தாலூதும் ஜாலூதும் | சிறுவர் பகுதி 19.

எண்ணிக்கையில் குறைந்த நாம் எப்படி அதிக எண்ணிக்கையை உடைய ஜாலூத்தின் படையை வெற்றி கொள்வது என்று கலங்கியவர்கள் ஈற்றில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து யுத்தம் செய்ய களம் இறங்கினர்.

தாலூதின் படை தயாரான போது எதிரிகள் அதிகமாக இருப்பதைக் கண்டனர். எனினும் உறுதியுடன் போராடத் துணிந்தனர். அல்லாஹ்விடம், “இந்தப் பெரும் படையுடன் மோதத் தக்க அளவுக்கு எம்மீது பொறுமையைச் சொரிவாயாக. போரில் இயலாமையையோ, சடைவையோ நாம் சந்திக்கக் கூடாது. புறமுதுகு காட்டி ஓடிவிடவும் கூடாது. எனவே எமது பாதங்களைப் பலப்படுத்துவாயாக. இந்த இறை நிராகரிப்பாளர்களுக்கு எதிராக எமக்கு நீ உதவி செய்வாயாக” என்று பிரார்த்தித்தனர்.

போருக்காக இருதரப்பும் ஒன்றையொன்று சந்தித்தது. போர் ஆரம்பமாவதற்கு முன்னர் இருதரப்பிலுமுள்ள சிறந்த வீரர்கள் முன்வந்து தனியாக மோதுவது அன்றைய போர் மரபாக இருந்தது. இதன்படி எதிரிப் படையின் தளபதியான மாவீரன் ஜாலூத் என்பவன் “முன்வந்து என்னுடன் தனித்து மோத எவனாவது முன்வர முடியுமா?” என கர்ச்சித்தான்.
தாலூத்தின் படையில் எவருமே இந்த சவாலை ஏற்றுக்கொள்ளத் துணியவில்லை. இதனால் ஜாலூத்தின் ஆணவம் அதிகரித்தது. பனூஇஸ்ரவேலர்களை இழிவாகப் பேசினான். எள்ளி நகையாடினான். அப்போது தாலூத், “இந்த கொடியவனைக் கொல்பவனுக்கு எனது மகளை மணமுடித்துக் கொடுப்பேன்” என அறிவிப்புச் செய்தார்.

ஈற்றில் ‘தாவூத்’ எனும் ஒரு இளைஞன் ஜாலூதுடன் மோத முன்வந்தார். மன்னர் தாலூத் தனது வாளை அவருக்குக் கொடுத்து, இரும்புக் கவசம் அணிவித்து, வாழ்த்தி சண்டைக்கு அனுப்பினார். தாவூதோ, வாளை வைத்து விட்டு, கவசத்தை களைந்துவிட்டு கையில் கவனுடன் களம் சென்றார்.
ஆடு மேய்க்கும் இளைஞரான தாவூத் தனது ஆடுகளை வேட்டை மிருகங்களிலிருந்து காக்க கவனில் கல்லை வைத்து எறிந்து நன்றாக தேர்ச்சிப் பெற்றிருந்தார். எனவே சில கற்களை பொறுக்கிக் கொண்டு கவனுடன் களம் சென்றார்.

தாவூதைக் கண்ட ஜாலூத் எக்காளமிட்டுச் சிரித்தான். இந்த பொடிப் பயல் என்னுடன் மோதுவதா? நல்ல வேடிக்கைதான் என்று நகையாடினான். தாவுத் கல்லை எடுத்ததும், “கல்லால் அடித்துக் கொல்ல என்னை நாயென்று நினைத்தாயா” என்று தாவூதைப் பிடிக்கச் சென்றான். தாவூத், கவனில் கல்லை வைத்துச் சுற்றி வீசினார். சரியாக கல் அவனது நெற்றியில் பட்டு பொட்டென பூமியில் சரிந்தான். தாவூத் அவனது வாளாலேயே அவனது தலையை வெட்டினார்.
மிகப்பெரும் வீரன் ஒரு நொடியில் செத்ததைக் கண்ட ஜாலூதின் படையினர் கதிகலங்கினர்.

தாலூதின் படையினர் உற்சாகம் பெற்றுப் போராடினர். ஈற்றில் ஜாலூதின் படையைச் சிதறடித்தனர். வெற்றியும் பெற்றனர். போரின் முடிவில் மன்னன் தாலூத் தனது மகளை தாவூத்துக்கு மணம் முடித்துக் கொடுத்தார். மன்னர் தாலூதின் மரணத்தின் பின்னர் பனூ இஸ்ரவேலர்களின் அரசுப் பொறுப்பு தாவூத் கைக்கு மாறியது. அல்லாஹ் அவருக்கு வஹி அறிவித்து அவரை நபியாகவும் ஆக்கினான். இவர் நபியாகவும் மன்னராகவும் இருந்து இஸ்ரவேலர் மக்களை நீதியாகவும் நேர்மையாகவும் அரசாண்டார். அவர்களை அல்லாஹ்வின் சட்டங்களுக்கேற்ப வாழ வழிகாட்டினார். இஸ்ரவேலர்கள் தமது இன்னல்கள் அனைத்தையும் மறந்து சீரும் சிறப்புடனும் வாழ்ந்தனர்.
முற்றும்
(இதுவரை கூறப்பட்ட சம்பவங்களின் சுருக்கத்தை அல்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயத்தின் ??? தொடக்கம் 251 வரையுள்ள வசனங்களில் காணலாம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.