இஸ்லாமும் பலதார மணமும், திருமண வயதெல்லை | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-26 [சூறா அந்நிஸா–03]

இஸ்லாமும் பலதார மணமும்

‘அநாதை(களை மணம் முடித்தால் அவர்)கள் விடயத்தில் நீதியாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால், பெண்களில் உங்களுக்குவிருப்பமானவர்களில் இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நன்நான்காக மணம் முடியுங்கள். நீங்கள் (இவர்களுக் கிடையில்) நீதமாக நடக்க முடியாது என அஞ்சினால், ஒருத்தியை அல்லது உங்கள் அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்.) நீங்கள் அநீதியிழைக்காமலிருக்க இதுவே மிக நெருக்கமானதாகும்.’ (4:3)

இந்த வசனம் ஒரு முஸ்லிம் ஆண் ஒரே நேரத்தில் நான்கு மனைவியருடன் வாழ்க்கை நடாத்தலாம் என அங்கீகரிக்கின்றது. இதன் மூலம் நான்குக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஒருவர் சமகாலத்தில் கணவராக இருக்க முடியாது என்ற சட்டம் பிறப்பிக்கப்படுகின்றது.

அடுத்து பலதார மணம் புரிவோர் மனைவியரை சமத்துவமாக நடத்த வேண்டும். சமத்துவமாக நடத்த முடியாதவர்கள் ஒரு தாரத்துடன்தான் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று கூறப்படுகின்றது.

இஸ்லாம் பலதார மணத்தை அனுமதித்துள்ளதை வைத்து சிலர் இஸ்லாத்தை விமர்சிக்கின்றனர். எல்லா முஸ்லிம்களும் பலதார மணம் புரிந்திருப்பதாகவும் இத்தகைய விமர்சகர்கள் கற்பனை பண்ணிக் கொள்கின்றனர்.

பலதார மணத்தை இஸ்லாம் தான் அனுமதித்ததா?

இந்துப் புராணங்கள் கூறும் பல பாத்திரங்கள் பலதார மணம் புரிந்திருப்பதாக அறிய முடிகின்றது. உதாரணமாக, இராமரின் தந்தை தசரதன். இவ்வாறே பைபிள் போற்றும் ஆபிரகாம், மோஸே, தாவீது, ஸாலமோன் அனைவரும் பலதார மணம் புரிந்தவர்களே!

அந்தக் காலத்தில் ஒரு ஆணுக்குப் பல பெண்கள் இருப்பது கௌரவமாகப் பார்க்கப்பட்டது. கணக்கில்லாமல் பல பெண்களை மணக்க முடியாது என்றும், பலதார மணம் புரிபவர்கள் அந்த மனைவியரின் தேவைகளை நிறைவேற்றக் கூடிய உடல் வலிமையும் பொருள் வளமுமிக்கவர்களாகவும் மனைவியருடன் நீதமாக நடக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் இஸ்லாம் பலதார மணத்தை ஒரு ஒழுங்குக்குக் கொண்டு வந்தது.

இப்பலதார மணத்தை அங்கீகரித்ததை வைத்து இஸ்லாத்தை கிண்டல், கேலி செய்பவர்கள் உண்மையை உணர்ந்தால் இஸ்லாம் இறை மார்க்கம் என்பதற்கான ஆதாரமாக இது அமைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்வர்.

1. பெண்களின் பிறப்பு விகிதம்:
உலக அளவில் ஆண்களை விட பெண்களே அதிகம் பிறக்கின்றனர். ஒருவருக்கு ஒருத்தி என்றால் ஆண்களின் அளவுக்குத்தான் பெண்கள் பிறக்க வேண்டும். அப்படி இல்லாமல் ஆண்களை விட அதிகம் பெண்கள் பிறக்கின்றனர் என்றால் இவர்களைப் படைத்தவன் வழங்கிய சட்டம்தான் பலதார மணம் என்பதைப் புரியலாம்.

2. அதிகரித்த ஆண்களின் இறப்பு விகிதம்:
பெண்கள் ஆண்களை விட அதிக காலம் வாழ்கின்றனர். போர்கள், கலவரங்கள், விபத்துக்கள், தீய நடத்தைகளால் ஏற்படும் நோய்கள்… என்று ஆண்களின் மரண விகிதம்தான் பெண்களின் மரண விகிதத்தை விட அதிகரித்துச் செல்கின்றது. பெண்களை விட குறைவாகப் பிறக்கும் ஆண்கள் அதிகமாக மரணித்து வந்தால் ஆண்-பெண் எண்ணிக்கை வேறுபாட்டை எப்படி சமன் செய்வது? ஒருவனுக்கு ஒருத்தி என்றால் மீதமாக இருக்கும் பெண்களுக்கான தீர்வு என்ன? அவர்கள் ஆசையை அடக்க வேண்டுமா? அல்லது கண்டவனுடன் வாழ வேண்டுமா? அல்லது உரிய முறையில் இன்னொரு ஆணுக்கு இரண்டாம் தாரமாக வாழ்வது சிறந்ததா?

திருமண வயதெல்லை:

ஒரு ஊரில் 2000 ஆம் ஆண்டில் நூறு ஆண் குழந்தைகளும் நூறு பெண் குழந்தைகளும் பிறப்பதாக வைத்துக் கொள்வோம். 2020 இல் அவர்களில் 50 பெண்கள் திருமணத்திற்கு ஆணை எதிர்பார்த்திருப்பர். ஆனால் அந்த ஆண்களில் 10 பேர்தான் திருமணம் செய்யும் மனநிலையில் இருப்பர். 2025 ஆகம் போது 100 பெண்கள் வாழ்க்கைத் துணை தேடுவர். ஆண்களில் 50 பேர் கூட திருமணத்திற்குத் தகுதியுடையோராக மாட்டார்கள். இந்த வகையில் பெண்கள் விரைவாக திருமணச் சந்தைக்கு வந்து விடுகின்றனர். ஆண்கள் திருமணத்திற்குத் தாமதிப்பதால் திருமணச் சந்தையில் மாப்பிள்ளைக்கு பலத்த நெருக்கடி ஏற்படுகின்றது.

இவ்வாறான பல காரணங்களால் இஸ்லாம் பலதார மணத்தை அனுமதித்துள்ளது. பலதார மணத்தை அனுமதிக்காத எந்த நாட்டிலும் வயது வந்த ஆணும், பெண்ணும் விரும்பிய ஒருவருடன் ஒருவர் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதுதடுக்கப்படவில்லை. சட்ட ரீதியாகத் திருமணம் செய்வதுதான் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் பெண் வஞ்சிக்கப்படுகின்றாள்.

பலதார மணம் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையாகச் சித்தரிக்கப்படுகின்றது. இவர்கள் முதல் மனைவியை மட்டும்தான் பெண்ணாகப் பார்க்கின்றனர். இரண்டாவது சட்ட விரோதமாக இருக்கும் சின்ன வீட்டை இவர்கள் பெண்ணாகப் பார்ப்பதில்லை.

ஒருவர் சட்டபூர்வமாக இரண்டாம் திருமணம் செய்யும் போது முதல் மனைவிக்குக் கிடைக்கும் சொத்தில் குறைவு ஏற்படும், சுகத்தில் குறைவு ஏற்படும், சில வேளை, அவன் ஒரு சின்ன வீட்டை செட்டப் செய்து கொண்டாலும் சொத்திலும் சுகத்திலும் குறைவு ஏற்படத்தான் செய்யும். சில போது மூத்தவள் இதற்குத் தடையாக இருந்தால் கொலை கூட செய்து விடுகின்றனர்.

இதே வேளை, ஒரு பெண்ணை அவன் சின்ன வீடாக வைத்திருந்தால் அந்தப் பெண்ணுக்கு சட்ட பூர்வமாக சொத்துக் கிடைக்காது. அவளுக்குப் பிறக்கும் குழந்தைக்கு சட்டபூர்வ தந்தை ஸ்தானம் கிடைக்காது. இந்தப் பெண்ணை அவன் திருமணம் செய்து கொண்டால் அவளுக்கு சொத்துப் பங்கு கிடைக்கும். சமூக அந்தஸ்த்தும் கிடைக்கும். அவளது வாரிசுக்கும் வாரிசுரிமையும் தந்தை ஸ்தானமும் கிடைக்கும். இந்தப் பெண்ணையும் ஒரு பெண்ணாகப் பார்த்தால் பலதார மணம் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமை என்று யாரும் கூறமாட்டார்கள். இன்றைய உலகு எதிர் நோக்கும் முக்கிய பிரச்சினைகளுக்கு இஸ்லாம் பலதார மணத்தின் மூலம் உரிய தீர்வுகளைத் தந்துள்ளது என்பதே உண்மையாகும்.

ஆணையும் பெண்ணையும் சம அளவில் படைக்காமல் ஒருவனுக்கு ஒருத்தி என்று கடவுள் சொன்னால் கடவுளுக்குக் கணக்குத் தெரியாது என்றுதான் கூற வேண்டும். மனிதனைப் படைத்த இறைவன் இஸ்லாம் கூறும் அல்லாஹ்தான். எனவே, அவனது படைப்புகளுக்குத் தேவையான சட்டத்தை அவன் வழங்கியுள்ளான். இப்படிப் பார்க்கும் போது பலதார மணத்தை இஸ்லாம் அனுமதித்துள்ளது என்பது இஸ்லாம் இறை மார்க்கம் என்பதற்கான ஆதாரமாகவே அமைகின்றது.

தொடரும்…. இன்ஷா அல்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.