கண்ணியத்திற்குரிய அறிஞர் பீஜே அவர்கள் எனது ‘மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்’ தொடர் கட்டுரைக்குத் தனது உத்தியோகபூர்வ இணையத் தளத்திலேயே பதிலளிக்க முன்வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது.
சிலர் தமது இமேஜைப் பாதுகாக்கத் தமது மாணவர்களை விட்டே மறுப்பும், விவாதமும் செய்து வரும் இந்தக் காலத்தில், தானே பதிலளிக்க முன்வந்துள்ளமை வரவேற்கப்படவேண்டியதே!
அடுத்ததாக, ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ‘சூனியம் – கலந்துரையாடல்’ எனும் சீடியில் எனது கட்டுரை குறித்து, ‘இதற்குப் பதிலளிக்கத் தேவையில்லை. இதற்குச் சாதாரண மக்களே பதிலளித்து விடுவர். அடுத்து, இந்தக் கட்டுரை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வெறும் உளரல்தான் இதிலுள்ளது’ என்ற அடிப்படையில் கருத்துத் தெரிவித்தவர், வெளியில் நிகழ்ச்சிகளுக்கே செல்லாமல் அறையில் இருந்து கொண்டு மறுப்பு எழுதும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்றால், ஏற்கனவே அவர் கூறிய ‘உளறல் குப்பை’ என்ற விமர்சனத்தை அவரே வாபஸ் வாங்கிக் கொண்டார் என்றே அர்த்தமாகும். மார்க்க விடயங்களில் மட்டுமன்றி உலக விடயங்களிலும் இவர் அடிக்கடி முடிவுகளை மாற்றித் தனக்குத் தானே முரண்பட்டுக்கொள்ளும் இயல்புடையவர் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
நான் அவரது கருத்தை விமர்சனம் செய்யும் முன்னர் அவரது தியாகங்கள், திறமைகள், அவர் மூலம் நடந்த நன்மைகளைக் கூறி விமர்சனம் செய்துள்ளேன். பல முறை இலங்கைக்கு அவரை அழைத்துப் பிரச்சாரம் செய்த அமைப்பின் நன்மைகள் எதையும் அவர் பார்க்காமல் குரோத மனப் பான்மையில் அவதூறுகளைக் கூறியுள்ளார். அடுத்தவர்களின் நலவுகளையோ, தனது தவறுகளையோ ஒப்புக்கொள்ளும் இயல்பு இவரிடம் இல்லை என்பதற்கு இந்த மறுப்பு நல்ல சான்றாக உள்ளது.
எனது கட்டுரையை வெளியிட்ட இணையத் தளத்தைச் சாடியவாறே அவரது விமர்சனம் ஆரம்பமாகின்றது.
‘அனைத்து குப்பைகளின் குப்பைத் தொட்டியாக பயன்பட்டு வரும் எந்தக் கொள்கையும் இல்லாத பலவேசம் டாட்காம்’
குப்பைத் தொட்டி,
கொள்கை இல்லாதது
பலவேசம் டாட்காம்
இவைகளெல்லாம் ஒரு பண்பட்ட அழைப்பாளரின் பதப் பிரயோகமா?
‘உங்களுக்கிடையே நீங்கள் குறை கூற வேண்டாம். மேலும், பட்டப் பெயர்களால் அழைக்கவும் வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் தீய பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும். எவர்கள் (இவற்றை விட்டும்) மீளவில்லையோ அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்.’ (49:11)
என அல்லாஹுத்தஆலா பட்டப் பெயர் சூட்டுவதைக் கண்டிக்கின்றான். சகோதரர் பீஜே அவர்களே! உங்களை ஒரு கூட்டம் சாணுக்கு சாண் பின்பற்றிக்கொண்டிருக்கின்றது.இஸ்லாம் கல்வி டாட் காம் இணையத் தளத்திற்கு நீங்கள் சூட்டியுள்ள பட்டப் பெயரையே உங்களது சகோதரர்களும் பயன்படுத்தி வருவதிலிருந்து இதை அறியலாம்.
எனவே, உங்களை ஒரு கூட்டம் பின்பற்றுகின்றது என்ற பொறுப்புணர்வுடனும், அவர்களைத் தவறான வழிக்கு அழைத்துச் சென்று அவர்களது பாவத்தையும் சுமக்கும் துர்ப்பாக்கிய நிலை உங்களுக்கு வந்து விடக் கூடாது என்ற அச்சத்துடனும் நீங்கள் செயல்பட வேண்டும் என அன்புடன் நஸீகத்துச் செய்கின்றேன்.
‘பட்டப் பெயர் சூட்டாதீர்கள்’ என்ற குர்ஆனின் கட்டளைக்கு முரணாக ஆரம்பிக்கப்பட்ட உங்கள் மறுப்பு ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.
சகோதரர் பீஜே அவர்கள் கருத்தை விமர்சிக்கும் முன்னர் கருத்துடையவரது மதிப்பையும், மரியாதையையும் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார். இதுவே அவரது கொள்கைப் பலவீனத்தைக் காட்டுகின்றது.
அவர் எனது கண்ணியத்தைக் குறைத்து அதன் மூலம் எனது கருத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்காக
‘இஸ்மாயில் ஸலபியும் அவருக்கு படியளக்கும் ஜம்யிய்யது அன்ஸாருஸ் ஸுன்னாவும் மார்க்கத்துக்கு ஒரு தீங்கு என்றால் கொந்தளித்து எழுக் கூடியவர்கள் அல்ல. தவ்ஹீதுக்கு எதிராகவும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு எதிராகவும் செயல்படுபவர்களுக்கு எடுத்து தொடர் என்ன எட்டு வரியிலும் பதிலளிக்காதவர்கள்’
என்று குறிப்பிடுகின்றார். தவ்ஹீதுக்கு எதிராக செயல்படுபவர்களுக்காக நாம் 8 வரி கூட எழுதவில்லை என்கின்றார். இவரை நான்கு முறை இலங்கைக்கு அழைத்து தஃவா செய்தது அறபு நாட்டு நிதியுடன் சம்பந்தப்பட்ட அமைப்புக்களே!
தவ்ஹீதுக்கு எதிரானவர்களுக்கு எதிராக 8 வரி கூட ஏன் எழுதவில்லை என்று அப்போது தட்டிக் கேட்காதது அல்லது சுட்டிக் காட்டாதது ஏன்? நான் தவ்ஹீதுக்கு எதிரானவர்களுக்கு எதிராக 8 வரி கூட எழுதியதில்லை என்று அவர் கூறுவதில் அவர் எவ்வளவு பெரிய பொய்யராக இருக்கின்றார் என்பதை சமூகம் அறிந்துகொள்ளும்.
எனது முதல் நூலே ‘பாகிஸ்தான் மௌலானா’ என்பவருக்கு எதிராக எழுதப்பட்ட ‘இறை நம்பிக்கைக்கு எதிரான சவால்கள்’ எனும் நூல்தான். எனது இரண்டாவது நூலான ‘கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவின் திருத்தப்பட வேண்டிய தீர்வுகள்’ எனும் நூல். இவர், ‘அல் ஜன்னத்’தில் இருக்கும் போது இவருடன் தொடர்பு கொண்டு தமிழகத்தில்தான் அச்சிடப்பட்டது. எனது ‘ஷீஆக்களின் சீர்கேடுகள்’, ‘தாயத்து ஈமானுக்கு ஆபத்து’, ‘சகுணம்’, ‘அல்லாஹ் எங்கும் உள்ளானா?’, ‘இஸ்லாமிய அகீதா – ஒரு விளக்கம்’, ‘காதியானிகள் – ஓர் எச்சரிக்கை’ போன்ற நூற்கள் கொள்கை ரீதியாக எழுதப்பட்டவைகளாகும். அண்மைக் காலமாக அனைத்தையும் நான்தான் செய்தேன் என்று இவர் எழுதுவதையும், பேசுவதையும் கூட ஜீரணித்துக்கொள்ளலாம். ஆனால் ‘வேறு எவரும், எதையும் செய்யவில்லை’ என இவர் குறை கூறுவதுதான் வேதனையானதும், வேடிக்கையானதுமாகும். (எட்டு வரி கூட எழுதியதில்லை எனக் கூறியதற்காகவே 8 நூற்களைக் குறிப்பிட்டுள்ளேன்.)
அடுத்ததாக, அறபு நாட்டுப் பணத்துக்கு எதிராகப் பீஜே பேசியதால்தான் நாம் அவருக்கு எதிராக எழுதியதாகக் கூறுகின்றார். ‘அடி மடியில் கை வைக்கின்றானே’ என்ற ஆதங்கம்தான் இந்த மறுப்புக்குக் காரணம் என்கின்றார்.
இவர் அறபு நாட்டுப் பணத்துக்கு எதிராகப் பேசினால் இவரது பேச்சைக் கேட்டு அவர்கள் தமது பொதுப் பணியை நிறுத்தி விடுவார்களா? பீஜே இப்படிப் பேசியதற்குப் பின்னர்தான் ஓட்டமாவடி பள்ளி, சம்மாந்துறை அனாதை இல்லம், ஓட்டமாவடி அனாதை இல்லம் போன்ற பெரிய பெரிய திட்டங்கள் எல்லாம் துவங்கின. எனவே, இவர் அறபு நாட்டுப் பணத்துக்கு எதிராகப் பேசினால் ‘அடி மடியில் கை வைக்கின்றானே!’ என நாம் பயந்ததாகக் கூறுவது இவரது சிறு பிள்ளைத்தனமான கற்பனையாகும்.
‘உள்நாட்டில் மக்களிடம் நிதி திரட்டி தஃவா செய்யும் போது தாறுமாறாக பணம் குவியாது. பணம் கொடுத்த மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் பெருமளவுக்கு ஊழல் நடக்காமல் காத்துக் கொள்ள முடியும்’
அறபு நாட்டுப் பணத்தில் கிடைக்கும் கமிஷன், எடுக்கும் கமிஷன் என்றெல்லாம் அவதூறு கூறும் சகோதரர் எழுத்து மூலமாகவே தமது அமைப்பில் ஊழல் நடப்பதை ஒத்துக் கொண்டு விட்டார். பெருமளவுக்கு ஊழல் நடக்காமல் காத்துக்கொள்ள முடியும் என்று கூறியதன் மூலம் சின்ன அளவில் (சின்ன அளவு என்பது அவரவர் தகுதிக்கு ஏற்ப கூடுதலாகவும், குறைவாகவும் இருக்கலாம்) ஊழல் நடக்கிறது. பெருமளவில் ஊழல் நடக்காததற்கு இறையச்சம் காரணமல்ல. மக்கள் கேட்பார்கள் என்ற பயம். எவ்வளவு கொடுத்தோம் என்பது மக்களுக்குத் தெரியாவிட்டால் அந்தப் பயமும் அற்றுப் போய் விடும். இதுதான் உண்மை. ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்துக்கு நிதியளிக்கும்போது ‘வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்’ என்ற குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் இருதரப்பினரும் கைச்சாத்திட்ட பின்னரே நிதியளிக்கப்படுகின்றது. இவ்வாறு நிதியனுப்பினால் அனுப்பிய நிறுவனத்திற்கும், பெற்ற நிறுவனத்திற்கும் தொகை எவ்வளவு என்பது தெரியும். அவர்களிடமும் கணக்குக் காட்ட வேண்டும். பணத்திற்குரிய பணி நடந்திருப்பதை நிரூபிக்க வேண்டும். வெளி நாட்டு நிறுவனம் இங்குள்ள ஒரு நிறுவனத்துடன் 25 வருடங்களாகத் தொடர்பைப் பேணுகின்றது என்றால், அது அந்த நிறுவனத்தின் நேர்மைக்குச் சான்றாகும்.
ஆனால், பீஜே தனது தோழர்களை இலங்கை, குவைட், கடார் (Sri lanka, Kuwait, Qatar) என நிதி திரட்ட அனுப்புகின்றார். அவர்கள் நிதியைத் திரட்டுகின்றார்கள். திரட்டுகின்ற அந்தத் தனி மனிதருக்கு மட்டும்தான் எவ்வளவு திரட்டப்பட்டது என்பது தெரியும். கொடுத்தவர்களுக்கோ, அமைப்புக்கோ எவ்வளவு என்ற விபரம் தெரியாது! அங்குதான் ஊழல் நடைபெறும் சாத்தியம் உள்ளது. அதைத்தான் பீஜே பெருமளவு ஊழல் நடக்காது என்பதன் மூலம் ஒத்துக் கொண்டுள்ளார். இவர்களால் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீது இவர் சுமத்தும் இலட்சக் கணக்கான ரூபாய்களுக்கான ஊழல் குற்றச் சாட்டுக்கள் இதை இன்னும் உறுதி செய்கின்றன.
அடுத்து, அனைத்துத் தவ்ஹீத் கூட்டமைப்பு என்ற பெயரில் இவர்கள் இயங்கிய போது, இவர்களது அப்போதைய தலைவரும், அதற்கடுத்த தலைவராகச் செயல்பட்ட, தற்போதும் இவரது அமைப்பில் உள்ள ஒரு ஆலிமும் 1999 களில் குவைட்டிலுள்ள ‘லுஜினதுல் காரதில் ஹிந்திய்யா’ என்ற அமைப்பிடம் நிதி உதவி பெற முயற்சி செய்து முடியாமல் போனது. இது குறித்து நான் தங்கியிருந்த அறையில் இருந்துதான் அவர்கள் பேசித் திட்டங்கள் பலவும் தீட்டினார்கள்.
அறபுப் பணம் கிடைக்காதவர்கள் உள் நாட்டு வசூலை இலக்காக் கொண்டு, ‘சீ சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்று நரி நாடகமாடுகின்றனர். இதுதான் உண்மையாகும்.
இவர் அறபு நாட்டுப் பணத்துக்கு எதிராகப் பேசியது அல்ல. அது தொடர்பில் அவதூறு கூறியதும், இலங்கை தவ்ஹீத் சகோதரர்களைப் பிரித்ததும், இந்தியா சென்று ஜமாஅத்துக்கள் ஒன்றிணைந்தன என்று பொய் செய்தி வெளியிட்டதும் இவர் மீது வெறுப்பை உண்டாக்கின என்பதுதான் உண்மையாகும்!
பொய் சொல்பவர்களுக்கு அதிக ஞாபக சக்தி தேவை என்பர். அப்போதுதான் சொன்ன பொய்க்கு அமைவாகத் தொடர்ந்தும் பொய் சொல்லலாம். முன்னர் கூறிய பொய்யை மறந்து மறுப்பு எழுதிய பீஜே யின் போலித் தன்மையை அவதானிக்கலாம்.
‘இலங்கையிலிருந்து ஒரு மடல்’ என்ற தலைப்பில் (1996 – ஆகஸ்ட்) க்குப் பின்னர் நாம் அவரை தரக் குறைவாக விமர்சிக்க ஆரம்பித்ததாகவும், அவர் ஆசிரியராக இருந்த ‘அல் ஜன்னத்’தை வாங்குவதை உடன் நிறுத்தியதாகவும் தனது இணைதளத்தில் கூறியுள்ளார். (இதன் பின்னரும் இவரும், இவருடன் உள்ள உலமாக்களும் இலங்கைக்குத் தருவிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தமிழகத்திலுள்ள ஒரு அமைப்புக்கு நிதியளிக்குமாறு வேண்டி 1998ல் பீஜே தனது கைப்பட எழுதிய கடிதம் எமது கைவசம் இருக்கிறது என்பதும் தனி விடயம்.) இப்படிப் பொய் கூறியவர், அதை மறந்து ‘2002 க்குப் பின், அதாவது நான் கொள்கை கெட்டவனாக ஆன பின்பும் என்னை ஆதரித்தனர் எதிர்க்கவில்லை என்பதே உண்மை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
1996 இல் இருந்தே விமர்சித்து எதிர்த்தது அல்லது 2002 க்குப் பின்னரும் ஆதரித்து எதிர்க்கவில்லை என்ற இரண்டில் ஏதோ ஒன்று பொய் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இரண்டையும் பீஜேதான் கூறியுள்ளார். அதுவும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்து வைக்கும் இணையத் தளத்திலேயே வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தனது பொய் முகத்தை அவரே அம்பலப்படுத்தியுள்ளார்.
அடுத்து, அறிஞர் பீஜே அவர்கள் அற்புதமான அவதூறுகளை முன்வைக்கின்றார்.
‘கொள்கையற்ற கும்பல், ஜம்இய்யது அன்ஸாரிஸ் சுன்னா மூலம் ஒரு கவிதை நூல் வெளியிட்டனர்”. (இந்தத் தமிழ்ப் பிழை அவருடையது.)
‘இஸ்மாயில் ஸலபியின் மேற்பார்வையில் வெளியிடப்பட்ட நூலில்… அறபு நாட்டுச் சல்லியில் வெளியிடப்பட்ட நூலில் இடம் பெற்ற வாசகங்கள்…’ என்று கூறி எனக்குச் சம்பந்தமில்லாத ஒரு நூலுடன் என்னைச் சம்பந்தப்படுத்துகின்றார்.
இக்பால் அலி என்ற ஒரு கவிஞரால், ‘புள்ளிகளில் சில புள்ளிகள்’ என்ற ஒரு நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலுக்கும், அறபு நாட்டுப் பணத்துக்கோ, ஜம்இய்யாவுக்கோ எந்தச் சம்பந்தமுமில்லை. இந்த நூல் எனது மேற்பார்வையில் எழுதப்படவும் இல்லை. ஆனால், அந்த நூலில் அவர் குறிப்பிட்ட தவறான கவிதை இடம்பெற்றுள்ளது. யாரோ எழுதிய கவிதையில் உள்ள தவறுக்கு நான் ஏன் தவ்பாச் செய்ய வேண்டும்? அவர் வேண்டுமானால் முஜீபுர் ரஹ்மான் உமரியுடன் நடந்த தெருச் சண்டையின் போது, ‘அல்லாஹ்வைப் பற்றிப் பேசாதீங்க‘ என்று கூறியதற்குத் தவ்பாச் செய்து கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் இணையட்டும்.
[flashvideo file=http://www.islamkalvi.com/portal/wp-content/uploads/2009/10/mujeeb.flv /]
இதோ அவர் அவதூறாக என்னைச் சம்பந்தப்படுத்திய அந்த நூலின் ஆசிரியரின் வாக்குமூலம்:
‘புள்ளிகளில் சில புள்ளிகள்’ என்ற எனது நூலுக்கும், இஸ்மாயில் ஸலபிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இந்த நூல் அறபு நாட்டு பணத்தாலோ, ஜம்இய்யது அன்ஸாரிஸ் சுன்னாவினாலோ வெளியிடப்படவில்லை. ‘ஞானம் பதிப்பகம்’ எனும் தமிழ்ப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதாகும். குறித்த எனது கவிதையில் உள்ள தவறை ஜம்இய்யாவின் உலமாக்கள் பலரும் என்னிடம் சுட்டிக் காட்டினார்கள். நான் இப்போது அந்தக் கருத்திலும் இல்லை. இது குறித்துப் பீஜே வெளியிட்டுள்ள கருத்துக்கள் பொய்யான அவதூறாகும் என்பதை உறுதி செய்கின்றேன்.’-இக்பால் அலி
இதோ அந்த நூலின் பதிப்புரை
புத்தகத்தின் அட்டையைப் போட்டவர் வெளியீட்டகத்தை மறைத்து விட்டுத் திட்டமிட்டு என் மீதும், அன்சாரிஸ் ஸுன்னா மீதும் அவதூறு கூறியுள்ளார். எழுத்து மூலம் உள்ள வெளிப்படையான இந்த விடயத்திலேயே இப்படித் துணிந்து பொய் கூறுகின்றவர், மறைவான செய்திகளில் எவ்வளவு துணிந்து பொய் கூறுபவராக இருப்பார் என்பதைப் பொது மக்கள் உணர்ந்துகொள்ளலாம். தமிழகத்தின் தலை சிறந்த ஒரு அறிஞர் இப்படித் தரங்கெட்டு விமர்சிப்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கே தலைகுனிவாகும்.
பீஜே அவர்களின் சகோதரர் எழுதிய திருக்குர்ஆனின் நிழலில் என்ற நூலில்
பக்கம் XI
எனத் தெளிவாக இஸ்லாமிய சோசலிஸம் எனும் கமியூனிஸவாதம் முன்வைக்கப்பட்டுள்ளதே. உங்கள் அண்ணன் இஸ்லாமிய பொருளாதாரத்தையே மாற்ற முயற்சித்த இந்தக் குற்றத்தை எப்போதாவது போட்டு உடைத்துள்ளீர்களா? எம்மீது நீங்கள் சுமத்திய கம்யூனிஸ வாதி என்ற குற்றச்சாட்டு உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நோக்கி வந்துள்ளது இதற்கு நீங்கள் கூறும் நியாயமான பதில் என்ன?
அடுத்ததாக, பீஜே அவர்கள் 2:102 வசனத்தில் வரும் ‘பிஹி’ என்ற சொல்லுக்கு அர்த்தம் செய்யாது விட்டிருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன். இது கடையநல்லூர் மத்ரஸாவின் இலங்கை மாணவர் ஒருவர் மூலம் அப்துன்னாஸர் மௌலவிக்கு எத்திவைக்கப்பட்டு அவர் இது குறித்துப் பீஜே யுடன் பேசி அவரும் அடுத்த பதிப்பில் திருத்துவதாகக்; குறிப்பிட்டதாகப் பீஜே யின் மத்ரஸா மாணவர் ஒருவர் எமக்குக் கடிதம் மூலம் தெரிவித்தார். பீஜே யின் தர்ஜமா 8 ஆம் பதிப்பில் கூட அந்தத் தவறு திருத்தப்படவில்லை.‘தவறுகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் சுய கௌரவம் பாராமல் அதை ஏற்றுக்கொள்வோம்’ என்று கூறுவதில் அவர் எவ்வளவு தூரம் உண்மையாளராக நடந்துள்ளார் என்பதற்கு இது சான்றாகும்.
இவர் தனது தர்ஜமாவில் 2:102 இல் ‘பிஹி’க்கு அர்த்தம் செய்யாதது பற்றி நாம் குறிப்பிட்டிருந்தோம். சூனியம் இருக்கின்றது என்று கூறும் போது ‘பிஹி’க்கு அர்த்தம் செய்திருப்பது அதே வேளை தர்ஜமா (பதிப்பு நான்கு) 1313 ஆம் பக்கத்தில் ஒரு இடத்தில் ‘பிஹி’க்கு அர்த்தம் செய்திருப்பதும், மற்ற இடத்தில் செய்யாதிருப்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தோம். அதற்கு மறுப்பாக அமையும் விதத்தில் நாம் சுட்டிக் காட்டிய தவறைத் திருத்தாமல் முபாறக் (ஸலபி) மொழி பெயர்த்த ஒரு நூலில் இடம் பெற்ற ஒரு ஹதீஸின் சில பகுதிகள் மொழி பெயர்க்காமல் விடப்பட்டதை எடுத்துக் காட்டுகின்றார்.
‘நீங்கள் தவறு செய்துள்ளீர்கள்’ என்று கூறினால், இன்னொருவரைக் காட்டி ‘அவரும் தவறு செய்துள்ளாரே!’ என்று கூறுவதுதான் சுய கௌரவம் பாராது தவறை ஒப்புக்கொள்ளும் இலட்சணமா?
ஒரு விவாதத்தில் இவரது தர்ஜமாவில் குறை இருப்பதாகக் கூறப்படுகின்றது. ‘என்ன குறை?’ என்று கேட்காமல், ‘நீங்கள் சரி காண்கிற தர்ஜமாவை எடுத்துட்டு வாரீங்களா? இரண்டுல எதில தவறு அதிகமாக இருக்கின்றது என்று புட்டு புட்டு வைப்பமா?’ என எதிர்க் கேள்வி கேட்கிறார். அது சரி. அடுத்தவர் தவறு செய்திருந்தால், நீங்கள் செய்தது சரி என்று ஆகி விடுமா?
முபாறக் (ஸலபி) மொழி பெயர்த்த அந்த நூலை மீண்டும் அச்சிட்டால் நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸை முழுமையாக இடம் பெறச் செய்கின்றோம் இன்ஷா அல்லாஹ். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இருப்பினும் அந்த ஹதீஸை அவர் முழுமையாக மொழி பெயர்க்காததற்கு நீங்களாக உள் நோக்கம் கற்பித்தமை அறியாமையை அம்பலப்படுத்துகின்றது. அதே வேளை, காஃபிர்கள் கேட்பார்கள் என்பதற்காக இருட்டடிப்புச் செய்யப்பட்டது என்றும் துணிந்து மறைவான செய்தியை அறிந்தவர் போல் பொய் கூறுகிறார். அது மட்டுமன்றி, ‘இப்படியெல்லாம் துள்ளிக் குதித்த ஸலபி காஃபிர்கள் கேள்வி கேட்பார்கள் என்பதற்காக இருட்டடிப்புச் செய்வது எங்ஙனம் சரியாகும்?‘ என்று அற்புதமான கேள்வியையும் கேட்கிறார். ‘இவரால் இப்படியெல்லாம் உளர முடிகின்றதே!’ என்று ஆச்சரியமாக உள்ளது. இது முபாறக் (ஸலபி) மொழி பெயர்த்தது எனும் போது, நான் எப்படி இருட்டடிப்புச் செய்ததாகும்? என்பதை நடுநிலையுடன் சிந்தித்துப் பாருங்கள்!
அடுத்ததாக, இக்பால் மதனியின் தர்ஜமாவில் ‘நாங்கள் இருவரும் அகிலத்தின் இரட்சகனின் தூதராவோம்’ என்பதற்குப் பதிலாக, ‘அகிலத்தின் இரட்சகனாகிய தூதர்கள்’ என்று தவறாக அச்சாகியுள்ளது. இது அச்சுத் தவறு என்பதை சாதாரண வாசகன் கூட அறிவான். (அஷ்ஷூரா அத்தியாயம் என்று போட்டுள்ளார். அது 42 வது அத்தியாயம் அஷ்ஷுஅரா (26 ஆம்) அத்தியாயம் என்பதே சரியாகும். இதை வைத்து அஷ் ஷூரா அத்தியாயத்தில் இல்லாததை இருப்பதாகக் கூறிவிட்டார் என்று இவர் போல் விஷமத்தனமான விமர்சனம் செய்ய மாட்டோம். இது இவரால் ஏற்பட்ட தவறுதான் எனினும் கவனக் குறைவால் ஏற்பட்ட தவறு என்று நடுநிலையாக விமர்சனம் செய்வோம்.)
இது குறித்துக் கூறும் போது, ‘மூஸா நபியையும் ஹாரூன் நபியையும் இறைவன் என்று சித்தரிக்கும் வகையில் மொழி பெயர்த்துள்ளனரே, பிஹி என்பதற்கு வரிந்து கட்டி வாதாடிய சலபியின் கண்ணுக்கு படியளப்பவரின் அத்வைதம் மட்டும் மறைந்து விட்டதா?’ என்று குறிப்பிடுகின்றார்.
நாம் ஏற்கனவே உண்மை உதயத்தில் (2001 ஒக்டோபர் – பக்கம் 15 – இதழ் எண் 62) இது குறித்து வாசகர்களுக்கு அறியச் செய்துள்ளோம்.
(முழுப்பக்கத்தையும் பார்க்க, படத்தின் மீது கிளிக் செய்யவும்)
இவையெல்லாம் பீஜே அவர்களுக்கோ, அவர்களது ஒற்றர் படையின் கண்களுக்கோ புலப்படாது என்பது எமக்குத் தெரியும். இதன் மூலம் பீஜே இன் வாதம் அடியற்ற மரம் போல் சரிந்து விட்டது. இனி நாம் கேட்கும் நியாயமான கேள்விக்கு அவர் பதில் தரட்டும்.
அடுத்து, சகோதரர் பீஜே போன்று இக்பால் மதனியோ அல்லது அபூபக்கர் ஸித்தீக் மதனியோ அந்த மொழி பெயர்ப்பில் தவறு இல்லை என்று வாதிக்கவோ, தவறு இருப்பதாகக் கூறுபவர்களை விவாதத்திற்கு அழைக்கவோ இல்லை என்பதைக் கவனத்திற்கொள்ளட்டும். அச்சுத் தவறை வைத்து அத்வைதப் பட்டம் கொடுக்கும் அறிஞர் பீஜே அவர்களிடம் நியாயமான ஒரு கேள்வியைக் கேட்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
‘ஃபீ ழிலாலில் குர்ஆன்’ என்ற ஸையித் குதுபின் தப்ஸீரில் ‘குல் குவல்லாஹு அஹத்’ சூறாவுக்கு அத்வைத விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பீஜே அவர்களின் சகோதரர், PS அலாவுதீன் அவர்கள் இந்த ‘பீ ழிலாலுல் குர்ஆன்’ தப்ஸீரின் ‘அம்ம ஜுஸ்ஊ’க்கான விளக்கத்தை, ‘திருக்குர்ஆனின் நிழலில்’ என்ற பெயரில் மொழி பெயர்த்துள்ளார்.
இதனை ‘நன்னெறி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. இதன் ‘மொழி பெயர்ப்பாளரைப் பற்றி…’ என்ற தலைப்பில் பீஜே அவர்கள் பற்றியும், அவர்களின் சகோதரர் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நூலில் தெளிவாகவே அத்வைதக் கருத்து கூறப்பட்டுள்ளது.
(பக்கம் 720)
‘இரட்சகனின் தூதர்கள்’ என்பது, ‘இரட்சகனாகிய தூதர்கள்’ எனத் தவறாக அச்சாகியதற்கே, அத்வைதப் பட்டம் கொடுக்கும் அறிஞர் அவர்களே!
‘அத்வைதக் கருத்து அடங்கிய’ ஃபீ ழிலாலில் குர்ஆனை மொழி பெயர்த்த உங்கள் சகோதரருக்கும் அந்தப் பட்டத்தை வழங்குவீர்களா? அந்த நூலில் உங்கள் பெயர், பிரச்சாரப் போராட்டம் எல்லாம் ஆரம்பத்தில் இடம் பெற்றிருந்தது. இந்த வகையில் கண்டிக்க வேண்டிய கடமை உங்களுக்குள்ளது.
அல்லது அந்த நூல் மீண்டும் மீண்டும் அச்சாகுவதையாவது தடுத்தீர்களா? ‘மூன் பப்ளிகேஷன்’, ‘நபீலா பதிப்பகம்’ என புத்தக வியாபாரம் புரியும் உங்களுக்கு இதன் பதிப்பக உரிமையை வாங்கி, உடன் பிறந்த அண்ணன் மூலம் அத்வைதக் கருத்துப் பரவுவதைக் கொஞ்சமாவது கொள்கைப் பற்று இருந்திருந்தால் தடுத்திருக்கலாமல்லவா?
(குறிப்பு: P.ளு. அலாவுதீன் அவர்கள் காலம் சென்ற அறிஞராவார். தமிழகத்தின் ஷிர்க்கிற்கு எதிரான போராட்டத்திற்கு அடித்தளமிட்டவர்களில் அவரும் ஒருவர். நான் அவரைக் கண்ணால் காணா விட்டாலும் அவரை மதிக்கின்றேன். அல்லாஹ் அவருக்கு அருள் செய்து, அவரது நன்மைகளை அங்கீகரித்து, தவறுகளை மன்னிக்க வேண்டும் என இறைஞ்சுகின்றேன். பீஜே அவர்களின் தவறான வாதத்தையும், விமர்சனத்தையும் விளக்குவதற்காகவே இப்படிக் கேட்கின்றேன்.)
அச்சுத் தவறை வைத்து ஹாரூன் நபியையும், மூஸா நபியையும் அல்லாஹ்வாக சித்தரித்ததாக அவதூறு கூறிய பீஜே அவர்களே நீங்கள் அர்த்தம் தவறாகச் செய்து நபி() அவர்களைக் காஃபிராகச் சித்தரித்த அவலத்தைப் பாருங்கள்.
‘அலம் யஃதிகும்’ – ‘உங்களிடம் வரவில்லையா?’ எனக் காஃபிர்களைப் பார்த்துப் பன்மைப் பதம் பயன்படுத்தி அல்லாஹ் 64:5 ஆம் வசனத்தில் பேசுகின்றான். (காஃபிர்களே!) எனப் போடுவதற்குப் பதிலாக பீஜே (முஹம்மதே!) என்று போட்டுள்ளார்.
‘முன் சென்ற (ஏக இறைவனை!) மறுப்போரின் செய்தி (முஹம்மதே!) உம்மிடம் வரவில்லையா?…’ பீஜே தர்ஜமா. (64:5)
நீங்கள் செய்த அர்த்தம் தவறு என்றாலும் முஹம்மது நபியைக் காஃபிராக்கி விட்டீர்கள் என்று நாம் உங்கள் மீது அவதூறு கூற மாட்டோம். அர்த்தம் தவறு. அது தவறுதலாக ஏற்பட்ட பிழை என்று நியாயமாகவே விமர்சிப்போம். இந்த நாகரிகத்தையும், நடுநிலையான விமர்சன அனுகுமுறையையும் உங்களிடம் நாம் எதிர்பார்த்தது ஏமாற்றத்தில் முடிந்து விட்டது.
இது வரை நாம் குறிப்பிட்டதிலிருந்து பீஜே அவர்கள் பொய்யும், அவதூறும் கலந்து தனது விமர்சனத்தை அமைத்திருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
‘ஞானம் பதிப்பகம்’ வெளியிட்ட ஒரு நூலை அன்சாரிஸ் சுன்னா வெளியிட்டதாகக் கூறுகின்றார். எனக்குச் சம்பந்தம் இல்லாத ஒரு நூலை எனது மேற்பார்வையில் வெளியிடப்பட்டது என்கின்றார். அறபு நாட்டுச் சல்லியில் வெளியிடப்பட்டது என்று கொஞ்சம் கூட இறையச்சம் இல்லாது பொய்யைக் கூறுகின்றார். முபாறக் (ஸலபி)யின் மொழி பெயர்ப்பை வைத்துக் காஃபிர்கள் கேள்வி கேட்பார்கள் என்பதற்காக நான் இருட்டடிப்புச் செய்ததாகக் கூறுகிறார். இவரின் பொய்களை நம்பிப் பாமர மக்கள் ஏமாறுகின்றனர். அனைவரும் அறியக் கூடிய எழுத்து மூலம் இருக்கக் கூடிய ஒரு புத்தக விடயத்திலேயே இப்படிப் பொய் கூறுபவர் தனிப்பட்ட விவகாரங்களில், எவரும் அறியாத முடியாத விடயங்களில் எப்படி நடந்துகொள்வார் என்பதைப் பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்ஷா அல்லாஹ்! இனி வரும் தொடர்களில் அவரது அவதூறுகள் குறித்து விரிவான விளக்கமளிக்கப்பட மாட்டாது. நாளை மறுமையில் அதன் பெறுபேற்றை அல்லாஹ்வின் நீதி மன்றத்தில் வைத்துப் பெற்றுக்கொள்வோம். அவரது மார்க்க ரீதியான கருத்துக்களுக்கு மட்டும் இத்தொடரில் பதிலளிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்!
(இவரது மறுப்புக்குரிய பதில்களை இன்ஷா அல்லாஹ் இந்தத் தொடரில் முழுமையாகத் தருவோம். எனினும் அவரைப் போல் உள்ள பணிகளை எல்லாம் ஒதுக்கி விட்டு அறைக்குள் இருந்து கொண்டு எம்மால் பணியாற்ற முடியாது. சமூகப் பணிகள், பயான் நிகழ்ச்சிகள், ‘உண்மை உதயம்’ என்பவற்றுடன் சேர்த்து இந்தப் பணியையும் செய்வோம். இன்ஷா அல்லாஹ்! வாரா-வாரம் பதில் தர முயற்சிப்போம் என்பதை இணையத் தள நண்பர்களுக்கு அறியத் தருகின்றோம்.
பீஜே அவர்கள் இந்த மறுப்பையும் அவரது இணையத் தளத்தில் போட்டுப் பதில் தருவார் என எதிர்பார்க்கின்றேன்.