மூஸா நபியும் மலக்குல் மௌத்தும் (தொடர்-2)

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 2)
சென்ற இதழின் கவாரிஜ்கள், ஷீஆக்கள், முஃதஸிலாக்கள் போன்ற வழிகெட்ட பிரிவினர் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை மறுத்திருப்பது பற்றியும் மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஸஹீஹான ஹதீஸ் அறிஞர் பீஜே அவர்களால் மறுக்கப்படுவது பற்றியும் தெளிவுபடுத்தினோம்.

மரணத்தைப் பொறுத்த வரையில் சாதாரண மனிதர்களின் மரணத்திற்கும், நபிமார்களின் மரணத்திற்குமிடையில் வித்தியாசம் இருப்பதையும், நபிமார்கள் மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர் என்பதையும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்தினோம். இந்த உண்மையை உணராமல்தான் சிலர் இந்த ஹதீஸை மறுக்கின்றனர்.
அத்துடன் மலக்குகள் மனித ரூபத்தில் வருவர் என்பதையும் தன்னிடம் திடீரென மனித ரூபத்தில் வந்த மலக்கை மூஸா நபி அறைந்தது ஒரு சாதாரண நிகழ்வு. மறுக்கப்படவேண்டிய அம்சம் அல்ல என்பதையும் தெளிவுபடுத்தினோம். இந்த உண்மையை உணராத பல வழிகெட்ட பிரிவினர் வரலாற்று ஓட்டத்தில் இந்த ஹதீஸை மறுத்துள்ளனர். இதனை அஹ்லுஸ் ஸுன்னாவுடைய பல அறிஞர்களும், ஹதீஸ் கலை மேதைகளும் வன்மையாகக் கண்டித்துமுள்ளனர்.
அல்லாஹுத்தஆலா இரவின் இறுதிப் பகுதியில் உலகத்தின் வானத்திற்கு இறங்குகின்றான் என்ற ஹதீஸை நீங்கள் கூறுகின்றீர்கள் அல்லவா? அவ்வாறே சுவனத்தில் முஃமின்கள் அவனைப் பார்ப்பார்கள் என்றும், முகத்தைக் கேவலப்படுத்தாதீர்கள்! ஏனெனில், அல்லாஹ் ஆதம்(அலை) அவர்களைத் தனது சூறத்தில் படைத்தான் என்ற ஹதீஸையும், நரகம் முறையிடும் போது அல்லாஹ் அதில் தனது காலை வைப்பான் என்றும், மூஸா(அலை) அவர்கள் மலக்குல் மவ்த்தின் கண்ணைப் பழுதாக்கினார் என்றும் ஹதீஸ்களைக் கூறுகின்றீர்களே என்று இமாம் அஹ்மத்(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது;

كل هدا صحيح

“இவை அனைத்தும் ஆதாரபூர்வமானவைதான்” என்று கூறினார்கள்.
இமாம் இஸ்ஹாக்(ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் பற்றிக் கூறும் போது;

لا يدعه الا مبتدع او ضعيف الرأي

“இதனை வழிகேடன் அல்லது பலவீனமான பார்வையுடையவனைத் தவிர வேறு எவரும் விட்டு விட மாட்டார்கள்” என்று குறிப்பிடுகின்றார்கள்.
இந்த ஹதீஸைக் கடந்த காலங்களில் பல பிரிவினரும் மறுத்து வந்துள்ளனர். இது குறித்து இமாம் இப்னு குஸைமா(ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது;

قَالَ اِبْنُ خُزَيْمَةَ : أَنْكَرَ بَعْضُ الْمُبْتَدَعَةِ هَذَا الْحَدِيثَ

சில பித்அத்வாதிகள் இந்த ஹதீஸை மறுத்துள்ளனர்” என்று குறிப்பிடுகின்றார்கள்.
(ஸஹீஹுல் புகாரியின் விரிவுரை பத்ஹுல் பாரீ 10/24)

இமாம் அல்மாஸிரிய்(ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது;

قَالَ الْمَازِرِيّ : وَقَدْ أَنْكَرَ بَعْض الْمَلَاحِدَة هَذَا الْحَدِيث

“சில நாஸ்திகர்கள் இந்த ஹதீஸை மறுக்கின்றனர்” என்று குறிப்பிடுகின்றார்கள்.
(பார்க்க: ஸஹீஹ் முஸ்லிமின் விளக்கவுரை 8/103)

சில அறிஞர்கள் இந்த ஹதீஸை நம்புவதை அகீதாவில் ஒரு பகுதியாகக் குறிப்பிடுகின்றனர்.
இது குறித்து அறிஞர் ஸாலிஹ் அல் உதைமீன்(ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது;

وهذا الحديث ثابت في الصحيحين وإنما أثبته المؤلف في العقيدة لأن بعض المبتدعة أنكره

“இந்த ஹதீஸ் புகாரி-முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சில பித்அத்வாதிகள் இதை மறுப்பதால் இந்த நூலாசிரியர் அகீதாவில் ஒரு அம்சமாக இந்த ஹதீஸை இடம்பெறச் செய்துள்ளார்கள்” என்று குறிப்பிடுகின்றார்கள்.
(பார்க்க: மஜ்மூஉ பதாவா வரஸாயில் இப்னு உதைமீன் 5/31)

நவீன கொள்கைவாதிகள் எனும் பித்அத்வாதிகள் மறுத்துள்ளது போன்றே “ராபிழாக்கள்” எனும் வழிகெட்ட ஷீஆக்களும் இந்த ஹதீஸை மறுத்துள்ளனர்.
அபூ ஸுலைமான் அல்ஹத்தாபி(ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது;

قَالَ أَبُو سُلَيْمَانَ الْخَطَّابِيُّ هَذَا حَدِيثٌ يَطْعَنُ فِيهِ الْمُلْحِدُونَ وَأَهْلُ الْبِدَعِ

“நிராகரிப்பாளர்களும், பித்அத்வாதிகளும் இந்த ஹதீஸில் குறை கூறுகின்றனர்” எனக் குறிப்பிடுகின்றனர்.
(அல்அஸ்மாஉ வஸ்ஸிபாத் லில்பைஹகீ 2/449)

அல்ஹாபிழ் அப்துல் கனீ அல்முகத்தஸி இது குறித்துக் குறிப்பிடும் போது;

لا ينكره إلا ضال مبتدع راد على الله ورسوله

“வழிகேடனும், பித்அத்வாதியும் அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் செய்தியை மறுப்பவனும் மட்டுமே இந்த ஹதீஸை மறுப்பான்” என்று குறிப்பிடுகின்றார்.
(தத்கிரதுல் முஃதஸி ஷரஹு அகீததுல் ஹாபிழ் அப்துல் கனீ அல்முகத்தஸி)

இவ்வாறு பல்வேறுபட்ட வழிகெட்ட பிரிவினரால் மறுக்கப்பட்ட இந்த ஹதீஸை அவர்கள் கூறிய அதே காரணங்களை முன்வைத்து சகோதரர் பீஜே அவர்களும் மறுக்கின்றார்கள். இவர் இந்த ஹதீஸை மறுப்பதற்காக முன்வைக்கும் வாதங்களைப் பின்வருமாறு சுருக்கி நோக்கலாம்.
– மூஸா நபி மரணத்தை வெறுத்துள்ளார் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது.
– ஒரு நபி வானவரைத் தாக்குவாரா? இது நபிமார்களின் பண்புக்குச் சரி தானா?
– மலக்கு தோல்வியுடன் திரும்பிச் செல்வாரா?
இவைதான் இந்த ஹதீஸை மறுப்போர் எடுத்து வைக்கும் பிரதானமான வாதங்களாகும். இந்த ஒவ்வொரு வாதங்களுக்குள்ளும் மற்றும் சில சின்னச் சின்னக் கேள்விகள் அடங்கியுள்ளன. அவை அத்தனைக்கும் இன்ஷா அல்லாஹ் விரிவான விளக்கங்களை இத்தொடரில் நாம் பார்க்கலாம்.
அந்த விளக்கத்திற்குச் செல்ல முன்னர் பொதுவான நடுநிலையான ஒரு சிந்தனையை உங்கள் முன்வைப்பது பொருத்தம் என்று நினைக்கின்றேன்.
ஒரு ஹதீஸில் ஏதேனும் ஒரு சின்ன குறை இருந்தால் பல அறிஞர்களின் பார்வைக்கு அது படாமல் போக வாய்ப்பு உள்ளது என்றாவது கூறலாம். எனினும் கடந்த காலத்தில் வாழ்ந்த எந்த ஹதீஸ் கலை மேதைக்கும் அந்தக் குறை தென்படாமல் போய் விட்டது என்று கூற முடியாது. ஆயினும் பீஜே கூறுவது போல் ஒரு நபியுடையதும், ஒரு மலக்குடையதும் ஏன்! அல்லாஹ்வுடையதும் அந்தஸ்த்தைக் குறைத்துக் காட்டும் ஹதீஸாக இது இருந்திருந்தால் நிச்சயமாக ஹதீஸ் கலை மேதைகள் அனைவரின் பார்வையிலிருந்து அது தப்பியிருக்காது! பீஜேயை விட இமாம் புகாரி, முஸ்லிம் போன்ற இமாம்கள் மார்க்க அறிவோ, உணர்வோ, ஆய்வோ, அற்றிருந்தார்கள் என்று கற்பனையும் பண்ண முடியாது. இப்படி இருக்கக் குர்ஆனின் பல வசனங்களுக்கு முரணாக அமைந்த(?) ஒரு ஹதீஸை அவர்கள் அனைவரும் “சரியானது!” என்று கூறியிருப்பார்களா? என்று சிந்தித்தால், குறை ஹதீஸில் இல்லை; இந்த ஹதீஸை மறுப்போரின் அறிவிலும், மார்க்கத்தை ஆய்வு செய்யும் முறையிலும்தான் உள்ளது என்பது புலப்படுகின்றது. எனவேதான் வழிகெட்ட பிரிவினரைத் தவிர வேறு எந்த அறிஞர்களும் கடந்த காலங்களில் இந்த ஹதீஸை மறுத்ததில்லை. பீஜேயை விடக் கடந்த கால அறிஞர்கள் அனைவரும் ஆய்வறிவற்றவர்களாக இருந்தனர் என்று எண்ணுவது இஸ்லாமிய வரலாற்றையும், ஹதீஸ் கலை வரலாற்றையும் அறியாதவர்களின் பார்வையாகவே இருக்கும். இந்தச் சிந்தனையுடன் இந்த ஹதீஸை மறுப்பதற்காக முன்வைக்கப்படும் வாதங்களைப் பார்ப்போம்.
மூஸா நபி மரணத்தை வெறுத்தார்களா?
இந்த வாதத்தைப் பீஜே பின்வருமாறு முன்வைக்கின்றார்;
“இவ்வுலக வாழ்க்கை அற்பமானது; மறுமை வாழ்வுதான் நிலையானது” என்பது எல்லா இறைத் தூதர்களினதும் போதனையாக இருந்தது. தமக்கு மரணம் வந்து விட்டது என்பதை மூஸா நபியவர்கள் அறிந்து கொண்டால் அதற்குத் தம்மைத் தயார்படுத்திக்கொள்வார்களே தவிர, அதை எதிர்த்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டார்கள்.”
(பீஜேயின் தர்ஜமா – நான்காம் பதிப்பு, பக்கம் 1309)

நாம் ஏற்கனவே நபிமார்களின் மரணத்திற்கும், சாதாரண மக்களின் மரணத்திற்குமிடையிலிருக்கும் வேறுபாட்டை விபரித்துள்ளோம். அந்த ஹதீஸே இந்த வாதத்தை வலிமையிழக்கச் செய்து விடும். நபிமார்களுக்கு மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அல்லாஹ் வழங்கியுள்ளான். அதை மூஸா நபி பயன்படுத்தினார் என்றால் அது அவரது உரிமை. அதனால் அவரது கண்ணியத்தில் எந்தக் குறையும் ஏற்படாது.
அடுத்து வானவர் மனித ரூபத்தில் வந்துள்ளார். மனிதன் ஒருவர் மூலம் தனக்கு ஆபத்து வருமென்றால், அதை எதிர்த்து நடவடிக்கை மேற்கொள்வது மார்க்கம் வலியுறுத்தும் அம்சமேயல்லாது தடுத்த அம்சம் அல்ல. அடுத்து மூஸா(அலை) அவர்கள் – அவர்களின் உண்மையான நாட்டம் என்ன? என்பது ஹதீஸின் இறுதிப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. (அதைத்தான் பீஜே தர்ஜமாவில் மொழி பெயர்க்காமல் இருட்டடிப்புச் செய்திருந்தார்.) இது குறித்துப் பின்னர் விளக்கமாக நோக்கலாம்.
இந்த ஹதீஸை மறுப்போர் கூறுவது போல மூஸா நபி மரணத்தை வெறுத்திருந்தால் கூட அது அவரது அந்தஸ்தைக் குறைக்காது.
மரணமற்ற வாழ்வை விரும்பிய ஆதம் நபி:
அல்லாஹுதஆலா ஆதம்(அலை) அவர்களைப் படைத்து சுவனத்தில் சுகமாக வாழ விட்டான். ஒரேயொரு மரத்தின் கனியை மட்டும் உண்ணக் கூடாது எனத் தடுத்திருந்தான். ஆதம்(அலை) அவர்கள் அந்தக் கனியை ஷைத்தானின் தூண்டுதலால் சாப்பிட்டார்கள்.
ஷைத்தான் எப்படி அவர்களை வழிகெடுத்தான்? என்பது பற்றிக் குர்ஆன் கூறும் போது;
அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். “ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப் பற்றியும் உமக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்றான். (20:120)
(இது பீஜே அவர்களின் மொழியாக்கம்தான்)

மரணமில்லாத வாழ்வு கிடைக்கும் என்று ஷைத்தான் தூண்டியதால் அல்லாஹ்வின் கட்டளையையும் மீறி ஆதம்(அலை) அவர்கள் அந்த மரத்தின் கனியைப் புசித்தார்கள். ஆதம்(அலை) அவர்களும் ஒரு நபிதான். மரணமேயில்லாத வாழ்க்கையின் மீது அவர்கள் கொண்ட மோகம் அல்லாஹ் போட்ட ஒரேயொரு தடையைக் கூட மீறும் அளவுக்கு அவர்களை இட்டுச் சென்றுள்ளது என்று குர்ஆன் கூறுகின்றது.
மூஸா நபி மரணத்தை வெறுத்ததாகக் காரணம் காட்டி மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸை மறுப்பது போல், ஆதம்(அலை) அவர்கள் மரணமே இல்லாத வாழ்வுக்கு ஆசைப்பட்டு, ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டு, அல்லாஹ்வின் கட்டளையை மீறுவதாகக் கூறும் குர்ஆனின் வசனங்களையும் நிராகரிக்கப் போகின்றார்களா? முரட்டுத்தனமான பிடிவாதமும், விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற மனோநிலையும் ஹதீஸை மட்டுமல்ல; குர்ஆனையும் நிராகரிக்கும் நிலைக்கு இவர்களை அழைத்துச் செல்லுமா?
இது ஆதம்(அலை) அவர்களுடன் சம்பந்தப்பட்டது. மூஸா நபி சம்பந்தப்பட்ட சில நிகழ்ச்சிகளையே இங்கே தர விரும்புகின்றோம்.
உயிருக்குப் பயந்து ஊரை விட்டு ஓடியவர்(?)
மூஸா(அலை) அவர்கள் தவறுதலாக ஒரு கொலை செய்தார்கள். அந்த செய்தி தெரிய வந்த போது, மூஸா(அலை) அவர்களைக் கொலை செய்ய அதிகாரிகள் முடிவு செய்ததாகத் தகவல் மூஸா நபிக்குக் கிடைக்கின்றது. எனவே தனது உயிரைக் காத்துக்கொள்வதற்காக பயத்துடன் கவனமாக எவரும் அறியாத வண்ணம் ஊரை விட்டும் மூஸா நபி ஓடுகின்றார். (பார்க்க: 28:15-21)
மூஸா நபி உயிருக்குப் பயந்து ஊரை விட்டும் ஓடியதாக இந்தக் குர்ஆனிய வசனங்கள் கூறுகின்றனவே! இதையும் மறுக்கப் போகின்றார்களா? அல்லது தவறுதலாக ஒரு கொலை நடந்து விட்டால் சட்டப்படி அதை அணுகி, பிரச்சினையைத் தீர்க்காமல் கொலையை மூஸா நபி மறைத்துள்ளார்கள். இந்தச் சம்பவம் கொலை செய்வதையும், அதை மறைப்பதையும் தேவைப்பட்டால் சட்டத்தின் பிடியில் சிக்காமல் ஓடி ஒழிப்பதையும் ஆதரிக்கின்றது என்று கூறி, (நூறு கொலைகள் செய்த மனிதனை அல்லாஹ் மன்னித்த ஹதீஸை மறுத்தது போன்று) இந்தக் குர்ஆன் வசனங்களையும் மறுக்கப் போகின்றார்களா? அல்லது இந்தச் சம்பவம் கொலை செய்யத் தூண்டுகின்றது என்று கூறி மறுக்க முன்வருவார்களா?
இந்தச் சம்பவத்திற்கு வேண்டுமானால் சில சமாளிப்புப் பதில்களை அவர்கள் கூறலாம்.
பாம்புக்குப் பயந்து ஓடியவர்:
மூஸா நபியுடன் தூர் மலையடிவாரத்தில் அல்லாஹ் நேரடியாகப் பேசுகின்றான்; “மூஸாவே! நான்தான் அகிலத்தின் இரட்சகனாகிய அல்லாஹ்!” என்று நேரிடையாகக் கூறியே அல்லாஹ் பேசுகின்றான். அப்போது மூஸா நபியின் கையில் இருந்த தடியைக் கீழே போடுமாறு அல்லாஹ் கூறுகின்றான். அவர் கீழே போட்டார். அந்தத் தடி பாம்பு போல் நெளிவதைக் கண்டதும்;
திரும்பிப் பார்க்காமல் புறமுதுகிட்டு ஓடினார். அதன் பின் அல்லாஹ்வே, “மூஸாவே! முன்னோக்கி வாரும்! பயப்படாதீர்! நிச்சயமாக நீர் அச்சமற்றவர்களில் உள்ளவர்” என்று கூறிய பின்னர்தான் வருகிறார்.
(பார்க்க: 28:29-31, 20:11-21)

இந்தச் சம்பவத்தை நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்! மூஸா நபி உயிருக்கு எவ்வளவு பயந்துள்ளார் என்று சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ்வே நேரடியாகப் பேசிக்கொண்டிருக்கும் போது அந்தப் பாக்கியம் மிக்க உரையாடலையும் உடைத்துக் கொண்டு ஒரு பாம்புக்குப் பயந்து ஓடுவதாக இந்த ஆயத்துக்கள் கூறுகின்றனவே! இது சரியாக இருக்குமா? அப்படியே பயப்பட்டால் கூட தன்னுடன் நேரடியாக அல்லாஹ் உரையாடிக்கொண்டிருக்கின்றான்; அந்த அல்லாஹ்விடமே முறையிடலாமல்லவா? இவ்வாறுதான் மூஸா நபியும் மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸ் குறித்துப் பீஜே வாதிப்பது போல் வாதிட்டால் இந்த ஆயத்துக்களையும் நிராகரிக்க நேரிடுமல்லவா?
மேற்படி ஹதீஸை மறுக்கும் விதத்தில் பீஜே அவர்கள் எழுதும் போது;
“மலக்குல் மவ்த் அல்லாஹ்வின் கட்டளையைக் கூறிய போது ஒரு நபி என்ன செய்திருப்பார்? உடனே அதற்குத் தலை சாய்த்திருப்பதைத் தவிர வேறு வழி அவருக்கு இல்லை. (நபிமாருக்குத்தான் மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் வேறு வழி இருக்கிறது என்ற அடிப்படைக்கு முரணான கூற்று இது.) இதோ நான் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தத் தயார்! என்று கூறி இருந்தால் ஒரு நபியின் தகுதி அதில் வெளிப்பட்டிருக்கும். அல்லது “இறைவா! இன்னும் கொஞ்சம் ஆயுளை அதிகமாக்கித் தா!” என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்திருந்தால் சராசரி முஃமினின் பண்பு அதில் வெளிப்பட்டிருக்கும். ஆனால், அல்லாஹ் அனுப்பிய தூதரை கண்ணைக் குருடாக்கும் அளவுக்கு அறைவது ஈமானில் சேருமா? இறை மறுப்பில் சேருமா?” என்று வாதிட்டு அந்த ஹதீஸை மறுக்கின்றார்.
இதே போன்று அல்லாஹ் நேரடியாக உரையாடிக்கொண்டிருக்கின்றான். அவன்தான் தடியைப் போடச் சொல்கின்றான். அது பாம்பு போல் நெளிகின்றது. இதைப் பார்த்த ஒரு இறைத் தூதர் என்ன செய்ய வேண்டும்? அச்சம் இல்லாமல் இருக்க வேண்டுமல்லவா?
நபி(ஸல்) அவர்களை எதிரிகள் சூழ்ந்த போது, அபூபக்கர்(ரலி) அவர்களிடம் “பயப்படாதே! அல்லாஹ் எம்முடன் இருக்கின்றான்” என்று (9:40) கூறியது போன்று பயமற்று இருக்க வேண்டும். நம்முடன் அல்லாஹ் உரையாடுகின்றான் என்ற உணர்வுடன் இருந்திருக்க வேண்டும். சரி, சராசரி மனிதனைப் போல் அச்சம் ஏற்பட்டால் கூட அல்லாஹ்விடம் முறையிட வேண்டும். அதை விட்டு விட்டு பாம்புக்குப் பயந்து அல்லாஹ்வையே உதாசீனம் செய்வது போல் திரும்பிப் பார்க்காமல் ஓடுகின்றாரே இது அல்லாஹ்வை நம்புவதில் சேருமா? அல்லாஹ் மீது நம்பிக்கையற்ற தன்மையைக் காட்டுமா? இது அல்லாஹ்வை மதிப்பதைக் காட்டுமா? உதாசீனப்படுத்துவதைக் காட்டுமா? என்ற தொனியில் கேள்விகளைத் தொடுத்து இந்த வசனங்களையும் இவர்கள் நிராகரிக்கப் போகின்றார்களா?
மூஸா(அலை) அவர்கள் பிர்அவ்னிடம் பிரச்சாரம் செய்யும் போது தனது கைத் தடியைப் போடுகின்றார்கள். அது பாம்பாக மாறுகின்றது. இதைப் போல் எம்மாலும் செய்ய முடியும் என்ற அடிப்படையில் அவன் சூனியக்காரர்களுடன் போட்டிக்கு ஏற்பாடு செய்கின்றான். சூனியக்காரர்கள் தமது கைத் தடிகளையும், கயிறுகளையும் போட்ட போது அவர்களது சூனியத்தின் காரணத்தினால் அவை பாம்புகள் போன்று போலித் தோற்றமளிக்கின்றன. இதைப் பார்த்து மூஸா நபி பயப்படுகிறார்கள். இதனைக் குர்ஆன் பல இடங்களில் விபரிக்கின்றது. (பார்க்க: 20:57-69)
தனது தடி குறைந்தது ஏற்கனவே இரண்டு தடவைகளாவது பாம்பாக மாறியுள்ள நிலையிலும் மூஸா நபி சூனியக்காரர்களின் போலிப் பாம்புக்குப் பயப்பட்டுள்ளாரே! உயிருக்கு இவ்வளவு பயந்த ஒருவர் இறைத் தூதராக இருக்க முடியுமா? சூனியக்காரனின் இது போன்ற சேட்டைக்கு நாங்களே அச்சப்பட மாட்டோம் எனும் போது ஒரு நபி அச்சம் கொள்வாரா? சராசரி மனிதன் கூட உண்மையான பாம்பைக் கண்டால் கூடத் தடியைத் தேடி அதை அடிக்க முற்படும் போது ஒரு நபி கையில் தடியை வைத்துக் கொண்டு, பாம்பு போல் போலித் தோற்றத்தை ஏற்படுத்தும் கயிற்றுக்கும், தடிக்கும் அச்சப்பட்டிருப்பீர்களா? சூனியக்காரனால் தடியையும், கயிற்றையும் பாம்பாக மாற்ற முடியாது என்ற உண்மையை நாம் கூட உறுதியாகக் கூறிக்கொண்டிருக்கின்றோம். அப்படி இருக்கும் போது சூனியக்காரனால் தடியைப் பாம்பாக மாற்ற முடியாது என்ற அடிப்படை அரிச்சுவடி அறிவு கூட மூஸா நபிக்கு இல்லாமல் இருந்திருக்குமா? என்று பீஜே தனது பாணியில் கேள்விகளை அடுக்கி இந்தக் குர்ஆன் வசனங்களையும் நிராகரிக்கப் போகின்றாரா? பீஜேயை முழுமையாக நம்பும் சகோதரர்கள் குர்ஆன் வசனங்களையும் மறுக்கத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனரா?
உயிருக்குப் பயந்து உதவியாளரைக் கேட்டவரா?
அல்லாஹுதஆலா மூஸா நபியுடன் நேரடியாக உரையாடிச் சில அற்புதங்களையும் கொடுத்து ஃபிர்அவ்னிடம் சென்று பிரச்சாரம் செய்யச் சொல்கின்றான்.
அப்போது மூஸா நபி;
அ(தற்க)வர், “எனது இரட்சகனே! நிச்சயமாக நான் அவர்களில் ஒருவனைக் கொலை செய்து விட்டேன். அதனால் அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என நான் அஞ்சுகின்றேன்” என்று கூறினார். (28:33) என்று கூறுகின்றார்.

அல்லாஹ்வே நேரடியாக உத்தரவிடும் போது என்னை அவர்கள் கொன்று விடுவார்கள் என்ற அச்சத்தை மூஸா நபி வெளிப்படுத்துகின்றார்களே! இது சரியா? சாதாரணமாக எமது இளம் உலமாக்களே ஆபத்து நிறைந்த களங்களுக்குச் சென்று தஃவாச் செய்கின்றனர். ஒரு தீவிரவாதக் குழுத் தலைவனின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டுச் சாதாரண ஒரு தீவிரவாதி வெடிகுண்டுடன் போய் எதிரிகளுடன் மோதி தன்னைத் தானே அஞ்சாமல் அழித்துக்கொள்ளும் போது, அல்லாஹ் கூறும் போது என்னைக் கொன்று விடுவார்கள் என்று தனது அச்சத்தை வெளிப்படுத்துகின்றாரே! அது சரியாக இருக்குமா? அப்படியே கொல்லப்பட்டால் கூடச் சுவனம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இவருக்கு இல்லையா? அல்லாஹ்வின் பாதையில் உயிரைத் தியாகம் செய்ய ஏன் ஒரு நபி தயங்க வேண்டும்? என்றெல்லாம் கேள்வி எழுப்பி, இந்தக் குர்ஆன் கூறும் சம்பவத்தையும் நிராகரிக்கப் போகின்றனரா?
இவர்கள் ஹதீஸ்களை மறுக்கும் இதே பாணியில் சிந்தித்தால், ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மட்டுமல்ல; குர்ஆன் கூறும் பல சம்பவங்களையும் மறுக்கும் மனநிலைதான் சாதாரண மக்களிடம் ஏற்படும். வழிகெட்ட முறையில் அணுகி, ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் நிராகரித்து, குர்ஆனையும் நிராகரிக்கும் நிலைக்குச் செல்வதா? குர்ஆனையும், ஹதீஸையும் நிராகரிக்காமல் இணக்கப்பாட்டைக் கண்டு இரண்டையும் ஏற்கும் வழியில் செல்வதா? முரட்டுப் பிடிவாதமும், போலி சுய கௌரவமும் பார்த்து தனி நபர் மோகத்தில் வழிகேட்டைத் தேர்ந்தெடுப்பதா?
கடந்த கால ஹதீஸ் கலை மேதைகள் இந்த ஹதீஸை நியாயமான காரணங்களால் ஏற்றது போல் நாமும் ஏற்று நல்வழி செல்வதா? எனப் பொது மக்கள் நிதானமாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
மூஸா நபி மரணத்தை வெறுத்தால் கூட இந்த ஹதீஸை மறுக்க முடியாது என்பதை இதிலிருந்து அறியலாம். எனினும் மூஸா நபி மரணத்தை வெறுக்கவில்லை என்றுதான் இந்த ஹதீஸ் கூறுகின்றது. இது குறித்து அடுத்த இதழில் இன்னும் வரும்.
இன்ஷா அல்லாஹ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.