செழிப்புடன் வாழும் இறை நிராகரிப்பாளர்கள் [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 21]

وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّمَا نُمْلِىْ لَهُمْ خَيْرٌ لِّاَنْفُسِهِم اِنَّمَا نُمْلِىْ لَهُمْ لِيَزْدَادُوْۤا اِثْمًا‌ ۚ وَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ‏

‘மேலும், அவர்களை நாம் (உடனுக்குடன் தண்டிக்காது) விட்டு வைப்பது தங்களுக்கு நல்லது என நிராகரிப்போர் எண்ண வேண்டாம். நாம் அவர்களை விட்டு வைத்திருப்பதெல்லாம் பாவத்தை அவர்கள் அதிகரித்துக் கொள்வதற்கே. மேலும் அவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு. ‘ (3:178)

முஸ்லிம்கள் உலகில் செழிப்பாக வாழ வேண்டும், காபிர்கள் அழிய வேண்டும் என எம்மில் சிலர் நினைக்கலாம். ஆனால், அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு வாழ்வில் வளங்களை வழங்கலாம். முஸ்லிம்களுக்கு நெருக்கடிகளையும் கொடுக்கலாம். இதுதான் அல்லாஹ்வின் சுன்னத்தாகும். ஆனால், அவர்களுக்கு வளங்கள் வழங்கப்படுவது நலவிற்கன்று என்று அல்லாஹ் கூறுகின்றான்.

இது தொடர்பில் பல வசனங்கள் பேசுகின்றன. காபிர்களுக்கு வழங்கப்படும் உலக இன்பங்கள் எம்மிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடாது! அல்லாஹ் கொடுத்தும் சோதிப்பான்.

‘அவர்களது செல்வங்களும், அவர்களது பிள்ளைகளும் உம்மை ஆச்சரியத்திற்குள்ளாக்கி விட வேண்டாம். இவற்றின் மூலம் இவ்வுலக வாழ்வில் அவர்களைத் தண்டிப்பதையும், அவர்கள் நிராகரிப் போராக இருக்கும் நிலையில் அவர்களது உயிர்கள் பிரிவதையுமே அல்லாஹ் நாடுகின்றான்.’ (9:55)

‘நாம் அவர்களுக்குச் செல்வத்தையும், ஆண் மக்களையும் (உதவியாக) வழங்குவதால், நாம் அவர்களுக்கு நன்மை செய்வதில் விரைந்து செயற்படு கின்றோம் என அவர்கள் எண்ணுகின்றனரா? அவ்வாறன்று, அவர்கள் உணரமாட்டார்கள்.’ (23:55-56)

‘எனவே, என்னையும் இச்செய்தியைப் பொய்ப்பிப்பவனையும் விட்டு விடுவீராக! அவர்கள் அறியாதவாறு அவர்களைப் படிப்படியாக நாம் பிடிப்போம்.’ (68:44)

இந்த அடிப்படையில் காபிர்கள் உலகத்தில் வளமாக வாழ்ந்தால் அவர்கள் மறுமையில் மிக அதிகமான தண்டனைக்கு ஆளாகப் போகின்றார்கள் என்பதே உண்மையாகும். முஸ்லிம்கள் இஸ்லாமிய வழியில் வாழ்ந்தும் உலகில் துன்பங்களுக்கு ஆளானால் மறுமையில் அவர்களது அந்தஸ்தும் பாக்கியமும் அதிகரிக்கப்போகின்றது என்பதே உண்மையாகும்.