அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள் – அல்குர்ஆன் விளக்கம்

‘அவர்களை (போரின் போது) நீங்கள் எங்கு கண்டாலும் கொல்லுங்கள். இன்னும், உங்களை அவர்கள் வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள். குழப்பம் விளைவிப்பது கொலையை விடக் கொடியதாகும். மஸ்ஜிதுல் ஹராமில் உங்களுடன் அவர்கள் போரிடும் வரை நீங்கள் அவர்களுடன் அங்கு போரிட வேண்டாம். ஆனால், உங்களுடன் அவர்கள் போரிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள். இதுதான் நிராகரிப்பாளர்களுக்குரிய கூலியாகும்.’ (2:191)

அவர்களைக் கொல்லுங்கள் என குர்ஆன் கூறுவதை சிலர் வேண்டுமென்றே தவறாகச் சித்தரிக்கின்றனர். முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாம் கொல்லச் சொல்கின்றது என்று கூறி இஸ்லாம் தீவிரவாதத்தைப் போதிப்பதாக நிலைநாட்ட முற்படுகின்றனர். இந்த வசனம் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொலை செய்யுமாறு கூறவில்லை.

போர்க்களத்தில் முஸ்லிம்களுடன் போர் செய்பவர்களைப் பற்றிப் பேசும் வசனமே இதுவாகும். இந்த வசனத்திற்கு முந்திய, பிந்திய வசனங்களைப் பார்த்தால் முஸ்லிம்களுடன் போர் செய்பவர்களுடன் போர் செய்ய ஏவப்படுவதுடன் அதில் கூட வரம்பு மீறிச் செல்லலாகாது என்ற போர் தர்மமும் போதிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியலாம். 2:191 இது முன்னைய வசனமாகும்.

‘எனினும் அவர்கள் (போரிடாது) விலகிக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன்.’

‘குழப்பம் நீங்கி அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரித்தாகும் வரை அவர்களுடன் போரிடுங்கள். ஆனால், அவர்கள் (போரிலிருந்து) விலகிக் கொள்வார்களானால் அநியாயக்காரர்கள் மீதே தவிர எந்த வரம்பு மீறுதலும் கூடாது.’ (2:192-193)

போர் செய்தவர்கள் போரில் இருந்து விலகிவிட்டால் அவர்கள் மீது வரம்பு மீறக் கூடாது என இந்த வசனம் கண்டிக்கின்றது. பொதுவாக போரில் தோல்வியுற்றவர்கள் மீது அக்கிரமங்கள் கட்டவிழ்த்துவிடப்படுவதே வழமையாகும். இஸ்லாம் இதைத் தடுக்கின்றது. நபியவர்கள் மக்கா வெற்றியின் போது தமது உறுப்பினர்களைக் கொலை செய்தவர்கள், தம்மை ஊரை விட்டும் விரட்டியவர்கள், தமது சொத்துக்களைச் சூறையாடியவர்கள் என அனைவருக்கும் பொது மன்னிப்பளித்து இந்தப் போர் நெறியை நடைமுறைப்படுத்தியும் காட்டியுள்ளார்கள். முஸ்லிம் அல்லாதவர்களைக் கொலை செய்யுமாறு குர்ஆன் கூறுவதாக இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களே கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *