வழிகாட்டும் வான்மறை வந்திறங்கிய மாதம்

“ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிறித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம் மாதத்தை அடைகின்றாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்….” (2:185)

மேலே 2:185ம் வசனத்தின் ஒரு பகுதி இடம்பெற்றுள்ளது. இந்த வசனம் மூன்று முக்கிய அம்சங்களைக் கூறுகின்றது.
1. ரமழானின் சிறப்பு.
2. குர்ஆனின் சிறப்பு
3. நோன்பு எனும் மார்க்கக் கடமை, என்பனவே அவையாகும்.
ரமழானின் சிறப்பு:
ஒரு வருடம் 12 மாதங்களைக் கொண்டதாகும் இம் மாதங்களிற் சில மார்க்க ரீதியில் சிலாகித்து நோக்கப்படுகின்றது. அவற்றில் ரமழான் மாதம் பிரதானமானதாகும். இம்மாதம் தீய ஷைத் தான்களுக்கு விலங்கிடப்படும் மாதமாகும். இதில் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. இம்மாதத்தில் செய்யப்படும் இபாதத்துக்கள் ஏனைய காலத்தில் செய்யப்படுவதை விடப் பன்மடங்கு அதிக நன்மைகளை ஈட்டித் தருகின்றன. பாவமன்னிப்புக்கான நீண்ட வாய்ப்பு இம்மாதத்தில் வழங்கப்படுகின்றது. தவறு செய்பவர்கள் திருந்தி தமது வாழ்க்கைத் திசையை நல்லவழி நோக்கித் திருப்புவதற்கு நல்ல சந்தர்ப்பம் அளிக்கப்படுகின்றது. இவ்வாறு எண்ணற்ற சிறப்புக்களை இம்மாதம் கொண்டுள்ளது. இம்மாதத்தின் சிறப்புக்களுக்கெல்லாம் என்ன காரணம் தெரியுமா?

அல்குர்ஆன் அருளப்பட்டது:
ரமழான் மாதத்தில்தான் அல்குர்ஆன் அருளப்பட்டது. அதுவே ரமழானின் அனைத்துச் சிறப்புக்களுக்கும் அடிப்படையாகும். அது அருளப்பட்ட மாதம் சிறப்பானது. அது அருளப்பட்ட நேரம் மகத்தானதாகும்.

“நிச்சயமாக நாம் அதனை பாக்கியமுள்ள இரவில் இறக்கினோம். நிச்சயமாக (அதன்மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்” (44:03)
அந்த இரவு எவ்வளவு பாக்கியம் பெற்றது என்று கூறும்போது “1000 மாதங்களை விடச் சிறந்த கத்ர் எனும் மகத்தான இரவில் இறக்கி னோம்” என குர்ஆன் (பார்க்க – 97:1-3) கூறுகின்றது.
மேற்படி சூரா அல்குர்ஆன் அருளப்பட்ட இரவு 1000 இரவுகளை விட அருள் வளம் பொதிந்தது என்று கூறுகின்றது.
அல்குர்ஆன் அருளப்பட்ட மாதத்திற்கும், இரவுக்கும் ஏன் இத்தகைய பெருமை என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
மனிதர்களுக்கான வழிகாட்டல்:
அது சாதாரண நூல் அல்ல. சர்வ லோகங்களின் இரட்சகனிடமிருந்து இறக்கப்பட்டது. அதனைச் சுமந்து வந்தவரும் சாதாரணமானவரல்ல. மலக்குகளின் தலைவரும், சக்தியும் நம்பிக்கை நாணயமுமுடைய ஜப்ரீல்(அலை) அவர்கள் அதனை சுமந்து வந்தார்கள். அதனைப் பெற்று மக்களுக்குப் போதித்து நடைமுறைப்படுத்தியவரும் சாதாரண மானவரல்ல. படைப்பினங்களில் சிறந்த, இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள்தான் அதனை மனித குலத்துக்குப் போதித்தார்கள். இவ்வகையில் அதன் ஏற்றம் மட்டிட முடியாததாகும்.

இந்த வேதம் ஏனைய வேதங்களைப் போன்று சுருங்கிய வட்டத்தைக் கொண்டதல்ல. இது வாழும் மொழியான அரபு மொழியில் அருளப்பட்டது. ஏற்கனவே உள்ள வேத மொழிகள் செத்துவிட்டன. ஆனால், அரபு வாழும் மொழியாகும். இருப்பினும் இது அரபியர்களுக்குரிய வழிகாட்டியல்ல. அகிலத்தாருக்குரிய வழிகாட்டியாகும்.
ஏனைய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்கு, மூஸாவின் சமூகத்தாருக்கு, ஆதின் கூட்டத் தாருக்கு என்று இருக்கலாம். இது முஹம்மதின் சமூகத்திற்கு அருளப்பட்ட வேதம் இல்லை. முழு மனித சமூகத்திற்கும் அருளப்பட்ட வேதமாகும்.
அதேவேளை, முஹம்மத்(ஸல்) அவர்களது வாழ்க்கை காலத்துடன் முடிவு பெறுவதும் அல்ல. அது உலகம் உள்ள அளவு வாழும் மனிதர்களுக்கான வழிகாட்டி வேதமாகும். இந்த வகையில் அல்குர்ஆனின் வருகை என்பது சாதாரண சமாச்சாரம் அல்ல.
வழிகாட்டலின் முக்கியத்துவம்:
வழிகாட்டல் என்பது மனிதனுக்குப் பிரதானமான அம்சமாகும். இன்று பல இலட்சியங்களுடன் வாழும் மக்கள் உள்ளனர். இலட்சியங்களுக்காக உயிரையும் தியாகம் செய்யும் இயல்பும் இவர்களிடம் இருக்கின்றது. ஆனால், சரியான இலட்சியத்திற்கும் அந்த இலட்சியத்தை அடைவதற்கான சரியான அணுகுமுறைக்குமான வழி காட்டல்தான் இல்லாமலுள்ளது.

வறுமையில் வாடுபவனுக்குப் பொருள் தேட வழிகாட்டல் தேவை. பொருள் தேடியவனுக்கு அதனை முதலீடு செய்யவும் செலவழிக்கவும் வழிகாட்டல் தேவை. கற்கும் ஆர்வமும் அயராத முயற்சியுமுள்ள மாணவனுக்கு எதை, எப்படி கற்பது என்ற வழிகாட்டல் தேவை. கற்பிப்பதற்கு, உண்பதற்கு, உறங்குவதற்கு அனைத்துக்குமே வழிகாட்டல் அவசியமானதாகும்.
இவ்வகையில் அல்குர்ஆன் வழிகாட்டலாக அதுவும் அகில உலக மக்கள், முஸ்லிம், காபிர் என அனைவருக்குமான வழிகாட்டலாகத் திகழ்கின்றது.
ஏனைய வேதங்கள் போன்று இது குறிப்பிட்ட காலத்திற்கோ, இடத்திற்கோ, இனத்திற்கோ, மொழியினருக்கோ சுருங்கியதாக இல்லாத, பிரபஞ்சம் தழுவியதாக உலக அழிவுவரை தொடரக் கூடியதான முழு மனித சமூகத்திற்குமுரியதாக இருப்பதால் இந்த வேதம் அருளப்பட்ட மாதம் முக்கியத்துவம் பெறுகின்றது.
இன்று மனித குலம் நல்ல வழிகாட்டல் இல்லாது துடுப்பு இழந்த படகு போல் தத்தளிக்கின்றது. அறிஞர்களும், சிந்தனையாளர்களும் பல திட்டங்களை முன்வைக்கின்றனர். ஆனால், அவை மனிதனை அதள பாதாளத்தை நோக்கித் தள்ளி விடுபவையாகத் திகழ்கின்றன.
பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக ஆண் – பெண் சரிநிகர் சமமாக ஒன்றுபோல் பேச, பழக இடமளிக்க வேண்டும் என்றனர். பாலியல் பலாத்காரத்தை நீக்க பெண்கள் மூடிக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு திறந்த நிலைக்கு வரவேண்டும். அப்போது ஆண்கள் மத்தியில் இருக்கும் அறியும் ஆற்றல் குறைந்து பார்த்துப் பார்த்துப் பழகிப்பேய்விடும் என்றனர். இந்தக் கொள்கைளெல்லாம் ஐரோப்பிய உலகில் பாலியல் பலாத்காரத்தை வளர்க்கவே வகை செய்தது.
அதிகமாகக் குழந்தைகள் பெற்றுக் கொள்ளக் கூடாது என்றனர். சீனாவில் வீட்டுக்கு ஒரு பிள்ளைத் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனால் பெண் சிசுக்கள் அழிக்கப்பட்டன. இன்று சீனா பாரிய பெண்கள் பற்றாக்குறையையும் குடிமக்களிடம் தனித்து வாழ்ந்ததால் சகோதர பாசமோ குடும்ப பாசமோ அற்றுப்போய் குற்றச் செயல்களின் எண்ணிக்கை எகிறிக் குதித்துக் கொண்டிருக்கின்றன.
உலகம் நிம்மதியாக வாழ்வதற்கு அரசியல், ஒழுக்கவியல், பொருளியல், ஆன்மீகம் அனைத் துக்கும் நல்ல வழிகாட்டலை வேண்டி நின்கின்றது. அகில உலகம் நிம்மதியாக வாழத்தக்க வழிமுறையாக குர்ஆன் திகழ்கின்றது என்பது மகத்தான விடயமே. குர்ஆனுடன் சாதாரண பரிச்சயம் இருந்தாலே முட்டிவிட்டுக் குனியும் இந்த முட்டாள் தனமான போக்கிலிருந்து தப்பிக் கொள்ளலாம்.
யாருக்கு வழிகாட்டும்?:
அல்குர்ஆன் அனைத்து மக்களுக்குமான வழிகாட்டல்தான். காஃபிரான அரசு ஒன்று குர்ஆனின் சட்டப் பிரகாரம் ஆட்சி செய்தாலும் கூட அதன் பிரதிபலனான அமைதி, நீதி, நியாயம், அச்சமற்ற வாழ்வு போன்ற அருட்களை அனுபவிக்க முடியும். அந்த வகையில் இது அனைவருக்குமான வழி காட்டல்தான். எனினும் அல்குர்ஆனிலிருந்து நேர்வழியைப் பெற்று சீர்வழியில் வாழும் பாக்கியம் கிடைக்க இறையச்ச சிந்தனை அவசியமாகும்.

“இது (அல்லாஹ்வின்) திரு வேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பய பக்தி யுடையோருக்கு (இது) நேர்வழி காட்டியாகும்.” (அல்குர்ஆன் 02:02)
இங்கு பயபக்தியுடையோருக்கே இது நேர்வழியைக் காட்டும் என்று கூறப்படுகின்றது. இதனை முரண்பாடாக நாம் கொள்ளக் கூடாது. நாம் ஒரு பொருளைப் பார்க்க வேண்டுமென்றால் நமது கண்ணிலும் ஒளி இருக்க வேண்டும். பார்க்கும் பொருளிலும் ஒளி இருக்க வேண்டும். நன்றாகப் பார்வை உள்ள ஒருவர் இருளில் உள்ள பொருளைப் பார்க்க முடியாது. ஏனெனில், அங்கு பொருளில் ஒளி இல்லை. கண்பார்வை இழந்தவர் வெளிச்சத்தில் உள்ளதையும் பார்க்க முடியாது. ஏனெனில், அவரது கண்ணில் ஒளி இருக்காது. கண் பார்வை இழந்தவருக்கு அது இருளாகத்தான் தெரியும். இது சூரியனின் குறைபாடல்ல.
அல்குர்ஆன் சூரியனைப் போன்று ஒளியுடன் திகழ்கின்றது. தக்வா எனும் இறை யச்சம் பார்வையற்றவருக்கு அது வழிகாட்டாது என்பது குர்ஆனின் குறைபாடல்ல. அதைப் பார்ப்போரின் குறைபாடாகும்.
ஆனால், ஒரு முஸ்லிமைப் பொருத்தவரை குர்ஆனை ஓதும்போதே தனக்கு நேர்வழி கிடைப்பதற்காக ஷைத்தானை விட்டும் பாதுகாவல் தேடி தூய எண்ணத்துடன் ஓத வேண்டும். ஹிதாயத்தை அல்லாஹ்விடம் வேண்ட வேண்டும். முஸ்லிம் அல்லாதவர் கூட சத்தியத்தைத் தேடும் நோக்கத்தில் குர்ஆனை அணுகினால் அவர் நிச்சயம் அதை அங்கே அடைந்துகொள்வார்.
தெளிவான சான்றுகள்:
இந்த மறை வசனம் தொடர்ந்து ரமழானைப் பற்றி கூறாமல் குர்ஆன் பற்றியே குறிப்பாகப் பேசுகின்றது. அதில் ரமழானில் அருளப்பட்ட அல் குர்ஆன் எனும் மனிதகுல வழிகாட்டி தெளிவான சான்றுகளைக் கொண்டது என்று வர்ணிக்கப்படுகின்றது.
குர்ஆன் வெறும் இறைவேதம் அல்ல. அது இறைவேதம் என்பதற்கு விஞ்ஞான ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் அதிலேயே தெளிவான சான்றுகள் இருக்கின்றன என்று கூறப்படுகின்றது. 1500 வருடங்களுக்கு முன்னர் மனித கற்பனையில் கூட உதித்திருக்க முடியாத அறிவியல் உண்மைகளைக் குர்ஆன் தன்னகத்தே கொண்டுள்ளது. தொள்பொருள் ஆய்வுகள் இன்று உறுதிப்படுத்தும் எத்தனையோ வரலாற்றுச் சான்றுகளை அது தருகின்றது. இவ்வகையில் அது தெளிவான சான்றுகளைத் தன்னகத்தே கொண்டது.

பிரித்தறிவிப்பது:
அடுத்து இந்த வேதம் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவிக்கக் கூடியது. ஏனைய மதங்கள் போல் ஒரு கொள்கையை மட்டும் முன்வைத்துவிட்டு இது மௌனியாக இருக்காது. இறைவன் ஒருவன் என்று கூறுவதோடு ஈஸாவோ, வேறு இறைத் தூதர்களோ, மலக்குகளோ இறைமையைப் பெறமுடியாது என்று தெளிவாக அளந்து கூறும்.

நல்லோர்களின் அந்தஸ்த்தைக் கூறும் போதும் நடுநிலை தவறாது அவர்கள் மனித தன்மைக்கு மேல் உயர்த்தப்படமாட்டார். இவ்வாறு எல்லா வகையிலும் சத்தியமும் அசத்தியமும் அல்குர்ஆனால் தெளிவாகக் கூறுபோட்டுக் காட்டப்படும்.
இதனால்தான் படித்தவர்களெல்லாம் கல்லையும், மண்ணையும் வணங்கிக் கொண் டிருக்கும் போது சாதாரண ஒரு முஸ்லிம் கல்லைக் கல்லாகவும், மண்ணை மண்ணாகவும் பார்க்கின்றார். மண்ணால் செய்த சிலை எந்த சக்தி யையும் பெற்றிடாது; வழங்கிடாது என்று அதனைப் பிரித்து அறிந்து கொள்கின்றார். மாட்டை மாதா வாகப் பார்க்காது மாடாகப் பார்க்கின்றான். மனிதனை அவதாரமாகப் பார்க்காது மனிதப் பிறவியாகவே பார்க்கின்றான்.
நோன்பு பிடியுங்கள்:
இத்தகைய அருள் பொதிந்த அல்குர்ஆன் அருளப்பட்ட ரமழான் மாதத்தை எவர் அடை கின்றாரோ அவர் அல்லாஹ் அருள்மறையை வழங்கியதற்கு நன்றி செலுத்து முகமாக அம்மாதம் முழுவதும் நோன்பிருக்கட்டும் என்று இம்மறை வசனம் கூறுகின்றது.

நோன்பு முடிந்ததும் நாம் பெருநாள் தினத்தைக் கொண்டாடுகின்றோம். அந்நாளில் அல்லாஹ்வுக்காக தக்பீர் செய்து எமது மகிழ்ச் சியை வெளிப்படுத்துகின்றோம். இது கூட அல்குர்ஆன் அருளப்பட்டதற்கான நன்றிக்காகவே என்பதை அனேகர் அறிவதில்லை. இந்த வசனத்தின் இறுதிப் பகுதியில்,
“உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதையுமே (இதன் மூலம் அல்லாஹ் நாடுகின்றான்)” (2:185)
எனவே, ரமழான் என்றாலும் நோன்பு என்றாலும் அல்குர்ஆனின் மகத்துவத்தை உணர்த்துபவை என்ற உண்மையை நாம் உணர்ந்து கொண்டு அல்குர்ஆனுக்கு உரிய உயரிய அந்தஸ்தினை வழங்க முன்வர வேண்டும்.
நோன்பு தக்வாவுக்கான வழி:
நோன்பு ஏன் நோற்கப்பட வேண்டும் என்பதுபற்றித் திருமறை கூறும்போது,

“ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப் பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.” (2:183)
என்று கூறுகின்றது. நோன்பின் நோக்கம் இறையச்சமே என்று மேற்படி வசனம் கூறுகின்றது.
நோன்பு என்பது வெறுமனே பட்டினி கிடப்பதல்ல. அல்லாஹ்வின் கட்டளைக்காகக் குறித்த நேரம் உணவையும், பானத்தையும் உடலுறவையும் தவிர்த்து வைத்து அல்லாஹ் கட்டளையிட்டால் நான் எதையும் செய்வேன். உணவையும் தவிர்ப்பேன், உடல் உறவையும் தவிர்ப்பேன் என்று உறுதியெடுக்கும் பயிற்சியே நோன்பாகும்.
இந்தப் பயிற்சி அல்லாஹ் ஏவியவைகளை எடுத்து நடக்கவும் தடுத்தவைகளைத் தவிர்த்துக் கொள்வதற்குமான பக்குவத்தை வளர்க்கும்.
பொறுமையை, நல்ல பண்பாட்டை வீணான காரியங்களில் ஈடுபடாத பக்குவத்தை நோன்பு வழங்க வேண்டும் என்பது நோன்பின் எதிர்பார்ப்பாகும்.
நோன்பும் குர்ஆனும்:
ஹதீஸ்கள் நோன்பையும், குர்ஆனையும் பல கட்டங்களில் இனைத்துப் பேசுகின்றன. நோன்பும் குர்ஆனும் மறுமையில் அவற்றைப் பேணிய அடியார்களுக்காகப் பரிந்து பேசும் என ஹதீஸ்கள் கூறுகின்றன. குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் தான் நோன்பும் கடமையாக்கப் பட்டுள்ளது.

இதேவேளை, ஆரம்பத்தில் அல்குர்ஆன் தக்வாவுடையவருக்குத்தான் நேர்வழியாக அமையும் என்பதை அவதானித்தோம். இங்கே நோன்பு, தக்வா உணர்வு ஏற்படுவதைத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதைக் கண்டோம்.
நோன்பின் நோக்கத்தைச் சரியாக அடையக்கூடிய வகையில் கட்டுப்பாடாக நோன்பு நோற்கப்பட்டால் அவர் தக்வாவைப் பெறலாம். தக்வாவைப் பெற்றால் அல்குர்ஆன் அவருக்கு நேர்வழியைக் காட்டும். அந்த நேர்வழியை அல்லாஹ் வழங்கியதற்காகத்தான் பெருநாளில் தக்பீர் கூறுகின்றோம்.
சிந்திக்க வேண்டியது:
சிலர் நோன்பு காலத்தில் குர்ஆனை ஓதுவர். அத்துடன் அதை மூடிவைத்து விடுவர். தக்வாவுடையவருக்கு குர்ஆன் நேர்வழி காட்டும் என்றால் அவர் அதில் நேர்வழியைத் தேட வேண்டும். குர்ஆனை ஓதாமல் அது என்ன கூறுகின்றது என்பதை அறியவோ, ஆராயவோ முயலாமல் அல்லது அறிந்தவர் கூறுவதைக் கேட்காமல் இருந்துவிட்டு குர்ஆன் நேர்வழி காட்டும் எனக் கருதமுடியாது. எனவே, தக்வாவுடைய உணர்வுடன் சத்தியத் தாகத்துடன் அல்குர்ஆனை உங்கள் கரங்களில் ஏந்துங்கள். உள்ளங்களில் ஒளியைப் பெறுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.