தாங்கிப் பிடிக்க ஆள் இருந்தால் தூங்கித் தூங்கி விழுமாம் பிள்ளை.

இலங்கை ஒரு சின்னத் தீவாகும். இந்த அழகிய சின்னஞ் சிறு தீவை பயங்கரவாதமும், இனவாதமும் அழித்து வந்தது போதாது என்று இன்று அதனுடன் போதை வஸ்தும் கைகோர்த்துள்ளது. இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை, சுற்றுலாத் துறையின் வளர்ச்சி என்பவற்றுடன் இலங்கை சர்வதேச போதைக் கடத்தல் மாபியாக்களின் மத்திய தளமாக மாறி வருகின்றதோ என்று ஐயப்படும் நிலை உருவாகியுள்ளது.

1981 மே 26 இல் 70 கிராம் ஹெரோயின் இலங்கையில் கைப்பற்றப்பட்டது. இன்று நூற்றுக் கணக்கான கிலோ போதை வஸ்த்துக்கள் கைப்பற்றப்படும் நிலைக்குச் சென்றுள்ளது. யுத்தத்திற்குப் பின்னரான சமாதான சூழலில் கடந்த மூன்று வருடங்களில் சுமார் 2500 கிலோ போதை வஸ்த்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

போதைக்கு எதிரான பிரச்சாரம், அதைத் தடுப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் இருந்தும் போதைக் கடத்தல் கொடிகட்டிப் பறக்கின்றது என்றால் இதற்குப் பின்னால் அரசியல் தலைமைகள், அதிகார வர்க்கம் இல்லாமல் இருக்க முடியாது. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களே போதைவஸ்த்துக் கடத்தலுக்குப் பயன்படுத்தப் படுவதாக அரசியல் தலைமைகளே கூறி வருகின்றன.

போதைப் பொருட்களை வியாபாரம் செய்யும் சாதாரண கூலிகள் கைது செய்யப்படுவதால் இந்த நாசகாரச் செயலை நிறுத்தி விட முடியாது. ஆணிவேர்கள் அடையாளம் காணப்பட்டு வேரடி மண்ணோடு பிடுங்கப்பட வேண்டும். அதைச் செய்யும் சக்தி ஆளும் வர்க்கத்திற்கு இருக்குமா என்பது ஐயமே!

அடுத்து மது, போதை தொடர்பான நிலையான சரியான ஒரு பார்வை தேவையாகும். சட்ட ரீதியான மதுபானம், சட்ட விரோத மதுபானம் என்ற எந்த பேதமும் இன்றி எல்லா மது வகைகளும் ஆபத்தானதே! அழிவை ஏற்படுத்தக் கூடியதே!

எனவே, சட்டபூர்வ மதுபானச் சாலைகளும் தடை செய்யப்பட வேண்டும். இது நடக்கும் என கனவு கூட காண முடியாத நிலைதான் உள்ளது.

ஆளும் வர்க்கம் மதுவுக்கு வரி விதித்து அந்த வரியினூடாக தேச நலனை அரச செலவை நிறைவு செய்ய நினைக்கின்றது. இப்படி இருக்கும் போது போதை வஸ்த்துப் பேயிடம் இருந்து நாட்டைக் காப்பது எவ்வாறு?

போதையற்ற தேசம் என்ற கோஷத்தோடு ஆட்சிபீடம் ஏறுகின்றவர்கள் அதிகாரக் கட்டிலில் அமர்ந்த பின்னர் புதிய மதுபான உற்பத்தி நிலையங்களுக்கும் சாராயக் கடைகளுக்கும் அனுமதி (லைசன்ஸ்) கொடுக்கின்றனர். பெரும்பாலும் எமது அரசியல் தலைவர்களின் கைகளில்தான் அதிக சாராயக் கடைகள் உள்ளன. எமது நாட்டில் இயங்கும் மதுபான சாலைகளில் 65% வீதமானவை சட்ட விரோதமானது என்று கூறப்படுகின்றது! பகிரங்கமாக இயங்கும் மதுபானச் சாலைகளின் நிலையே இதுவென்றால் சட்ட விரோத போதைவியாபாரத்தின் நிலையை என்னவென்று சொல்வது? அதை எப்படிக் கட்டுப்படுத்துவது?

ஆபத்தான கடுமையான போதைப் பாவனையிலிருந்து மக்களைக் காக்க மென்மையான போதைகளை சில நாடுகள் தாராளமயமாக்குகின்றன. இதனால் சமூகத்தில் மதுவுக்கு அடிமையாகாதவர்களும் அடிமையாகும் நிலைதான் உருவாகுகின்றது. தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகள் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் திறக்கப்பட்டன. இதனால் பள்ளி மாணவ-மாணவியர் கூட பள்ளிச் சீருடையுடனேயே டாஸ்மார்க் கடைகளுக்கு முன்னால் வரிசையில் நிற்கும் நிலைதான் உருவானது.

மதுபான வரியினால் ஓரளவு நிதி கிடைக்கலாம். ஆனால், அதை விட அதிக செலவுகளை போதை ஏற்படுத்தும். இன்று சிறையில் இருப்பவர்களில் 38%மானவர்கள் போதை தொடர்பான குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள். இவர்களைப் பராமரிக்க அரசு செலவழிக்கின்றது. போதையால் வைத்திய சாலையில் அரைவாசி இடம் ஆக்கிரமிக்கப்படுகின்றது. அதற்கும் செலவழிக்க வேண்டியுள்ளது.

இன்று ஏற்படும் விபத்துக்களில் 50% இற்கும் அதிகமானவை போதையால் ஏற்படுவதாகும். இதனால் உயிர், உடைமை இழப்பு ஏற்படுகின்றது. இவ்வாறே இன்றைய குற்றச் செயல்களில் அதிகமானவைகளுக்குப் பின்னணியாக போதைப் பாவனை இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

எனவே, போதையால் வரியாக 10 வந்தால் அதனால் ஏற்படும் இழப்புக்கள் மூலம் 50 போய்விடும். வருவது மதுவால் என்பது தெளிவாகத் தெரிவதால் இலாபம் விளங்குகின்றது. போவது போதையால் என்பது தெளிவாகத் தெரியாத காரணத்தினால் இழப்பு புரிவதில்லை.

‘நம்பிக்கை கொண்டோரே! மதுவும், சூதாட்டமும், (வணக்கத்திற்காக) நடப்பட்டவைகளும், குறிபார்க்கும் அம்புகளும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயலிலுள்ளவைகளாகும். எனவே, நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு அதைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.’ (9:90)

போதை ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயலாகும். அதை விட்டும் விலகிக் கொண்டால் வெற்றி உண்டு என இந்த வசனம் கூறுகின்றது. எனவே, முழுமையாக போதையில் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் நடவடிக்கைதான் முன்னெடுக்கப்பட வேண்டும்.

போதையில் இருந்து நாட்டைப் பாதுகாப்பதென்றால் முழுமையான மதுபானத் தடை அமுலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். அதை உடனடியாகச் செய்ய முடியாதுதான். ஆனால் கட்டம் கட்டமாக அந்த இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும்.

இதேவேளை, மது பாவனைக்கு எதிரான விழிப்புணர்வுகள் சகல மட்டத்திலும் முன்னெடுக்கப்பட வேண்டும். அண்மைக் காலமாக மாட்டிறைச்சி உண்பதற்கு எதிராக பௌத்த, ஹிந்து அமைப்புக்களால் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இது சிங்கள மக்கள் மத்தியில் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் கூட இதற்கு ஒத்துழைப்புக்கள் வழங்கினர். இலங்கை ஆழமான மத நம்பிக்கையுடைய மக்களைக் கொண்ட நாடு. இங்கே மதகுருக்கள் குறிப்பாக பௌத்த துறவிகள் பெரிதும் மதிக்கப்படுகின்றனர். இந்து பௌத்த மதங்களும் கிறிஸ்தவமும் இஸ்லாமும் மது, போதைப் பாவனையை முற்றாக எதிர்க்கின்றன. மாட்டிறைச்சி உண்ணுதல், ஹலால் இலட்சினை, ஹிஜாப் போன்ற விடயங்கள் தொடர்பில் பாரிய பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்கள் மனதில் இது பற்றிய விரோத, குரோத எண்ணத்தை மதகுருக்களால் விதைக்க முடியும் என்றால் அனைவரும் ஒன்றிணைந்து மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தை ஏன் முன்னெடுக்க முடியாது? அப்படி பிரச்சாரம் செய்தால் நிச்சயம் ஓர் பாரிய மாற்றத்தை உண்டுபண்ணுவது சிரமமாகாது!

அமெரிக்காவில் போதைப் பொருள் உபயோகிப்பதைக் கண்காணிக்கும், ‘கல்விக் கழகம்’ (Monitoring Institute of Drug abuse Monitoring Future) மாணவர்களுக்கு மத்தியில் ஏற்படுத்திய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் போதைப் பாவனையில் சரிவை ஏற்படுத்தியுள்ளது. இதை ஒரு முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.

அடுத்து, போதைப் பாவனைக்கும் கடத்தலுக்கும் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அதிகாரிகள் தவறும் பட்சத்தில் இடமாற்றம் தண்டனையாக அமையாது. அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்பவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அத்துடன் அவரது அரச உத்தியோகத்தின் வரப்பிரசாதங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும். அரசியல் தலைவர்கள் இதில் ஈடுபட்டால் அவர்களது அமைச்சுப் பொறுப்புக்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு பாராளுமன்ற உறுப்புரிமையும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். இப்படிப்பட்ட தண்டனைகள், நடவடிக்கைகள் இல்லாதபட்சத்தில் இக்குற்றச் செயல்களைக் குறைக்க முடியாது.

வெறும் சிறைச்சாலை என்பது உண்மையான தண்டனையாக அமையாது. சிறையில் அவர்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கின்றன. சிறைக்குள் இருந்தவாறே புதிய போதைக் கடத்தலுக்கான திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்திய சம்பவங்களும் நடந்துள்ளன. உள்ளே இருந்து கொண்டு புதிய புதிய யுக்திகளைக் கற்றுக் கொள்கின்றனர். புதிய குற்றவாளிகளை உருவாக்கும் நிலையங்களாக இன்றைய சிறைச்சாலைகள் மாறியுள்ளன. இந்த வகையில் பாரிய போதைக் கடத்தல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கும் தீர்மானங்களை சில நாடுகள் எடுத்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி கூட இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.

ஈரான் மீன் பிடி கப்பல் மூலம் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்குக் கடத்திவரப்பட்ட 110 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் 14 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் ஈரானியர், ஒருவர் பாகிஸ்தானியர், இருவர் இந்தியர், ஒருவர் சிங்கப்பூர் முன்னால் பொலிஸ் அதிகாரி ஆகியோர் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

இத்தகைய கடத்தல்காரர்களால் நாட்டின் பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு, ஆரோக்கியம், கல்வி போன்ற அனைத்துமே சீரழிகின்றது. இத்தகையவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதில் என்ன தவறு உள்ளது?

இதே நேரம் இந்த வெளிநாட்டவர்கள் இதை இங்கே கொண்டு வந்தார்களென்றால் இவர்களுடன் தொடர்புபட்ட இலங்கை போதை மாபியாக்கள் யார் என்பது கண்டறியப்படாவிட்டால் இவர்களைக் கொன்றாலும் இந்தக் கொடூரம் குறையப் போவதில்லை.

எனவே, பக்கச்சார்பில்லாத சட்டத்தின் முன் அனைவரையும் சமமாகப் பார்க்கும் நீதியான பார்வை தேவை!

அத்துடன் போதையைத் தூண்டும் விளம்பரங்கள், சினிமாக்கள், நிகழ்வுகள் தடுக்கப்பட வேண்டும். இவற்றைச் செய்யாவிட்டால் வித்யா, ரெஜினா போன்ற மொட்டுக்கள் சிதைக்கப்படுவதையும் கொடூரமான கொலைகள், குற்றச் செயல்கள் பெருகுவதையும் தவிர்க்க முடியாது.

எனவே, முறையான தேசிய மதுபானக் கொள்கையொன்று வகுக்கப்பட்டு எந்த அரசு வந்தாலும் அதில் மாற்றம் செய்யாமல் நிரந்தரமான முழுமையான மதுத் தடை என்ற இலக்கை நோக்கி நாட்டை நகர்த்துவதற்கான முன்னெடுப்புக்களை ஆளும் வர்க்கம் துவக்க வேண்டும்.

போதை தொடர்பான குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட சிலருக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பான கருத்தாடல் இதில் ஒரு கட்டமாக அமையட்டும்!

மனித உரிமை அமைப்புக்களும் கொல்லாமைக் கோட்பாடு கொண்ட ஆன்மீகத் தலைமைகளும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிப்பதைக் கண்டிக்கலாம். பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனை அளிப்பது அவசியமாகும். தாங்கிப் பிடிக்க ஆள் இருந்தால் பிள்ளை தூங்கித் தூங்கி விழும் என்பார்கள். குற்றவாளிகள் மீது காட்டும் அன்பு அவர்களை மீண்டும் மீண்டும் குற்றம் செய்யவும் புதிய குற்றவாளிகள் உருவாகவுமே இடமளிக்கும்.

எனவே, அளிக்கும் தண்டனை கடுமையாகவும் குற்றவாளிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனை அவர்களுக்குப் பாரிய இழப்பை ஏற்படுத்துவதுமாக அமைய வேண்டும்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.