ரமழானிய்யத்

ரமழான் தக்வாவின் மாதமாகும். அது அல்குர்ஆனின் மாதமாகும், ஸதகாவின் மாதமாகும், பொறுமையின் மாதமாகும் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகின் வாயில்கள் மூடப்பட்டு ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் மாதமாகும்.

அருள் வளம் பொருந்திய இம்மாதத்தில் நாம் நோன்பு நோற்கின்றோம் கியாமுல் லைல் தொழுகின்றோம். ஸகாதுல் பித்ர் கொடுக்கின்றோம் இவ்வாறு பல்வேறுபட்ட நல்லறங்களில் ஈடுபடுகின்றோம். இத்தகைய நல்லறங்களில் ஈடுபடுகின்ற போது பல்வேறு பட்ட சந்தேகங்களும் கேள்விகளும் பொதுவாக எழுகின்றன. அவற்றுள் சிலவற்றுக்கான விளக்கங்களை இவ்வாக் கத்தின் மூலம் தர முயல்கின்றோம்.

பிறையில் பிரியும் சமூகம்:

பிறையைக் கண்டு நோன்பு பிடியுங்கள், பிறையைக் கண்டு நோன்பை விடுங்கள் என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள். பிறையைக் காண்பதன் மூலமே ரமழான் பிறக்கின்றது! ஷவ்வால் பிறை தென்படுவதன் மூலமே ரமழான் முடிகின்றது. பிறை தென்படாவிட்டால் மாதத்தை முப்பதாகத் தீர்மானிக்க வேண்டும். இதுவே நபி(ச) அவர்களின் போதனையாகும்.

நவீன விஞ்ஞான வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளதால் பிறை உதிப்பதை விஞ்ஞானக் கருவிகளினூடாக கணிப்பிட்டு நோன்பைத் தீர்மானிக்கலாம் என சிலர் கருதுகின்றனர். பிறை தோன்றினால் நோன்பு பிடியுங்கள் என நபி(ச) அவர்கள் கூறவில்லை. பிறையைக் கண்டால் நோன்பு பிடியுங்கள் என்றுதான் கூறியுள்ளார்களே தவிர பிறை தோன்றினால் ரமழானை ஆரம்பியுங்கள் என்று கூறவில்லை. எனவே, இக்கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

பிறையைக் கண்டு பிடியுங்கள், கண்டு விடுங்கள் என்று நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு உலகில் எங்கு பிறை காணப்பட்டாலும் நோன்பு வைக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். ஒவ்வொரு நாட்டவரும் தத்தமது பகுதியில் காணப்படும் பிறையின் அடிப்படையிலேயே நோன்பை நோற்க வேண்டும், விட வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். இந்த ஹதீஸை இரண்டு மாதிரியும் எடுத்துக் கொள்ள வழியிருந்தாலும் நபி(ச) அவர்களோ அல்லது கலீபாக்களோ இன்டர்னெஷனல் பிறையின் அடிப்படையில் பெருநாள் கொண்டாடிய தில்லை. அவ்வப்பகுதியில் காணப்படும் பிறையின் அடிப்படையிலேயே செயற் பட்டுள்ளனர்.

இஜ்திஹாதுடைய விடயத்தில் தனது கருத்தை விட்டுக் கொடுத்துச் செயற்படுவது ஆகுமானதாகும். இவ்வாறே இஜ்திஹாதுடைய மஸ்அலாக்களில் மாற்றுக் கருத்தை எதிர்த்தல் என்பது இல்லை. எனவே, குறித்த அந்த ஹதீஸில் இருந்து, தான் புரிந்து கொண்ட விளக்கத்தின் அடிப்படையில் செயற் படுவதற்காக மக்கள் மத்தியில் ஒரு பிளவை ஏற்படுத்த வேண்டியதில்லை.

அடுத்து, நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் என்பன ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டிய பொது விடயங்களாகும். இந்த அடிப்படையில் எமது நாட்டில் உள்நாட்டுப் பிறையின் அடிப்படையில் மக்கள் செயற்பட்டு வருவதால், அப்படியே நபி(ச) அவர்களும் செயற்பட்டு வந்துள்ளதால் சர்வதேசப் பிறை என்ற நிலைப்பாட்டில் உள்ள சகோதரர்கள் தமது நிலைப்பாட்டை மார்க்கத்தினதும், சமூகத்தினதும் நலனைக் கருத்திற் கொண்டு மார்க்கமும் இது விடயத்தில் விசாலப் போக்கை அனுமதித்துள்ளதால் விட்டுக் கொடுத்துச் செல்வது சிறந்ததாகும்.

நோன்பும் நிய்யத்தும்:

நோன்புக்கு மட்டுமன்றி எல்லா அமல்களுக்கும் நிய்யத் முக்கியமானதாகும். நிய்யத் என்றால் குறித்த அமலை அல்லாஹ் வுக்காக செய்கின்றேன் என்று உள்ளத்தில் எண்ணுவதாகும். நிய்யத் என்பது உள்ளத்துடன் சம்பந்தப்பட்ட அமலாகும். அதற்கும் வாயால் மொழிவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நோன்புக்கான நிய்யத்தைப் பொருத்த வரையில் பர்ழான நோன்பு நோற்கும் ஒருவர் சுபஹுடைய நேரத்திற்கு முன்னரே நோன்பு நோற்பதாக உறுதி கொள்ள வேண்டும்.

‘யார் பஜ்ருக்கு முன்னர் நோன்பு நோற்பதாக உறுதி கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பே இல்லை’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள். (தாரமி: 1845, அபூதாவூத்: 2454, நஸாஈ:2333)

    இது பர்ழான நோன்புக்கான சட்டமாகும். நபி(ச) அவர்கள் சுபஹ் தொழுதுவிட்டு வீட்டுக்கு வந்து உண்ண ஏதும் உண்டா என்று கேட்பார்கள். இருந்தால் உண்பார்கள். இல்லாவிட்டால் நோன்பு நோற்பார்கள் என நபிமொழிகள் கூறுகின்றன. எனவே, ஸுன்னத்தான நோன்புக்கு சுபஹுக்கு முன்னரே ‘நிய்யத்’ இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

ரமழான் முழுவதும் நோன்பு நோற்கும் எண்ணத்தில் ஒருவர் இருக்கிறார். இடையில் ஒருநாள் சுபஹுடைய அதானுக்குப் பின்னர்தான் உறக்கத்திலிருந்து விழிக்கின்றார். இவர் தொடராக நோன்பு நோற்கும் எண்ணத்தில் இருந்ததால் இவரது நோன்பு ஏற்றுக் கொள்ளப்படும்.

ஆனால், ரமழான் முழுவதும் நோன்பு நோற்கும் எண்ணத்தில் இருந்த ஒருவர் இடையில் பயணம் அல்லது நோய் காரணமாக நோன்பை விடுகின்றார். இவர் திரும்பவும் நிய்யத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாமல் உறங்கி காலையில் எழுந்தால் அவர் நிய்யத்துச் செய்தவராக மாட்டார்.

இன்று நோன்பு நிய்யத் என்ற பெயரில் நோட்டீஸ்கள் விநியோகிக்கப்படுகின்றன. வானொலியிலும், கியாமுல் லைல் தொழுகையின் பின்னரும் ‘நவைத்து ஸவ்மகதின்…..’ என்ற நிய்யத் சொல்லிக் கொடுக்கப்படுகின்றது. இது தவறாகும். நிய்யத்தை வாயால் மொழிவது பித்அத்தாகும். நோன்பின் இந்த நிய்யத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அத்துடன் இந்த துஆ பிழையானதாக அமைந்துள்ளது, பிழையான முறையிலும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றது. தினமும் ஸஹரில் எழுந்து உணவு உண்டுவிட்டு நாளைப் பிடிக்க நிய்யத்துச் செய்கின்றேன் என்று தமிழில் சொல்லும் போதே இது பிழையானது என்பது இவர்களுக்குப் புரியாமல் இருப்பது புதிராகவே இருக்கின்றது.

முதல் நாளில்….:

ரமழான் மாதம் முதல் நாள் அன்றைய தினம் நோன்பு என்று தெரியாமல் உறங்கிய ஒருவர் விழிக்கிறார். காலையில் நோன்பு என்பது தெரியாததால் இவர் நிய்யத்து வைக்கவும் இல்லைÉ பஜ்ருக்கு முன்னர் விழிக்கவும் இல்லை. இவரின் நிலை என்ன? என்ன செய்யலாம்?

இந்த நிலையில் எழும்புபவர் அன்று ரமழான் என்பது தெரிந்ததிலிருந்து உண்ணாமல், பருகாமல் இருக்க வேண்டும். அதே வேளை இந்த நோன்பைக் கழாச் செய்யவும் வேண்டும். ஏனெனில், நோன்பின் ஷர்த் ஒன்று விடுபட்டுள்ளது.

மறதியாக உண்ணல், பருகல்:

நோன்பு நோற்றவர் மறதியாக உண்டால், பருகினால் அவரது நிலை என்ன என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு.

மறதி என்பது மனித பலவீனங்களில் ஒன்றாகும். அல்லாஹ் மறதிக்கு மன்னிப்பளிக்கின்றான்.

‘ஒரு நோன்பாளி மறதியாக உண்டால் அல்லது பருகினால் அவர் தனது நோன்பைப் பூர்த்தியாக்கட்டும். அல்லாஹ்வே அவருக்கு உணவளித்தான், நீர் புகட்டினான்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 6669, இப்னுமாஜா: 1673)

நோன்பாளி பல் துலக்குதல்?:

நோன்பாளி பல் துலக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.

நோன்பாளி பகல் நேரத்தில் பல் துலக்கக் கூடாது என்ற கருத்து தவறானதாகும். பொதுவாக இஸ்லாம் அடிக்கடி பல் துலக்குவதை வரவேற்கின்றது. குறிப்பாக ஒவ்வொரு தொழுகைக்காகவும் பல் துலக்குவது கட்டாய ஸுன்னத்துக்களில் ஒன்றாகும். எனவே, நோன்போடு இருக்கும் போது பல் துலக்குவதில் எந்த தடையும் இல்லை.

நோன்பும் மருத்துவமும்:

    நோன்பாளி சில மருந்துகளைப் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்குள்ளது.

குறிப்பாக ஆஸ்துமா, பீனிஸ வருத்தம் உள்ளவர்கள் சுவாசிப்பதை இலகு படுத்துவதற்காக இன்ஹேலர் போன்றவற்றைப் பயன்படுத்துவர். நோன்பு இருக்கும் போது வீசிங் பிரச்சினை ஏற்பட்டால் இதைப் பயன்படுத்தலாமா என்றால் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறே ஆவி பிடிப்பதாக இருந்தாலும் பிடிக்கலாம். பெக்லேட் போன்ற டெப்லட் துகல்களைப் பொருத்த வரையில் தவிர்ப்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகும். ஏனெனில், மருந்து துகல்கள் வாய்வழியே உள்ளே செல்கின்றது. எனவே, இதைத் தவிர்ப்பதே நல்லது.

இவ்வாறே ஊசி மூலம் மருந்து ஏற்றுவதிலும் தப்பில்லை. சேலைன் ஏற்றுவதைப் பொருத்தமட்டில் சேலைன் வழியாக உணவும் ஊட்டப்படுவதுண்டு. சேலைன் மூலமாக மனித உடலுக்குத் தேவையான சத்தும் ஊட்டப்படுகின்றது. எனவே, ஊசி மூலம் மருந்து ஏற்றுவதில் பிரச்சினை இல்லை. சேலைன் என்பது உணவிற்குப் பகரமாகவும் பயன்படுத்தப் படுவதால் அதைத் தவிர்ப்பதே நல்லதாகும். அத்துடன், சேலைன் ஏற்றும் அளவிற்கு நோயாளியாக இருந்தால் அவர் சந்தேகத்துடன் செயற்படுவதை விட நோன்பை விட்டுவிடலாம்.

நோன்பு காலத்தில் மாதத்தீட்டைத் தள்ளிப் போடுவதற்காக மருந்துகளைப் பயன்படுத்த முடியுமா என்ற சந்தேகம் அநேக பெண்களுக்கு ஏற்படுவதுண்டு. நோன்பு காலத்தில் அமல் செய்வதிலுள்ள ஆர்வம், குடும்பத்துடன் நோன்பு நோற்பதில் உள்ள இலகு, பின்னர் நோன்பைக் கழாச் செய்வதில் உள்ள சிரமம் போன்ற காரணங்களால் மாதத்தீட்டை தள்ளிப் போடுவதற்கு மாத்திரைகளைப் பயன்படுத்த விரும்புகின்றனர்.

பொதுவாக மாதத்தீட்டு என்பது அல்லாஹ் பெண்களுக்கு ஏற்படுத்திய இயற்கை நிகழ்வாகும். இயற்கையுடன் இணைந்து செல்வதே சிறந்ததாகும். விடுபடும் நோன்புகளைக் கழாச் செய்து கொள்ள முடியும். இதுவே சிறந்த வழிமுறையுமாகும்.

இதற்கு மாற்றமாக மாத்திரைகளைப் பயன்படுத்துவதாக இருந்தால் அதனால் எந்தப் பக்கவிளைவுகளும் இல்லை என்பது மருத்துவ ரீதியில் உறுதி செய்யப்பட வேண்டும். வேறு உபாதைகள் அதனால் ஏற்படும் என்றால் இஸ்லாம் அதை அனுமதிக்காததுடன் தடுக்கவும் செய்கின்றது.
ஹஜ்ஜுடைய காலங்களில் பெண்களின் மாதத்தீட்டைத் தடுக்கும் விதத்தில் சில செடிகளின் சாறுகளை ஸலபுகள் கொடுப்பார் கள் என்ற செய்தியின் அடிப்படையில் நோன்புக்கும் இப்படி மாதத்தீட்டைத் தள்ளிப் போடலாம் என சில அறிஞர்கள் குறிப்பிட் டுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழலாமா?:

நீண்ட நேரம் குர்ஆன் ஓதித் தொழுவதற்காக குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு.

அதிகம் மனப்பாடம் இல்லாதவர்கள் குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழுவதற்கு எந்தத் தடையும் இல்லை. நபி(ச) அவர்கள் சிறு குழந்தையைச் சுமந்து கொண்டு தொழுகை நடாத்தியுள்ளார்கள். ஆயிஷh(ரழி) அவர்களின் அடிமை ஒருவர் குர்ஆனைப் பார்த்து ஓதி அன்னையவர்களுக்கு இமாமத் செய்துள்ளார்கள். (புஹாரி)

    எனவே, குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழுவதற்குத் தடை இல்லை. இருப்பினும் முன்னால் பெரிய முஸ்ஹபை வைத்து அதைப் பார்த்துத் தொழ முடியுமாக இருந்தால் தக்பீரைப் பேணுவதில் குழப்பம் இருக்காது. கையில் குர்ஆனை வைத்து அதைப் பார்ப்பதிலும், தாள்களைப் புரட்டுவதிலும் கவனம் சிதறுவதை விட மனனமான சூறாக்களை ஓதித் தொழுவது சிறந்ததாகும்.

இரவு தாமதித்து பள்ளிக்கு வரும் போது இமாம் தராவீஹ் தொழுவித்துக் கொண்டிருக்கின்றார். அவரைப் பின்பற்றி நாம் இஷா தொழுகையைத் தொழலாமா?

இரவு தாமதித்து பள்ளிக்கு வரும் போது இமாம் தராவீஹ் தொழுவித்துக் கொண்டிருக்கின்றார். அவரைப் பின்பற்றி நாம் இஷh தொழுகையைத் தொழலாமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு.

இது போன்ற சந்தர்ப்பங்களில் தனியாகத் தொழாமல் அல்லது வேறு ஜமாஅத் நடாத்தாமல் தராவீஹ் தொழுவிக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதே சிறந்ததாகும். இமாமினதும், மஃமூமினதும் நிய்யத்து ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சுருக்கித் தொழும் இமாமைப் பின்பற்றி பூரணமாகத் தொழுபவர்கள் தொழுகின்றனர். இங்கு இமாமின் நிய்யத்தும் மஃமூமின் நிய்யத்தும் முரண்படுகின்றனவே! இதில் பிரச்சினை இல்லை.

முஆத்(வ) அவர்கள் நபி(ச) அவர்களுக்குப் பின்னால் நின்று இஷhவைத் தொழுதுவிட்டு பின்னர் தனது பகுதிக்குச் சென்று அதே தொழுகையை மக்களுக்குத் தொழுவிப்பார்கள். (புஹாரி, முஸ்லிம்) இதை நபி(ச) அவர்கள் தடுக்கவில்லை.

முஆத்(வ) அவர்கள் முதலில் தொழுத இஷh கடமையாகவும் பின்னர் தொழுதது ஸுன்னத்தாகவும் கொள்ளப்படும். அவரைப் பின்பற்றி அவரது பகுதி மக்கள் தொழுதுள்ளனர். அதை நபி(ச) அவர்கள் தடுக்கவில்லை. எனவே, தராவீஹ் தொழுவிக்கும் இமாமைப் பின்பற்றி இஷhவைத் தொழுவது ஆகுமானதாகும்.

பெண்கள் பள்ளிக்குச் செல்லலாமா?:

ரமழான் காலங்களில் பெண்கள் மஸ்ஜிதுக்குச் செல்கின்றனர். பெண்கள் மஸ்ஜிதுக்குச் சென்று தொழுவது ஆகுமானதா? என்ற ஐயம் பலருக்கும் எழலாம்.

பொதுவாக ரமழான் காலத்திலும் சரி, ஏனைய காலங்களில் ஐவேளைத் தொழுகைக்கும் சரி பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதி உள்ளது. ஆனால், பெண்கள் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவதே சிறந்ததாகும்.

நபி(ச) அவர்களது காலத்தில் பெண்கள் ஐவேளைத் தொழுகைக்கும் பள்ளிக்குச் சென்றுள்ளனர். நபி(ச) அவர்கள் பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்கவும் இல்லை, ஆர்வமூட்டவும் இல்லை. அவர்கள் பள்ளிக்கு வருவதாயின் பேண வேண்டிய ஒழுங்குகளைப் போதித்தார்கள்.

பெண்கள் பள்ளிக்குச் செல்வதாக இருந்தால் கணவனின் அனுமதி பெற வேண்டும். பெண்கள் அனுமதி கேட்டால் கணவன் தடுக்கக் கூடாது என்று நபி(ச) அவர்கள் கூறினார்கள்.

‘பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள். அவர்களின் வீடுகளே அவர்களுக்குச் சிறந்ததாகும்’ என்று நபி(ச) அவர்கள் கூறினார்கள்.  (அஹ்மத், அபூதாவூத்)

‘பெண்கள் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள். அவர்கள் வாசனை பூசாமல் பள்ளிக்குச் செல்லட்டும்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், அபூதாவூத்)

‘உங்களில் ஒருவர் பள்ளிக்குச் செல்வதாயின் வாசனையைத் தொடாதீர்கள்.’ (முஸ்லிம்) என நபி(ச) அவர்கள் பெண்களுக்குக் கூறினார்கள்.

    எனவே, பெண்கள் பள்ளிக்குச் செல்வதென்றால் ஆடை மற்றும் வீதி ஒழுங்குகளை முறையாகக் கடைப்பிடித்து பேணிக் கொள்வதுடன் வீண் அலங்காரம் இல்லாமல், ஆடைகளில் மணம் பூசாமல், ஆண்-பெண் கலப்பு இல்லாத முறையில் பள்ளிக்குச் சென்று வருவதில் தப்பில்லை.

சிலர் பெண்கள் பள்ளிக்குச் செல்லவே கூடாது என்று கருதுகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.

பெருநாள் வாழ்த்துக் கூறலாமா?

பெருநாள் வாழ்த்துக் கூறலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது. பொதுவாக ஈத் முபாரக் என்ற வார்த்தையைப் பிரயோகித்தே பலரும் வாழ்த்துக் கூறுகின்றனர். பலரும் ஒரே வார்த்தையைக் கூறும் போது இந்த வார்த்தையைக் கூறி வாழ்த்துச் சொல்வது இபாதத் என்ற எண்ணம் ஏற்படுவதால் இது பித்அத் ஆகும் என சிலர் கருதுகின்றனர்.

சந்தோசமான நேரங்களில் வாழ்த்துக் கூறுதல் என்பது பொதுவாக மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட அம்சமாகும்.

தபூக் போரில் பின்தங்கிய கஃப் இப்னு மாலிக்(வ) அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்கிய போது நபித்தோழர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறியுள்ளனர். (புஹாரி: 4418)

    எனவே, மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் வாழ்த்துக் கூறுதல் என்பது மார்க்கத்தில் உள்ள ஓர் அம்சமாகும்.

பெருநாள் தினத்தில் வாழ்த்துக் கூறும் பழக்கமும் காலா காலமாக இருந்து வந்துள்ளது.

முஹம்மத் இப்னு ஸியாத்(ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.’ நான் அபூ உமாமதுல் பாஹிலீ மற்றும் சில நபித்தோழர்களுடன் இருந்தேன். அவர்கள் பெருநாள் திடலில் இருந்து வந்தால் ஒருவர் மற்றவருக்கு ‘தகப்பல்லாஹு மின்னா வமின்கும்’ என்று கூறுவார்கள். என்று குறிப்பிடுகின்றார்கள். இதன் அறிவிப்பாளர் தொடர் ‘ஜையி’ நல்லது என இமாம் அஹ்மத் குறிப்பிடுகின்றார்கள். அல்பானி அவர்களும் மற்றுமொரு வாழ்த்துக் கூறும் செய்தியை உறுதிப்படுத்த இந்த செய்தியை ஆதாரமாகக் காட்டியுள்ளார்கள்.’ (தமாமுல் மின்னா: 1ஃ355)

பெருநாள் தினத்தில் ஒருவர் மற்றவரைப் பார்த்து ‘தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்’ என்று கூறுவதில் பிரச்சினையில்லை என இமாம் அஹ்மத் அவர்கள் குறிப்பிட்டதாக இமாம் இப்னு குதாமா(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (முக்னீ: 2ஃ295)

    இமாம் மாலிக்(ரஹ்) அவர்களிடம் இப்படி வாழ்த்துக் கூறுதல் பற்றிக் கேட்ட போது நான் அதை அறியவும் மாட்டேன், அதை மறுக்கவும் மாட்டேன் என்று பதில் கூறினார்கள். இது குறித்து இப்னு ஹபீப் அல் மாலிகி அவர்கள் விளக்கம் கூறும் போது நான் அறியமாட்டேன் என்றால் அது ஸுன்னா என அறியவில்லை. அதைச் சொல்பவரை நான் எதிர்க்கவும் மாட்டேன். ஏனென்றால், அது ஒரு நல்ல வார்த்தை. அத்துடன் அது துஆவாகவும் அமைந்துள்ளது என்பதனாலாகும் என்று கூறுகின்றார்கள்.

எனவே, பெருநாள் தினத்தில் ‘ஈத் முபாரக்’ என்ற வாழ்த்துக் கூறலாம். வாழ்த்துக் கூறும் போது இந்த வார்த்தையைத்தான் கூற வேண்டும் என்ற அவசியமில்லை. இந்த வார்த்தையைக் கூறி வாழ்த்துச் சொல்வதில் தப்பும் இல்லை.

மக்கள் இந்த வார்த்தையைக் கூறித்தான் வாழ்த்துக் கூற வேண்டும் என நினைத்துக் கொண்டுள்ளனர். எனவே, இந்த வார்த்தையைக் கூறி வாழ்த்துச் சொல்வது பித்அத்தாகும் என சிலர் வாதிடுகின்றனர். இது தவறான வாதமாகும். இப்படி வாதிடுபவர்கள், தொப்பி அணிகின்றனர். தொப்பி அணிவது மார்க்க விதி என்று மக்கள் நினைக்கின்றனர். சிலர் அதை வலியுறுத்துகின்றனர். இப்படி இருக்கும் போது தொப்பி போடுவது மார்க்கம் என மக்கள் நினைக்கின்றனர். எனவே, தொப்பி போடுவது பித்அத் என அவர்கள் கூறவில்லை. இது அவர்களின் வாதத்திற்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள முரண்பாட்டையே எடுத்துக் காட்டுகின்றது. எனவே, இந்த வாதத்தை நாம் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை.

அல்லாஹு அஃலம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.