புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.
நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது.
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.” (2:183)
மேற்படி வசனம், “நோன்பு” என்பது பக்குவத்தை வளர்க்கும் பயிற்சி என்கின்றது. இன்று உலகை உலுக்கி வரும் அநேக பிரச்சினைகளுக்கு நோன்பு ஒரு தீர்வாக இருப்பதை நுணுக்கமாக ஆராய்ந்தால் அறிய முடியும். மனிதனிடமிருக்கும் சில உணர்வுகள் முறையாக நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பாரதூரமான விளைவுகளை உலகம் எதிர்நோக்க வேண்டிவரும் என்பது கண்கூடு.
-1- உடல் இச்சை.
-2- கோபம்.
-3- தவறான உணவு முறை.
-4- தவறான பேச்சு.
இவை இன்றைய உலகை உலுக்கி வரும் ஆபத்து நிறைந்த அம்சங்களாகும்.
மனிதனிடம் இயல்பிலேயே பாலியல் உணர்வு இருக்கின்றது. உலக இருப்புக்கும், உயிரினங்களின் பரவலுக்கும் பாலியல் உணர்வு அவசியமானதாகும். எனினும், இந்த உணர்வு நெறிப்படுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட வேண்டும். தவறான முறையில் இந்த உணர்வுகள் தீர்த்துக்கொள்ளப்படக் கூடாது.
இன்று உலகில் நடக்கும் கொலைகளில் அதிகமானவை பாலியலை அடிப்படையாகக் கொண்டவையாகும். பெற்ற பிள்ளை, வளர்த்த பெற்றோர், உறவினரென எவரையும் கொல்லத் தயங்காத குணம் இந்தப் பாலியலுக்குள்ளது. இந்த உணர்வைக் கட்டுப்படுத்தத் தெரியாத சமூகங்களில் தந்தை பெயர் தெரியாத பிள்ளைகள் அதிகரித்து வருகின்றன.
உலகம் சந்தித்து வரும் பயங்கரமான பாலியல் நோய்களைத் தீர்த்துக்கொள்ள முடியாமல் அரசுகள் திண்டாடி வருகின்றன.
நோன்பு நோற்கும் ஒருவன் தனது மனைவியுடன் கூட உடலுறவைத் தவிர்த்துத் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்கின்றான். நோன்பு பாலியல் உணர்வை நெறிப்படுத்தும் என்பதாலேயே இது சாத்தியமாகின்றது.
இளைஞர்களே!“திருமணம் புரியும் வாய்ப்பிருந்தால் திருமணம் முடியுங்கள்! அது பார்வையைத் தாழ்த்தும்; கற்பைக் காக்கும். அதற்கு முடியாதவர்கள் நோன்பிருங்கள்! அது அவருக்குக் கேடயமாக இருக்கும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(முஸ்லிம், திர்மிதி, நஸாஈ)
இன்று மனிதன் இயந்திரமயமாகி மனிதத் தன்மையை இழந்து வருகின்றான். கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாதவனாக மாறி வருகின்றான். கணவன் மீது மனைவி கோபங்கொண்டதால் உறங்கும் போது அம்மிக்கல்லைத் தலையில் போட்டுக் கொல்கிறாள்; மண்ணெண்ணையை ஊற்றி எரிக்கின்றாள்; பக்கத்து வீட்டுக்காரனின் நாய் குரைத்துத் தூக்கத்தைக் கெடுத்ததற்காகப் பக்கத்து வீட்டானைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றான்; தொடர்ந்து பிள்ளை அழுது அடம்பிடித்ததற்காகப் பிள்ளையைத் தூக்கிச் சுவறில் அடித்துப் பெற்றோரே கொலை செய்கின்றனர்; இரு சகோதரர்கள் மல-சல கூடத்திற்கு முதலில் யார் போவது என்ற பிரச்சினையில் ஒருவர் மற்றவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்கின்றான். இப்படி எண்ணற்ற செய்திகளை அன்றாடம் பார்த்து வருகின்றோம்.
நோன்பு மனிதனது கோப உணர்வைக் கட்டுப்படுத்தப் பழக்குகின்றது. நீ நோன்புடனிருக்கும் போது உன்னுடன் ஒருவன் சண்டையிட முற்பட்டால் “நான் நோன்பாளி!” எனக் கூறி ஒதுங்கி விடு என இஸ்லாம் கூறுகின்றது. கோப உணர்வை ஒருவன் கட்டுப்படுத்திப் பழக்கப்பட்டால் பல ஆபத்துகளிலிருந்து விடுதலை பெற்று விடலாம்.
உலக நாடுகளும், அரச தலைவர்களும் கோபத்தைக் கட்டுப்படுத்தப் பழகி விட்டால் உலகை அழிவிலிருந்து பாதுகாக்கலாம்.
மனிதன் “பேசும் மிருகம்” என்பர். மனிதன் மிருகம் போன்று பகுத்தறிவைப் பயன்படுத்தாமல் பேசும் போது விளையும் விபரீதங்கள் அதிகமாகும். பேச்சில் “பொய்” என்பது பிரதான பாவமாகும். அமெரிக்காவும், பிரிட்டனும் ஈராக்கில் பயங்கர ஆயுதம் இருப்பதாகக் கூறிய ஒரு பொய் 6 இலட்சம் சிறுவர்களைப் பலி கொண்டுள்ளதென்றால் பொய்யின் விபரீதத்தையுணர வேறு ஆதாரம் தேவையில்லை. இதே போன்று அவதூறு, பொய்ச் சாட்சி, புறம் என எண்ணற்ற தவறுகள் பேச்சால் ஏற்படுகின்றன.
நோன்பு பேச்சில் கட்டுப்பாட்டைப் பேணும் பக்குவத்தைத் தருகின்றது
“பொய் பேசுவதையும், அதனடிப்படையில் செயற்படுவதையும் யார் விட்டு விடவில்லையோ, அவர் தனது உணவையும், பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, அபூதாவூத், திர்மிதி) என்ற நபிமொழிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.
அடுத்து, தவறான உணவு முறை என்பது இன்று உலகம் தழுவிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தத் தவறால் குண்டுப் பிள்ளைகளின் தொகை ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாடும் கொழுப்பைக் கரைப்பதற்கே பல கோடி டொலர்களைக் கொட்டித் தொலைக்கின்றன.
மனிதன் வாயைக் கட்டுப்படுத்தத் தெரியாததனாலும், அவனது தவறான உணவு முறையாலும் உலக நாடுகள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. நோன்பு மனிதனுக்கு இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபடப் பயிற்சியளிக்கின்றது.
நோன்பு முறையாக அனுஷ்டிக்கப்பட்டால் எண்ணற்ற உலக நலன்களை நாம் அடையலாம். நோன்பு முஸ்லிம்களால் சரியான முறையில் அனுஷ்டிக்கப்பட்டால் அதுவே அந்நியரைப் பெருமளவில் இஸ்லாத்தின் பால் ஈர்க்கும் அம்சமாக மாறி விடும். ஆனால், புனித நோன்பை அனுஷ்டிக்கும் வழிமுறை மாற்று மதத்தவர் மத்தியில் நோன்பு பற்றியும், ரமழான் பற்றியும் தவறான எண்ணங்களை ஏற்படுத்தி வருவது துரதிஷ்டமானதாகும்.
இலங்கை அரசு பிச்சைக்காரர் ஒழிப்புக்குக் கூடுதல் முக்கியத்துவமளிக்கின்றது. “பிச்சைக்காரர்கள்” என்ற பெயரில் உலாவுவோரில் 99 வீதமானோர் குற்றவாளிகளாவர். பொய், மோசடி, ஏமாற்று, திருட்டு, போதை, விபசாரம் போன்ற குற்றச் செயல்களிலீடுபடும் இவர்கள், பிச்சைப் பணத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
(உண்மையாகவே சமூகப் பராமரிப்பில் வாழ வேண்டியவர்கள் உள்ளனர். அவர்கள் குறித்து அரசும், சமூகமும் அக்கறை செலுத்த வேண்டும் என்பது தனி விடயம்.)
சில பிச்சைக்காரர்கள் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டே பிச்சையெடுப்பர். பார்ப்போர் மனதை நெகிழச் செய்யக் குழந்தைகள் பெரிதும் உதவுவர். இவர்கள் சுமந்து வரும் குழந்தைகள் எந்தப் பிரச்சினையுமில்லாமல் தூங்கிக்கொண்டே இருப்பர். பொதுவாகக் குழந்தைகள் தொடர்ந்து தூக்கிக்கொண்டிருந்தால் இறங்கி விளையாட அடம்பிடிப்பர். இவர்கள் சுமந்திருக்கும் குழந்தைகள் மட்டும் எப்படி ஒன்றும் செய்யாமல் அப்படியே இருக்கின்றனர்? என ஆராய்ந்த போது குழந்தைகளுக்குப் போதை அல்லது தூக்க மருந்து கொடுக்கும் கொடூரம் தெரிய வந்தது. இவர்கள் சில போது சிறுவர்களின் கை-கால்களை உடைத்து ஊனப்படுத்துவதுமுண்டு! இந்த வகையில், “பிச்சைக்காரர் ஒழிப்பு” என்பது வரவேற்கத் தக்க அம்சமே!
அண்மையில் கொழும்பில் சில பிச்சைக்காரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இவர்களிடமிருக்கும் பணத்தைக் கொள்ளையிடுவதற்காக இப்படி நடந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. அதே வேளை, பிச்சைக்காரர் போன்று புலிகள் உலாவுகின்றனர் என்ற கருத்தை அண்மையில் அரசு வெளியிட்டதையும், “பிச்சைக்காரர் ஒழிப்பு” நடவடிக்கையில் அரசு தீவிரங்காட்டியதையும் இணைத்து இக்கொலைகளுக்குப் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எது எப்படியோ, நோன்பு காலத்தில் ‘ஃபித்றா”வின் பெயரில் எமது சகோதரர்கள் நகர்ப் புறங்களுக்குப் படையெடுப்பதுண்டு! இதனால், ரமழான் என்றால் பிச்சையெடுக்கும் மாதம்! என்ற தவறான கருத்து மாற்று மதத்தவர் மத்தியில் உருவாகியுள்ளது.
எனவே, முதலில் இந்தப் பிச்சையெடுக்கும் படலத்தை நிறுத்த வேண்டும். எமது பெண்கள் கன்னிப் பெண்களையும் அழைத்துக்கொண்டு கொழும்பு-கண்டி வீதியில் உறங்குவர். இது ஆபத்தானது. எனவே, ஃபித்றாவின் பெயரில் பிச்சையெடுக்க ஊர்-ஊராகச் செல்வதைத் தடுக்க மஸ்ஜித் நிர்வாகங்கள் நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்துடன் ஸகாத், ஸதகா, ஸகாதுல் ஃபித்றா போன்றவற்றைத் திட்டமிட்டுத் திரட்டிப் பிச்சையெடுப்பதைத் தடுக்கும் செயற்திட்டங்களையும் வறியவர் நலன் காக்கும் செயற்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும்.
அடுத்து, வழமையாக நோன்பு காலங்களில் எமது இளைஞர்கள், பாதைகளை மைதானமாகப் பயன்படுத்தி விளையாடியும், இரவு பூராகச் சப்தமிட்டு விளையாடி அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுத்தும் வருகின்றனர். மற்றும் சிலர் பிறரது தோட்டங்களில் மாங்காய்-தேங்காய் பறிப்பது, வீட்டுக்குக் கல்லடிப்பது, பள்ளிக்குச் செல்லும் பெண்களுக்குக் கிண்டல் பண்ணுவதென்று காலத்தைக் கழிப்பர். இதுவும் நோன்பு குறித்த தப்பெண்ணத்தை அந்நியரிடம் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தவிர்ப்பது அவசியமாகும். அத்துடன் சாதாரண ஒரு பிரச்சினை கூட சமூகப் பிரச்சினையாக மாறும் அபாயம் உள்ளது. எமது அமல்கள் கூட அடுத்தவர்களுக்குப் பாதிப்பை உண்டாக்காததாக இருக்க வேண்டும். தறாவீஹ் தொழுகை போன்றவற்றை ஒலிபெருக்கியில் தொழுவிப்பதைக் கூடத் தவிர்க்க வேண்டும். இனத் துவேஷம் தூண்டப்படாதவாறு எமது செயற்பாடுகள் அமைய வேண்டுமென்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
அடுத்துப் பொதுவாக நோன்பு காலங்களில்தான் அதிகமான மார்க்கக் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. அடுத்து, மார்க்கத்துடன் சம்பந்தமற்ற பலரும் ரமழானில்தான் பள்ளியுடன் சம்பந்தம் வைத்துக்கொள்கின்றனர். இதனால் சாதாரண மார்க்கக் கருத்து வேறுபாடுகள் சண்டைகளாக உருப்பெறுகின்றன.
மார்க்கக் கருத்து வேறுபாடுகள் குர்ஆன்-ஸுன்னாவின் அடிப்படையில் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அதற்கு வழியில்லை என்றால் குறைந்த பட்சம் சண்டை-சச்சரவிலீடுபடாது நிதானமாகச் செயற்படவாவது முன்வர வேண்டும். ஆனால், இந்த நிலைக்கு மாற்றமாக, “நான் நினைப்பது போன்றுதான் நீ நடக்க வேண்டும்!” என்ற அடிப்படையில் சிலர் செயற்படுகின்றனர். மற்றும் சிலர் இயக்க வெறியுடன் செயற்படுகின்றனர். அதனால் மார்க்க நிகழ்ச்சிகளைத் தடை செய்கின்றனர். இந்த ஜமாஅத்துக்கு இங்கே இடமில்லை! என்ற தோரனையில் செயற்படுகின்றனர்.
மஸ்ஜிதில் இடமில்லாத போது வீடுகளில் நிகழ்ச்சிகள் செய்ய முற்பட்டால் அதைக் கூடத் தடுக்கின்றனர். இது போன்ற செயல்களால் சண்டைகள் அதிகரித்துப் பொலிஸ் தலையிடும் நிலையேற்படுகின்றது. பள்ளி நிர்வாகங்களுக் கெதிராக வழக்குகளும் தொடுக்கப்படுகின்றன.
“ரமழான் மாதம்” என்றால் முஸ்லிம்கள் பள்ளிக்குள் சண்டை பிடிக்கும் மாதம் என்ற கருத்தைக் காவல் துறையினர் மத்தியில் ஏற்படுத்தும் வண்ணம் எமது செயற்பாடுகள் அமைவது வருந்தத் தக்கதாகும். அத்துடன் அவர்கள் முஸ்லிம்களிடம் கேட்கும் சில கேள்விகள் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் அவர்கள் மனதில் தோன்றும் கெட்ட எண்ணத்தைத் தெளிவுபடுத்துகின்றது.
எனவே, நோன்பு காலத்தைச் சண்டைக்கும், சச்சரவுக்கும் செலவழிக்காமல் இபாதத்திற்கும், பக்குவத்தை ஏற்படுத்துவதற்கும் பயன்படுத்த அனைவரும் உறுதியான தீர்மானத்தையெடுக்க வேண்டும். நோன்பை உரிய முறையில் நோற்று அதையே இஸ்லாத்தின் பால் அழைக்கும் சிறந்த தஃவாவாக அமைத்துக்கொள்ள முயல வேண்டும்.
எனவே, எதிர்வரும் ரமழானைத் தூய முறையில் கழிக்க தூய்மையான எண்ணத்துடன் உறுதி பூண்டு செயற்படுவோமாக!