இனவாதமும் தீய சக்திகளின் சுயலாபமும். | Article.

அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி
(ஆசிரியர்: உண்மை உதயம்)

இலங்கை ஓர் எழில் கொஞ்சும் நாடு! இயற்கை வளம் மிக்க தேசம்! அதில் வாழும் மக்களும் நல்லவர்கள்! வளர்முக நாடுகளில் கல்வியறிவு அதிகம் கொண்ட நாடு நமது நாடாகும்.

இப்படியான இந்நாட்டு மக்களிடம் இயற்கையிலேயே பல நல்ல குணாம்சங்கள் உள்ளன. ஏனைய வளர்முக நாடுகளுடன் ஒப்பிடும் போது பண்பாட்டு பழக்க வழக்கங்களில் இலங்கையர்கள் உன்னதமானவர்கள் என்று ஆணித்தரமாகக் கூறலாம்.

ஒரு காலத்தில் இலங்கையைப் போன்று வர வேண்டும், வளர வேண்டும் என சிங்கப்ரபூர்; கனவு கண்டதாம். இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பிழைப்புத் தேடி மக்கள் வந்துள்ளனர். இலங்கை வளத்துடன் காட்சியளித்தது ஒரு காலத்தில்…

இவ்வாறான சூழ்நிலையில்தான் இலங்கையில் இனவாதத் தீ மூட்டப்பட்டது. தமிழ்-சிங்கள இனவாதக் கருத்துக்கள் கக்கப்பட்டன. சிங்கள மொழி மீதான பற்று; வெறியாக மாறியது. சிங்களமா? தமிழா? என்ற மொழி வெறியில் பலர் படுகொலை செய்யப்பட்டனர். வாகனத்தில் போடப்படும், (ஸ்ரீ) எழுத்து சிங்களத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்று சிங்கள மொழிவாதம் பேசப்பட்டது. தமிழில்தான் போடுவோம் என தமிழர்கள் பிடிவாதமாக நின்றனர். இதனால் தமிழில் ‘ஸ்ரீ” போடப்பட்ட வாகனங்கள் தாக்கப்பட்டன. இன்று அந்த ‘ஸ்ரீ”யே போய்விட்டது.

அரசியல் இலாபங்களுக்காகவும் சிலரது சுயநலப் போக்கிற்காகவும் கக்கப்பட்ட இனவாதம் இந்த நாட்டில் ஆயுதப் போராட்டத்தை உருவாக்கியது. ஆயுதப் போராட்டம் முற்றி அது பயங்கரவாதமாக விகாரமடைந்தது. அப்போது இனவாதம் பேசியவர்கள் களத்தில் காணாமல் போயினர். இனவாதம் ஈன்றெடுத்த பயங்கரவாதத்தை இலங்கை இராணுவமே எதிர்கொள்ள வேண்டியதாயிற்று!

இனவாதம் பேசிய மதகுருக்கள் அன்றாட நடவடிக்கையில் ஈடுபட, சிங்கள இளைஞர்கள் பயங்கரவாதப் போரில் உயிர் நீத்தனர். முப்பது வருடங்களாக நீடித்த பயங்கரவாதம் பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்டு, கோடான கோடி பெறுமதியான நாட்டின் செல்வத்தை அழித்து முடித்து ஓய்ந்து போயுள்ளது.

இனவாதம் ஈன்றெடுத்த பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் அதனால் தோற்றம் பெற்ற இழப்புக்கள் இன்னும் ஈடுசெய்யப்படவில்லை. நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. அழிந்த வளங்களை மீளக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. போர் காரணமாக அதிகரித்த வாழ்க்கைச் செலவு இன்னும் தணியவில்லை. போரில் கைவிடப்பட்ட விவசாய நிலங்கள் இன்னும் முழுமையாக நாட்டு நலனுக்காகப் பயன்படுத்தப்படவில்லை. போரினால் அகதிகளாக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்களக் குடும்பங்களுக்கு முறையான மறுவாழ்வு கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் மீண்டும் இந்நாட்டில் இனவாதத் தீயை மூட்டும் வேலையையே சில மதகுருக்களும் அரசியல் இலாபம் தேடும் அரசியல் கயவர்களும் செய்து வருகின்றனர்.

இனவாதம்தான் இந்நாட்டின் மிகப்பெரும் சாபக்கேடு என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த பின்னரும் மீண்டும் இனவாதத்தைத் தூண்டுவோர் தேசத் துரோகிகளேயாவர். கடந்த கால கசப்பான நிகழ்வுகளில் இருந்து நிகழ் காலத்தைச் சரியாகத் திட்டமிட வேண்டிய மதகுருக்களே; மத, இனவாத வெறியுணர்வுகளைத் தூண்டுவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கும் சிறுபான்மை சமயங்களுக்கும் சமூகங்களுக்கும் எதிராக இனவாதக் கருத்துக்களை வெளிப்படுத்தி தேச நலனில் சிறிதும் அக்கறை இல்லாத இனவாத சக்திகள் செயற்பட்டு வருகின்றனர். குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான ஏராளமான சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டும் கூட முஸ்லிம்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடனும் பொறுமையுடனும் அவற்றைக் கையாண்டு வருகின்றனர்.

இருப்பினும் சில இனவாத சக்திகள், ‘இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் இருக்கின்றது, இஸ்லாமிய அடிப்படைவாதம் இருக்கின்றது” என்று திரும்பத் திரும்பக் கூறி ஒரு போலித் தோற்றத்தை ஏற்படுத்த முற்படுகின்றன. முஸ்லிம்கள் இந்த நாட்டைப் பிடிக்கப் போகின்றார்கள் என்ற தப்பான மாயையை, அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் எற்படுத்தி இன விரிசலை உண்டுபண்ணுவதற்கு சில தீய அமைப்புக்கள் முற்சிக்கின்றன. ஊரூராகச் சென்று தப்பான தகவல்களைப் பரப்புகின்றன. சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி அவற்றைப் பரப்பி பிரச்சாரம் செய்து வருகின்றன.

முஸ்லிம்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடரப் போவது போன்றும், இப்போதே அடக்காவிட்டால் வளர்ந்து விடுவார்கள், பிரபாகரனை ஆரம்பத்தில் அடக்கியிருந்தால் அவர் வளர்ந்திருக்க மாட்டார் என்ற கோணத்தில் இனவாத சிந்தனை கொண்ட மதகுருக்கள் சித்தரித்துப் பேசி வருகின்றனர்.

பிரபாகரனை இத்தகைய இனவாதிகளே உருவாக்கினர். இனவாத சக்திகளின் இன்னல்களே பிரபாகரனை வளர்த்தது. யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமை, ஜூலைக் கலவரத்தில் கொடூரமாத் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை போன்ற இனவாத செயற்பாடுகள்தான் ஆயுதப் போராட்டத்தை உண்டாக்கியது; உக்கிரமாக்கியது. இந்த நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்கியவர்களே இப்படிப் பேசுவது ஆச்சரியமானதுதான்.

இலங்கை முஸ்லிம்களைப் பொருத்த வரையில் அமைதியை அதிகம் நேசிப்பவர்கள். கடந்த சில வருடங்களாகவே தொடராக முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் கக்கப்பட்டும் கூட, பள்ளிவாயில்கள் பல தாக்கப்பட்டும் கூட, உயிர் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டும் கூட அவர்கள் பொறுமையிழக்கவில்லை.

முஸ்லிம்களை வம்புக்கிழுத்து அவர்களை அழிக்க வேண்டும் என்பதுதான் இனவாதிகளின் நோக்கம் என்பதால் அவர்கள் பொறுமையோடு சட்டத்திற்குக் கட்டுப்பட்டு அவற்றை எதிர் கொண்டு வருகின்றனர். இத்தகைய இயல்புள்ளவர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்க முற்படுவது சுத்த முட்டாள்தனமாகும்.

இலங்கை வாழ் இனங்களில் இலங்கையின் இறைமைக்கு சவால் விடாத சமூகமாக முஸ்லிம் சமூகமே உள்ளது. துஏP சேகுவரா ஆயுதப் போராட்டம் மூலம் சிங்கள இளைஞர்கள் இலங்கையின் இறைமைக்கு சவால்விட்டுள்ளனர். ஈழப் போராட்டத்தின் பெயரில் தமிழ் இளைஞர்கள் இறைமைக்கு எதிராகப் போராடியுள்ளனர்.

இந்த இரு போராட்டங்களாலும் மனித உயிர்கள் நிறையவே மண்ணுக்கு இரையாக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஏராளமான வளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. நாட்டின் நன்மதிப்பும் பொருளாதாரமும் நலிவடைந்துள்ளது. முஸ்லிம் சமூகம் மட்டும் இலங்கையின் இறைமைக்கு சவால்விட்டதில்லை. அப்படிப்பட்ட இந்த சமூகத்தின் மீது பொய்யான கதைகளையும் எதிர்வு கூறல்களையும் இட்டுக்கட்டி சந்தேகத்தை ஏற்படுத்தி அவர்களை பயங்கரவாதிகளாகவும் அடிப்படைவாதிகளாகவும் சித்தரித்துக் காட்ட முற்படுவது மாபெரும் கொடுமையாகும்.

புலிகள் தமிழ் ஈழத்துக்காகப் போராடி ஈற்றில் வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டினர். இதனால் வடக்கு தனித் தமிழ் பிரதேசமாக மாறியது. வடக்கு முழுமையாக புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றிட பல அடக்குமுறைகளை ஆயுத முனையில் புலிகள் நிகழ்த்தி வந்தனர்.

இதன் தொடரில் காத்தான்குடி, ஏறாவூர் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன. மூதூர், ஓட்டமாவடி, பொலனருவை… என பல இடங்களில் ஆயுத முனையில் முஸ்லிம்களின் உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தன. கிழக்கில் இருந்து முஸ்லிம்கள் உயிருக்குப் பயந்து வெளியேறி இருந்தால் வடக்கும், கிழக்கும் புலிகள் வசம் சென்றிருக்கும். தனித் தமிழ் ஈழம் என்ற அவர்களின் கனவு நனவாகியிருக்கும். வடக்கும் கிழக்கும் அவர்கள் வசமாயிருந்தால் அவர்கள் பலம் பெற்றிருப்பார்கள். போர் காலத்தில் அரசுக்கு ஆதரவாக மாறிய கருணா-பிள்ளையான் போன்றவர்கள் கிழக்கில் போராளிகளாகவே நிலைத்திருப்பர். நாடு பிளவுபட்டிருக்கும்.

முஸ்லிம்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கிழக்கிலேயே இருந்ததால்தான் இலங்கையின் வடக்கையும் இலங்கை இராணுவம் தம்வசம் கொண்டுவர முடிந்துள்ளது. இந்த வகையில் நாடு பிளவுபடாமல் போர் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதற்கு முஸ்லிம் சமூகம் பெரிய பங்காற்றியுள்ளது என்பது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மையாகும். இனவாத சக்திகள் இதை ஒரு கணம் உணர்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகம் என்றும் நாட்டுக்கு விசுவாசமாகவே நடந்துள்ளது. சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில்தான் புலிகள் வடகிழக்கு யுத்தத்தைக் கொழும்பை நோக்கி நகர்த்தியிருந்தார்கள். கிழக்கிற்கு வெளியே பல இடங்களில் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. இந்தத் தாக்குதல்கள் சிலவற்றுக்கு சிங்கள மக்கள் கூட பணத்திற்காகப் பங்களிப்புச் செய்திருந்திருந்தனர். இதனால் தமிழ் கொடி, சிங்களக் கொடி, தமிழ்ப் புலி, சிங்களப் புலி என்ற பதங்கள் கூடப் பயன்படுத்தப்பட்டன.

இதே காலகட்டத்தில் இப்போது இனவாதம் கக்கப்படுவது போல் சில சிங்கள இனவாத அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தைக் கக்கி வந்தனர். புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிடுவார்கள் என்றொரு நிலை ஏற்பட்டிருந்தது.

அடுத்து நீங்கள்தான் என்பது போல், இனவாத சக்திகள் முஸ்லிம்களைப் பார்த்து முறைத்தன. இச்சந்தர்ப்பத்தில் மாவனல்லைக் கலவரம், கலகெதர கலவரம், எலபொடகம கலவரம் என பெரிதும் சிறிதுமாக சுமார் 13 கலவரங்கள் இனவாத சக்திகளால் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு முஸ்லிம்களின் சொத்துக்கள் கோடிக்கணக்கில் அழிக்கப்பட்டன. சில உயிரிழப்புக்களும் ஏற்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் கூட முஸ்லிம்கள் இலங்கை அரசுக்கு எதிராகப் போராடும் புலிகளுடன் கை கோர்க்க விரும்பவில்லை.

சில சிங்கள இனத்தவர்கள் கூட பணத்துக்காக பலிபோன இச்சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதும் முஸ்லிம்கள் நாட்டுக்கு எதிரான மனநிலைக்குச் செல்லவில்லை.

இப்படி இந்நாட்டு முஸ்லிம்கள் தமது தேசப்பற்றையும் நாட்டு நலனிலான அக்கறையையும் முறையாக வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முற்படுபவர்கள் நாட்டு நலன்களில் அக்கறை இல்லாத தேசத் துரோகிகளாவர்.

இந்நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஏதோ சில தீய சக்திகளின் ஏஜென்டுகளாக செயற்படுகின்றனர் என்பது மட்டும் உண்மையாகும்.

ஆயுத வியாபாரிகளின் முகவர்கள்:
இந்த நாட்டில் போர் நடந்து கொண்டிருந்த போது அரசுக்கும் புலிகளுக்கும் ஒரே நேரத்தில் ஆயுதங்களை வழங்கி போர் தொடர ஆயுத வியாபாரிகள் சதி செய்துள்ளனர். போர் முடிந்த பின்னர் அவர்களது ஆயுத வியாபாரத்தைத் தொடர முடியாதுள்ளது. எனவே, மீண்டும் இந்த நாட்டில் போர் நடக்க வேண்டும். அப்போதுதான் ஆயுத வியாபாரிகள் இலாபமடைய முடியும். இதற்காக முஸ்லிம்களை முடிந்த மட்டும் சீண்டிப் பார்க்க முயன்றனர். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.

எனவே, முஸ்லிம்களையும் தமிழர்களையும் ஒரே நேரத்தில் சீண்டிப் பார்த்தால் அவர்கள் இணைந்து போராட முன்வரலாம். இதன் மூலம் மீண்டும் இந்நாட்டை போர்க் குகைக்குள் தள்ளி ஆயுத வியாபாரம் செய்யலாம். அந்த ஆயுத வியாபாரிகளின் ஏஜென்டுகளாக இவர்கள் இருக்கலாம்.

அரசியல் வியாபாரிகள்:
இந்த நாட்டில் குழப்பத்தை உண்டுபண்ணி, இனங்களுக்கிடையே மோதலை உருவாக்கி அரசியல் இஸ்தீரத் தன்மையைக் குலைத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் அரசியல் வியாபாரிகளின் ஏஜென்டுகளாகவும் இவர்கள் இருக்கலாம்.

அந்நிய சக்திகளின் முகவர்கள்:
இலங்கை அபிவிருத்தியடைந்து முன்னேறுவதை விரும்பாத அந்நிய நாடுகளின் தீய எண்ணங்களுக்கு பலி போன அந்நிய சக்திகளின் கூலிப் படையாகவும் இவர்கள் இருக்கலாம்.

இலங்கை போருக்குப் பின்னர் பொருளாதாரத்தில் முன்னேற்றமடையும், விவசாயம் விருத்தியடையும். இதனால் இலங்கை கடன் வாங்கி வட்டி கட்டி வாழும் நிலை மாறலாம். இலங்கையில் கல்வி தொழில்நுட்பம் முன்னேற்றம் காணலாம். அதனால் அதனை எமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது போகலாம். எனவே, இலங்கைக்குள் தொடர்ந்தும் பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயற்படும் அந்நிய நாடுகளின் ஏஜென்டுகளாகக் கூட இவர்கள் இருக்கலாம்.

சுயநல நோக்கத்தில் செயற்படும் இவர்கள் சிங்கள மக்களின் நலனுக்காகப் போராடுகின்றோம் என்ற போர்வையில் நாட்டை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றால் இந்தத் தீய சக்திகள் அடக்கப்பட வேண்டும்.

சிங்கள மக்களின் நலன், தமிழ் மக்களின் நலன், முஸ்லிம் மக்களின் நலன் எனத் தனித்தனியாக சிந்திக்காமல் பொதுவாக நாட்டின் நலன் என்ற கோணத்தில் சிந்திக்க வேண்டும். நாடு நலமாக இருந்தால் நாலின மக்களும் நலமாக இருப்பார்கள்.

எனவே, நாட்டுப் பற்றுள்ள அனைத்து மக்களும் சுயநல நோக்கில் செயற்படும் இனவாத சக்திகளை முழுமையாகப் புறக்கணித்து ஒருமுகப்பட்ட மனநிலையுடன், நாட்டுப் பற்றுடன் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

யா அல்லாஹ்! எல்லா இன மக்களும் ஒற்றுமையாகவும், சுபீட்சமாகவும், அவரவர் மதங்களின் படி நிம்மதியாக இந்நாட்டில் வாழவும், தீய சக்திகளின் சதி முயற்சிகள் அழியவும் அருள் புரிவாயாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.