இந்தியாவின் தேர்தல் முடிவுகள் முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து அடிப்படைவாத அமைப்பான பாரதீய ஜனதா கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள அதே வேளை, காங்கிரஸைப் படுபாதாளத்தில் வீழ்த்தியுள்ளது. குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்ட “மோடி” இந்தியாவின் 16-ஆம் பிரதமராகிவிட்டார்.
இந்த அரசியல் மாற்றம் ஆசியாவில் மதவாதமும் இனவாதமும் கூர்மை பெற்று வருவதற்கான வெளிப்படையான அடையாளமாகக் கொள்ளலாம். பர்மாவில் பற்றி எரியும் பௌத்த மதவாதத் தீ இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது போல், இந்தியாவில் இந்துத் தீவிரவாத அமைப்பின் ஆட்சி அமைந்ததானது இலங்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். பீஜேபியின் வெற்றியில் இலங்கை இனவாதிகள் மகிழ்ச்சியை வெளியிட்டிருப்பதும், இலங்கை ஜனாதிபதிக்கும், மோடிக்குமிடையில் ஏற்படும் உறவுகளும் இதற்கான அறிகுறிகளாகும்.
இருப்பினும் மோடி ஆசைப்படும் அளவுக்கு மதவாத நடவடிக்கைகளை இந்தியாவில் மேற்கொள்ள முடியாமல் கூட போகலாம். மோடி அதிக ஆசனங்களைப் பெற்றிருந்தாலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைந்திருந்தாலும் மோடி பெரிதும் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரவில்லை. அவர் பெற்ற ஆசனங்கள் அதிகம் என்றாலும் வாக்குகள் மிகவும் குறைவாகும். 31% வாக்குகளையே அவர் பெற்றுள்ளார். 69மூ வாக்குகள் அவரது தலைமைத்துவத்தை விரும்பவில்லை. எனவே, பெரும்பான்மையானவர்களின் விருப்பு இல்லாமல் அவரால் பெரிதாக எதையும் கிழித்துவிட முடியாது எனலாம்.
இந்தியத் தேர்தல் முறையில் உள்ள ஜனநாயகத்துக்கு முரணான நிலைப்பாடுதான் இந்த முரண்பட்ட நிலைக்குக் காரணமாகும். உதாரணமாக, தமிழ் நாட்டு தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொண்டால் 44.3% வாக்குகளைப் பெற்ற அ.தி.மு.க. (ஜெயலலிதா) கட்சி 37 ஆசனங்களை அதாவது, 92.5% ஆசனங்களைப் பெற்றுள்ளது. தான் பெற்ற வாக்கு விகிதத்தை விட இரண்டு மடங்கு ஆசனங்களைப் பெற்றுள்ளது. 4.5% வாக்குகளைப் பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது. 23.5% வாக்குகளைப் பெற்ற தி.மு.க. (கருணாநிதி) ஒரு ஆசனத்தைக் கூட பெறவில்லை. இது இந்திய தேர்தலில் உள்ள குளறுபடியாகும். இந்த ஓட்டை அதிகமாக இந்திய தேர்தலில் இருப்பதை உணர்ந்தாலும் சிறுபான்மைக் கட்சிகளுக்கு நன்மை ஏற்பட்டுவிடும் என்பதற்காக அதில் மாற்றங்கள் செய்யப்படாமல் உள்ளது.
ஆக மொத்தத்தில் பெரும்பான்மை மக்களின் ஆதரவு இல்லாமலே மோடி பிரதமராகின்றார். எனவே, நினைத்ததையெல்லாம் செய்யும் அதிகாரத்தில் அவர் இல்லை எனலாம். அடுத்து, அவர் 335 ஆசனங்களைப் பெற்றாலும் மாநிலங்களில் பிற கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் முக்கிய தீர்மானங்கள் எதையும் எடுக்க முடியாத பலவீனமான நிலையில்தான் இருக்கின்றார்.
இந்திய அரசியலின் தமிழக அரசியல் செயற்பாடுகள்தான் இலங்கையில் பெரிதும் தாக்கம் செலுத்தும் தன்மையில் உள்ளது. தமிழக மக்கள் மிகத் தெளிவாகவே மதவாதத்தை எதிர்த்துள்ளனர். பீஜேபி யுடன் கூட்டணி வைத்துக் கொண்ட கட்சிகள் பல இடங்களில் டெபாஸிட் இழந்துள்ளன. அத்துடன் மோடி இலங்கையுடன் ஒட்டி உறவாடுவதை விரும்பாத வைகோ, டாக்டர் ராமதாஸ், விஜேகாந்த் போன்றோரே மோடியுடன் இணைந்து தமிழகத்தில் குதித்தனர். இவர்கள் மோடி-இலங்கை உறவை அதிகம் வரவேற்கப் போவதில்லை.
அடுத்து, “திருடனின் கையிலேயே சாவிக் கொத்தைக் கொடுத்த கதை”யாக இது உள்ளதால் சில வேளை பொறுப்புச் சொல்லும் கடமை இருப்பதால் அஞ்சும் அளவுக்கு ஆபத்துக்கள் நேராமல் கூட இருக்கலாம். இருப்பினும் இந்திய-இலங்கை முஸ்லிம்கள் மிக விழிப்புடன் செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்தை உணர்த்தக் கூடிய மாற்றங்கள் உருவாகி வருகின்றன என்பதை மட்டும் உறுதியாகக் கூறலாம்.
அடுத்து, இம்மாதம் 20 ஆம் திகதி உலக அகதிகள் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட தினமாகும். அகதிகள் அன்றாடம் சந்திக்கும் இன்னல்கள் குறித்து விழிப்புணர்வை ஊட்டுவதும் அவர்களின் இடர் போக்குவதும் இத்தினத்தின் முக்கிய குறிக்கோளாகும். இலங்கையில் முப்பது வருங்கள் இடம்பெற்ற கொடிய பயங்கரவாதத்தின் காரணத்தால் இலங்கை சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களில் அதிகமானவர்கள் தமது இருப்பிடங்களை இழந்து அகதிகளாக அல்லல்படுகின்றனர்.
குறிப்பாக, தமிழ் மக்களில் அதிகமானவர்கள் பயங்கரவாதப் பிரச்சினையை மையமாகக் கொண்டு கனடா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற ஐரோப்பிய நாடுகளில் அகதி அங்கத்துவம் பெற்று நல்ல வருமானத்தையும் உயர்தரமான வாழ்க்கையையும், நல்ல கல்வியையும் பெற்று இலங்கையில் வசிப்பவர்களை விட வளமான வாழ்வை அனுபவிக்கின்றனர்.
ஆனால், வடமாகாணத்திலிருந்து குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அணிந்திருந்த ஆடையுடன் ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சொந்த நாட்டிலேயே அகதி முத்திரையுடன் முகாம்களுக்குள் அவல நிலையை அனுபவித்து வருகின்றனர்.
இந்த மக்கள் தமது அகதி வாழ்வின் மூலம் தமது தாயக பூமி, பூர்வீக சொத்துக்கள், வீடு வாசல்கள் அத்தனையையும் இழந்ததுடன் தாம் கட்டிக் காத்து வந்த பாரம்பரியத்தையும், சமூக கட்டுக் கோப்பையும், ஆரோக்கியத்தையும், நல்ல கல்வியையும், பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களையும் கூட இழந்து வந்தனர்.
எமது ஜனாதிபதியின் துணிச்சலான நடவடிக்கை மூலமும் இரானுவத்தினரின் தீவிரமான போராட்டத்தினாலும் பயங்கரவாதம் இலங்கையிலிருந்து ஒழிக்கப்பட்டது. ஆயுத முனையில் அபகரிக்கப்பட்ட எமது தாயக பூமி மீட்கப்பட்டது. இதற்காக இலங்கை மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் ஜனாதிபதிக்கும் எமது இராணுவத்தினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளனர்.
புலிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட எமது பூமி மீண்டும் எமது கைக்குள் கிடைத்துள்ளது. எமக்குரிய பூமியை எமது கையில் ஒப்படைப்பதுடன் சொந்த பூமியில் எம்மை வாழவிடுவதும், வாழ்வதற்கான வசதிகள் செய்து தருவதும் அரசு என்ற அடிப்படையில் இந்த அரசின் தார்மீகக் கடமையாகும்.
இராணுவ நலன்களுக்காகவும், நாட்டின் பாதுகாப்புக்காகவும் முஸ்லிம்கள் பூர்வீகமாகக் குடியிருந்த இடங்களில் சிலது கையகப்படுத்தப்பட்டிருக்கலாம். இருப்பினும், பயங்கரவாதப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையிலும் அனைத்து சொத்துக்களையும் இழந்வர்கள் என்ற வகையிலும் அரசு முஸ்லிம்கள் விடயத்தில் கருணைக் கண் கொண்டு பார்த்து அவர்களுக்குப் போதுமான அளவு காணிகளை வழங்கி அவர்களின் அகதி வாழ்வை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
இதுவரை தமது உரிமைக்காகப் போராடுவதாகக் கூறிக் கொண்டு புலிகள் செய்த கொடூரத்தை தமிழ் மக்கள் கவனத்திற் கொண்டு அகதி முஸ்லிம்கள் விடயத்தில் தாராள மனப்பக்குவத்துடன் நடந்து கொள்ள வேண்டிய தார்மீகக் கடமை வடக்கு தமிழ் அரசியல், சமய தலைமைகளுக்கும் பொதுமக்களுக்கும் உள்ளது. அவர்களும் இது விடயத்தில் மனித நேயத்துடனும் நடுநிலைச் சிந்தனையுடனும் செயற்பட வேண்டியுள்ளது.
அன்பையும், அமைதியையும் போதித்த புத்த தர்மத்தைப் பேணும் பௌத்த துறவிகள் இலங்கை வடக்கு முஸ்லிம்களின் அவல நிலையைக் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. இனவாத விஷம் கக்குபவர்கள் இன்று வில்பத்துக்கு விரைகின்றார்கள். புலிகள் முஸ்லிம்களை விரட்டியடித்த போது அடுத்தகட்ட வாழ்வு பற்றிய எந்த நம்பிக்கையும் இல்லாமல் அடுத்த வேளை உணவுக்கு கையேந்தும் நிலைக்கு இந்த முஸ்லிம்கள் வந்த போது வில்பத்துக்கு விரைந்து இனவாதம் பேசியவர்கள் ஒரு பார்சல் சோற்றைக் கூடக் கொடுக்கவில்லை. மிருகங்களின் உரிமை பற்றிப் பேசுபவர்களுக்கு புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் மிருகங்களை விடக் கேவலப்பட்டுப் போனார்களோ?
முஸ்லிம் தலைமைகளும், சமூக அமைப்புக்களும் அகதிகள் தினத்தை மையமாகக் கொண்டு ஜனாதிபதியும் இரு தசாப்த அகதி வாழ்வை அனுபவித்த வடக்கு முஸ்லிம்களின் நலன்கள் குறித்து ஜனாதிபதி அவர்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு செல்வது பொருத்தமாக அமையும். இது குறித்து மஜ்லிஸுஸ் ஷுறா, முஸ்லிம் அரசியல் கட்சிகள் அல்லது அகதிகள் அமைப்புக்கள் கவனத்தில் எடுக்குமா?