நல்லுறவை வளர்ப்பதையும் சமூக சீர்கேடுகளை ஒழிப்பதையும் இலக்காகக் கொள்வோம்.

    கடந்த சில வருடங்களாக நம் நாட்டின் முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடி நிலைகளைச் சந்தித்து வந்தனர். முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத, மதவாத கருத்துக்களாலும் செயற்பாடுகளாலும் மனம் சொந்து போயிருந்தனர். இனவாதப் பேய் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஆட்டம் போட்டதைப் பார்த்து ஆடிப்போயிருந்தனர். நாட்டில் எப்போது வேண்டுமானாலும் ஒரு வன்முறை உருவாக்கப்படலாம் என்ற அச்ச நிலை நீடித்தது. இதனால் சமூக நல்லிணக்க நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. பிற சமயத்தவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முஸ்லிம்களின் பொறுமைக்கும், துஆவுக்கும், அமைதியான அனுகுமுறைக்கும் அல்லாஹுதஆலா நல்ல முடிவைத் தந்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.

எல்லாம் முடிந்துவிட்டது என எமது பணிகள் முடக்கப்பட்டுவிடக் கூடாது. ஏற்கனவே இனவாதிகளால் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் ஏற்படுத்தப்பட்ட தப்பபிப்பிராயங்கள் களையப்பட வேண்டும். அடுத்த தேர்தலில் இனவாதமே சிலருக்கு முதலீடாகலாம்É மீண்டும் இனவாதக் கருத்துக்கள் கக்கப்படலாம். சிலரின் அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம் சமூகம் இரையாக்கப்படலாம். எனவே, மீண்டும் ஒரு இனவாத சக்தி வரும் வரை காத்திருக்காமல் களத்தில் பணியாற்ற வேண்டியுள்ளது.

இந்த வகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, மஜ்லிஸுஸ் சூறா, முஸ்லிம் அரசியல் தலைவர்கள், இலங்கையில் செயற்படும் ஜமாஅத்துக்கள், புத்திஜீவிகள் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன.

ஆளும் கட்சியிலும் இனவாத சிந்தனை உள்ளவர்கள் உள்ளனர். ஏற்பட்டுள்ள நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்த தெளிவை அரசியல் தலைவர்கள் இத்தகைய அரசியல் பிரமுகர்களுக்கு வழங்க வேண்டும்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மத குருக்களுடன் தொடர்புகளை வளர்த்து அவர்களுக்குத் தெளிவுகளை வழங்குவதுடன் இறுக்கமான உறவுகளைப் பேணுவதற்கான வழிவகைகளை முன்னெடுக்க வேண்டும்.

ஏற்கனவே சிந்தப்பட்ட இனவாதக் கருத்துக்கள், இப்போது ஏற்பட்டுள்ள நல்ல சூழ்நிலை என்பவற்றைச் சாதகமாகப் பயன்படுத்தி இஸ்லாமிய அமைப்புக்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தைப் பெரும்பான்மை மக்கள் மத்தியில் முன்வைக்கலாம். அவர்கள் ஹலால், ஹிஜாப், இஸ்லாமிய ஷரீஆ, குற்றவில் சட்டங்கள், இறைச்சிக்காக மாடுகளை அறுத்தல், இஸ்லாத்தில் பெண்கள் நிலைப்பாடு என பல விடயங்கள் குறித்தும் அறியும் ஆவலில் உள்ளனர். இவற்றைத் தெளிவுபடுத்தும் ஊனுகள், சிற்றேடுகள், நூற்கள், உரைகள், ஊடகக் கருத்தரங்குகள், தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள் போன்றவற்றை சிங்கள மொழி மூலமாக முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்கான கூட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவது பெரிதும் உகந்ததாக இருக்கலாம்.

குறித்த விவகாரங்கள் தொடர்பான விளக்கங்களை சமூக வலைத்தளங்களூடாக மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்வதற்காக வலைத்தள ஊடகவியலாளர் களைப் பயன்படுத்தலாம்.

நாட்டில் உள்ள பெரும்பான்மை சமூகப் பிரமுகர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், அரச அதிகாரிகள் என்பவர்களிடமும் மனமாற்றத்திற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும்.

முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு வந்தான் வருத்தான்கள். 100 – 150 வருடங்களுக்கு முன்னர் பிழைப்பு நடத்த வந்தவர்கள் என்ற தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன. முஸ்லிம் கல்விமான்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோர் இலங்கை முஸ்லிம்களின் உண்மை வரலாறு என்ன, அவர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கும் இறைமைக்கும், அரசியலுக்கும் ஆற்றிய பங்களிப்பு என்ன, மன்னர்கள் காலத்தில் மன்னர்களுக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் இடையில் இருந்த இறுக்கமான நெருக்கம் எத்தகையது, போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் காலத்தில் முஸ்லிம்கள் நாட்டுக்கு எப்படி விசுவாசமாக இருந்தார்கள் என்பன போன்ற அம்சங்களை ஆய்வு ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் தெளிவுபடுத்தும் முயற்சிகளைச் செய்யலாம்.

இந்த ஆய்வுகள் சிங்கள, ஆங்கில மொழிகளில் வெளிவந்து எதிர்காலத்தில் வரலாறு பற்றிப் பேசப்படும் போது அவை உஷhத்துணையாகப் பயன்படுத்தப்படும் நிலையை உருவாக்கலாம்.

இவ்வாறு ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. இன்னொரு பிரச்சினை வரும் வரை காத்திருக்காமல் அணை கட்டும் வேலையை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்கலாம். இந்த வகையில் இன நல்லுணர்வையும் நல்லுறவுகளையும் வளர்ப்பதற்கான பணி மிகமிக முதன்மையானதும் முதல் கட்டமாகவும் அமைய வேண்டும்.

அடுத்து, வெளி உறவை சீர் செய்யும் அதே நேரம் உள்வீட்டையும் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவி வரும் சீர்கேடுகள் கண்டறியப்பட்டு களையப்பட வேண்டும். சமூகப் பிரச்சினைகள் இனங்காணப்பட்டு அவற்றுக்கான தீர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் முஸ்லிம் சமூகம் என்னும் கட்டிடம் வெளித்தாக்கம் இல்லாமலேயே உள்ளாலேயே உடைந்து வீழ்ந்துவிடலாம்.
முஸ்லிம் சமூகத்தில் அதிகரித்து வரும் விவாகரத்துக்களுக்கான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும். அதற்கான வழிகாட்டல் சமூகத்திற்கு வழங்கப்படுவதுடன் குடும்ப வாழ்வினதும் கட்டமைப்பின் முக்கியத்துவம் உணர்த்தப்பட வேண்டும்.

இன்றைய சமூகத்தை சீரழித்து வரும் சினிமா, ஆபாசம், போதைவஸ்து பாவனை, சமூக அக்கறை இல்லாத போக்கு, இலட்சியமற்ற வாழ்;க்கை பற்றியெல்லாம் விழிப்புணர்வூட்டப்பட வேண்யுள்ளது.

முஸ்லிம் சிறார்களுக்கான வழிகாட்டல்கள், பயிற்சிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. பெற்றோர்கள், தாய்மார்களினது குடும்ப, சமூகப் பொறுப்புணர்வுகள் பற்றிய தெளிவு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.

வறுமையில் வாடும் முஸ்லிம் குடும்பங்கள் குறித்து கவனமெடுக்க வேண்டியுள்ளது. வறுமையின் கொடுமையால் விபச்சாரம், போதை வியாபாரம், மார்க்க மற்றும் சமூக விரோதச் செயல்கள் போன்ற மகா பாவச் செயற்பாடுகளின் பால் மக்கள் செல்லும் அபாயத்தைக் கண்டறிந்து அவற்றைக் களைய வேண்டியுள்ளது.

முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கல்வி விழிப்புணர்வின்மை குறித்து அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக ஆண்கள் மத்தியில் கற்கும் ஆர்வம் பெருமளவில் குன்றிக் குறைந்து வருகின்றது. உயர்தரம் முறையாகச் சித்தியடையாதவர்களுக்கும் கற்பதற்கு ஏராளமான தொழில்நுட்பத் துறைகள் உள்ளன. அவற்றின் பக்கம் மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட வேண்டும். வெளிநாட்டையும், முச்சக்கர வண்டியையும் (ஆட்டோ) நம்பிக் காலத்தை ஓட்டும் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்லாமிய இயக்கங்களுக்கு மத்தியில் பரஸ்பரம், புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு வளர்க்கப்பட வேண்டியுள்ளது. நேர்த்தியான ஒரு திட்டமிடலுடனும் ஒழுங்குடனும் செயற்படும் நிலை அமைப்புக்களுக்கிடையில் உருவாக வேண்டும்.

இவ்வாறு இன நல்லுறவைப் பலப்படுத்துவதற்கான முயற்சிகளும் சமூக சீர்கேடுகளை ஒழிப்பதற்கு சமூகத்தின் ஆன்மீக லௌஹீக முன்னேற்றத்தை வளர்ப்பதற்குமான பணிகள் ஒரே நேரத்தில் முழு மூச்சாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.

வட்டி, வரதட்சனை, பொருளாதார மோசடிகள், இலஞ்சம் மற்றும் சமூக கொடுமைகள் என்பன இலங்கையில் இயங்கிவரும் எல்லா ஜமாஅத் அங்கத்தவர்களிடமும் குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ இருப்பதை எவரும் மறுக்க முடியாது. ஏற்கனவே நாம் குறிப்பிட்ட பல சமூக சீர்கேடுகள் ஜமாஅத் வேறுபாடின்றி அனைத்து அமைப்புக்களையும் ஆக்கிரமித்துள்ளது. எனவே, இந்தப் பிரச்சினைகளை இனம் கண்டு இந்தச் சமூகப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து அமைப்புக்களும் தீவிர பிரச்சார நடவடிக்கைகளையும், தீர்வுக்கான முயற்சிகளையும் முன்னெடுத்தால் என்ன என ஏன் சிந்திக்கக் கூடாது?

எனவே, ஏற்பட்டிருக்கும் அமைதியான சூழலை அருமையான ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி இன நல்லுறவை வளர்ப்பதற்கும் சமூக சீரழிவுகளை ஒழிப்பதற்கும் அதைப் பயன்படுத்த முனைவோமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.