மஸ்ஜிதுக்குள் மனித மிருகங்களின் வெறியாட்டம்

பேருவலை – மஹகொட மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் எரிப்பும், படுகொலையும் இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் இரத்தக் கறை படிந்த நிகழ்வாகப் பதிவாகி விட்டது.
பேருவளை, தர்கா டவ்ன் பகுதிகளில் பல தியாகங்களுக்கு மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. வீடுகளிலும், பொதுப் பள்ளிகளிலும் பல ஏச்சுப் பேச்சுகள், எதிர்ப்புக்கள், கல்லெறிகளுக்கு மத்தியில் தொடரப்பட்ட பிரச்சாரம், “உண்மை உதயம்” ஆசிரியரும், சகோதரர் தவ்பீக் மதனி அவர்களும் கடத்தப்பட்டுக் கர்ண கொடூரமாகத் தாக்கப்பட்டதன் பின்னர் புது வடிவம் பெற்றது. எமக்கெனத் தனிப் பள்ளிவாசல்களின் அவசியம் உணரப்பட்டது. அதன் பின்னர் தர்கா நகரில் தனிப் பள்ளிவாசல் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு ஜம்இய்யது அன்ஸாரிஸ் சுன்னதுல் முஹம்மதிய்யாவினால் தனியான ஜும்ஆப் பள்ளிவாசல் அமைக்கப்பட்டது.
இவ்வாறே, பேருவளை சீனன் கோட்டை, மஹகொட பகுதிகளிலும் தனி நபர் வீடுகளில் ஏகத்துவப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு சைனா போர்ட்டில் பிரச்சினைகள் எதுவும் இன்றி ஏகத்துவம் வளர்ந்து, ரியாளுஸ் ஸாலிஹீன் ஜும்ஆப் பள்ளியாக மலர்ந்துள்ளது.
மஹகொட பிரதேசத்தில் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. நவாஸ் ஹாஜியார் இல்லத்திலும் மற்றும் பலரின் வீடுகளிலும் முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரம், தகரத்தால் அமைக்கப்பட்ட தற்காலிகப் பள்ளியில் முன்னெடுக்கப்பட்டது.
ஒரு நாள் அதிகாலை ஸுபஹ் தொழுதுகொண்டிருக்கும் போது தொழுகையாளிகளைக் கொலை செய்யும் நோக்கில் கை குண்டு வீசப்பட்டு அல்லாஹ்வின் அருளால் அந்த குண்டு வெடிக்காததினால் ஏகத்துவச் சகோதரர்கள் உயிர் தப்பினர்.
படுகொலை முயற்சி நடந்த அதே இடத்தில், ஜம்இய்யத் அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதியாவினால் “மஸ்ஜிதுர் ரஹ்மான்” என்ற பெயரில் இரு மாடி கொண்ட பிரமாண்டமான மஸ்ஜிதும், அதை ஒட்டி இரு மாடி மத்ரஸாவும், வாசக சாலையும், அத்துடன் சிறிய வைத்திய நிலையம் ஒன்றும் 2002 இல் கிட்டத்தட்ட 12 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு, அமைதியான முறையில் அந்த மஸ்ஜித் சென்ற வெள்ளி வரை இயங்கி வந்தது.
23-07-09 அன்று அங்கு குத்பா உரை நிகழ்த்தியவர் கந்தூரிக்கு எதிராகப் பேசியுள்ளார். புகாரிப் பள்ளியில் இஸ்லாத்தில் குறிப்பிடப்படாத கந்தூரி செய்ய முடியுமாக இருந்தால், ஏகத்துவப் பள்ளியில் கந்தூரிக்கெதிரான இஸ்லாமிய நிலைப்பாட்டைப் பேசப் பூரண உரிமை உள்ளதை எவரும் மறுக்க முடியாது. அதே வேளை, மாற்றுத் தரப்பினர் தமது உரைகளில் ஏகத்துவவாதிகளைக் கேவலமாக விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் பின்னர் சிலர் வெள்ளி மாலை மஸ்ஜிதுக்குக் கல்லெறிந்துள்ளனர். பின்னர் வந்த ஒரு குழு கல்லெறிந்த மஸ்ஜிதைச் சேதப்படுத்தியது மட்டுமன்றி ஒருவரைக் கத்தியாலும் குத்தியுள்ளனர்.
பின்னர் திட்டமிட்டு அரசியல் பின்னணியுடன் காலியிலிருந்து காடையர்களை வரவழைத்துப் பெரும் திரளாகப் பள்ளியைச் சூழ்ந்து பள்ளியைத் தாக்கியுள்ளனர்.
அப்போது பள்ளியில் இருந்த 30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட சகோதரர்களின் மோட்டார் சைக்கிள்கள், புஷ் சைக்கிள்களை ஒன்றாகச் சேர்த்து எரித்துப் பள்ளியைப் பற்ற வைத்துள்ளனர். பள்ளியின் அனைத்துக் கண்ணாடிகளையும் உடைத்துக் காட்டு தர்பார் நடத்தியுள்ளனர்.
அங்கிருந்த சகோதரர்களைக் கதறக் கதறக் கருவறுத்துள்ளனர். வுழூச் செய்யுமிடத்தில் 6 இடங்களில் மாடு அறுத்தது போல் காட்சியளிக்கும் இரத்த வெள்ளம், கலகக்காரர்களிடம் கடுகளவு கூட இஸ்லாமிய உணர்வோ, ஈவு இரக்கமோ இல்லை என்பதற்கான இரத்த சாட்சியங்களாகத் திகழ்கின்றன.
அத்துடன் மத்ரஸாவும், அதனுடனிருந்த அறபு இஸ்லாமிய வாசிகசாலையும் எரிக்கப்பட்டுள்ளது. அறபுக் கிதாபுகள், குர்ஆன் பிரதிகள் எதுவும் இதயமற்றவர்களின் கண்களுக்குப்படவில்லை.
அத்துடன் மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கி வந்த மருத்துவ நிலையம் தகர்த்து எரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நிறுவனங்களினதும் அனைத்துக் கட்டமைப்புக்களும் கச்சிதமாகத் தகர்க்கப்பட்டுள்ளன.
காட்டு மிராண்டிகளின் காட்டு தர்பாரில் இருவர் கோரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 13 பேர் பாரிய வால், கத்தி வெட்டுக் காயங்களுக்குள்ளாகிச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வளவு அநியாயங்களும் சில மணி நேரங்களில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் போது, நடந்து வரும் தூரத்தில் அமைந்துள்ள காவல் நிலையம் கண்ணை மூடிக்கொண்டிருந்துள்ளது. பல முனைகளில் முயற்சி செய்யப்பட்டும் அவர்கள் அசையவில்லை.
கடமை தவறிய காவல் துறையும், அவர்களின் கரங்களைக் கட்டிப் போட்ட அரசியல் அதிகாரிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதே மக்கள் கோரிக்கையாகும்.
இந்த அநியாயத்தைச் செய்தவர்கள், தூண்டி விட்டவர்கள், துணை நின்றவர்கள் அனைவரும் குற்றவாளிகளே! தண்டிக்கப்படவேண்டியவர்களே! அவர்களுக்கு இந்த உலகத்திலேயே உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்க எமது சகோதரர்களும், மனித நேயம் மிக்க நடுநிலை மக்களும் பணியாற்றக் கடமைப்பட்டுள்ளனர்.
இரண்டு உயிர்களுக்காக என்றில்லாவிட்டால் கூட, அல்லாஹ்வின் கலாம் குர்ஆனைத் தீயிலிட்டு அல்லாஹ்வை ஸுஜூது செய்த மாளிகையைக் கேவலப்படுத்திக் காஃபிர்களை விட மோசமாக நடந்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதற்காகவாவது நடுநிலை சகோதரர்களும், இது வரை கந்தூரிக்கு ஆதரவளித்து வந்தவர்களும் தங்கள் நிலை பற்றிச் சிந்தித்து இந்த அநியாயத்திற்கு எதிராக அணி திரளக் கடமைப்பட்டுள்ளனர்.
இதே வேளை,
அந்த இரண்டு உயிர்கள்!
சிந்தப்பட்ட இரத்தங்கள்!
எதுவும் அல்லாஹ்வின் முன் வீண் போகாது!

இவர்களின் பண-பலமும், அரசியல் அதிகாரமும் சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வின் முன் அடிமைப்படும் நாள்வரும். இந்தக் கொடூரங்களுக்கெல்லாம் பின்னால் நின்றவர்களை நிச்சயம் அல்லாஹ் தண்டிப்பான் என்ற உறுதியான நம்பிக்கை நமக்குள்ளது. எனவே, அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் இறுதி வெற்றி எமக்குக் கிடைக்கும் என்ற அடிப்படையில் நாம் நிம்மதி பெறுவோம். அதே வேளை, இந்த உலகத்தில் அவர்களுக்கு உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்கவும் பாடுபடுவோம்!
அந்த விதவைப் பெண்களின் கண்ணீரும், அனாதைகளாக்கப்பட்ட அரும்புகளின் ஏக்கமும் நிச்சயமாக இவர்களை ஒரு நாள் எரித்துப் போடும். அங்கு தொழுகைக்காகக் கூடிய ஆயிரக் கணக்கான மக்களின் அழுகையும், சாபமும் இவர்களுக்கு இவ்வுலகத்திலேயே அல்லாஹ்வின் தண்டனையைப் பெற்றுக் கொடுக்கும் என்பதில் அல்லாஹ்வை நம்பிய எமக்கு நம்பிக்கையுண்டு!
இவ்வேளையில் பாரபட்சமாக நடந்த பேருவலைப் பொலிஸ் அதிகாரிகளையும், அநியாயத்திற்குத் துணை நின்ற ஆன்மிக(?)-அரசியல் தலைமைகளையும், செய்தி ஊடகங்களில் பிழையான தகவல்களைப் பரப்பிய (சன்டே டய்ம்ஸ் போன்ற) ஊடகங்களையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அத்துடன் எமது சகோதரர்கள் பொறுமை காத்து நிதானமாகச் செயற்படவேண்டும். எதையும் சட்ட ரீதியாகப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், சிதைக்கப்பட்ட மஸ்ஜித் குறித்து ஆக்கபூர்வமான முறையில் சிந்தித்துக் காரியமாற்றக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
இந்த நிகழ்வை நல்ல படிப்பினையாக எடுத்து எமது தஃவாவை அமைதியாகவும், நிதானமாகவும் முன்னெடுக்க வேண்டும். எமது உரைகள் அடுத்தவர்களுக்கு உண்மையை உணர்த்துவதாக இருக்க வேண்டுமே தவிர உள்ளங்களைக் காயப்படுத்துவதாக அமைந்து விடக் கூடாது. சத்தியத்தைச் சொல்ல வேண்டும். அதை அழகிய வார்த்தைகளில் நிதானமான நிலையோடு சொல்ல வேண்டும் என்ற பாடத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஓரிருவரின் அவசரப் புத்தியும், அனுபவமும் அமைதியும் அற்ற நிலையும் எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்து விடும் என்பதற்கு இது நல்ல உதாரணமாகும்.
இன்ஷா அல்லாஹ்! இவர்களின் இந்த அக்கிரமம் பேருவலைப் பகுதியில் ஏகத்துவ எழுச்சிக்கும், கந்தூரியின் வீழ்ச்சிக்கும் வழி வகுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!
‘அல்லாஹ்வின் மஸ்ஜித்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழ்படுத்த முயல்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? அச்சமுடையவர்களாகவே அன்றி அவற்றில் நுழைவதற்கு அவர்களுக்குத் தகுமானதல்ல. அவர்களுக்கு இம்மையில் இழிவும் மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.’ (2:114)
குறிப்பு:-
மஹகொட, தர்கா நகர், சைனா போர்ட் ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று ஜும்ஆப் பள்ளிகள் காணப்படுகின்றன. இவற்றில் இரண்டு மஸ்ஜிதுகள் JASM இனால் கட்டப்பட்டதாகும். 1990 களின் இறுதிப் பகுதிகளில் இப்பகுதிகளில் தவ்ஹீத் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இந்த வரலாறுகளையெல்லாம் இருட்டடிப்புச் செய்து விட்டு, TNTJ இணைய தளத்தில் இலங்கை வரலாற்றில் இது வரை காலமும் எந்த ஆலிமும் சொல்லாத அளவுக்கு அவர்களின் ஆலிம் சத்தியத்தை உடைத்துச் சொல்லியிருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

50 வருடங்களாக இலங்கையில் நடக்கும் ஏகத்துவப் பிரச்சாரத்தைத் தமது ஏகபோக உரிமையாக மாற்ற முற்பட்டுள்ளனர். இவ்வளவு தெளிவான விஷயத்திலேயே இப்படிப் பகிரங்கமாகப் பொய் சொல்பவர்கள் தனிப்பட்ட விவகாரங்களில் கூறும் செய்திகளை எவ்வாறு நம்ப முடியும்? அவர்கள் குறிப்பிட்ட ஆலிம் சத்தியத்தைச் சொன்னாலும் அதை முறைகேடாகக் கூறி இலங்கை வரலாற்றிலேயே இதுவரை ஏற்படாத ஒரு கறை படிந்த நிகழ்வுக்குக் காரணமாக அமைந்ததை இவர்கள் பெருமையாகக் கருதுகின்றனர்.
சத்தியத்தைச் சொன்னவர் துணிந்து கந்தூரி நடக்கும் இடத்துக்குச் சென்று கூறியிருந்தால் அவரின் துணிவைப் பாராட்டியிருக்கலாம். அல்லது பேசிவிட்டு பிரச்சினை நடக்கையில் களத்துக்குச் சென்றிருந்தால் பாராட்டியிருக்கலாம். தான் பேசிய பேச்சால் ஏற்பட்ட முறுகலால் கொலை செய்யப்பட்டவர்களையும், காயப்பட்டவர்களையும் பார்க்கவோ, இறந்தவர்களின் ஜனாஸாவில் பங்கேற்கவோ, பொலிஸுக்கெதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவோ முடியாமல் ஓடி ஒழிந்தவர்தான் இலங்கை வரலாற்றில் இதுவரையும் யாரும் கூறாத அளவுக்கு சத்தியத்தைக் கூறியுள்ளாராம். TNTJ இலங்கையில் இரத்தம் சிந்தும் தஃவாக் களமொன்றை உருவாக்க முயற்சிக்கின்றது. இதற்கு இலங்கை மக்களே நீங்கள் இடமளிக்க விரும்புகிறீர்களா?
Picture137 125
Picture137 127
Picture137 147

Picture137 184
Picture137 140
Picture137 151
Picture137 132
Picture137 181
Picture137 126
Picture137 138
Picture137 139
Picture137 146
Picture137 179
Picture137 180
Picture137 149
Picture137 130
Picture137 131
Picture137 119
Picture137 118
Picture137 162
Picture137 170
Picture137 164
Picture137 124
Picture137 124
Picture137 124

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.