பல்லி ஹதீஸில் பல்லிழிக்கும் பகுத்தறிவு வாதம்

இஸ்லாத்திற்கு முரணான வாதங்களை வைத்து, பொய்களைப் புணைந்து ஹதீஸ்களை மறுக்கும் வழிகெட்ட பிரிவினர் பின்வரும் ஹதீஸையும் மறுக்கின்றனர்.

இறைத்தூதர்(ச) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும், அவர்கள், அது இப்ராஹீம்(ர) அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது’. என்றும் கூறினார்கள்.
ஆறிவிப்பவர்: உம்மு சுரைக் (ரழி) ஆதாரம்: புகாரி (3359)

இந்த ஹதீஸ் இரண்டு விடயங்களை உள்ளடக்கியுள்ளது. ஒன்று பல்லியைக் கொல்லுங்கள் என்ற ஏவல். மற்றையது இப்றாஹீம் நபி நெருப்பில் போடப்பட்ட போது அவருக்கு எதிராக நெருப்பை அது ஊதியது என்ற தகவல். நாம் அல்லாஹ்வின் தூதர் சொல்லும் மறைவான செய்திகளை நம்ப வேண்டும் என்ற அடிப்படைகயில் இதை நம்பித்தான் ஆக வேண்டும். ஆனால், ஹதீஸை மறுக்கும் வழிகேடர்கள் இந்த ஹதீஸில் இல்லாத இரண்டு விடயங்களை ஹதீஸில் சொருகி இந்த ஹதீஸை மறுக்கின்றனர்.

ஹதீஸில் செய்யும் தில்லுமுல்லு:

பல்லியைக் கொல்லுமாறு ஹதீஸ் சொன்னால் அதை செய்து விட்டுப் போகலாம். ஆனால், பல்லியை ஏன் கொல்லச் சொன்னார்கள் என்றால் அது இப்றாஹீம் நபிக்கு எதிராக நெருப்பை ஊதியது என்று ஹதீஸ் சொல்கிறது. இந்தக் காரணத்தை ஏற்க முடியாது என்று கூறுகின்றனர். அது ஊதிய காரணத்திற்காகத்தான் பல்லியைச் கொல்லச் சொல்லி நபி(ச) அவர்கள் சொன்னார்கள் என ஹதீஸ் கூறவே இல்லை. ஹதீஸை மறுக்கும் மனநிலைக்கு மக்களைச் கொண்டு வருவதற்காக வழிகேடர்களே வலிந்து கொடுக்கும் விளக்கம்தான் இது.

இது பற்றி ‘பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்’ என்ற நூலில் பக்கம் 29 இல் பின்வருமாறு கூறப்படுகின்றது.

‘இப்றாஹீம்(ர) அவர்கள் நெருப்புக் குண்டத்தில் போடப்பட்ட போது பல்லி மட்டும் வாயால் ஊதி நெருப்பை மேலும் மூட்டிவிடுகின்றது என்று இதற்குக் காரணம் சொல்லப்படுகின்றது. இந்தக் காரணம் சரியா? என்று நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.’ என்று கூறி அது ஊதிவிட்ட காரணத்தினால்தான் பல்லியைக் கொல்லச் சொல்லி இந்த ஹதீஸ் கூறுவதாக ஹதீஸில் இல்லாத காரணங்கள் கற்பிக்கப்படுகின்றன.

அடுத்ததாக இப்றாஹீம் நபிக்கு எதிராக பல்லி ஊதியது என்றுதான் ஹதீஸில் கூறப்படுகின்றது. அப்படி ஊதியதால் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்று எதுவும் ஹதீஸில் கூறப்படவில்லை. ஆனால், பல்லி ஊதியதால் நெருப்பு பெரிதாகப் பற்றி எரிந்தது என ஹதீஸ் சொல்வதாக இல்லாத செய்தியை இணைத்து பல்லி ஊதி நெருப்பு பெரிதாகப் பத்துமா? என்று கேள்வி எழுப்பப்படுகின்றது. இது பற்றி மேற்படி நூலில் பேசும் போது,

‘பல்லி ஒரு சிறு உயிரினம். அது நெருப்பை ஊதிப் பெரிதாக்கியது என்ற சொல் அறிவுச் சுரங்கமாகத் திகழ்ந்த நபியின் கூற்றைப் போல் உள்ளதா? அல்லது விபரமறியாத ஒருவரின் சொல்லைப் போல் அமைந்துள்ளதா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். (பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் : பக்கம் – 29-30)

ஊதியது என்பது ஹதீஸில் உள்ள தகவல். ஊதிப் பெரிதாக்கியது என்பது இவ்வழிகேடர்கள் ஹதீஸில் சேர்த்த கைச்சரக்கு. அதை வைத்து வாதம் எழுப்பி ஹதீஸை மறுக்கின்றார்கள் என்றால் ஏதோ உள்நோக்கத்தில் வேண்டுமென்றே திட்டமிட்டுத்தான் இந்த ஹதீஸ் மறுப்புக் கொள்கையைப் போதித்து வருகின்றனரோ என நாம் சந்தேகப்பட வேண்டியுள்ளது.

பல்லி ஊதியது என்றுதான் ஹதீஸ் கூறுகின்றது. இது பல்லியின் தீய குணத்தைக் காட்டுகின்றது. அது அருகில் போய் ஊதியதா? தூரத்தில் இருந்து ஊதியதா? என்று எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால், பல்லி சிறியதோர் உயிரினம். மிகப்பெரும் செருப்புக்கு அருகில் சென்றால் கூட அது கருகிவிடும் என்ற விடயம் கூடவா நபிகள் நாயகம்(ச) அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது?’
(பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் பக்கம் – 30)

என்று கேள்வி எழுப்பி இந்த ஹதீஸ் மறுக்கப்படுகின்றது.

இவர்கள் உருவாக்கிய ஹதீஸில் இல்லாத செய்தியை வைத்து இரண்டு வாதங்களும், ஹதீஸில் வரும் செய்தியை வைத்து இரண்டு வாதங்களுமாக நான்கு வாதங்களின் அடிப்படையில் இந்த ஹதீஸை வழிகேடர்கள் மறுக்கின்றனர். அவற்றுக்கான விளக்கங்களை நோக்குவோம்.

பல்லி என்பது ஒரு சிறிய உயிரினம். அது ஊதுவதால் நெருப்பு பெரிதாக எரியுமா? பல்லிக்கு பகுத்தறிவு உண்டா?

இவர்தான் இப்றாஹீம் நபி என்று பல்லிக்குத் தெரியுமா? என்கின்ற அடிப்படையிலும் கேள்வி எழுப்பப்படுகின்றது. இந்த இரண்டு கேள்விகளையும் மனதில் பதிந்து கொண்டு பின்வரும் வசனங்கள் கூறும் குர்ஆனின் சம்பவத்தை அவதானியுங்கள்.

‘ஜின்கள், மனிதர்கள், பறவைகள் என்பவற்றிலிருந்து சுலைமானுக்கு அவரது படைகள் ஒன்று திரட்டப்பட்டு, அவர்கள் அணியணியாக நிறுத்தப்பட்டனர்.’

‘அவர்கள் எறும்புகளின் (வசிப்பிடமான) பள்ளத்தாக்கிற்கு வந்தபோது, ஓர் எறும்பு, ‘எறும்புகளே! சுலைமானும் அவரது படையினரும் தாம் உணராதவர்களாக உங்களை மிதித்துவிடாதிருப்பதற்காக உங்கள் வசிப்பிடங்களுக்குள் நீங்கள் நுழைந்து கொள்ளுங்கள்’ என்று கூறியது.’

‘அதன் பேச்சினால் சிரித்தவராக புன்னகை புரிந்தார். ‘எனது இரட்சகனே! என் மீதும் என் பெற்றோர் மீதும் நீ செய்த உனது அருளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்வதற்கும் நீ எனக்கு அருள் புரிவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களுடன் என்னையும் இணைத்துக் கொள்வாயாக’ என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.’ (27:17-19)

இந்த சம்பவத்தை நன்றாக அவதானியுங்கள். ஒரு எறும்பு மற்ற எறும்புகளைப் பார்த்து சுலைமான் நபியும் அவரது படைகளும் வருகின்றனர்…. என்று கூறியதாகக் கூறப்படுகின்றதே! வருவது சுலைமான் நபி என்பது எறும்புக்கு எப்படித் தெரியும்? நெருப்பில் போடப்பட்டது இப்றாஹீம் என்பது பல்லிக்கு எப்படித் தெரியும்? என்று கேள்வி எழுப்பி மேற்படி ஹதீஸை மறுத்தால் வருவது சுலைமான் நபி என்பது எறும்புக்கு எப்படித் தெரியும் என்று கேள்வி எழுப்பி இந்தக் குர்ஆன் கூறும் சம்பவத்தையும் மறுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமல்லவா?

அடுத்து, எறும்பு பேசியிருக்கலாம், எறும்பின் பாiஷகளும் சுலைமான் நபிக்குத் தெரிந்திருக்கலாம் பிரச்சினை இல்லை. ஆனால், எறும்பு எவ்வளவு பெரிய சத்தத்தில் பேசியிருக்க முடியும்? எறும்பு ஒரு சிறிய உயிரினம். அது பேசுவது பெரிதாகக் கேட்கவா போகின்றது. அறிவாளிகளுக்கெல்லாம் பெரிய அறிவாளியான அல்லாஹ் சொல்லும் தகவல் போல் இது இருக்கின்றதா? அல்லது ஒரு விபரமுமறியாதவர் சொல்லும் தகவல் போல் உள்ளதா என பல்லி விடயத்தில் இல்லாத செய்தியைச் சொருகி இவர்கள் கேள்வி எழுப்பியது போல் கேள்வி எழுப்பினால் குர்ஆன் கூறும் இந்த சம்பவத்தையும் நிராகரிக்க நேரிடுமல்லவா?

குர்ஆனையும் பகுத்தறிவின் அடிப்படை யில் நிராகரிக்கும் கூட்டத்தை உருவாக்கு வதுதான் இந்த குள்ளநரிக் கூட்டத்தின் உள்நோக்கமோ என்று சந்தேகிக்க வேண்டி உள்ளது. ஏனெனில், பல்லி ஹதீஸ் சம்பந்தமாக, ரமழானில் உரையாற்றிய சூனிய உரையின் போது ‘குர்ஆனை அணுகும் முறை, ஹதீஸை ஆணுகும் முறை என்றால் நாம் இப்படித்தான் சிந்திக்க வேண்டும் எனக் கூறி ஹதீஸை மட்டுமல்ல, குர்ஆனைக் கூட இப்படித்தான் சிந்திக்க வேண்டும் எனக் கூறி முட்டாள்தனமாக இவர்களது சிந்தனைகள் குர்ஆன், ஸுன்னாவை விடத் தூக்கி நிறுத்தப்பட்டுள்ளது. இப்படிச் சிந்தித்தால் ஹதீஸை நிராகரிப்பது போல் குர்ஆனையும் நிராகரிக்கும் கூட்டமாக இவர்கள் மாறுவார்களோ என்று ஐயுறவேண்டியுள்ளது.

பல்லி மட்டும் காபிரா?
எல்லா உயிரினங்களும் அல்லாஹ் வுக்குக் கட்டுப்பட்டே நடக்கின்றன. பல்லி மட்டும் எப்படி அல்லாஹ்வுக்கு எதிராக நின்றது. இதை ஏற்றுக் கொண்டால் உயிரினங்களிலும் காபிரான உயிரினங்கள் உள்ளன என்று நம்ப வேண்டும். அப்படி நம்பினால் அது 3:81, 13:15, 22:8 ஆகிய வசனங்களை மறுப்பதாக அமைந்துவிடும் என்று வாதித்து இந்த ஹதீஸை மறுக்கின்றனர் இந்த வழிகேடர்கள்.

இவர்களின் அறிவின் மந்த நிலைக்கு இவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களே வலிமையான ஆதாரங்களாக அமைந்துள்ளன.

‘அல்லாஹ்வின் மார்க்கம் அல்லாததையா இவர்கள் விரும்புகின்றார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. மேலும், அவனிடமே அவர்கள் மீட்டப்படுவார்கள்.’ (3:83)

‘வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவையும், அவற்றின் நிழல்களும் விரும்பியோ விரும்பாமலோ காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வுக்கே சுஜூது செய்கின்றன.’ (13:15)

இவர்கள் குறுக்கு வழியில் குதர்க்கம் புரிவது போல் சிந்தித்தால் இந்த வசனங்களைக் கூட முரண்பாடாகச் சிந்திக்க முடியும். வானங்களிலும் பூமியிலும் உள்ளவை என்பவற்றில் மனிதனைக் கூட உள்ளடக்க முடியும். அடுத்து இந்த இரண்டு வசனங்களிலும் ‘மா’ என்கிற அஃறிணைப் பதம் பயன்படுத்தப்படாமல் அஃறிணை, உயர்திணை இரண்டிற்கும் பயன்படுத்தத்தக்க ‘மன்’ என்ற பதம்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவனிடமே கொண்டு வரப்படுவார்கள் என்று வேறு இந்த வசனத்தின் இறுதிப் பகுதி கூறுகின்றது. அப்படியென்றால் மனிதனும் அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அவன் பூமியில் உள்ளவையில் அடங்குவான். ஆனால், அல்குர்ஆனில் அனேக வசனங்கள் மனிதன் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாகக் கூறுகின்றன. எனவே, இந்த வசனமும் மனிதன் அல்லாஹ்வுக்கு மாறு செய்கின்றான் என்று கூறும் வசனங்களும் முரண்படுகின்றன என்று கூட வாதிக்க முடியும்.

அடுத்து இவர்கள் உயிரினங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்யாது என்று வாதிப்பதற்காகப் பின்வரும் வசனத்தையும் எடுத்து வைக்கின்றனர்.

‘வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும், சூரியனும் சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும் இன்னும் மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்கு சுஜூது செய்கின்றனர் என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? அதிகமானோர் மீது வேதனை உறுதியாகிவிட்டது. அல்லாஹ் யாரை இழிவுபடுத்துகின்றானோ, அவனைக் கண்ணியப்படுத்துபவன் யாருமில்லை. நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதைச் செய்வான்.’ (22:18)

இந்த வசனத்தில் மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர் என்று கூறப்படுகின்றது.

(2:83, 246), (4:46,155), (11:40) போன்ற பல வசனங்கள் சொற்பமானவர்கள்தான் ஈமான் கொள்வார்கள் என்று கூறுகின்றன. மற்றும் பல வசனங்கள் அதிகமானவர்கள் வழிகேட்டில்தான் இருப்பார்கள் என்று கூறுகின்றன. இவர்கள் ஹதீஸ்களை அணுகுவது போல் அணுகினால் இந்த வசனங்கள் கட்டாயம் ஏற்றுக் கொண்டு முரண்படுவதாகக் கூற நேரிடும்.

அல்லாஹ்வின் படைப்புக்கள் அவனுக்குக் கட்டுப்படுகின்றன என்றால் அல்லாஹ் எவற்றுக்காக அவற்றைப் படைத்தானோ அந்தப் பணியைச் செய்கின்றன என்றும் எடுத்துக் கொள்ளலாம். அல்லது எல்லாம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டுகின்றன. சில உயிரினங்கள் சில விடயங்களில் மாற்றமாக நடப்பதாக வஹியுடன் தொடர்புடைய ஒரு இறைத்தூதர் கூறினால் அதை மட்டும் பொதுச்சட்டத்தில் இருந்து விதிவிலக்குப் பெற்றதாக எடுத்துக் கொள்ள வேண்டும். வஹியை முரண்பாடாக்காமல் உடன்பாடாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

‘முஸ்லிம்கள் யூதர்களுடன் சண்டை செய்து யூதர்கள் மரங்களுக்கும் கற்களுக்கும் பின்னால் ஒளிந்து கொள்ளும் நிலை வராமல் உலகம் அழியாது. அப்போது அந்த மரங்களும் கற்களும் ‘முஸ்லிமே! எனக்குப் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான் அவனை வந்து கொன்று விடு!’ என்று கூறும், கர்கத் எனும் மரத்தைத் தவிர. ஏனெனில், அது யூதர்களின் மரமாகும்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ) ஆதாரம்: முஸ்லிம்- 2922, 7523)

கர்கத் எனும் மரம் யூதர்களுக்கு சார்பாக இருக்கும் என்றால் அது அல்லாஹ்வுக்கு கட்டுப்படவில்லை என்று அர்த்தம் அல்ல. அதை அல்லாஹ் அதற்காகத்தான் படைத்துள்ளான். அது அந்த வேலையைத்தான் செய்கின்றது. பல்லியை அல்லாஹ் இப்றாஹீம் நபிக்கு எதிராக ஊதும் தன்மையுடன்தான் படைத்துள்ளான். அது அந்த வேலையைத்தான் செய்தது.

எனவே, அதுவும் அல்லாஹ்வுக்;குக் கட்டுப்பட்டுத்தான் உள்ளது. அல்லது உலகில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன என்ற பொது விதியில் இருந்து பல்லி, கர்கத்மரம் என்பன போன்றவை விதிவிலக்குப் பெற்றுள்ளன என்று; புரிந்து கொண்டால் எந்த முரண்பாடும் எழாது!

அந்தப் பல்லி ஊதியதற்காக இப்போதுள்ள பல்லிகளை ஏன் கொல்ல வேண்டும்?

இப்றாஹீம் நபிக்கு எதிராக ஊதியது என்பதற்காக இப்போதுள்ள மற்றப் பல்லிகளை ஏன் கொல்ல வேண்டும்? ஒருவனின் பாவச் சுமையை அடுத்தவன் சுமக்க மாட்டான் என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு. இதுதான் இஸ்லாத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு. இந்த ஹதீஸ் கிறிஸ்தவ கொள்கைக்கு ஆதரவாக இருக்கின்றது. ஆதம் பாவம் செய்ததால் அனைவரும் பாவிகளாகப் பிறக்கின்றனர் என்பது கிறிஸ்த்தவர்களின் நம்பிக்கை. ஆதம் பாவம் செய்தால் அவரின் சந்ததிகள் எப்படி அந்தப் பாவத்தைச் சுமப்பார்கள் என்று மேற்கண்ட வசனங்கள் அடிப்படையாகக் கொண்டு நாம் கேள்வி எழுப்புகின்றோம்….
பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் பக்;கம்- 32

இவ்வாறு இவர்களின் வாதம் வளர்ந்து கொண்டு செல்கின்றது.

இப்றாஹீம் நபிகு; எதிராக அந்தப் பல்லி ஊதிய காரணத்திற்காகத்தான் இப்போது உள்ள பல்லிகளையும் கொல்லுமாறு நபி(ச) அவர்கள் கூறினார்கள் என்பது ஹதீஸில் இல்லாத செய்தி இவர்களாக ஹதீஸில் செருகிய இவர்களது கைச்சரக்கு. எனவே, இதற்குப் பதில் சொல்வது அவசியம் இல்லை. இருப்பினும் இவர்கள் செய்யும் வாத முறை என்பது இஸ்லாத்தை அழிக்கக் கூடியது என்பதை உணர்த்துவதற்காக சில செய்திகளைக் கூற வேண்டியுள்ளது.

பல்லி மனிதனுக்கு தீங்கிழைக்கக் கூடிய ஒரு உயிரினமாகும். அது விஷத்தன்மை கொண்டது. உணவில் அல்லது பானத்தில் மலசலம் கழிக்கலாம், தண்ணீர் போன்றவற்றில் விழுந்து செத்துப் போவதுடன் நமக்குத் தீங்கிழைக்கலாம். எனவே, இப்றாஹீம் நபி காலத்து பல்லி மட்டும் அல்ல இப்போதுள்ள பல்லியும் மனிதனுக்கு தீங்கிழைக்கக் கூடியதாகும்.

‘நபி(ச) அவர்கள் பல்லியைக் கொல்லும் படி கட்டளையிட்டார்கள். அதற்கு ஃபுவைஸிக் (தீங்கு விளைவிக்கக் கூடிய உயிரினம்) எனப் பெயரிட்டார்கள்.’
அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ்(வ) ஆதாரம்: முஸ்லிம்: 4151

இப்போது இவர்கள் எடுத்து வைத்த வாதத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.

ஆதம் செய்த பாவத்தை அவர்களது பிள்ளைகள் எப்படிச் சுமப்பார்கள் என்று கேள்வி எழுப்புகின்றார்கள். இந்தச் செய்தியில் இவர்கள் விளங்கிய கோணத்தில் அணுகினால் இஸ்லாத்தையே பொய்யாக்க நேரிடும்.

ஆதம்-ஹவ்வா(ர) செய்த பாவத்தின் காரணமாகத்தான் அவர்கள் சுவர்க்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் செய்த பாவத்தால் ஏற்பட்ட விளைவை நாமும் சேர்த்துத்தானே சுமக்கின்றோம். அவர்கள் செய்த குற்றத்திற்காக நாம் ஏன் சுவனத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்?

ஆத்-ஸமூத் கூட்டங்கள், லூத் நபி சமூகம் எனப் பல சமூகங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு அவர்கள் அழிக்கப்படும் போது அந்த ஊர்களில் பத்து வயதுக்குக் குறைந்த சிறுவர் சிறுமிகள் இல்லாமலிருந்தார்களா? பெரியவர்கள் செய்த குற்றத்திற்காக அந்தந்த சமூகங்கள் அழிக்கப்படும் போது பருவ வயதை அடையாத சிறுவர் சிறுமிகள் அழிக்கப்பட்டார்கள் என்றால் இவர்கள் பார்வையில் இதுவும் ஒருவரின் பாவச் சுமையை மற்றவர் சுமப்பதாகாதா?

‘யூதர்கள் செய்த அநியாயத்தின் காரணமாகவும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் அவர்கள் அதிகமாகத் தடுத்ததின் காரணமாகவும் அவர்களுக்கு ஆகுமாக்கப் பட்டிருந்த பல நல்லவற்றை அவர்கள் மீது நாம் தடைசெய்தோம்.’ (4:160)

சிலர் செய்த அநியாயத்தின் காரணமாக அந்த சமூகத்திற்கு ஆகுமான பலவற்றை ஹராமாக்கியதாக இந்த வசனம் கூறுகின்றது. அவர்கள் அநியாயம் செய்தால் செய்தவர்களுக்கு மட்டும் தடுக்க வேண்டும். அநியாயம் செய்தவர்கள் இறந்த பின்னர் வருபவர்களுக்கும் அவற்றைத் தடை செய்வது ஒருவரின் பாவச் சுமையை மற்றவர் மீது சுமத்துவதாகாதா எனக் கேள்வி எழுப்பினால் இந்த வசனத்தையும் நிராகரிக்கும் நிலை ஏற்படும் அல்லவா?

ஒருவர் செய்த பாவத்தின் காரணமாக மற்றொருவர் பாவியாக மாட்டார். ஆனால், அந்தப் பாவத்தினால் ஏற்படும் விளைவைப் பாவத்துடன் சம்பந்தப்படாதவர்களும் சுமக்க நேரிடலாம். உலகில் கெட்டவர்கள் செய்யும் தவறுகளால் நல்லவர்களும் தண்டிக்கப்படலாம். ஆனால், மறுமையில் ஒருவரது பாவத்தை மற்றவர் சுமக்கும் நிலை இல்லை என்பதே இஸ்லாத்தின் நிலையாகும்.

ரமழானில் சூனியம் தொடர் உரையின் போது இந்த ஹதீஸை Pது மறுக்கும் போது மேற்குறிப்பிட்ட வாதங்களை வைத்து விட்டு ‘குர்ஆனை அணுகும் முறை ஹதீஸை அனுகும் முறை என்றால் இப்படிச் சிந்திக்க வேண்டும் என்று கூறுகின்றார். ஹதீஸ்களை இப்படிக் குதர்க்கமாகச் சிந்திப்பது போல் குர்ஆனையும் சிந்திக்க முற்பட்டால் குர்ஆனின் பல வசனங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படலாம். இந்த ஹதீஸை மறுப்பதற்காக எடுத்து வைத்த வாதங்களின் அடிப்படை நோக்கத்தினால் கூட பல குர்ஆன் வசனங்களை நிராகரிக்கும் நிலை ஏற்படலாம்.

எனவே, வழிகெட்ட இப்பிரிவினரின் குறுமதி கொண்ட குதர்க்க வழிமுறையில் குர்ஆன், ஹதீஸை அணுகும் தவறான வழிமுறையிலிருந்து ஒவ்வொரு முஸ்லிமும் தன்னைத் தற்காத்துக் கொள்வது கட்டாயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.