பைபிளில் முஹம்மத் (06) – பைபிளில் பத்ர் யுத்தம் | கட்டுரை.

இயேசு அல்லாத மற்றுமொரு இறைத் தூதரைப் பற்றி பைபிள் முன்னறிவிப்புச் செய்துள்ளது. அந்த இறைத்தூதர் இஸ்மாயீல் நபியின் பரம்பரையில் அறபு நாட்டில் இருந்து வருவார் என்றும் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. பைபிளில் வந்துள்ள முன்னறிவிப்புக்கள் இயேசுவைப் பற்றியே பேசுகின்றன என கிறிஸ்தவ உலகம் கூறி வருகின்றது. ஆனால், இஸ்மாயீல் நபியின் பரம்பரையில் அறபு நாட்டில் வருவார் என்று கூறப்பட்ட இறைத்தூதர் முஹம்மது நபியே என்பதை இரண்டாம் கருத்துக்கு இடமில்லாமல் உறுதியாகத் தெளிவுபடுத்தி வருகின்றோம்.

இந்தத் தொடரில் மற்றும் சில சான்றுகளைப் பார்க்க இருக்கின்றோம்.

நபி(ச) அவர்கள் மக்காவில் பிறந்து அங்குதான் வாழ்ந்து வந்தார்கள். இந்த இடம் ‘பாரான்’ என பைபிளில் கூறப்படுகின்றது. இங்குதான் இஸ்மாயீ;ல் நபி வாழ்ந்து வந்தார் என பைபிள் கூறுகின்றது. இங்குதான் ‘பெயர்சபா’ எனப்படும் ‘பிஃர் ஸபா’ சபா மலைக் கிணறு ‘ஸம் ஸம்’ கிணறு உள்ளது. இங்கு ஒரு ஆலயம் உண்டு. அதுதான் இப்றாஹீம், இஸ்மாயீல் நபியினால் கட்டப்பட்ட கஃபா மஸ்ஜிதுல் ஹராம் புனித மஸ்ஜிதாகும்.

இங்கு 360 சிலைகளை வைத்து மக்கத்து மக்கள் வணங்கி வந்தனர். முஹம்மது நபி சிலை வணக்கத்தை எதிர்த்து போதனை செய்தார். சிலர் ஏற்றுக் கொண்டனர், பலர் எதிர்த்தனர். ஏற்றுக் கொண்டவர்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வன்கொடுமைகளுக்குள்ளாகினர். ஈற்றில் முஹம்மது நபியும் அவர்களது தோழர்களும் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ‘ஹிஜ்ரத்’ – இடம்பெயர்ந்தனர்.

மதீனாவில் வாழ்ந்த மக்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்தனர். மதீனாவுக்குச் சென்ற முஸ்லிம்களையும் நிம்மதியாக வாழவிடாமல் மக்கத்து மக்கள் தொல்லை கொடுத்தனர். மதீனாவுக்குச் சென்று சரியாக ஒரு வருடத்தில், மதீனா முஸ்லிம்களை அழித்துவிடும் நோக்கில் பெரும்படையைத் திரட்டி மதீனா நோக்கிச் சென்றனர்.

இந்தப் போர் படையை முஸ்லிம்களின் படை ‘பத்ர்’ என்ற இடத்தில் சந்தித்தது. 300 பேர் கொண்ட முஸ்லிம் படை 1000 பேர் கொண்ட மக்கா படையுடன் மோதி மகத்தான வெற்றியையும் பெற்றது. மக்கத்துப் போர் தளபதிகளில் முக்கியமானவர்கள் பலரும் இதில் மடிந்தனர். மக்கத்துப் படை பின்வாங்கி ஓடியது. இந்த செய்திகள் அத்தனையும் பைபிளில் தெளிவாக முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்தவ உலகம் முஹம்மது நபியை ஏற்க வேண்டும். இல்லையென்றால் பைபிளைப் பொய்ப்பிக்க வேண்டும். பைபிளை நம்பிக்கை கொண்டு முஹம்மது நபியை மறுக்க முடியாது. இது குறித்த முன்னறிவிப்புக்களை தெளிவாக நோக்குவோம்.

இஸ்மாயீல் நபிக்கு 12 குழந்தைகள் பிறந்ததாக பைபிளில் கூறப்படுகின்றது. அவர்களது பெயர் விபரத்தை அறிந்து கொள்வது பைபிளின் முன்னறிவிப்பைப் புரிந்து கொள்ள பெரிதும் உதவலாம்.

1. நெபாயோத்
2. கேதார்
3. அத்பியேல்
4. மிப்சாம்
5. மிஷ்மா
6. தூழா
7. மாசா
8. ஆதார்
9. தேமா
10. யெத்தூர்
11. நாபீஸ்
12. கேத்மா

‘பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம், மிஷ்மா, தூமா, மாசா, ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே.’ (ஆதியாகமம் 25:13-15)

இந்தப் பெயர்களை ஓரளவு நினைவில் வைத்துக் கொண்டு இந்த முன்னறிவிப்புக்களை நோக்குவோம்.

‘அரபியாவின் பாரம். திதானியராகிய பயணக்கூட்டங்களே, நீங்கள் அரபியாவின் காடுகளில் இராத்தங்குவீர்கள்.’

‘தேமாதேசத்தின் குடிகளே, நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோய், தப்பி ஓடுகிறவர்களுக்கு அப்பங்கொடுக்க எதிர்கொண்டு போங்கள்.’

‘அவர்கள், பட்டயங்களுக்கும், உருவின கட்கத்துக்கும் நாணேற்றின வில்லுக்கும், யுத்தத்தின் கொடுமைக்கும் தப்பி ஓடுகிறார்கள்.’

‘ஆண்டவர் என்னை நோக்கி: ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த ஒரே வருஷத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போம்.’

‘கேதார் புத்திரராகிய பராக்கிரம வில்வீரரின் தொகையில் மீதியானவர்கள் கொஞ்சப் பேராயிருப்பார்கள் என்றார்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதை உரைத்தார்.’ (ஏசாயா 21:13-17)

இங்கே அறேபியாவின் பாரம் என்று இடம் பெற்றுள்ளது. இதற்கு என்ன அர்த்தம் என்பது எவருக்கும் புரியாத விதத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அறபு பைபிளில் ‘வஹ்யுன் மின் ஜிஹாதி பிலாதில் அறப்’ – அறபு தேசத்தின் புறத்திலிருந்து ஒரு இறைத்தூது செய்தி வரும் என்று இடம் பெற்றுள்ளது. ஆனால், என்ன சொல்லப் படுகின்றது என்பதே புரியாத விதத்தில் அறேபியாவின் பாரம் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இங்கு சொல்லப்படும் முன்னறிவிப்பு அறபு தேசத்துடன் சம்பந்தப்பட்டது என்பது தௌ;ளத் தெளிவானதாகும்.

அடுத்து இந்த முன்னறிவிப்பில் கேதார் கோத்திரம் போரில் தோற்கும் என்று கூறப்படுகின்றது. தேமா தேசத்தவர் இறைத் தூதருடன் போருக்கு அஞ்சி வருபவர்களுக்கு உதவுவார்கள் என்றும் இடம் பெற்றுள்ளது. கேதார் என்பதும் தேமா என்பதும் இஸ்மாயீல் நபியின் பிள்ளைகளின் பெயராகும். கேதார் என்போர் மக்காவாசிகள். தேமா என்போர் மதீனா வாசிகளாவர். இந்த முன்னறிவிப்புக்கு உலகில் வேறு யாருமே உரிமை கொண்டாட முடியாது.

இந்த முன்னறிவிப்பில் கூறப்படும் விடயங்களை அவதானியுங்கள்.

1. அரபு நாட்டில் இருந்து ஒரு இறைத் தூதர் வருவார்.

2. அவர் போதனை செய்யும் போது அவரும் அவரது தோழர்களும் தொல்லைகளுக் குள்ளாவார்கள்.

3. போரிலன் கொடுமைக்கு அஞ்சி அவர்கள் தமது ஊரை விட்டும் ‘தேமா’ – மதீனா தேசத்திற்கு வருவார்கள்.

6. அவர்களுக்கு மதீனாவாசிகள் உதவி செய்வார்கள்.

7. அவர்கள் வந்து ஒரு வருடத்திற்குள்ளேயே ஒரு போர் நடக்கும். அதில் கேதார் குழுவின் முக்கிய வீரர்கள் அழிக்கப் படுவார்கள்.
இந்த முன்னறிவிப்புக்கள் அப்படியே நபி(ச) அவர்களின் வாழ்வில் நடந்தேறியுள்ளது. கேதார், தேமா என்பதெல்லாம் இஸ்மாயீல் நபியுடனும் அரபு நாட்டுடனும் தொடர்புபட்ட முன்னறிவிப்புக்களாகும். இதில் வேறு யாரும் உரிமை கொண்டாடவே முடியாது.

இந்த அடிப்படையில் முன்னைய வேதத்தை உண்மைப்படுத்த வந்த தூதர் என குர்ஆன் முஹம்மது நபியைப் பற்றிக் கூறியுள்ளது. முஹம்மது நபியை ஏற்காவிட்டால் பைபிளின் இந்த முன்னறிவிப்புக்கள் பொய்யாகிவிடும். எனவே, கிறிஸ்தவ உலகு பைபிளை உண்மைப்படுத்த வேண்டுமென்றால் முஹம்மது நபியை ஏற்றேயாக வேண்டும்.

நபி(ச) அவர்கள் மக்காவில் இருந்து மதீனா வந்து ஒரு வருடமான போதுதான் பத்ர் போர் நடைபெற்றது. உண்மையில் முஸ்லிம்கள் போர் செய்வதை விரும்பவில்லை. ஆனால், போர்ப் படையைச் சந்திக்கும் நிலையை அல்லாஹ்தான் ஏற்படுத்தினான். அதற்கான காரணத்தையும் குர்ஆன் கூறுகின்றது.

‘(அபூசுப்யானின் வியாபாரக் கூட்டம், அபூஜஹ்லின் போர்ப்படை ஆகிய) இவ்விரு குழுக்களில் ஒன்றை, அது உங்களுக்கு உரியது என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்த போது, நீங்களோ ஆயுதம் தரிக்காத (வியாபாரக்) கூட்டமே உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென விரும்பினீர்கள். ஆனால், அல்லாஹ்வோ தனது வார்த்தைகளால் சத்தியத்தை நிலை நாட்டிடவும், நிராகரிப்பாளர் களை வேரறுத்துவிடவுமே விரும்புகின்றான்.’

‘குற்றவாளிகள் வெறுத்த போதிலும், சத்தியத்தை நிலை நாட்டிடவும், அசத்தியத்தை அழிக்கவுமே (அவன் விரும்புகின்றான்).’ (8:7-8)

அசத்தியவாதிகளின் ஆணிவேர் ஆட்டம் காண வேண்டும். ஆம், இதைத்தான், கேதார் கோத்திரத்தில் வில் வீரர்களில் எஞ்சி இருந்தவர்கள் கொஞ்சம் பேர்தான் என பைபிள் கூறுகின்றது. பத்ர் யுத்தத்தில் சிலை வணங்கிகளின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். எஞ்சியிருந்த வர்களும் காலப் போக்கில் இஸ்லாத்தில் இணைந்து கொண்டனர்.
தேமா தேசம் என்று இங்கே மதீனா கூறப்படுகின்றது. நபியவர்களும் தஜ்ஜால் (அந்திக் கிறிஸ்து) பற்றிக் கூறும் போது அவன் மதீனாவுக்குள் பிரவேசிக்க முடியாது என்பதைக் கூறினார்கள். அத்துடன் மதீனா பற்றிக் கூறும் போது ‘ஹாதீஹி திய்பா’ இதுதான் தீபாவாகும். இதுதான் தீபாவாகும் என மும்முறை கூறினார்கள். (முஸ்லிம்: 2942) ‘தேமா’ என்பதைத்தான் நபி(ச) அவர்கள் ‘தீபா’ எனக் குறிப்பிடுகின்றார்கள். இந்த அறிவிப்புக்கள் எள்ளளவும் எள்ளின் முனையளவும் சந்தேகமே இல்லாமல் முஹம்மது நபி பற்றி முன்னறிவிப்புச் செய்திருக்கின்றன. கிறிஸ்தவ உலகு இதை ஏற்குமா?

‘சமுத்திரத்தில் யாத்திரை பண்ணுகிறவர் களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந் தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.’

‘வனாந்தரமும், அதின் ஊர்களும், கேதாரியா குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடக்கடவது. கன்மலைகளிலே குடியிருக் கிறவர்கள் கெம்பீரித்து, பர்வதங்களின் கொடு முடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக.’

‘கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக.’

கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்த வீரனைப்போல் வைராக்கிய மூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.’
(ஏசாயா: 42:10-13)

இங்கும் ‘கேதாரியர்’ பற்றிக் குறிப்பிடப்படுகின்றது. கேதாரியர் குடியிருந்த முக்கிய கிராமம் மக்காவாகும். புதிய ஒரு வேதம் வரப்போவது குறித்தும் அந்த வேதத்தை எதிர்ப்பவர்களுடன் போர் நடப்பது குறித்தும் இங்கே பேசப்படுகின்றது. ‘கேதார்’ என்பது இஸ்மாயீல் நபியின் சந்ததியுடன் சம்பந்தப்பட்டது. இதில் இயேசு அடங்கமாட்டார். அந்தப் புதிய வேதம் குறித்த ஒரு சமூகத்திற்கு மட்டுமாக இருக்காது. முழு சமூகத்திற்குமானதாக இருக்கும் என்பதும் இங்கே கூறப்படுகின்றது.
‘எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.’

‘இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.’

‘உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.’

‘சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப் பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.’

‘அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாக திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும்.’

‘ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான் ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் யாவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டு வந்து, கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப் படுத்துவார்கள்.’

‘கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவித்து, அங்கிகரிக்கப் பட்டதாய் என் பலிபீடத்தின்மேல் ஏறும்; என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன்.’
(ஏசாயா: 60:1-7)

இங்கே ‘கேதார்’ நெபாயோத் எனும் கோத்திரங்கள் பற்றி பேசப்படுகின்றன. இவர்கள் இஸ்மாயீல் நபியின் முதல் இரு புதல்வர்களின் வம்சாவழியினராவார்கள் என்பதை ஆதியாகமம் 25:13-15 மூலம் அறியலாம்.

பூமியை இருள் மூடும், காரிருள் ஜனங்களை மூடும். ஆம், இயேசுவுக்குப் பின்னர் சுமார் 600 வருடங்கள் இறைத் தூது செய்தி இல்லாததால் உலகை இருள் மூடியது. முஹம்மது நபி வந்த காலம் ‘அய்யாமுல் ஜாஹிலிய்யா’ – அறியாமைக் காலம் என்றழைக்கப்படுகின்றது.
உலகை அறியாமல் இருள் சூழ்ந்து கொள்ளும் காலப்பகுதியில் கேதார் நெபாயோத் எனும் இஸ்மாயீல் நபியின் பரம்பரையில் வாழும் மக்கா பகுதியில் ஓர் பேரொளி வரும். இதை முதல் வசனம் கூறுகின்றது.

எழும்பிப் பிரகாசி, உன் ஒளி வந்தது, கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது! எனும் வசனம் இதைத்தான் கூறுகின்றது. முஹம்மது நபியைக் குர்ஆனும், நூர் பேரொளி, ஸிராஜுன் முனீரா – ஒளி வீசும் விளக்கு என்று கூறுகின்றது. மக்காவில் ஓர் இறைத்தூதர் வருவார். அந்த இறைத்தூதரை நோக்கி பல நாட்டு மக்களும் பல்லின மக்களும் வருவார்கள் என இ;ங்கே கூறப்படுகின்றது.

மக்காவுக்கு மேகத்தைப் போலவும், புறாக்களைப் போலவும் மக்கள் வருவார்கள் (ஏசாயா 60:08) என்று கூறப்படுகின்றது. வெள்ளை ஆடை அணிந்து அங்கே புறாக்கள் போல் மக்கள் ஒன்று கூடி வருகின்றார்கள்.

அங்கே ஒரு பலிபீடம் இருக்கும். அங்கே மகிமை பொருந்திய ஓர் ஆலயம் இருக்கும்.

மக்கா செல்லும் முஸ்லிம்கள் ஆடு, மாடு, ஒட்டகம் என்பவற்றை அறுத்துப் பலியிட அங்கே பலிபீடம் உள்ளது. மகிமை பொருந்திய ஆலயமும் அங்கே உள்ளது.

பலிபீடமும் மகிமை பொருந்திய ஆலயமும் உள்ள கேதார் நெபாயோத் குலத்தினர் வசிக்கும் பகுதியில் அறியாமை இருள் மூழ்கும் காலத்தில் ஓர் ஒளி பிரகாசிக்கும் என்ற பைபிளின் கூற்று முஹம்மது நபியைத் தவிர வேறு யாருக்குப் பொருந்தும் என்று கிறிஸ்தவ உலகு சிந்திக்க வேண்டும்.

‘தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; சேலா. அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது. அவர் துதியினால் பூமி நிறைந்தது.’

‘அவருடைய பிரகாசம் சூரியனைப் போலிருந்தது. அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின் அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது.’
‘அவருக்கு முன்பாகக் கொள்ளை நோய் சென்றது அவர் அடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.’

‘அவர் நின்று பூமியை அளந்தார்;. அவர் பார்த்துப் புறஜாதிகளைக் கரையப்பண்ணினார்; பூர்வ பர்வதங்கள் சிதறடிக்கப்பட்டன, எங்குமுள்ள மலைகள் தாழ்ந்தது. அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தன.’ (ஆபகூக் 3:3-6)

பாரான் என்பது மக்காவைக் குறிக்கும். தேமா என்பது மதீனாவைக் குறிக்கும். இங்கிருந்து வரும் இறைத்தூதின் துதியால் பூமி நிறையும். அந்தத் தூதரின் வருகையால் பிற ஜாதிகள் கரையும் என பைபிள் கூறுகின்றது. முஹம்மது நபியின் வருகைக்கு முன்னர் ஜாதி அடிப்படையில் மக்கள் பிரிந்திருந்தனர். முஹம்மது நபியின் பிரச்சாரத்தால் பல ஜாதி மக்களும் இஸ்லாத்திற்கு வந்தனர். அவர்கள் இஸ்லாத்திற்கு வந்ததும் அவர்களது ஜாதி அடையாளம் அழிந்துவிடும். இதனால் பிற ஜாதிகள் அவரால் கரைந்து போகும்.

இது பைபிளின் முன்னறிவிப்பாகும். இன்று வரை இது நடந்து வருகின்றது. இஸ்லாத்தின் வளர்ச்சியால் தமது இனம் அழிந்துவிடும் என்ற அச்சம் எல்லா இன மக்களிடமும், நாடுகளிடமும் இன்றுவரை காணப்படுகின்றது.

பைபிள் இவ்வளவு தெளிவாக முஹம்மது நபி பற்றியும் அவரது வருகை, அவர் வரும் இடம், அவர் இடம்பெயரும் இடம், அவரது பணிகள், அதன் பிரதிபலிப்புக்கள் பற்றித் தௌ;ளத் தெளிவாகக் கூறியிருந்தும் கிறிஸ்தவ சகோதரர்கள் அவரை ஏற்க மறுப்பது பைபிளை மறுப்பதாகவே இருக்கும்.

எனவே, கிறிஸ்தவ உலகு முஹம்மது நபியை நம்புவதன் மூலம் மட்டுமே மோட்சத்தை அடைய முடியும். கிறிஸ்தவ உலகு இது குறித்து நிதானமாக இனியாவது சிந்திக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.