

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை மளினப்படுத்தும் நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தொடரான பல இன, மத நெருக்குதல் களுக்குள்ளாக்கப்;பட்ட இலங்கை முஸ்லிம்கள் உலவியல் ரீதியில் பாரிய மன உளைச்சல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இலங்கை ஒரு நல்ல நாடு. இங்கு வாழ்ந்த மக்களும் நல்ல மக்கள். இந்த நாட்டுக்கு நல்லதொரு அரசியல் சாசனம் உண்டு. இந்த அரசியல் சாசனம் இலங்கை மக்களுக்கு அளித்துள்ள நீதியான, நியாயமான உரிமைகள் விடயத்தில் அத்து மீறும் பௌத்த தீவிரவாதமும் அடிப்படை வாதமும் திட்டமிட்டு நாட்டில் வளர்க்கப்பட்டு வருகின்றது.
இந்த நாட்டில் பௌத்த மக்களே அதிகம் வாழ்கின்றனர். இந்த நாட்டின் அரசியல் யாப்புப் பிரகாரம் பௌத்த மதத்திற்கு அரசு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பதை யாரும் குறை காண முடியாது. பௌத்த மதத்தினைப் பேணிப் பாதுகாப்பது நாட்டின் ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களின் தலையாயக் கடமை என்பதை எந்த இலங்கைப் பிரஜையும் எதிர்க்கப் போவதில்லை.
அதே வேளை இது பௌத்த நாடு, இது சிங்கள தேசம் என்ற பௌத்த மத சிங்கள இனவாத சிந்தனையின் அடிப்படையில் ஏனைய மதங்களையும் இனங்களையும் நசுக்கக் கூடாது. அரசியல் யாப்பு அளித்த பூரண மதச் சுதந்திரத்தைக் காப்பதும் அரசுகளின் கடமையாகும். ஆனால், அண்மைக் காலமாக தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகத்தின் சமய, சமூக உரிமைகள் விடயத்தில் எல்லை மீறி நடந்து கொள்ளும் பௌத்த தீவிரவாதம் கட்டுப்படுத்தப்படாமல் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது இலங்கைக்கு அவப்பெயரையும், இனங்களுக்கு மத்தியில் விரிசல்களையும் வளர்த்து வருகின்றது. எரியும் தீயில் எண்ணெய் வார்த்து யாரோ குளிர்காய முற்படுகின்றார்களோ என ஐயப்பட வேண்டியுள்ளது.
அண்மையில் நடந்த இனவாத வன்முறைகளில் கிரேன்பாஸ் மஸ்ஜித், மற்றும் அதை அண்டிய முஸ்லிம்களின் வீடுகள் மீதான தாக்குதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
1955களில் இருந்து இந்தப் பிரதேசத்தில் ஒரு மஸ்ஜித் இருந்து வருகின்றது. 1986 இல் இப் பள்ளிவாயல் வக்ப் போர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்குப் பக்கத்தில் ஒரு அரச (போதி) மரம் இருக்கின்றது. அதன் வேர்கள் பள்ளிச் சுவர்களை ஊடறுக்கின்றது. இதனால் பள்ளியில் பழுதுகள் ஏற்படுகின்றன. பள்ளியைப் பழுதுபார்ப்பதாக இருந்தாலும் பெருப்பிப்பதாக இருந்தாலும் அரச மரம் வெட்டப்பட வேண்டும். அரச மரத்தை வெட்டுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையில் அங்கீகாரம் பெற்றிருந்தும் கூட சிங்கள மக்களின் எதிர்ப்பு காரணமாக பழைய பள்ளி கைவிடப்பட்டு புதிய பள்ளி கட்டப்பட்டது.
இந்த புதிய பள்ளிக்கு எதிராக எழுந்த இனவாத மிரட்டல்களின் பின்னர் ஜனாதிபதியின் அங்கீகாரத்துடன் புதிய பள்ளியில் தொழுகை நடாத்தப்பட்டு வந்தது. பள்ளிக்குப் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. பள்ளிவாயில் இன வன்முறையாளர்களால் தாக்கப்படும் போது காவல் துறையினர் எந்த எதிர்ப்பு நடவடிக்கையும் எடுக்காத அளவுக்கு அவர்களின் கைகளைக் கட்டிப் போட்டது யாரோ?
பள்ளிவாயிலைத் தாக்கியவர்கள் வீடியோக்களில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருந்தும் அவர்களில் எவருக்கும் எதிராக சட்டம் தன் கடமையைச் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளில் புதிய பள்ளியில் தொழுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பழைய பள்ளியைச் சூழவுள்ள போதிமரம் வெட்டப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்ட உடனேயே மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் நெருக்கடிகள் உள்ளன. அங்கு வாழ்ந்த சிங்கள-முஸ்லிம் மக்களின் இன நல்லுறவில் கூட சின்னச் சின்னக் கீறல்கள் விழுந்துள்ளன.
கிரேன்பாஸ் மஸ்ஜித் தாக்குதல் சூடு தனிவதற்குள் அனுராதபுர மல்வத்து ஓயா லேன் தக்கியா பள்ளிவாசல் அனுராதபுர மாநகர சபையால் சட்டபூர்வமற்ற கட்டிடம் என்ற பெயரில் அகற்றப்படுகின்றது. சென்ற ஹஜ்ஜுப் பெருநாள் இரவும் இப்பள்ளி இனம்(?) தெரியாத நபர்களால் தாக்கியளிக்கப்பட்டது.
இந்தப் பகுதி புனித பூமியென்றும் அங்கிருந்து முஸ்லிம்கள் அகற்றப்பட வேண்டும் என்று இனவாதிகள் கூறிவரும் சந்தர்ப்பத்தில் அதை அந்தப் பகுதி முஸ்லிம்கள் அங்கீகரித்திருக்கும் போது முஸ்லிம்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்படும் வரையாவது அந்தப் பள்ளியை விட்டு வைத்திருக்கலாம்.
இவ்வாறு மத உணர்வுகள் ஊனப்படுத்தப்பட்டு வரும் அதே வேளை முஸ்லிம்கள் தமது இருப்பும் பெருளாதார நலன்களும் பாதிக்கப்படுமோ என அச்சப்படும் விதத்தில் 2013.08.21 இரவோடு இரவாக மூதூர் வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான 13 கடைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்களின் வாழ்வுரிமை விடயத்தில் அச்சுறுத்தல் விடும் நிகழ்வுகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
மாவனல்லை தெவனகல பிரதேசம் புனித பூமி என்றும், முஸ்லிம்கள் அதை ஆக்கிரமித்திருப்பதாகவும், அங்கிருந்து முஸ்லிம்களை அப்புறப்படுத்தி சிங்களவர்களைக் குடியமர்த்துவோம் என ‘மைத்ரி சஹன பதனம’ என்ற அமைப்பின் பெயரில் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. இது குறித்து ஜூலை 14 இல் இடம்பெற்ற பிரச்சாரத்தில் இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தும், மத நிந்தனை செய்யும் பிரச்சாரங்களும் பகிரங்கமாக இடம்பெற்றுள்ளது.
11.08.2013 ஆம் திகதி குருநாகலில் டீடீளு (பொதுபலசேனா)வின் பொதுக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பறகஹதெனிய இரண்டு பள்ளிவாசல்களுக்கும் முன்னால் போடப்பட்டுள்ள ‘அமைதி’ எனும் பதாகையை நீங்கள் கழற்ற வேண்டும், இல்லையென்றால் நாங்கள் கழற்றுவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மறுநாள் காலையிலேயே அதனைக் கழற்றுவதற்காக பொலிஸாருடன் இருவர் வந்து கழற்ற முயற்சித்த போது பொதுமக்களின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.
இந்த ‘அமைதியைப் பேணுவோம்’ எனும் பதாகை பறகஹதெனிய முஸ்லிம்களால் போடப்பட்டதல்ல. ஆரம்ப காலங்களில் ஏற்பட்ட இன முறுகல்களின் போது மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற நடவடிக்கையின் மூலமாக 1934 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேய ஆட்சியாளர்களினால் போடப்பட்டதாகும். இனவாதம் தோற்றுப் போனதற்கான ஓர் அடையாளச் சின்னமாக அந்த அமைதிப் பதாகை உள்ளது.
டீடீளு இனவாத அமைப்பின் எச்சரிக்கையைக் கண்டிக்க வேண்டிய காவல்துறையினரேஅதனைக் கழற்ற வந்தமையானது இனவாதத்தின் ஆதிக்கத் தன்மையைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

இது தொடர்பில் காவல்துறையினரால் தொடுக்கப்பட்ட வழக்கு அப்பதாகை நீக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில் தற்காலிகமாகத் தீர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதப் பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்லும் அமைப்புக்கு எதிராக ‘மஹியங்கனை மஹ வெலி ரஜ மகா விகாரை விகாராதிபதி விஜித தேரர்’ உரையாற்றினார். இவரும் இவர் பயனித்த வாகனமும் பகிரங்கமாகவே கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டுள்ளது. அத்துடன் விகாரையும் தாக்கப்பட்டுள்ளது. இவரை சிகீச்சைக்காக சேர்த்த வைத்தியசாலையின் வைத்தியர் கூட ‘உங்களுக்கு ஏன் தேவையில்லாத வேளை? முஸ்லிம்கள் பஜ்ரோவில் போகிறார்கள். நாங்கள் 70000 வைத்தியர்கள் இருக்கின்றோம். இந்த இனவாத அமைப்பு செய்வதுதான் சரியானது’ என தேரருக்கு புத்தி கூறியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இவற்றையெல்லாம் வைத்து நோக்கும் போது நாட்டில் குறிப்பிட்ட சில வரையறைகளுக்குள் சட்டத்தை மீற ஒரு கூட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றே பலரும் சொல்கின்றனர். இது நாட்டில் பாரிய சட்ட ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கும். இவ்வாறு கட்டவிழ்த்துவிடப்படுபவர்கள் சிலபோது அரசின் சட்டங்களைக் கூட துச்சமாக மதித்து செயற்பட ஆரம்பிப்பார்கள். அப்போது இவர்கள் அரசுக்கே ஒரு தலையிடியாக மாறும் அபாயம் உள்ளது என்பதால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நீதி நிலைநாட்டப்பட வேண்டும். தற்போது பொலிஸ் மற்றும் சட்ட ஒழுங்கு என்பன மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் வந்துள்ளதால் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் இன, மதவாதத்தை ஒரு கூட்டம் வளர்த்து வரும் இவ்வேளை கல்விக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இதன் பின் இன, பால் வேறுபாட்டின் அடிப்படையில் பாடசாலைகள் அமைக்கப்பட மாட்டாது என்ற நிலைப்பாடு என்பது கேலிக் கூத்தாகவே பார்க்கப் படுகின்றது. இவ்வாறே விவாதிக்கப்பட்டு வரும் மாடறுப்புத் தடைச் சட்டம் என்பனவெல்லாம் முஸ்லிம்களைக் குறிவைத்து வரும் இனவாத சக்திகளின் வளர்ச்சியாகவே முஸ்லிம் சமூகத்தால் பார்க்கப்படுகின்றது.
நபி(ச) அவர்களின் கலத்தில் சிலை வணக்கம் புரியும் பல இனக் குழுக்களால் முஸ்லிம்கள் தாக்கப்பட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு எதிராக பிரார்த்திக்குமாறு நபி(ச) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதை மறுத்த நபியவர்கள் முஸ்லிம்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி கொடுக்க வேண்டும் என்றே பிரார்த்தித்தார்கள். அது நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இன மதவாத வன்முறையாளர்களின் உள்ளத்தில் இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் நல்லெண்ணத்தை ஏற்படுத்துமாறு அல்லாஹ்விடம் அனைத்து முஸ்லிம்களும் முறையிடுங்கள். நாட்டை ஆளும் அதிகாரிகளின் மனங்களில் நல்ல மாற்றம் ஏற்படவும். நாட்டில் குழப்பமற்ற சுமூகமான சமாதான சகவாழ்வு ஏற்படவும் பிரார்த்தியுங்கள்….! பிரார்த்தனை என்பது முஸ்லிம்களின் பலமான ஆயுதமாகும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *