தராவீஹ் தொழுகை 11 தொழுவதற்கான ஆதாரங்களைப் பார்த்து வருகின்றோம்.
‘நான் ஆயிஷா(ர) அவர்களிடம் வந்து, ‘நபி(ச) அவர்களது தொழுகை பற்றி எனக்கு அறிவியுங்கள்” எனக் கேட்டேன். அதற்கவர்கள், ‘ரமழானிலும், ரமழான் அல்லாத காலங்களிலும் நபி(ச) அவர்களது இரவு நேரத் தொழுகை 13 ரக்அத்துக்களை உடையதாக இருந்தது. அதில் சுபஹுடைய (முன் சுன்னத்து) இரண்டு ரக்அத்துக்களும் அடங்கும்” என்று கூறினார்கள்.”
அறிவிப்பவர்: அபூஸலமா(ர)
நூல்: புஹாரி 1170, முஸ்லிம் 738-127,
இப்னு குஸைமா 2213
‘ஆயிஷா(ர) அறிவித்தார். நபி (ச) அவர்கள் ஃபஜ்ருடைய முன் ஸுன்னத்து, வித்ரு ஆகியவற்றைச் சேர்த்து இரவில் பதின்மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள்.” (புஹாரி: 1140)
‘ஆயிஷா(ர) அறிவித்தார். நபி(ச) அவர்கள் இரவில் பதின்மூன்று ரக்அத்கள் தொழுவார்கள். ஃபஜ்ருடைய பாங்கைக் கேட்டதும் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.” (புஹாரி: 1170)
இந்த ஹதீஸில் சுபஹுடைய சுன்னத் இல்லாமல் 13 ரக்அத்துக்களை நபியவர்கள் தொழுததாக ஆயிஷா(ர) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இது இஷாவுடைய சுன்னத்தையும் சேர்த்து சொல்வதாக இருக்கும். ஏனெனில், நபி(ச) அவர்கள் சுன்னத்துத் தொழுகையைப் பெரும்பாலும் வீட்டில்தான் தொழுவார்கள். அல்லது நபியவர்கள் கியாமுல் லைலை ஆரம்பிக்கும் முன்னர் இலகுவான இரண்டு ரகஅத்துக்கள் தொழுவார்கள். அதை உள்ளடக்கியதாக இருக்கலாம் என விளக்கம் கூறப்படுகின்றது.
ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெறும் பின்வரும் ஹதீஸைப் பார்க்கும் போது வித்ருக்குப் பின்னர் நபி(ச) அவர்கள் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதுள்ளார்கள். அதை உள்ளடக்கியும் 13 என்ற எண்ணிக்கை கூறப்பட்டிருக்கலாம் என அபிப்பிராயப்பட இடமுண்டு.
‘நபி(ச) அவர்கள் இரவில் 13 ரக்அத்துக்கள் தொழுவார்கள். 8 ரக்அத்துக்கள் தொழுவார்கள். பின்னர் வித்ர் தொழுவார்கள். பின்னர் இருந்த நிலையில் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள். ருகூஃ செய்யும் போது எழுந்து ருகூஃ செய்வார்கள். பின்னர் சுபஹுடைய அதானுக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரத்தில் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள்.”
அறிவிப்பவர்: ஆயிஷா(ர)
நூல்: முஸ்லிம் 738-126
‘நான் நபியவர்களது இரவுத் தொழுகையைப் பார்க்க வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டேன். நபி(ச) அவர்கள் இரவில் தொழலானார்கள்.
- முதலில் இலகுவான இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள்.
- பின்னர் மிக மிக நீண்ட இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். (2)
- முன்னர் தொழுதது போல் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். (4)
- முன்னைய இரு ரக்அத்துக்கள் போன்று பின்னர் இரு ரக்அத்துக்கள் தொழுதார்கள். (6)
- பின்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். (8)
- பின்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். (10)
- பின்னர் வித்ர் மூன்று ரக்அத்துக்கள் தொழுதார்கள். (13)
இவ்வாறு 13 ரக்அத்துக்கள் தொழுதார்கள். ”
அறிவிப்பவர்: ஸைத் இப்னு காலித்
அல் ஜுஹ்ஸி(ர)
நூல்: முஸ்லிம் (765-195), அபூதாவூத் 1366, இப்னு மாஜா 1362, முஅத்தா (121-397)
இங்கு நபி(ச) அவர்கள் மொத்தமாக 15 ரக்அத்துக்கள் தொழுதுள்ளார்கள். இரவுத் தொழுகை 13 ரகஅத்துக்கள். இரவுத் தொழுகையின் ஆரம்பமாக இலகுவான இரண்டு ரகஅத்துக்கள் தொழுதுள்ளார்கள். இந்த ஹதீஸைப் பார்க்கும் போது இரவுத் தொழுகை 13 ரகஅத்துக்கள் தொழுவது ஆகுமானது என்பதை உணரலாம்.
‘உமர்(ர) அவர்கள் உபை இப்னு கஃப், தமீமுத் தாரி(ர) ஆகிய இருவருக்கும் மக்களுக்குப் 11 ரக்அத்துக்கள் தொழுவிக்குமாறு ஏவினார்கள்.”
அறிவிப்பவர்: ஸாயிப் இப்னு யஸீத்(ர)
நூல்: முஅத்தா 379
உமர்(ர) அவர்களின் ஏற்பாட்டில் 11 ரக்அத்துக்கள்தான் தொழுவிக்கப்பட்டது என்பதை இதிலிருந்து அறியலாம். எனவே, தராவீஹ் 11 தொழலாமா? இல்லையா? என்பதில் சர்ச்சையே இல்லை. நபியவர்கள் 11 தொழுதுள்ளார்கள். உமர்(ர) அவர்களும் 11தான் தொழ ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த அடிப்படையில் 11 சர்ச்சைக்கு அப்பாற்பட்டது, அது நபிவழியும் கூட!
கியாமுல் லைல் தொழுகை 11 ஐ விட கூட்டித் தொழலாமா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
தராவீஹ் தொழுகையை 23 ரக்அத்துக்கள் தொழுவதற்கு ஸஹீஹான ஆதாரம் எதுவும் இல்லை. இருக்கும் அறிவிப்புக்கள் அனைத்தும் பலவீனமானதாகவே இருக்கின்றன. எனவே, 23 என நிர்ணயம் செய்ய எந்த ஆதாரமும் இல்லை.
தராவீஹ் 11 தொழுவதுதான் ஏற்றமானது, ராஜிஹானது. அதாவது, வலுவானது. சந்தேகத்திற்கோ, சர்ச்சைக்கோ அப்பாற்பட்டது, நபி(ச) அவர்களின் சொல், செயலால் உறுதிப்படுத்தப்பட்டதது. மேலதிகமாகத் தொழ அனுமதி உள்ளது என்ற அடிப்படையில் செய்யப்படும் 23 என்ற நடைமுறை மிகவும் தவறானதாகும்.
இன்று இலங்கை, இந்தியா போன்ற பல நாடுகளில் 23 ரக்அத்துக்களும் சுமார் 45 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் தொழுவிக்கப்பட்டு முடிந்து விடுகின்றன. அதுவும் இல்லாத பல துஆக்கள் உட்பட எல்லாவற்றுக்கும் சேர்த்துத்தான் இந்த நேரம். ஒரு ரக்அத்துக்கு சுமார் ஒரு நிமிடமே எடுக்கின்றது. இப்படித் தொழுவது அவசியம் தவிர்க்கப்பட வேண்டும்.
முனாபிக்குகள் தொழுகையில் அல்லாஹ்வை அதிகம் நினைவுகூர மாட்டார்கள் என அல்லாஹ் கூறுகின்றான்.
‘நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுவதாக நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றி விடுகின்றான். அவர்கள் தொழுகைக்காக நின்றால் சோம்பேறிகளாகவும் மக்களுக்குக் காட்டுவோராகவுமே நிற்கின்றனர். மேலும், அவர்கள் அல்லாஹ்வைக் குறைவாகவே நினைவு கூருகின்றனர்.”
(4:142)
தராவீஹ் தொழுகை தொழுவிக்கப்படும் அமைப்பைப் பார்க்கும் போது முனாபிக்குகளின் தொழுகைக்கு ஒத்ததாக இருப்பதை அவதானிக்கலாம். அத்துடன், தொழுகையின் ஒவ்வொரு செயற்பாடுகளின் பின்னரும் தாமதித்தல் என்ற கட்டாயக் கடமை உள்ளது. அது பேணப்படுவதில்லை. ருகூஃ, சுஜூதை முறையாகச் செய்யாதவர்களை தொழுகையில் திருடுபவர்களாக நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள். அதற்கு ஒப்பாகவே இவர்களின் செயற்பாடு உள்ளது.
23 தொழுபவர்கள் அந்தத் தொழுகையையே இன்று கேலிக் கூத்தாக மாற்றிவிட்டனர். தவறாகத் தொழுது பாவத்தைத் தேடுவதை விட சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட 11 ரக்அத்துக்களை நிதானமாகத் தொழுவது கட்டாயமானது என்பதை இவ்வாறு நோக்கும் போது மிக எளிதில் புரியும்!