அச்சநேரத் தொழுகை | கட்டுரை.

உண்மையில் இது ஒரு தனித் தொழுகை அன்று. அன்றாடம் தொழும் ஐவேளைத் தொழுகையைத்தான் இது குறிக்கின்றது. போர்க்களத்தில் எதிரிகளுடன் சண்டை செய்யும் போது அல்லது எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான பணிகளில் ஈடுபடும் போது தொழும் நேரம் வந்தால் எப்படித் தொழுவது என்பது பற்றிய சட்டதிட்டங்களை உள்ளடக்கிய பகுதிதான் இதுவாகும்.

உண்மையில் போர்காலத் தொழுகை பற்றிய ஹதீஸ்கள், தொழுகையின் முக்கியத்துவத்தையும் ஜமாஅத்துத் தொழுகையின் அவசியத்தையும் அத்துடன் தனித்தனி ஜமாஅத்தாகப் பிரிந்து தொழாமல் ஒரே இமாமின் கீழ் நின்று ஒரு அணியாகத் தொழுவதன் அவசியத்தையுமே வலியுறுத்துகின்றன. அச்சமோ, பயமோ ஏற்பட்டால் முதலில் விடப்படும் அமலாக தொழுகையும் ஜமாஅத்துத் தொழுகையும் இன்று மாறியுள்ளது. இது எமது பலவீனத்தின் வெளிப்பாடாகும்.
அச்சவேளைத் தொழுகைக்கான ஆதாரங்கள்:
அச்சமான வேளையில் தொழுகையின் முறைகளில் சில தக்ஸீர் – சுருக்குதல்களைச் செய்யலாம் என்பதற்கு பின்வரும் வசனத்தை ஆதாரமாகக் கொள்ளலாம்.

‘நீங்கள் பூமியில் பயணிக்கும் போது நிராகரித்தோர் உங்களைத் தாக்குவார்கள் என அஞ்சினால் தொழுகையை நீங்கள் சுருக்கிக் கொள்வதில் உங்கள் மீது குற்றம் இல்லை. நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் உங்களுக்குப் பகிரங்க விரோதிகளாகவே இருக்கின்றனர்.’ (4:101)

பயணத்தில் நான்கு ரக்அத்துக்களை இரண்டாகச் சுருக்கித் தொழுவதற்கும் பயமான சூழலில் தொழும் முறைகளில் சில மாற்றங்களைச் செய்வதற்கும் இந்த வசனம் அனுமதி தருகின்றது.

‘(நபியே) நீர் அவர்களுடன் (போர்க் களத்தில்) இருக்கும் போது அவர்களுக்குத் தொழுகை நடத்தினால் அவர்களில் ஓர் அணியினர் உம்முடன் தமது ஆயுதங்களை ஏந்தியவர்களாக (தொழுவதற்கு) நிற்கட்டும். அவர்கள் சுஜூது செய்து விட்டால் (அணியிலிருந்து விலகி) உங்களுக்குப் பின்னால் இருக்கட்டும். தொழாத மற்ற அணியினர் வந்து உம்முடன் தொழட்டும். அவர்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன் தமது ஆயுதங் களையும் எடுத்துக் கொள்ளட்டும். நீங்கள் உங்கள் ஆயுதங்களிலும் உங்கள் பொருட்களிலும் கவனக்குறைவாக இருந்தால் உங்களை ஒரே தடவையில் தாக்கிவிட நிராகரிப் பாளர்கள் விரும்புகின்றனர். மழையின் காரணமாக உங்களுக்குச் சிரமம் ஏற்பட்டால், அல்லது நீங்கள் நோயாளிகளாக இருந்தால் உங்கள் ஆயுதங்களை வைத்து விடுவதில் உங்கள் மீது குற்றமில்லை. ஆனாலும், நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரும் வேதனையைத் தயார் செய்துள்ளான்.’ (4:102)

மேற்படி வசனம் அச்சநேரத் தொழுகை பற்றி விரிவாகப் பேசுகின்றது. இந்த வகையில் அச்ச நேரத் தொழுகைக்கான நேரடி ஆதாரமாக இரு அமைந்துள்ளது.

அத்துடன் நபி(ச) அவர்களும் அச்ச வேளைத் தொழுகையைத் தொழுதுள்ளார்கள். ஆனால், இந்த சட்டம் நபி(ச) அவர்கள் உயிருடன் இருக்கும் போது மட்டும் பின்பற்றப் படுமா அல்லது அவர்களது மரணத்தின் பின்னரும் இந்த சட்டம் இருக்கின்றதா? என்பதில் அறிஞர்களில் இமாம் அபூ யூசுப் (ரஹ்) மாற்றுக் கருத்தில் உள்ளார்.

‘நீர் அவர்களுக்குத் தொழுவிக்க எழுந்து நின்றால் என நபி(ச) அவர்களைப் பார்த்துக் கூறப்பட்டுள்ளதால் இது நபி(ச) அவர்கள் இருக்கும் போது மட்டும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய முறையாகும் என அவர் கருதியுள்ளார். ஆனால், அது ஆதாரங்களுக்கு முரணாகும்.

A.
‘என்னை எப்படித் தொழக் கண்டீர்களோ அப்படியே நீங்களும் தொழுங்கள்’ என நபி(ச) அவர்கள் பொதுவாகக் கூறியுள்ளார்கள். அதில் அச்சவேளைத் தொழுகையும் அடங்கும்.

B.
நபி(ச) அவர்களின் மரணத்தின் பின் போர்க்களங்களில் நபித்தோழர்கள் இப்படித் தொழுதுள்ளார்கள் என பல அறிவிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. நபி(ச) அவர்கள் இருக்கும் போது மட்டும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய முறை என நபித்தோழர்கள் விளங்கியிருக்க வில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

அலி(வ) அவர்கள் இவ்வாறு போர்க்களத்தில் தொழுதுள்ளார்கள். அபூ மூஸல் அல் அஷ்அரி(வ) அவர்கள் அஸ்பஹான் போரில் இவ்வாறு தொழுதுள்ளார்கள். ஹுதைபதுல் யமான்(வ) அவர்கள் திப்ரிஸ்த்தானில் தொழுதுள்ளார்கள். எனவே, அச்சவேளைத் தொழுகை முறை நபிகளாரின் காலத்துடன் முடிந்துவிட்டது என்பது தவறான முடிவாகும்.

அச்சவேளைத் தொழுகை முறை பற்றி விரிவாக விளக்குவது அலுப்பைத் தருவதுடன் போதிய தெளிவைத் தரமாட்டாது என எண்ணுகின்றேன். ஏனெனில், எமது நடைமுறையில் அது இல்லை எனக் கருதி கூடுதல் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும் என்பதால் அச்சநேரத் தொழுகை முறை பற்றி வந்துள்ள சில ஹதீஸ்களை மட்டும் இங்கே தர விரும்புகின்றேன்.

ஷுஜப் அறிவித்தார்: ‘நபி(ச) அவர்கள் போர்க்களத் தொழுகையைத் தொழுதுள்ளார் களா? என்று ஸுஹ்ரீ இடம் கேட்டேன். ‘நான் நபி(ச) அவர்களுடன் சேர்ந்து நஜ்துப் பகுதியில் போரிட்டிருக்கிறேன். நாங்கள் எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்து அணிவகுத்தோம். நபி(ச) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஒரு பிரிவினர் அவர்களுடன் இணைந்து தொழலானார்கள். மற்றொரு கூட்டத்தினர் எதிரிகளைச் சந்தித்தனர். நபி(ச) அவர்கள் தம்முடன் உள்ளவர்களுடன் ஒரு ருகூவும் இரண்டு ஸஜ்தாக்களும் செய்தனர். பிறகு தொழாத கூட்டத்தினரின் இடத்திற்கு நாங்கள் செல்ல, அந்தக் கூட்டத்தினர் வந்தனர். அவர்கள் நபி(ச) அவர்களுடன் ஒரு ருகூவும் இரண்டு ஸஜ்தாக்களும் செய்தனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தனர். உடனே இவர்களில் ஒவ்வொருவரும் எழுந்து தமக்காக ஒரு ருகூவும் இரண்டு ஸஜ்தாக்களும் செய்தனர்’ என்ற விபரத்தை அப்துல்லாஹ் இப்னு உமர்(வ) கூற அதை ஸாலிம் தமக்கு அறிவித்ததாக ஸுஹ்ரீ விடையளித்தார்.’
(புகாரி: 942)

இறைத்தூதர்(ச) அவர்களுடன் ‘தாத்துர் ரிகாஉ’ போரில் பங்கெடுத்த (நபித்தோழர்களில்) ஒருவர் கூறினார்: ‘நபி(ச) அவர்கள் (அப்போரின் போது) அச்ச நேரத் தொழுகையைத் தொழுதார்கள். (எங்களில்) ஓர் அணியினர் நபி(ச) அவர்களுடன் (தொழுகையில்) அணிவகுத்தனர். இன்னோர் அணியினர் எதிரிகளுக்கு எதிரே அணிவகுத்தனர். அப்போது நபி(ச) அவர்கள், தம்முடன் இருப்பவர்களுக்கு ஒரு ரக்அத் தொழுகை நடத்திவிட்டு அப்படியே நின்றார்கள். (நபி(ச) அவர்களுடன் தொழுகையை நிறைவேற்றிய) அந்த அணியினர் தங்களுக்கு (மீதியிருந்த இன்னொரு ரக்அத்தைத் தனியாகப்) பூர்த்தி செய்து திரும்பிச் சென்று எதிரிகளுக்கு எதிரே அணிவகுத்து நின்றார்கள். பிறகு, (அதுவரை எதிரிகளுக்கு எதிரே நின்றிருந்த) இன்னோர் அணியினர் வந்தனர். நபி(ச) அவர்கள் தங்களின் தொழுகையில் மீதியிருந்த ஒரு ரக்அத்தை இவர்களுக்குத் தொழுகை நடத்திவிட்டு (அப்படியே) அமர்ந்து கொண்டிருந்தார்கள். (இரண்டாவது அணியினர்) தங்களுக்கு (மீதியிருந்த ஒரு ரக்அத்தைப்) பூர்த்தி செய்தார்கள். பிறகு அவர்களுடன் நபி(ச) அவர்கள் சலாம் கொடுத்தார்கள்.’ இதை ஸாலிஹ் இப்னு கவ்வாத்(ரஹ்) அறிவித்தார். ‘ (புகாரி: 4129)

இதில் கூறப்படாத மற்றும் பல வழிமுறைகளும் ஹதீஸ்களில் வந்துள்ளன. ஒரு ரக்அத்துக் கூட தொழலாம்.

‘உங்கள் நபி மூலமாக ஊரில் நான்கும், பயணத்தில் இருண்டும் பயமான சூழலில் ஒரு ரக்அத்தும் தொழுவதை அல்லாஹ் விதியாக்கினான் என இப்னு அப்பாஸ்(வ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.’
(ஸஹீஹ் முஸ்லிம்: 687-6)
அச்ச நிலையில் ஜமாஅத்துத் தொழ முடியாத நிலை இருக்கின்றது. ஆனால், தொழுகையின் நேரம் முடிவதற்குள் நிலைமை சீரடைந்துவிடும் என்றால் தொழுகையைத் தாமதப்படுத்தலாம்.

தொழுகை நேரம் முடிந்துவிடும் என்றால் அவர்கள் தனித்துத் தனியாகத் தொழுது கொள்ளலாம். நின்று தொழ முடியாவிட்டால் நடந்தவர்களாகக் கூட தொழலாம். கிப்லா திசை நோக்கியோ அல்லது வேறு திசை நோக்கியோ எப்படி வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம்.

‘(உரிய முறையில் தொழ முடியாது என) நீங்கள் அஞ்சினால் நடந்தவர்களாகவோ, அல்லது வாகனித்தவர்களாகவோ (தொழுது கொள்ளுங்கள்.) நீங்கள் அச்சம் தீர்ந்தவர்களாகி விட்டால் நீங்கள் அறியாமல் இருந்தவற்றை அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்ததைப் போன்று அவனை (த் தொழுது) நினைவு கூருங்கள்.’ (2:239)

நாஃபிவு அறிவித்தார்: ‘(தனியாகப் பிரிந்து வர முடியாத அளவுக்கு எதிரிகளுடன்) கலந்துவிட்டால் நின்று கொண்டே ஸஹாபாக்கள் தொழுவார்கள்’ என்று இப்னு உமர்(வ) கூறினார். ‘எதிரிகள் இதை விடவும் அதிகமாக இருந்தால் அவர்கள் நின்று கொண்டோ வாகனத்தில் அமர்ந்து கொண்டோ தொழலாம்’ என்று இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(வ) குறிப்பிடுகிறார்கள்.’ (புகாரி: 943)

ருகூஃ, சுஜூத் செய்ய முடியாவிட்டால் சைக்கினை செய்யலாம். எதிரியின் தாக்குதல் காரணத்தால் உரிய நேரத்தில் தொழ முடியாது போனால் அவர்கள் குற்றவாளிகள் அல்லர். நேரம் தவறிவிட்டால் விடுபட்ட தொழுகைகளை ஒழுங்குமுறையில் தொழுது கொள்ளலாம். இதற்குப் பின்வரும் செய்தி ஆதாரமாக அமையும்.

இப்னு அப்பாஸ்(வ) அறிவித்தார்: ‘நபி(ச) அவர்கள் தொழுகைக்காக நின்றார்கள். மக்களும் அவர்களுடன் நின்றனர். நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூற அனைவரும் தக்பீர் கூறினர். நபி(ச) அவர்கள் ருகூவு செய்த போது அவர்களில் சிலர் (மட்டும்) ருகூவு செய்தனர். நபி(ச) அவர்கள் ஸஜ்தாச் செய்தபோது அவர்களுடன் ஸஜ்தாச் செய்தனர். பிறகு இரண்டாவது ரக்அத்துக்காக நபி(ச) அவர்கள் எழுந்தபோது ஸஜ்தாச் செய்தவர்கள் எழுந்து தங்கள் சகோதரர்களைப பாதுகாக்கும் பணியில் ஈடுபட, மற்றொரு கூட்டத்தினர் வந்து ருகூவு செய்து ஸஜ்தாவும் செய்தனர். மக்கள் அனைவரும் தொழுகையில்தான் ஈடுபட்டிருந்தார்கள். ஆயினும் ஒருவர் மற்றவரைப் பாதுகாப்பவர்களாக இருந்தனர்.’ (புகாரி: 944)

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(வ) அறிவித்தார்: ‘அகழ்ப்போரின் போது குரைஷீ இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே உமர்(வ) வந்து ‘இறைத்தூதர் அவர்களே! சூரியன் மறையத் துவங்கும் வரை நான் அஸர் தொழவில்லை’ என்றனர். அதற்கு நபி(ச) அவர்கள் ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நானும் இது வரை அஸர் தொழவில்லை’ என்று கூறிவிட்டு, புத்ஹான் என்னுமிடத்திற்குச் சென்று வுழூச் செய்து விட்டு, சூரியன் மறைந்த பிறகு அஸரையும் அதன் பின்னர் மஃரிபையும் தொழுதனர். ‘ (புகாரி: 945)

அச்சநேரத் தொழுகை பற்றிய சட்டங்கள் இஸ்லாத்தில் தொழுகையின் முக்கியத்துவத்தைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. அதுவும் உரிய நேரத்தில், ஜமாஅத்துடன், ஒரே தலைமையில், ஒன்றாகத் தொழுவதை இஸ்லாம் எவ்வளவு கடுமையாக வலியுறுத்தியுள்ளது என்பதைப் புரிந்தவர்கள் சாதாரண நிலையில் எப்படி தொழுகையை விடுபவர்களாக இருக்க முடியும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.