குறைந்தபட்ச எண்ணிக்கை | ஜமாஅத்துத் தொழுகை-4 [பிக்ஹுல் இஸ்லாம் – 34]

குறைந்தபட்ச எண்ணிக்கை

ஜமாஅத்துத் தொழுகைக்கு ஆகக் குறைந்தது இருவராவது இருக்க வேண்டும்.

மாலிக் இப்னு ஹவைரிஸ்(ரலி) அறிவிக்கின்றார்: “பயணத்தை மேற்கொள்ள விரும்பிய இருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்றால், தொழுகைக்காக பாங்கு சொல்லி, பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் பெரியவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.”
📚 புகாரி- 630, அபூ தாவூத்- 589, இப்னு குஸைமா- 1510,

(அறிஞர் அல்பானி இந்த ஹதீஸை ஸஹீஹான அறிவிப்பு என்கிறார்.)

“நபியவர்கள் தொழுகை நடாத்திய பின் ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தார். ‘இவருக்கு தர்மம் செய்ய உங்களில் யார் விரும்புகின்றீர்கள்’ எனக் கேட்டார்கள். (சபையில் இருந்த) ஒருவர் எழுந்து அவருடன் (ஜமாஅத்தாகத் தொழுதார்.”
அறிவிப்பவர்: அபூ ஸயீத்(ரலி)
📚 திர்மிதி- 220, தபரானி- 7857

(அறிஞர் அல்பானி(ரஹ்) அவர்கள் இந்த அறிவிப்பு ஸஹீஹானது என்கிறார்.)

இந்த இரு அறிவிப்புக்களும் இருவர் இணைந்தும் ஜமாஅத்தாகத் தொழலாம் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. எனவே, ஜமாஅத்துக்கு ஆகக் குறைந்தது இருவர் இருந்தால் போதுமானது. அந்நிய ஆணும் பெண்ணும் இவ்வாறு ஜமாஅத்தாகத் தொழ முடியாது. பெண்கள் பலர் இருந்தால் ஆண்களில் ஒருவர் ஜமாஅத் நடாத்த முடியும் என்பதை ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம்.

எங்கு தொழுவது?:
ஜமாஅத்துத் தொழுகையை வீட்டில், கடையில், திறந்த வெளியில்… என எங்கு வேண்டுமானாலும் தொழலாம். ஆனால், பர்ழ் தொழுகைக்கு பள்ளிவாயல்தான் ஏற்றமானது என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

“எனக்கு பூமி முழுவதும் தொழத் தகுந்த இடமாகவும், சுத்தமானதாகவும் ஆக்கப்பட்டுள்ளது. எனவே, எங்கிருந்த போதும் எனது உம்மத்தில் ஒருவரைத் தொழுகை நேரம் அடைந்து கொண்டால் அவர் தொழட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரலி)
📚 புகாரி- 335, முஸ்லிம்- 3521, தாரமி- 2510, இப்னுமாஜா- 567, திர்மிதி- 1553, நஸாஈ- 432

“நபியவர்கள் எமக்கு சுபஹ் தொழுவித்தார்கள். அப்போது பள்ளியின் ஓரத்தில் இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை அழைத்து நீங்கள் ஏன் தொழவில்லை என விசாரித்த போது தாம் தமது இருப்பிடத்திலேயே தொழுதுவிட்டதாக அவர்கள் கூறினார்கள். இப்படிச் செய்யக் கூடாது. நீங்கள் உங்கள் இருப்பிடத்தில் தொழுது பின்னர் இமாமை அடைந்தால் அவருடன் இணைந்து தொழுங்கள். அது உங்களுக்கு நபிலான வணக்கமாக இருக்கும்” என்று கூறினார்கள்.
📚 தாரமீ- 1407, திர்மிதி- 219, நஸாஈ- 858, இப்னு குஸைமா- 1279

எனவே, ஜமாஅத்தாக எந்த இடத்திலும் தொழலாம்.

ஆனால், பர்ழ் தொழுகைக்கு அனைவரும் பள்ளிக்கு வருவது இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக இருக்கின்றது. அத்துடன் மக்கள் அதிகமாக ஜமாஅத்துடன் இணைவது சிறப்பானதாகும். அது மாத்திரமன்றி மக்கள் உறவுகள் வலுப்பெறுகின்றன. பள்ளிக்கு நடந்து செல்வதனால் நன்மைகள் கிடைக்கின்றன. இவ்வாறான ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

அடுத்து, பள்ளியில் ஜமாஅத் நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் பள்ளிக்கு வருமாறு அதான்- அழைப்பு விடுக்கப்படுகின்றது. பயணத்தில் இருப்பவர்கள் அல்லது பள்ளிக்குச் செல்ல வாய்ப்பற்ற நிலையில் இருப்பவர்கள் ஜமாஅத்துத் தொழுகையை விட்டு விடக் கூடாது. இருக்கும் இடத்திலே இருவர் இருந்தாலும் ஜமாஅத் தொழலாம். பள்ளிக்குச் செல்லும் நிலையில் ஊரில் இருப்பவர்கள் அல்லது தொழில் செய்யும் இடத்தில் பள்ளிக்கு அருகில் இருப்பவர்கள் பள்ளிக்குச் சென்று ஜமாஅத்தாகத் தொழுவதுதான் ஏற்றமானதாகும். மஸ்ஜிதில் நடக்கும் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வது கட்டாயமாகும். இருப்பினும் சில சங்கடங்கள், சிரம நிலை இருந்தால் கலந்து கொள்ளாமல் இருப்பதில் குற்றமில்லை. இந்தச் சங்கடங்களை பொதுவான, தனிப்பட்ட சங்கடங்கள் என இரண்டாக வகுத்து நோக்கலாம்.

பொதுவான சங்கடங்கள்:

1. மழை, கடும் குளிர்.
பள்ளிக்கு வருவது சிரமம் என்று கருதும் அளவுக்கான மழை பொழிந்தால் அல்லது கடும் குளிராக இருந்தால் ஜமாஅத் தொழுகைக்கு வராமல் இருப்பது குற்றமில்லை.

நாஃபிஃ அறிவித்தார்: “மக்காவை அடுத்துள்ள ‘ளஜ்னான்’ என்ற ஊரில் மிகக் குளிரான ஓர் இரவில் இப்னு உமர்(ரலி) பாங்கு கூறினார்கள். அதன் கடைசியில், ‘உங்களுடைய கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்றும் கூறினார்கள். மேலும் ‘பயணத்தின்போது, குளிரான இரவிலும் மழை பெய்யும் இரவிலும் முஅத்தின் பாங்கு சொல்லும் போது அதன் கடைசியில் ‘உங்களுடைய கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்று சொல்லுமாறு முஅத்தினுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள் என்றும் இப்னு உமர்(ரலி) கூறினார்”
📚புகாரி: 632

2. கடும் காற்று.
மழை கால இரவு அல்லது காற்றுக் கொண்ட குளிர்கால இரவில் உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள் என அதான் கூறியதாக இப்னு மாஜா (937) இல் இடம்பெற்றுள்ளது. காற்று பலமாக இருந்தாலும் ஜமாஅத்துக்கு வருவதைத் தவிர்ப்பது தவறல்ல. இவ்வாறான சங்கடங்கள் காரணமாக ஒருவர் ஜமாஅத்துக்கு வராவிட்டால் அவர் மீது குற்றம் இல்லை. ஆனால், வரக் கூடாது என மார்க்கம் சொல்லவில்லை. நபி(ஸல்) அவர்கள் மழை நேரங்களில் தமது நெற்றியில் சேறு பட தொழுதுள்ளார்கள். அத்துடன் பள்ளியில் அதான் கூறப்பட வேண்டும், ஜமாஅத்தும் நடாத்தப்பட வேண்டும். இது ஒரு சலுகை மாத்திரம்தான்.

தனிப்பட்ட சங்கடங்கள்:

ஏற்கனவே கூறியவை பொதுவான காரணங்களாகும். தனிப்பட்ட சில சங்கடங்களுக்காகவும் ஒருவர் ஜமாஅத்தை விடுவது குற்றமில்லை.

1. கடுமையான சுகயீனம்:
சுகயீனம் காரணமாக ஒருவர் ஜமாஅத்துத் தொழுகையை விடலாம். நபி(ஸல்) அவர்கள் மரண வேளையில் சுகயீனமுற்ற போது ‘அபூபக்கரைத் தொழுகை நடாத்துமாறு சொல்லுங்கள்’ என்று கூறினார்கள்.
📚புகாரி, முஸ்லிம்

அதே வேளை, சில சந்தர்ப்பங்களில் இரண்டு நபித்தோழர்களின் தோள்களில் கையைப் போட்டு கால்கள் தரையில் இழுபட வந்து ஜமாஅத்திலும் சேர்ந்துள்ளார்கள் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

“பொதுவாக அறியப்பட்ட முனாபிக் அல்லது நோயாளிகளைத் தவிர வேறு எவரும் ஜமாஅத்துத் தொழுகைக்குச் செல்லாமல் இருப்பதில்லை. நோயாளி இரண்டுபேருக்கு மத்தியில் தொங்கிக் கொண்டாவது பள்ளிக்கு வர முடியும் என்றிருந்தால் கூட வந்துவிடுவார். நபி(ஸல்) அவர்கள் நேர்வழியை எமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அவர் காட்டித் தந்த நேர்வழியில் உள்ளதுதான் அதான் கூறப்பட்ட மஸ்ஜிதில் தொழுவதாகும் என அப்துல்லாஹ்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.
📚முஸ்லிம்- 654-256, தபரானி- 8608

இந்த அறிவிப்பில் நோயும் ஜமாஅத்துத் தொழுகையைத் தவிர்ப்பதற்கான சங்கடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம்.

2. உடல் பருமன்:
ஜமாஅத்துடன் தொழ முடியாத உடல் பருமன் உபாதை உள்ளவர்களும் ஜமாஅத்தைத் தவிர்க்கலாம்.

அனஸ்(ரலி) அறிவித்தார்: “அன்ஸாரிகளில் ஒருவர் தம் உடல் பருமனாக இருந்த காரணத்தினால், ‘என்னால் உங்களுடன் தொழ முடியவில்லை’ எனக் கூறி, நபி(ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்து அவர்களைத் தம் வீட்டிற்கு அழைத்தார். நபி(ஸல்) அவர்கள் அவரின் வீட்டிற்கு வந்தபோது, ஒரு பாயை விரித்து அதில் சிறிது தண்ணீர் தெளித்துப் பதப்படுத்தினார். அப்பாயில் நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். ஜாருத் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் ‘நபி(ஸல்) அவர்கள் லுஹா தொழுகை தொழுதார்களா?’ என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு ‘அன்றைய தினத்தைத் தவிர அவர்கள் லுஹா தொழுததை நான் பார்க்கவில்லை’ என அனஸ்(ரலி) அறிவித்தார்.”
📚புகாரி: 670, 1179

இந்த நபித்தோழர் கடுமையான உடல் பருமன் உபாதை உள்ளவராக இருந்தார். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் வீட்டில் தொழ அனுமதியளித்தார்கள்.

3. அச்ச நிலை:
ஆபத்துக்கள், அச்ச நிலை, எதிரிகளுடைய தடங்கல் இருந்தாலும் ஒருவர் ஜமாஅத்துத் தொழுகைக்கு வருவதைத் தவிர்ப்பதில் குற்றமில்லை. ஊரடங்குச் சட்டம் போன்ற நிலைகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

“யார் அதானைக் கேட்டு தகுந்த காரணம் இல்லாமல் ஜமாஅத்துக்கு சமுகமளிக்கவில்லையோ அவரது அந்தத் தொழுகை ஏற்கப்பட மாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். தகுந்த காரணம், சங்கடம் என்றால் என்ன என வினவப்பட்ட போது அச்சம், மழை” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)
📚அபூதாவூத்- 551

இந்த அறிவிப்பில் தொழுகை ஏற்கப்பட மாட்டாது என்று உள்ளது. இந்தச் செய்தியை இமாம் அல்பானி அவர்கள் பலவீனமானது என்று கூறுகின்றார்கள். அச்ச நிலைக்காக ஒரு ஜமாஅத்தை விடலாம் என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் ஏகோபித்த அபிப்பிராயம் உள்ளது.

4. தயாரான நிலையில் உணவு:
உணவு தயாரான நிலையில் இருக்கும் போது சாப்பிடவேண்டிய தேவையுடையவராக ஒருவர் இருந்தால் ஜமாஅத்துத் தொழுகைக்கு வருவதை விட உணவு உண்பதே சிறந்ததாகும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “உங்களில் ஒருவர் உணவு அருந்திக் கொண்டு இருக்கும்போது தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டால், தம் தேவைகளை முடிப்பதற்கு முன்பாக அவசரப்பட்டு எழுந்து விட வேண்டாம்.”
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)
📚 புகாரி: 674, முஸ்லிம்- 66-559

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘உங்களில் ஒருவரின் இரவு உணவு வைக்கப்பட்டு தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டு விடுமானால் முதலில் உணவை அருந்துங்கள். உணவை உண்டு முடிவது வரை (தொழுகைக்காக) அவசரப்பட வேண்டாம்.) என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி), உணவு வைக்கப்பட்டுத் தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்படுமானால் உணவு அருந்தி முடிவது வரை தொழுகைக்கு வர மாட்டார்கள். அவர்கள் உணவு அருந்திக் கொண்டிருக்கும் போது இமாம் ஓதுவதைச் செவியுறுவார்கள் என நாஃபிஃ கூறுகிறார்.”
📚புகாரி: 673, அபூ தாவூத் 3757

உணவு தயாராக்கப்பட்டு அதானும் கூறப்பட்டால் முதல் உண்ணுங்கள் எனும் சட்டம் யாருக்கு உணவுத் தேவை உள்ளதோ அவர்களுக்கே என ஷாபியாக்கள் கருதுகின்றனர். தேவையுடையவர், தேவையற்றவர் ஆகிய இரு தரப்பாரும் உணவு தயார்படுத்தப்பட்டால் உண்பதே சிறந்தது என்பது இமாம்களான அஹ்மத், தவ்ரீ, இஸ்ஹாக் (ரஹ்) ஆகியோரின் அபிப்பிராயமாகும்.

அம்ர் இப்னு உமய்யா(ரலி) அறிவித்தார். “நபி(ஸல்) அவர்கள் ஆட்டுத் தொடைக் கறியை வெட்டித் துண்டாக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தொழுகைக்கு அழைக்கப்பட்டதும் கத்தியை எறிந்து விட்டு எழுந்து வுழூச் செய்யாமல் தொழுதார்கள்.”
📚புகாரி: 675

உணவு தயாரான நிலையில் அதான் கூறப்பட்டால் உணவை முற்படுத்துங்கள். உண்டு கொண்டிருக்கும் போது அதான் கூறப்பட்டால் தேவையை நிறைவு செய்யும் வரை அவசரப்பட வேண்டாம் என்பது சிறப்புத்தானே தவிர, கடமையல்ல என்பதை இந்த ஹதீஸ் எடுத்துக் காட்டுகின்றது. அல்லது இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் கருத்துப்படி தொழச் சென்றால் உள்ளம் சாப்பாட்டுடன் யாருக்கு தொடர்புபட்டிருக்காதோ அவர் உணவை விட்டு விட்டு தொழச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸ் மூலம் அறியலாம்.

5. மலசல உபாதை:
மலசலம் கழிக்க வேண்டிய நிலையில் இருப்பவர் முதலில் அதைத்தான் செய்ய வேண்டும். ஜமாஅத்துத் தொழுகைக்கு விரையக் கூடாது.

“உணவு தயார் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட நிலையிலும் மலசல உபாதைகளை அடக்கிய நிலையிலும் தொழுகையில்லை” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
📚 முஸ்லிம்- 560-67, அபூதாவூத்- 89, இப்னு குஸைமா- 933

உணவு தயார் பண்ணப்பட்டிருத்தல் என்பது சமைக்கப்பட்டிருப்பதைக் குறிக்காது. தயார் பண்ணப்பட்டு உண்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதையே குறிக்கும் என்பதை இந்த ஹதீஸின் சம்பவம் உணர்த்துகின்றது. ஆயிஷா(Ë) அவர்கள் உணவுத் தட்டு கொண்டு வரப்பட்ட பின் தொழத் தயாரான போது கூறிய செய்தியே இதுவாகும்.

“தொழுகை ஆரம்பிக்கப்பட்டு உங்களில் ஒருவர் கழிவறை செல்ல விரும்பினால் முதலில் கழிவறை செல்லட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுல் அர்கம்(ரலி)
📚 தாரமீ- 1467, அபூதாவூத்- 87, திர்மிதி- 142, இப்னு குஸைமா- 1683 (அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹ் என்கின்றார்.)

8. வெள்ளைப் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை பச்சையாக சாப்பிட்டவர்:
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்: “இந்த (வெங்காயச்) செடியிலிருந்து சாப்பிடுகிறவர் நம்முடைய பள்ளியை நெருங்க வேண்டாம்” என்று கைபர் போரின் போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
📚 புகாரி: 853

வெள்ளைப் பூண்டு, வெங்காயம் என்பவற்றை பச்சையாகச் சாப்பிட்டவர் பல் துலக்கிக் கொண்டு பள்ளிக்கு வர வேண்டும். இவற்றைச் சாப்பிடுவதும் ஜமாஅத்தைத் தவிர்ப்பதற்கான நியாயமான காரணமாக அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வீட்டு வேலையைச் செய்யாமல் பாடசாலை வர வேண்டாம் என ஆசிரியர் கூறினால் வீட்டு வேலையைச் செய்து கொண்டு வாருங்கள் என்று கண்டிப்பாகக் கூறுகின்றார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

எனவே, வெங்காயம், வெள்ளைப் பூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டவர் ஜமாஅத்தைத் தவிர்க்கலாம் என எடுக்காமல் அவர் பல் துலக்கிக் கொண்டு ஜமாஅத்துக்கு வர வேண்டும் என்று எடுப்பதே ஏற்றமானதாகும்.

(தொடரும்…. இன்ஷா அல்லாஹ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *