ஜமாஅத்துத் தொழுகை-2 [பிக்ஹுல் இஸ்லாம்-32]

சென்ற இதழில் ஜமாஅத்துத் தொழுகை கட்டாயக் கடமை என்று கூறுவோரின் ஆதாரங்களை அவதானித்தோம். இந்த இதழில் ஜமாஅத்துத் தொழுகை ஷர்த்தோ, பர்ளு ஐனோ அல்ல என்ற கருத்துடையோரின் ஆதாரங்களை அலசவுள்ளோம்.

01.
தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது 25 அல்லது 27 மடங்கு சிறந்தது என ஹதீஸ்கள் கூறுகின்றன. இந்த ஹதீஸ் ஜமாஅத்துத் தொழுகையின் சிறப்பைக் கூறும் அதே வேளை, தனியாகத் தொழுவதற்கும் நன்மை உண்டு என்பதையும் விபரிக்கின்றது. பர்ழான தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுவது ‘ஷர்த்’ என்றால் ‘ஷர்த்’ கடைப்பிடிக்கப்படாவிட்டால் அமல் பாத்திலாகி (பயனற்றதாகி)விடும். பாத்திலான அமலுக்கு நன்மை இருக்காது. தனித்துத் தொழுவதற்கு நன்மை இல்லை என்றால் அதை எத்தனை மடங்காகப் பெருக்கினாலும் பயன் ஏதும் இல்லை.

உதாரணமாக, தனித்துத் தொழுவதற்கு நன்மை இல்லை. அதாவது, பூச்சியம் நன்மையென்றால் அதை 27 ஆல் பெருக்கினாலும் பூச்சியம்தான் விடையாக வரப்போகின்றது. தனித்துத் தொழுவதற்கு பத்து நன்மைகள் என்றால்தான் கூட்டாகத் தொழுவதற்கு 10×27=270 நன்மை என்று கூற முடியும்.

எனவே, ஐவேளைத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது ‘ஷர்த்’ என்று கூற முடியாது. வலியுறுத்தப்பட்ட கடமை என்று கூறலாம்.

02.
ஜமாஅத்துத் தொழுகைக்கு வராதவர்களின் வீடுகளை தீவைக்கத் தான் நினைத்ததாக நபி(ச) அவர்கள் கூறிய ஹதீஸ் உண்மையில் முனாபிக்குகள் பற்றிப் பேசுகின்றது. அந்த ஹதீஸின் இறுதிப் பகுதியில் பள்ளியில் சதைத்திரட்சியுள்ள எலும்போ அல்லது ஆட்டின் இரண்டு குளம்புகளுக்கிடையே உள்ள இறைச்சித் துண்டுகளோ கிடைக்கும் என்றிருந்தால் கூட அவர்கள் இஷாத் தொழுகையில் கலந்து கொள்வர் என்ற வாசகம் இதை உணர்த்துகின்றது. (புகாரி: 7224)

அவர்கள் முனாபிக்குகள் என்பதால் நபி(ச) அவர்கள் இவ்வளவு கடுமையான வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள். அடுத்து இந்த ஹதீஸில் கூட ஜமாஅத்துத் தொழுகை பர்ழ் கிபாயா என்ற கருத்தை அல்லது சங்கடங்கள் இருந்தால் தவிர்க்கலாம் என்ற கருத்தைத்தான் தருகின்றது.

இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! விறகுகளைக் கொண்டு வந்து சுள்ளிகளாக உடைக்கும்படி நான் உத்தரவு பிறப்பித்துவிட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்புச் செய்யும்படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி ஒருவருக்குக் கட்டளையிட்டுவிட்டு, (கூட்டுத் தொழுகைக்கு வராமல் இருக்கும்) மனிதர்களைத் தேடிச் சென்று, அவர்களின் வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்துவிட வேண்டுமென நான் எண்ணியதுண்டு. என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஓர் எலும்போ அல்லது ஆட்டின் இரண்டு குளம்புகளுக்கிடையேயுள்ள இறைச்சித் துண்டுகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் ‘இஷா’ தொழுகையில் கலந்து கொள்வார்.’ (புகாரி: 7224)

ஜமாஅத்துத் தொழுகை நடாத்துவற்கு ஏற்பாடு செய்துவிட்டு சில இளைஞர்களையும் தன்னோடு அழைத்துக் கொண்டு சென்று தொழுகைக்கு வராத முனாபிக்குகளின் வீடுகளை எரிக்க நினைப்பதாக நபி(ச) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இந்தச் செய்தியில் ஜமாஅத்துத் தொழுகை கட்டாயம் நடக்க வேண்டும். ‘பர்ழ் கிபாயா’ என்பது தெளிவாகின்றது. ஏனெனில், நபியோ அல்லது அவருடன் வீடுகளை எரிக்கச் செல்லும் இளைஞர்களோ இங்கு இந்த ஜமாஅத்துத் தொழுகையில் பங்கு கொள்ள எண்ணியதாகக் கூறப்படவில்லை. குறித்த ஜமாஅத்துத் தொழுகையில் இணைவது ‘பர்ழ் ஐன்’ என்றிருந்தால் ஜமாஅத்துத் தொழுகை நடக்கும் போது வீடுகளை எரிக்கச் செல்ல நபியவர்கள் எண்ணியிருக்க முடியாது. அவர்களும் ஜமாஅத்தில்தான் கலந்து கொள்ள வேண்டும்.

எனவே, இந்த ஹதீஸ் கூட ஜமாஅத்துத் தொழுகை கட்டாயம் இடம்பெற வேண்டும். ஏதேனும் காரணங்களால் அதில் கலந்து கொள்ளக் கிடைக்காதவர் கூடிய நன்மையை இழப்பார் என்ற கருத்தைத்தான் தருகின்றது.

03.
‘நான் மினாவில் மஸ்ஜிதுல் ஹைப்பில் நபியவர்களுடன் சுபஹ் தொழுதேன். தொழுது முடிந்து பார்த்த போது பின்னால் இருவர் தொழாமல் இருந்தனர். அவர்களை அழைத்த நபி(ச) அவர்கள், ஏன் நீங்கள் எங்களுடன் தொழவில்லை? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், இறைத்தூதரே! நாம் நமது இருப்பிடத்திலேயே தொழுதுவிட்டோம் என்றார்கள். இது கேட்ட நபியவர்கள், அப்படிச் செய்யாதீர்கள், நீங்கள் உங்கள் இருப்பிடத்தில் தொழுதுவிட்டு பின்னர் பள்ளிக்கு வந்து அங்கே ஜமாஅத்து நடந்து கொண்டிருந்தால் நீங்களும் ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுங்கள். அது உங்களுக்கு நபிலாக அமையும்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு யஸீத் அல் ஆமிரி
நூல்: தாரமீ: 140, திர்மிதி: 219, அபூதாவூத், நஸாஈ.

இந்த அறிவிப்பை அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்கள் ஸஹீஹானது என்று குறிப்பிடுகின்றார்கள்.

இந்த அறிவிப்பில் ஜமாஅத்துடன் தொழாமல் தமது இருப்பிடத்திலேயே தொழுத அவர்களை நபி(ச) அவர்கள் கண்டிக்கவில்லை. பள்ளியில் ஜமாஅத் நடக்கும் போது பள்ளிக்கு வந்தால் ஜமாஅத்துடன் சேராமல் தனித்திருக்கக் கூடாது என்றுதான் கூறுகின்றார்கள். அத்துடன் இவர்களுக்கு பள்ளிக்கு வர முடியாது எனக் கூறத்தக்க பெரிய சங்கடங்கள் இருந்ததாகவும் தெரியவில்லை. தமது இருப்பிடத்தில் தொழுத அவர்கள் பள்ளி நோக்கி வந்துள்ளார்கள். இந்த அறிவிப்பு தனித்துத் தொழுவதற்கும் வாய்ப்பிருக்கின்றது என்பதை உணர்த்துகின்றது.

04.
”யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. ஜமாஅத் தொழுகையை எதிர் பார்த்திருந்து இமாமுடன் தொழுகிறவருக்குத் தனியாகத் தொழுதுவிட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மையுண்டு’ என்று இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(வ) அறிவித்தார்.’ (புகாரி: 651)

இந்த ஹதீஸின் வாசக அமைப்பைப் பார்க்கும் போது இஷாத் தொழுகையைக் குறிப்பதாகத் தென்படுகின்றது. இஷாத் தொழுகையின் ஜமாஅத்தைத் தாமதிப்பது சிறப்பாகும். ஒருவர் தொழுகையை இமாமுடன் தொழும் வரை எதிர்பார்த்திராமல் தொழுதுவிட்டு உறங்குவதை விட இமாமுடன் தொழுவதை நபி(ச) அவர்கள் சிறப்பித்துப் பேசியுள்ளார்கள். ஆனால், தனித்துத் தொழுதுவிட்டு உறங்குபவரைக் கண்டிக்க வில்லை.

எனவே, ஜமாஅத்துத் தொழுகை பர்ழு கிபாயா என்று முடிவெடுப்பதே பொருத்தமானதாகத் தெரிகின்றது. ஒவ்வொரு ஊரிலும் கட்டாயம் ஜமாஅத்துத் தொழுகை நடைபெற வேண்டும். அனைத்து முஸ்லிம்களும் அதில் கலந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். ஜமாஅத்தாகத் தொழாமல் தனியாகத் தொழுபவர் பலமடங்கு நன்மைகளை இழப்பார். அவரின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும். தனித்துத் தொழுததற்காக அவர் தண்டிக்கப்பட மாட்டார் என்று முடிவெடுப்பதே பொருத்தமாகப் படுகின்றது. அல்லாஹு அஃலம்.

பெண்களும் ஜமாஅத்துத் தொழுகையும்:

பெண்களுக்கு ஜமாஅத்துத் தொழுகை வாஜிப் இல்லை என்பதில் உலமாக்கள் ஏகோபித்த முடிவில் உள்ளனர். ஆனால், அவர்களும் ஜமாஅத்துத் தொழுகையில் பங்கு கொள்வது ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் ஜமாஅத்துத் தொழுகை இருவகையாக அமையலாம்.

01. ஆண்களின் ஜமாஅத்தில் இணைந்து அவர்கள் தொழுவது.
02. பெண்களுக்கு ஒரு பெண் இமாமத் செய்து தொழுவிப்பது.

இந்த இரு முறைக்கும் அனுமதியுள்ளது என்பதே சரியான நிலைப்பாடாகும். ஆண்களுக்கு ஒரு பெண் இமாமத் செய்ய முடியாது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆண்களின் ஜமாஅத்தில் பங்கு கொள்ளல்:
நபி(ச) அவர்களின் காலத்தில் பெண்களும் ஜமாஅத்துத் தொழுகையில் பங்கு கொண்டுள்ளனர். நபி(ச) அவர்கள் பெண்கள் ஜமாஅத்துத் தொழுகைக்காக பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கவில்லை. அதே நேரம் தடை செய்யவும் இல்லை. அவர்கள் பள்ளிக்கு வர அனுமதி கேட்டால் தடுக்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டார்கள்.

பள்ளிக்கு வரும் பெண்கள் உரிய ஆடையுடன் வர வேண்டும். அவர்கள் தமது ஆடையில் வாசனை பூசக் கூடாது. ஆண்களுடன் கலக்கவும் கூடாது என்ற வழிகாட்டலையும் வழங்கினார்கள். முதல் ஸப்(க)பில் ஆண்களும் அதற்கு இறுதி வரிசையில் சிறுவர்களும் அதற்குப் பின்னால் பெண்களும் இருக்க வேண்டும் என்றும் வழிகாட்டினார்கள். தொழுது முடிந்த பின்னர் பெண்கள் உடனே வெளியேறவும் ஆண்கள் சற்றுத் தாமதித்து வெளியேறவும் வேண்டும் என்றும் வழிகாட்டினார்கள்.

ஆனால், பெண்கள் வீட்டில் தொழுவதே சிறப்பானது என்றும் போதித்தார்கள். சிலர் பெண்கள் பள்ளிக்கு வரக் கூடாது என்று கருதுகின்றனர். இதற்கும் நபி(ச) அவர்களின் போதனைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மேலே நாம் கூறியவற்றுக்கான சில ஆதாரங்களை நோக்குவோம்.

‘பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்க வேண்டாம் என நபி(ச) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ர) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களின் மகன் பிலால்(ர) அவர்கள் வல்லாஹி நாம் அவர்களைத் தடுப்போம் என்றார். அது கேட்ட இப்னு உமர்(ர) அவர்கள் தனது மகனை மிக மோசமாகத் திட்டினார்கள். அவர்கள் அவ்வாறு எப்போதும் திட்டியதில்லை. அல்லாஹ்வின் தூதர் கூறியதாக நான் அறிவிக்கும் போது (அதற்கு மாற்றமாக) நாம் தடுப்போம் என்கிறாயா? எனக் கேட்டு கண்டித்தார்கள்.’
அறிவிப்பவர்: ஸலாம் இப்னு அப்துல்லாஹ்
நூல்: முஸ்லிம் 135-442

உம்மு ஸலமா(ர) அறிவித்தார்: ‘நபி(ச) அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன் பெண்கள் எழுந்து விடுவார்கள். நபி(ச) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் அமர்ந்திருந்தார்கள். பெண்கள் ஆண்களைச் சந்திக்காத வகையில் திரும்பிச் செல்வதற்காக நபி(ச) அவர்கள் இவ்வாறு தங்கியிருந்ததாக கருதுகிறேன்’ என்று இப்னு ஷிஹாப் குறிப்பிடுகிறார். (புகாரி 837)

‘வாசனை பூசிய பெண் எங்களுடன் இரவுத் தொழுகையில் பங்கு கொள்ள வேண்டாம் என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(வ)
நூல்: முஸ்லிம் 143-444, அபூதாவூத் 4175

பெண்களுக்குப் பெண் இமாமத் செய்வது தொடர்பாக நாம் அடுத்த இதழில் நோக்குவோம்! இன்ஷா அல்லாஹ்.

தொடரும்……கூறுவதாக அர்த்தம் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.