சென்ற தொடரில் மருத்துவம், இரசாயனவியல், வானவியல், கணிதம் போன்ற அறிவியல் துறைகளில் முஸ்லிம்கள் அடைந்திருந்த முன்னேற்றம் குறித்து சுருக்கமாக நோக்கினோம். அதன் தொடரில் புவியில் குறித்து இவ்விதழில் நோக்குவோம்.
புவியியல்:
முஸ்லிம்களால் வளர்க்கப்பட்ட அறிவியல் கலைகளுள் புவியியலும் முக்கியமானதாகும். புவியியல் தொடர்பாக அன்று நிலவிய பல தவறான நம்பிக்கைகளை நீக்கியவர்கள் முஸ்லிம்கள்தான். புவி தட்டையானது என்ற கருத்தை மறுத்து அது உருண்டையானது என்ற கருத்தை மேற்குலகுக்கு உணர்த்தியவர்கள் முஸ்லிம்களே. இதன் மூலம் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்க காரணமாக அமைந்தவர்களும் முஸ்லிம்களே.
அப்பாஸிய கலீபா மாஃமூனின் உத்தரவின் பெயரில் முதலாவது உலக வரைபடத்தை (First World map) வரைந்தவர்களும் முஸ்லிம்களே. அல்குவாறித்மி, அல் சுலமீ, இப்னு ஷஹ்றாயார், அல் பல்கீ, இப்னு ருஸ்த், இப்னு சராப்யூன் போன்ற பல்வேறு அறிஞர்கள் இத்துறைக்குப் பெரிதும் பங்காற்றியுள்ளனர்.
‘பூமியில் பயணித்து முன் சென்ற மக்களின் முடிவுகளைப் பாருங்கள்’ என்ற குர்ஆனின் கட்டளையை இப்னு பதூதா போன்ற முஸ்லிம் பயணிகள் உருவாகி புவியியல் குறித்த பல தகவல்களை உலகுக்கு வழங்கினர். உலக நாடுகள் பற்றிய நூற்களை வெளியிட்டனர்.
சாதகமாக அமைந்த காரணிகள்:
மேற்கூறப்பட்டவை தவிர பௌதீகவியல், உயிரியல், தொழிநுட்பம், இயற்பியல் போன்ற பல துறைகளிலும் முஸ்லிம்கள் மிகப் பாரியளவிலான பங்களிப்பைச் செய்திருந்தனர் என்பதை வரலாறு நிரூபிக்கின்றது. இத்தகைய மகத்தான சாதனைகளை முஸ்லிம்கள் சாதிக்க சாதகமான சூழ்நிலை உருவாவதற்குத் துணை நின்ற காரணிகள் எவை என்பதைப் பற்றி இங்கு நோக்கப்படுகிறது.
1. அறிவுதேடலை இஸ்லாம் ஆர்வப்படுத்தியமை:
அறியாமை இருளில் மூழ்கியிருந்த இந்தசமூகத்திற்கு அறிவு தேடலின் அவசியம் அல்குர்ஆன் சுன்னா மூலம் உணர்த்தப்பட்டது. இஸ்லாத்தின் ஆரம்பத் தூதே அறிவுதேடலின் அவசியத்தை உணர்த்தியதுடன் சீரிய உயரிய ஒரு சமூக அமைப்பை அறிவின் அடிப்படையில்தான் கட்டியெழுப்ப முடியும் என்பதையும் உணர்த்தியது.
ஆரம்பமாக அருளப்பட்ட அல் குர்ஆனின் ஐந்து வசனங்களும் இதனையே உணர்த்துகின்றன.
‘(நபியே! யாவற்றையும்) படைத்த உமது இரட்சகனின் பெயரைக் கொண்டு நீர் ஓதுவீராக!அவன் மனிதனை (கருவறைச் சுவரில்) ஒட்டிக்கொள்ளக் கூடியதிலிருந்து படைத்தான். நீர் ஓதுவீராக! உமது இரட்சகன் மிக கண்ணியமானவன். அவனே எழுதுகோல் கொண்டு கற்பித்தான். மனிதன் அறியாதவற்றை அவன் அவனுக்குக் கற்றுக் கொடுத்தான்’.(12)
மேற்படி வசனங்களில் கற்றலுக்குத் தேவையான வாசிப்பு, எழுத்து, கற்பித்தல் என்ற அம்சங்கள் பற்றிப்பேசப்படுகின்றன. “இக்ரஃ” வாசிப்பீராக என்ற கட்டளை இருவிடுத்தங்களும் ‘அல்லம’ கற்பித்தான் என்ற வினைச்சொல் இருவிடுத்தங்களும் இடம்பெறுகின்றன. அந்த சமூகத்திற்கு ஏவ, எடுத்துக் கூற, தடுத்துவிட வேண்டிய விடயங்கள் எண்ணற்ற அளவில் இருந்தாலும் ஆரம்ப வசனங்களில் மீண்டும் மீண்டும் அறிவுடன் தொடர்புபட்ட விடயங்கள் பேசப்பட்டிருப்பது. ஒரு சமூக உருவாக்கத்திற்கு அறிவின் அவசியத்தையே எடுத்துக்காட்டுகின்றது.
மனித இனத்தின் உயர்வுகூட அறிவில்தான் தங்கியிருப்பதாக இஸ்லாம் உணர்த்துகின்றது. ஆதிபிதா ஆதமுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்ததையும் அவரது அறிவியல் ஆற்றல் நிரூபிக்கப்பட்ட பின்னரே மலக்குகள் அவருக்கு சுஜூது செய்ததையும் அதன் பின்னரே அவர் சுவனம் நுழைந்ததையும் அல் குர்ஆன் குறிப்பிடுகின்றது.(13)
அல் குர்ஆனின் அனேக ஆயத்துக்கள் அறிவின் அவசியத்தை வலியுறுத்துகின்றன. அவ்வாறே ஹதீஸ்களும் அறிவை வலியுறுத்துவதைக் காணலாம். ‘எவர் ஒருவர் அறிவைத்தேடி புறப்படுகின்றாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தின் பாதையை எளிதாக்குகின்றான்.’ (14)
‘எவர் ஒருவர் அறிவைத் தேடி வீட்டைவிட்டு வெளியேறுகின்றாரோ அவர் வீடுதிரும்பும் வரை இறை பாதையில் உள்ளார்.’ (15)
இவ்வாறான ஏராளமான ஹதீஸ்கள் அறிவின் அவசியத்தை உணர்த்துகின்றன. இது குறித்து யூஸுப் அல் கர்ழாவி குறிப்பிடும் போது பின்வரும் தகவல்களைக் கூறுகின்றார்.
• ஸஹீஹுல் புகாரி ‘கிதாபுல் இல்ம்’ என்ற பாடத்தில் 102 அறிவுப்புக்களை உள்ளடக்கியுள்ளது.
• முஸ்லிம், முஅத்தா, திர்மிதி, அபூதாவூத், நஸஈ, இப்னு மாஜா போன்ற நூல்களும் அறிவு பற்றிய தனிப்பாடங்களை உள்ளடக்கியுள்ளன.
• பாஹுர் ரப்பானி என்ற நூல் முஸ்னத் அஹமதிலுள்ள அறிவுபற்றிய 81 அறிவுப்புக்களை உள்ளடக்கியுள்ளது.
• நூருத்தீன் ஹைதமியின் ‘மஜ்மஉஸ்ஸவாயித்’ என்ற நூலின் ‘கிதாபுல் இல்ம்’ என்ற பாடம் 84 பக்கங்களையும் ஒவ்வொரு பக்கங்களும் பல ஹதீஸ்களையும் உள்ளடக்கியுள்ளது.(16) இவ்வாறு அறிவுபற்றிய செய்திகள் கடல் போன்று விரிந்தது என்பதைத்; தொடர்ந்து கர்ழாவி சுட்டிக்காட்டிச் செல்கிறார்.
இவ்வாறு இஸ்லாம் அறிவுதேடுவதை இஸ்லாமிய இபாதத்தாக ஏவியதால் உந்தப்பட்ட முஸ்லிம்கள் தாம் இறைவழிபாட்டில் ஈடுபடும் தூய உள்ளத்துடனும், வேகத்துடனும் அறிவைக் கற்றனர். இது அறிவியல் துறையில் மிகக் குறிகிய காலத்தில் மிகப் பெரிய சாதனைகளை அவர்கள் சாதித்துக் காட்டத் சாதகமான சூழலை உருவாக்கியது.
2. ஆய்வு செய்யப்பணித்தமை:
இஸ்லாம் அறிவை மட்டும் வலியுறுத்தாமல் ஆய்வு செய்வதையும் சிந்திப்பதையும் வலியுறுத்துவதையும் காணலாம். இது முஸ்லிம்களிடம் ஆய்வுக் கண்னோட்டத்தைத் திறந்துவிட்டது.
‘ஒட்டகம் எவ்வாறு படைக்கப் பட்டுள்ளது, வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது, மலைகள் எவ்வாறு நட்டப்பட்டுள்ளன, பூமி எவ்வாறு விரிக்கப் பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?'(17)
இங்கே ஒட்டகத்தை அவர்கள் பார்க்க வில்லையா என வினவப்படுவது சாதாரணமாகப் பார்ப்பதையல்ல. ஒட்டகம் பார்க்காத அரேபியர் எவரும் இருக்கமாட்டர். அதை ஆய்வு செய்து பார்ப்பதைத்தான் இந்த வசனம் போதித்துள்ளது.
இவ்வாறு சூரியன், சந்திரன், நட்சத்திரம், காற்று, மழை, மேகம், பூமி, வானம், மலை, இரவுபகல் போன்ற பல அம்சங்கள் குறித்தும் நீங்கள் ஆய்வு செய்யவில்லையா, சிந்திக்கவில்லையா எனக்கூறி இவைபற்றி சிந்திப்பது முஸ்லிமின் மார்க்க உணர்வுடன் ஒட்டியதாக இருக்க வேண்டும் என்றும் அல் குர்ஆன் பணிக்கின்றது.
‘நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியைப் படைத்ததிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் சிந்தனையுடையோருக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவர்கள் நின்ற நிலையிலும், அமர்ந்த வர்களாகவும், தங்களின் விலாப் புறங்களின் மீது (சாய்ந்தவர்களாகவு)ம் அல்லாஹ்வை நினைவு கூருவார்கள். மேலும், வானங்கள் மற்றும் பூமியின் படைப்புப் பற்றிச் சிந்தித்து ‘எங்கள் இரட்சகனே நீ இவற்றை வீணாகப் படைக்கவில்லை. நீ தூய்மையானவன். ஆகவே, நீ எங்களை நரக வேதனையிலிருந்தும் பாதுகாப்பாயாக!’ (என்றும் பிரார்த் திப்பார்கள்.) (18)
இவ்வாறான அனேக ஆயத்துக்கள் படைப்புக்கள் பற்றி சிந்தனை செய்வது குறித்து பேசுகின்றன. நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப்பற்றி சிந்திக்காதீர்கள் அவனது படைப்புகளைப் பற்றிச் சிந்தியுங்கள் எனக் கூறி இத்துறையை ஊக்குவிதுள்ளார்கள். இவ்வகையில் இயற்கையை ஆய்வு செய்யுமாறு இஸ்லாம் தூண்டியமை முஸ்லிம் சமூகம் துரிதமாக அறிவியலில் முன்னேற்றம் காண வழிசெய்தது எனலாம்.
3. இஸ்லாமிய இபாதத்துக்கள்:
இஸ்லாம் பல்வேறுபட்ட வணக்க வழிபாடுகளை முஸ்லிம்கள் மீது விதித்துள்ளது. அவை கூட முஸ்லிம்களின் அறிவியல்துறை சார் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது எனலாம்.
உதாரணமாக முஸ்லிமின் அடிப்படைக் கடமைகளில் பிரதானமானது தொழுகையாகும். இதனை நிறைவேற்ற கஃபாவின் திசையை அறிந்திருப்பது அவசியமாகும். வியாபாரத்துக்காக பயணம் செய்யும் முஸ்லிம்கள் உரிய நேரத்தில் தாம் இருக்கும் இடத்திலிருந்து கஃபாவை முன் நோக்கித் தொழுவதற்கு எடுத்த முயற்சி அவர்களுக்கு புவியியல் அறிவையும், வானவியல் நட்சத்திரங்களின் திசைகள் பற்றிய தெளிவையும் கொடுத்தது.
இவ்வாறே நீண்ட தூரங்களிலிருந்து ஹஜ்ஜுக்காகப் பயணம் வருபவர்கள் தமது பயணத்தை ஒழுங்கு படுத்திக்கொள்ள புவியியலையும் பருவ கால மாற்றங்களையும், வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களை வைத்து போகும் திசையை அறிந்து கொள்ளும் அறிவையும் பெற்றனர் எனலாம்.
ஸகாத் எனும் இஸ்லாமியக் கடமையூடாக கணக்கியல் பற்றிய ஓரளவான அறிவிவையாவது முஸ்லிம் பெற்றிருக்க வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. இது இத்துறை வளர்ச்சிபெற உந்துதலாக இருந்தது எனலாம். இவ்வாறே இஸ்லாமியச் சட்டங்களில் வாரிசுரிமை என்பது பரந்துவிரிந்த பரப்பளவைக் கொண்டதாகும். இதற்கு கணக்கியல் பற்றிய தெளிவு அவசியமாகும். எனவே, இந்த சட்டத்தை நிறைவேற்ற முஸ்லிம்கள் கணக்கியலில் கவனம் செலுத்த நேர்ந்தது. இவ்வாறு நோக்கும் போது இஸ்லாமிய இபாதத்துக்கள், சட்டங்கள் என்பனவும் முஸ்லிம்கள் அறிவியல்துறையில் அபார வளர்ச்சியடைய ஏதுவாக அமைந்தன எனக் கூறலாம்.
4. இஸ்லாமிய இராஜ்ய விஸ்தரிப்பு:
முஸ்லிம்களால் குறுகியகால இடைவெளிக்குள் பல்வேறு நாடுகள் கைப்பற்றப்பட்டன. இதனால் பரந்து விரிந்ததொரு சாம்ராஜ்யம் கட்டியெழுப்பப்பட்டது. இது பல்வேறு விதத்திலும் அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டது எனலாம்.
முஸ்லிம்களால் பண்டைய நாகரிகங்களின் கேந்திரங்களாகத் திகழ்ந்த மொஸபத்தோமியா, உரோமம், பாரசீகம், எகிப்து, இந்தியா போன்ற நாடுகள் கைப்பற்றபட்ட போது அங்கு காணப்பட்ட அறிவியல் சார் முதுசங்கங்களை முஸ்லிம்கள் தத்தெடுத்து வளர்த்தனர்.
பரந்துபட்ட பேரரசை ஆள, ஒவ்வவொரு நாட்டு மக்களின் தனிப்பட்ட கலாசாரம் பற்றிய அறிவும் அவசியமாயின. எனவே ஆட்சியாளர்களால் அறிவியல்துறை ஆய்வுக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இவ்வகையில் இராஜ்ய விஸ்தரிப்பு முஸ்லிம்கள் அறிவியல் துறையில் பாரிய முன்னேற்றம் காணவழிவகுத்தது எனலாம்.
5. ஆட்சியாளர்களின் அனுசரணை:
ஆட்சியாளர்கள் அறிவியல் துறைக்களித்த ஆக்கமும் ஊக்கமும் இத்துறையில் அபரிமிதமான முன்னேற்றத்துக்கு வழி வகுத்தது. குலாபஉர்ராஷிதூன்கள் பொதுவாக சமய துறைசார் அறிவுகளை வளர்ப்பதில் கூடிய அக்கறை காட்டியிருப்பதை அவதானிக்கலாம். அவர்களது ஆட்சிக்காலமும், உமையா கிலாபத்தின் ஆரம்பகட்டமும் பெரும்பாலும் உள்நாட்டு வெளிநாட்டு படையெடுப்புக்களுக்கு அதிகம் முகம்கொடுக்க நேரிட்டமை இத்துறையில் அக்கறை செலுத்துவதற்கான போதியளவு வாய்ப்பைக் குறைத்திருக்கலாம்.
இருப்பினும் உமையாக்காலத்தில் இத்துறையில் ஓரளவு அக்கறை செலுத்தப் பட்டிருப்பதைக் காணலாம். அவர்கள் தமது அரசபையில் அறிஞர்களுக்கு இடம் கொடுத்ததுடன் அவர்களை கௌரவித்திருப்பதையும் காணலாம்.
கலீபா முஆவியா(ரழி) அவர்களது அரச வைத்தியர் இப்னு அதால் எனும் கிறிஸ்தவ மருத்துவர் கலீபாவுக்காக சிறிய மருத்துவ நூல்களை அரபு மொழியில் மொழிபெயர்த்து கொடுத்தார். கலீபா முஆவியாவின் பேரரும் முதலாம் யசீதின் மகனுமான காலித் அளவையியலிலும், இரசாயனவியலிலும் ஈடுபாடுடையவராகக் காணப்பட்டார். மருத்துவம், வானவியல் முதலிய துறைகளில் எழுதப்பட்ட கிரேக்க, கொப்டிக் மொழி நூற்களை முதன் முதலாவதாக அறபியில் மொழிபெயர்த்தவர் இவர் என்று கூறப்படுகின்றது. கலீபா இரண்டாம் உமர் ‘அந்தியாக்’ நகரில் மருத்துவக் கல்லூரி நிறுவினார். கலீபா வலீத் ஹிஸாம் போன்றோரும் இத்துறையில் பெரிதும் பங்காற்றியுள்ளார்கள்.
உமையாக்களுக்குப் பின்னர் ஆட்சிபீட மேறிய அப்பாஸிய ஆட்சிக்காலமே முஸ்லிம்களின் அறிவியல் ஆராய்ச்சியில் பொற்காலமாகத் திகழ்தது. அப்பாஸிய ஆட்சியாளர்கள் அறிவுத்தாகமுடையோராக இருந்த அதேவேளை, அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதரவு நல்கி அவர்களின் முயற்சிகளுக்கு ஊக்கமும் அளித்தனர். ராஜ்யம் முழுவதும் கல்லூரிகளையும், ஆய்வகங்களையும் நிறுவினர். ஐரோப்பிய கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அப்பாஸியர் நிறுவிய கலைக் கூடங்களே முன்னோடியாக அமைந்தன.
அப்பாஸிய ஆட்சியளர்களுள் ஹாரூன் ரஷீத், மாமூன், மன்சூர் ஆகியோர் இத்துறைக்கு அழுத்தமான பங்களிப்பை நல்கினர். இவர்கள் மட்டுமன்றி அப்பாஸிய ஆட்சியில் தோற்றம் பெற்ற சிற்றரசுகளும் கூட இத்துறைக்குப் பங்களிப்பு நல்கியிருப்பதை அவதானிக்க முடியம்.(19) இவ்வகையில் ஆட்சியளர்களின் அனுசரணை முஸ்லிம்கள் அறிவியல் துறையில் அபரிதமான முன்னேற்றம் காண காரணமாய் அமைந்தது என்று கூறலாம்.
மொழி பெயர்ப்புப் பணிகள்:
ஆட்சியாளர்களின் அனுசரணையுடனும், அறிஞர்களால் தனிப்பட்ட முறையிலும் அறிவியல்துறை சார் நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டன. இவை அறிவியல் துறையின் அபார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவின. உமையாக் கலீபா அப்துல் மலிக் அறபு மொழியை அரசகரும மொழியாகப் பிரகடனப் படுத்தியதால் அரபு மொழி விருத்தியடைந்தது அதுவரை காலமும் ஒவ்வொரு பிரதேசத்திலும் அவ்வப் பிரதேச மொழிகளில் பதியப்பட்ட அரச நடவடிக்கைகள் அரபு மொழியில் பதியப்பட்டன.
இஸ்லாம் பரவிய புதிய பிரதேசங்களிலும் அரபு மொழி செல்வாக்குச் செலுத்தியது. இஸ்லாத்தைத் தழுவிய அறிஞர்கள் இஸ்லாத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள அறபு மொழியைக் கற்றனர். இதனால் மாற்று மொழியில் காணப்பட்ட அறிவுப் பொக்கிசங்களை அறபு மொழிக்கு மாற்றுவது இலகுவானது.
மொழிபெயர்ப்புத் துறையில் கலீபா அல் மாமூனால் ஸ்தாபிக்கப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கழகமான ‘பைத்துல் ஹிக்மா’ பெரும் பங்காற்றியது. இவரின் பணிப்பின் பெயரில் கல்லன், ஹிப்போகீரேத்ஸ், அறிஸ்டோட்டில், பிளேட்டோ, தொலமி, பைதகரஸ் போன்றோரின் அரிய நூற்கள் மொழிபெயர்க்கப்பட்டன. கிரேக்கர்களின் அறிவியல் நூற்களைப் பிற்காலத்தில் ஐரோப்பியர் அறிந்து கொள்ள இந்த மொழிபெயர்ப்புகள் உதவின.
இந்த மொழிபெயர்ப்புப்பணியில் முஸ்லிம்கள் மட்டுமன்றி யூத கிறிஸ்தவ அறிஞர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். பைத்துல் ஹிக்மா நிறுவன ரீதியாக இயங்குவதற்கு முன்னரே கலீபா மன்சூர், ஹாரூன் அர்;ர’Pத் ஆகியோரால் மொழிபெயர்ப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறே மாமூனுக்குப் பிற்பட்ட முதவக்கில் முதலானோராலும் இப்பணி தொடரப்பட்டது.
மொழிபெயர்ப்புப் பணியூடாக பல்வேறுபட்ட சமூகங்களின் அறிவியல் முதுசங்கள் முஸ்லிம்களின் சொத்தாகின. இது முஸ்லிம்கள் அறிவியல் உலகில் பிரகாசிக்கப் பெரிதும் ஏதுவாக அமந்தது.
அடிக்குறிப்புக்கள்
12. அல் குர்ஆன் (96:1-5)
13. பார்க்க அல் குர்ஆன் 02:30-35
14. அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி)
ஆதாரம்: முஸ்லிம்
15. அறிவிப்பாளர்: அனஸ்(ரழி)
ஆதாரம் : திர்மிதி
16. கலாநிதி யூசுப் அல் கர்ழாவி,
அர்ரஸுல் வல் இல்ம்,
முஅஸ்ஸிஸதுர் ரிஸாலா பக்.4
17. அல் குர்ஆன் (88: 17-20)
18. அல் குர்ஆன் (03: 190-191)
19. பார்க்க அபுபக்கர். ஏ. எம், மேலது பக்.16-25