அல்குர்ஆன் விளக்கக் குறிப்புகள் – தடம் புரளும் உள்ளங்கள் | Article.

‘எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நீ நேர்வழி காட்டிய பின்னர் எங்கள் உள்ளங்களை தடம்புறளச் செய்து விடாதே! மேலும், உன்னிட மிருந்து அருளை எமக்கு வழங்குவாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளனாவாய்.’
(3:8)

முதஷாபிஹத்தான வசனங்களை வைத்து உள்ளத்தில் குழப்பமுள்ளவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவார்கள் என்று எச்சரிக்கை செய்த பின்னர் இந்த துஆவை அல்லாஹ் எமக்குக் கற்றுத் தருகின்றான். நேர்வழி என்பது அல்லாஹ்வின் கையில் இருக்கின்றது. உள்ளத்தில் நோய் உள்ளவர்களின் குதர்க்கமான வாதங்களால் எமது உள்ளங்கள் தடம் புரண்டுவிடக் கூடாது என்பதற்காக இந்தப் பிரார்த்தனையை நாம் செய்ய வேண்டும் என்று கற்பிக்கப்படுகின்றோம்.

நபி(ச) அவர்களும், ‘உள்ளங்களைப் புரட்டுகின்றவனே! எனது உள்ளத்தை உனது மார்க்கத்திலும் உனக்குக் கட்டுப்படுவதிலும் நிலைத்திருக்கச் செய்வாயாக!’ எனப் பிரார்த்திப்பவராக இருந்துள்ளார்கள்.

எனவே, எமது உள்ளம் தடம்புரண்டுவிடக் கூடாது என்பதில் கூடுதல் கரிசனை தேவை!அதற்காக இவ்வாறு நாம் தொடர்ந்து பிரார்த்தனையும் செய்ய வேண்டும்.

நிராகரிப்பாளர்களுக்கு மட்டுமா?
‘நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களின் செல்வங்களோ, அவர்களின் பிள்ளை களோ, அவர்களை அல்லாஹ் வி(ன் தண்டனை யி)லிருந்து சிறிதளவேனும் காப்பாற்றமாட்டாது. அவர்கள் தாம் நரகத்தின் எரிபொருட்களாவர்.’
(3:10)
நிராகரிப்பாளர்களுக்கு அவர்களது செல்வமோ, பிள்ளைகளோ மறுமையில் எந்த நன்மையையும் செய்யப் போவதில்லை என்று இங்கு கூறப்படுகின்றது. தவறான வழியில் சென்ற முஸ்லிமுக்கும் இதுதான் நிலை. இருப்பினும் எதற்காக இங்கே நிராகரிப்பாளர்களைக் குறிப்பிட்டுக் கூற வேண்டும் என்ற கேள்வி எழலாம்.

காபிர்களிடத்தில் ஒரு தவறான வாதம் இருந்தது. நமக்கு இந்த உலகத்தில் செல்வத்தையும் குழந்தைப் பாக்கியத்தையும் தந்த அல்லாஹ் மறுமையில் எங்களைத் தண்டிப்பானா? என அவர்கள் வாதிட்டனர்.

‘நாமே அதிகமான செல்வங்களையும் குழந்தைகளையும் உடையவர்கள். நாம் தண்டிக்கப்படக் கூடியவர்கள் அல்லர் என்றும் அவர்கள் கூறினர்.’ (34:35)

”எமது வசனங்களை நிராகரித்து, (மறுமையில்) செல்வமும், குழந்தையும்; நிச்சயமாக நான் வழங்கப்படுவேன்’ என்று கூறுபவனை (நபியே!) நீர் பார்த்தீரா?’

‘அவன் மறைவானவற்றை அறிந்து விட்டானா? அல்லது அர்ரஹ்மானிடத்தில் ஏதேனும் உறுதிமொழி எடுத்திருக்கின்றானா?’

‘அவ்வாறன்று! அவன் கூறுவதை நாம் பதிவுசெய்து, வேதனையை அவனுக்கு மென்மேலும் அதிகப்படுத்துவோம்.’

‘(தனது செல்வம், குழந்தை எனப் பெருமையாக) அவன் கூறுபவற்றுக்கு நாமே உரித்துடையவர்களாவோம். அவன் நம்மிடம் தன்னந்தனியாகவே வருவான்.’ (19:77-80)

உலகத்தில் செல்வத்தையும் குழந்தை யையும் தந்தவன் மறுமையிலும் எனக்கு அவற் றைத் தருவான் என அவர்கள் வாதிட்டனர். அதை இந்த வசனங்களில் அல்லாஹ் கண்டிப்பதுடன் அவன் சொன்னதையும் பதிவு செய்வோம், அவன் எங்களிடம் தனியாகத்தான் வருவான் என்றும் கூறுகின்றான்.

‘மறுமை நிகழும் என்றும் நான் நினைக்கவில்லை. எனது இரட்சகனிடம் நான் மீட்டப்பட்டாலும், இதைவிடச் சிறந்த ஒரு மீளுமிடத்தை நான் நிச்சயமாகப் பெறுவேன் என்றும் கூறினான்.’ (18:36)

மறுமை வரும் என நம்பவில்லை. அப்படியே வந்தாலும் உலகத்தில் தந்ததை விட நல்லதை எனக்கு அவன் தருவான் என அவர்கள் வாதிட்டனர்.

‘அவனுக்கு ஏற்பட்ட ஒரு துன்பத்திற்குப் பின்னர் நம்மிடமிருந்து ஏதேனும் ஓர் அருளை அவனுக்கு நாம் சுவைக்கச் செய்தால், ‘இது எனக்குரியது. மறுமைநாள் ஏற்படும் என நான் நினைக்கவில்லை. எனது இரட்சகனிடம் நான் மீண்டும் கொண்டு செல்லப்பட்டால், நிச்சயமாக எனக்கு அவனிடத்தில் நன்மையே இருக்கும்’ என்று கூறுவான். நிராகரித்தோருக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக நாம் அறிவிப்போம். மேலும், கடினமான வேதனை யிலிருந்து நிச்சயமாக நாம் அவர்களுக்கு சுவைக்கச் செய்வோம்.’ (41:50)

‘உங்களது செல்வங்களும், உங்களது பிள்ளைகளும் எங்களிடத்தில் உங்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் அல்லர். எனினும், யார் நம்பிக்கை கொண்டு, நல்லறமும் புரிகின்றார்களோ அவர்களுக்கே அவர்கள் செய்தவற்றின் காரணமாகப் பன் மடங்கு கூலி உண்டு. அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் அச்சமற்று இருப்பார்கள்.’ (34:37)

இவ்வாறு பல வசனங்கள் காபிர்களின் இந்த வாதத்தை மறுக்கின்றன. இதே சூறாவின் இறுதிப் பகுதியிலும் இச்செய்தி கூறப்படுகின்றது.

‘மேலும், அவர்களை நாம் (உடனுக்குடன் தண்டிக்காது) விட்டு வைப்பது தங்களுக்கு நல்லது என நிராகரிப்போர் எண்ண வேண்டாம். நாம் அவர் களை விட்டு வைத்திருப்பதெல்லாம் பாவத்தை அவர் கள் அதிகரித்துக் கொள்வதற்கே. மேலும் அவர் களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.’ (3:178)

உலகத்தில் காபிர்களுக்கு எதற்காக செல்வச் செழிப்பு வழங்கப்படுகின்றது என்பதை இந்த வசனங்கள் விளக்குகின்றன.
இந்த உலகத்தில் செல்வச் செழிப்பாக இருக்கும் நமக்கு மறுமையும் செழிப்பாகத்தான் இருக்கும் என அவர்கள் வாதிட்ட காரணத் தினால்தான் காபிர்களுக்கு மறுமையில் அவர்களது பொருள் செல்வமும் மக்கள் செல்வமும் உதவாது எனக் குறிப்பிட்டுக் கூறப் படுகின்றது என்பதை இதன் மூலம் அறியலாம்.

தோற்கடிக்கப்படுவீர்கள்:

‘(நபியே!) நிராகரிப்பவர்களிடம், ‘நீங்கள் விரைவில் தோற்கடிக்கப்படுவீர்கள். பின்னர், நரகத்தின் பால் ஒன்று திரட்டப்படுவீர்கள். தங்குமிடத்தில் அது மிகக் கெட்டதாகும் எனக் கூறுவீராக!’ (3:12)

நிராகரிப்பாளர்களைப் பார்த்து ‘நீங்கள் தோற்கடிக்கப்படுவீர்கள்’ என்று கூறுங்கள் என இந்த வசனம் கூறுகின்றது. மக்கத்துக் காபிர்கள் இந்த வசனம் கூறுவது போல் தோற்கடிக்கப் பட்டனர். சூழ இருந்த நிராகரிப்பாளர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட்டு இந்த வசனம் உறுதி செய்யப்பட்டது.

பத்ர் போர் வெற்றி:

‘(பத்ரில்) சந்தித்துக் கொண்ட இரு கூட்டங்களிலும் நிச்சயமாக உங்களுக்கு ஓர் அத்தாட்சியுண்டு. ஒரு கூட்டம் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றது. மற்றதோ நிராகரிக் கும் கூட்டமாகும். அவர்கள் (முஸ்லிம்களாகிய) இவர்களைத் தம்மைவிட இரு மடங்காகக் கண்ணால் கண்டார்கள். அல்லாஹ், தான் நாடுவோரைத் தனது உதவி மூலம் பலப்படுத்து கிறான். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினையுண்டு. ‘ (3:13)

‘பத்ர்’ எனும் இடத்தில் நடந்த போர் பற்றி இந்த வசனம் பேசுகின்றது. குறைந்த எண்ணிக்கையுடைய, போதிய ஆயுத பலமோ, மக்கள் சக்தியோ இல்லாமல் தம்மை விட மூன்று மடங்கு அதிகமான பெரிய படையை முஸ்லிம் களின் சிறு படை வெற்றி கொண்டது. இந்த வெற்றியில் பல அத்தாட்சிகள் இருப்பதாக இந்த வசனம் கூறுகின்றது.

அல்லாஹ்வுக்காகப் போராடுபவர்களுக்கு அல்லாஹ்வே வெற்றியைக் கொடுப்பான். எதிரிகளின் படை பலம், ஆயுத பலம் எதுவும் அல்லாஹ்வின் உதவியின் முன்னால் நின்று பிடிக்காது என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.