அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 15 | மலக்குகளின் எண்ணிக்கை எத்தனை? ஏன்?

‘நீங்கள் பலம் குன்றியிருந்த நிலையிலும் பத்(ர்ப் போ)ரில் அல்லாஹ் உங்களுக்கு நிச்சயமாக உதவி செய்தான். ஆகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.’

‘மூவாயிரம் வானவர்களை உங்கள் இரட்சகன் இறக்கி உங்களுக்கு உதவி புரிந்தது உங்களுக்குப் போதாதா?’ என்று நம்பிக்கை கொண்டோரிடம் (நபியே!) நீர் கூறியதை (எண்ணிப் பார்ப்பீராக!)

ஆம்! நீங்கள் பொறுமையாக இருந்து, (அல்லாஹ்வை) அஞ்சி நடக்கும் போது அ(ப்பகை)வர்கள் உங்கள் மீது திடீரென(த் தாக்க) வந்தால் (போருக்கான) அடையாளங்களுடன் கூடிய ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இரட்சகன் உங்களுக்கு உதவுவான்.

‘இதனை உங்களுக்கு நன்மாராயமாகவும், இதன்மூலம் உங்கள் உள்ளங்கள் அமைதி பெறவுமே தவிர அல்லாஹ் ஆக்கவில்லை. இவ்வுதவி யாவற்றையும் மிகைத்தவனும் ஞானமிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிர இல்லை.’

நிராகரித்தோரில் ஒரு பகுதியினரை அழிப்பதற்கு, அல்லது அவர்களை இழிவடையச் செய்து, அவர்கள் தோல்வியுற்று திரும்பிச் செல்வதற்காகவே (அல்லாஹ் இவ்வுதவியைச் செய்தான்.)’ (3:123-127)

இந்த வசனத்தில் 3000 மலக்குகள் பற்றியும் 5000 மலக்குகள் பற்றியும் பேசப்படுகின்றது.

‘உங்கள் இரட்சகனிடம் நீங்கள் உதவி தேடிய போது, ‘நிச்சயமாக நான் தொடர்ச்சியாக ஆயிரம் மலக்குகளைக் கொண்டு உங்களுக்கு உதவுவேன்’ என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்.’ (8:9)

இந்த வசனத்தில் பஜ்ரில் 1000 மலக்குகளைக் கொண்டு உதவி செய்வதாகப் பதிலளிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. 5000, 3000, 1000 என்ற எண்ணிக்கை குறித்த சரியான விளக்கத்தைப் புரியாதவர்களுக்கு முரண்பாடு போன்று தென்படலாம். சரியாக வசனங்களை அவதானத்துடன் நோக்கினால் முரண்பாடு ஏதும் இல்லை என்பதை அறியலாம்.

முதலில் 5000 வானவர்கள் பற்றிய வசனத்தை எடுத்துக் கொள்வோம்.

‘ஆம்! நீங்கள் பொறுமையாக இருந்து, (அல்லாஹ்வை) அஞ்சி நடக்கும் போது அ(ப்பகை)வர்கள் உங்கள் மீது திடீரென(த் தாக்க) வந்தால் (போருக்கான) அடையாளங்களுடன் கூடிய ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இரட்சகன் உங்களுக்கு உதவுவான். ‘ (3:125)

இந்த வசனம் உஹதுப் போரின் போது அருளப்பட்டதாகும். இதில் மூன்று நிபந்தனைகள் சொல்லப்படுகின்றன.

1. பொறுமையாக இருக்க வேண்டும்.
2. அல்லாஹ்வை அஞ்சி நடக்க வேண்டும்.
3. எதிரிகள் திடீர் தாக்குதல் நடாத்தினால் 5000 வானவர்கள் மூலம் உதவி கிடைக்கும்.

உஹதுப் போரின் போது நபித்தோழர்கள் சிலர் அவர்களின் கட்டளையை மீறினர். அடுத்து எதிரிகள் திடீர் தாக்குதல் நடாத்தவில்லை. எனவே, வானவர்கள் 5000 பேர் வரவேயில்லை. உஹதுப் போரில் வானவர்கள் வரவில்லை என்றால் 1000 மற்றும் 3000 வானவர்கள் வந்தது பத்ர் யுத்தமாகத்தான் இருக்க வேண்டும். 1000 மும் 3000யிரமும் முரண்படு கின்றதே என்ற எண்ணம் எழலாம்.

‘உங்கள் இரட்சகனிடம் நீங்கள் உதவி தேடிய போது, ‘நிச்சயமாக நான் தொடர்ச்சியாக ஆயிரம் மலக்குகளைக் கொண்டு உங்களுக்கு உதவுவேன்’ என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்.’ (8:9)

இந்த வசனத்தில் ‘முர்திபீன்’ என்ற வார்த்தை வந்துள்ளது. ‘முர்திபீன்’ என்றால் இவர்கள் முதல் கட்டம் இவர்களைத் தொடர்ந்து இன்னும் வரலாம் என்ற அர்த்தம் அதில் உள்ளது. பத்ர் போர் நடப்பதற்கு முன்னர் அவர்களுக்கு ஆயிரம் மலக்குகள் மூலமாக உதவுவதாக அல்லாஹ் கூறினான். அந்த ஆயிரம் என்பது முதல் கட்ட உதவி என்பதை ‘முர்திபீன்’ எனும் வார்த்தை எடுத்துக்காட்டுகின்றது.

பின்னர் மேலதிகமாக மலக்குகள் அனுப்பப்பட்டனர். அவர்களின் மொத்த எண்ணிக்கைதான் மூவாயிரமாகும். உஹதுப் போரில் முனாபிக்குகள் சிலர் போர்க்களத்தை விட்டும் விலகிச் சென்ற போது முஸ்லிம்களுக்கு ஆறுதலுக்காக பத்ரில் 3000 மலக்குகளைக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு உதவியது போதாதா என்ற வசனம் அருளப்பட்டது.

எனவே, பத்ரில் மொத்தமாக வந்த வானவர்களின் எண்ணிக்கை 3000 ஆகும். நபித்தோழர்கள் உதவி கேட்ட போது 1000 பேரைக் கொண்டு முதல் கட்டமாக உதவுவதாகக் கூறிய அல்லாஹ் மேலும் மலக்குகளை அனுப்பினான். மொத்தமாக இறக்கப்பட்ட மலக்குகள் 3000 ஆகும். இது ஒன்றுக்கொன்று முரண்பட்டது கிடையாது எனப் புரிந்து கொள்ளலாம்.
ஏன் இத்தனை மலக்குகள்?
ஒரு பெரும் ஊரையே ஓரிரு வானவர்கள் வந்து அழித்திருக்கும் போது காபிர்களின் படையைத் தோற்கடிக்க இத்தனை வானவர்கள் தேவைதானா? என்ற கேள்வி அடுத்து எழலாம்.

தேவையில்லை என்பதுதான் இதற்கான பதிலாகும். அப்படியானால் ஏன் இவ்வளவு வானவர்கள் அனுப்பப்பட்டார்கள் என்றால் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தியாகவும், மன அமைதி, நிம்மதிக்காகவுமே இத்தனை மலக்குகள் அனுப்பப்பட்டார்கள். பத்ர் போருக்கு முன்னர் நபித்தோழர்கள் பிரார்த்தித்து ஆயிரம் மலக்குகளைக் கொண்டு முதல்கட்டமாக உதவுவதாகக் கூறிய பின்னரும் இதை அல்லாஹ் நினைவூட்டுகின்றான்.

‘நற்செய்தியாகவும், இதனால் உங்கள் உள்ளங்கள் அமைதி பெறவுமே இதை அல்லாஹ் ஏற்படுத்தினான். உதவி என்பது அல்லாஹ்விட மிருந்தேயன்றி வேறில்லை. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்| ஞானமிக்கவன்.’
(8:10)

இவ்வாறே இந்த அத்தியாயத்திலும் இப்படி அல்லாஹ் கூறுகின்றான்.

‘இதனை உங்களுக்கு நன்மாராயமாகவும், இதன்மூலம் உங்கள் உள்ளங்கள் அமைதி பெறவுமே தவிர அல்லாஹ் ஆக்கவில்லை. இவ்வுதவி யாவற்றையும் மிகைத்தவனும் ஞானமிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிர இல்லை.’

‘நிராகரித்தோரில் ஒரு பகுதியினரை அழிப்பதற்கு, அல்லது அவர்களை இழிவடையச் செய்து, அவர்கள் தோல்வியுற்று திரும்பிச் செல்வதற்காகவே (அல்லாஹ் இவ்வுதவியைச் செய்தான்.)’
(3:126-127)

அவர்கள் ஆயிரம் பேர் வந்தால் எமக்கு 3000 வானவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை, நற்செய்தி, மன ஆறுதல் என்பன இதில் உள்ளது. அதே நேரம் காபிர்களின் தோழ்வியில் முஃமின்களின் பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களையும் இழப்புக்களையும், தியாகங்களையும் செய்ய வைக்கின்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.