மத்ரஸாக் கல்வி! தீவிரவாதத்தைப் போதிக்கின்றதா? | Sheikh Ismail Salafi | Unmai Udayam | Oct 2019.

அரபு மத்ரஸாக்கள் பற்றிய சர்ச்சைகளும், சந்தேகங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. நூற்றாண்டுகளைத் தாண்டி இயங்கிவரும் அரபுக் கல்லூரிகள் கூட அடிப்படைவாதத்தையும், தீவிர வாதத்தையும் போதிக்கும் தளங்களாக சந்தேகக் கண் கொண்டு நோக்கப்படும் துர்ப்பாக்கிய நிலை உருவாக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை அரபு மத்ரஸாக்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து காலத்தின் தேவைக்கு ஏற்ப தகுதியும், திறமையும் வாய்ந்த உலமாக்களை உருவாக்கத்தக்க மாற்றங்களையும் சீர்திருத்தங் களையும் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

மத்ரஸா – அறிமுகம்:
“தரஸ” என்றால் கற்றான், படித்தான் என்பது அர்த்தமாகும். மத்ரஸா என்றால் கற்கும் இடம் என்பது அர்த்தமாகும். பாடசாலை, கல்லூரி – ஸ்கூல் என்பதைத்தான் மத்ரஸா என்று அரபியில் கூறப்படுகின்றது.
அரபு நாடுகளில் அவ்வந்த நாட்டு கல்வித்திட்டத்தைக் கற்பிக்கும் கல்விக் கூடங்கள் மத்ரஸா என்றே அழைக்கப் படுகின்றன. கல்லூரிகளின் தராதரத்துக்கு ஏற்ப மத்ரஸா, மஃஹத், குல்லிய்யா, ஜாமிஆ என அழைக்கப் பட்டாலும் இலங்கையில் பொதுவாக தராதரத்தின் அடிப்படையில் இல்லாமல் பொதுவாக அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இப்பெயர்களைச் சூட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையும், மத்ரஸாக்களும்:
இலங்கையில் குர்ஆன் மத்ரஸா – அரபு மத்ரஸா என இருவகை சொற்பதங்கள் முஸ்லிம்களின் மரபில் உள்ளது.

குர்ஆன் மத்ரஸா:
குர்ஆன் மத்ரஸா என்பது அவ்வப் பகுதிகளில் வசிக்கும் சிறுவர்களுக்கு குர்ஆனை ஓதுவதற்கு கற்பிப்பதுடன் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களைப் போதிப்பதற்காகவும் குறிப்பிட்ட பிரதேச பள்ளியின் ஏற்பாட்டில் நடக்கும் பள்ளிக் கூடங்களைக் குறிக்கும் . சிலவேளை தனியாரும் இத்தகைய மத்ரஸாக்களை நடத்தி வருகின்றனர். இது இலங்கை பூராக எல்லா ஊர்களிலும் நடை முறையில் உள்ளது. சிலபோது ஒரு ஊரில் பல குர்ஆன் மத்ரஸாக்களும் இருப்பதுண்டு.

பொதுமக்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே இதனை மக்தப், ஓதப்பள்ளி என்றெல்லாம் அழைத்து வருகின்றனர். இதனை இலங்கையில் ஜம்இய்யத்துல் உலமா ஒரு பாடத்திட்டத்திற்குள் வடிவமைத்து ‘மக்தப்’ என்ற பெயரில் இயக்கி வருகின்றது. அனைத்து குர்ஆன் மத்ரஸாக்களும் இந்த திட்டத்தின் அடிப்படையில் இயங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அரபு மத்ரஸா:
அரபு மத்ரஸா என்பது இரு பிரிவுகளாக இயங்கி வருகின்றது. ஒன்று ஹிப்ழ் பிரிவு. இந்தப் பிரிவில் பெரும்பாலும் 6 ஆம் வருடத்திற்குரிய மாணவர்கள் இணைக்கப்பட்டு முழுக் குர்ஆனையும் மனனமிடுவதற்கு பயிற்சி யளிக்கப்படும். சில ஊர்களில் ஊர் மஸ்ஜிதில் காலை, மாலை வேளைகளில் மாணவர்கள் ஒன்று கூடி குர்ஆனை மனனமிடுவதும் உண்டு. இவ்வாறான முயற்சியினூடாக குர்ஆனை முழுமையாக மனனமிட்ட ஆயிரக்கணக்கான ஹாபிழ்கள் இலங்கையில் உருவாக்கப் பட்டுள்ளனர். வேறு எந்த வேதங்களும் அவ்வந்த மக்களால் முழுமையாக மனனமிடப்பட்டதாக அறிய முடியாதுள்ள நிலையில் இந்தச் சின்ன நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் ஹாபிழ்கள் உருவாக்கப்பட்டுள்ளமை இத் திட்டத்தின் வெற்றி மட்டுமல்லாது எமது குர்ஆனின் புனிதத் தன்மைக்கும், இலகுத்தன்மைக்கும் எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது.

கிதாபுப் பிரிவு:
பெரும்பாலும் இப்பிரிவு 7 வருடங்களைக் கொண்டதாக அமைந்திருக்கும். ஆரம்ப காலங்களில் 7ம் வருடம் வரை பாடசாலைக் கல்வியைக் கற்றவர்கள் இதில் இணைத்துக் கொள்ளப்பட்டு வந்தனர். இன்று சில மத்ரஸாக்கள் O/L முடித்தவர்களை இணைத்து 5 வருடத்தில் இக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்கின்றன.

இப் பிரிவில் கற்றுத் தேறுபவர்கள் மௌலவி, அல்ஆலிம் என்ற பட்டத்தைப் பெறுவர். இஸ்லாத்தில் புரோகிதம் இல்லை. என்றாலும் இவர்களை அறிமுகப்படுத்துவதற்காக இஸ்லாமிய மத குருக்களை உருவாக்கும் கற்கை நெறி என்று இதனை அறிமுகப்படுத்தலாம்.

இங்கே குர்ஆன், ஹதீஸ், இஸ்லாமிய வரலாறு மற்றும் ஹதீஸ் கலை, பிக்ஹ் – இஸ்லாமிய சட்டக்கலை, அல்குர்ஆன் விளக்கம் – தப்ஸீர், குர்ஆனிய கலைகள் (உலூமுல் குர்ஆன்) என்பன போன்ற கலைகளும் கற்பிக்கப் படுகின்றன.

பொதுவாக அரபு மத்ரஸாக்கள் மார்க்கக் கல்விக் கூடங்களாகப் பார்க்கப்படுவதுண்டு. இலங்கையில் இயங்கி வந்த ஆரம்பகால மத்ரஸாக்கள் சிலவற்றில் மேலே குறிப்பிட்ட சில கலைகள் மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்தன. இருப்பினும் நாட்டில் உள்ள முன்னோடி அரபு மத்ரஸாக்கள் சிலவற்றில் இலங்கைப் பாடத் திட்டத்தையும், மௌலவி கற்கை நெறியையும் இணைத்து O/L A/L பொதுப் பரீட்சைகளையும் மாணவர்கள் எதிர்கொள்ளும் விதத்தில் கல்வித் திட்டத்தை மாற்றியமைத்ததன் பின்னணியில் இன்று பெரும்பாலான அரபு மத்ரஸாக்கள் இந்த அடிப்படையில் இயங்க ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.

ஏன் அரபு மொழி?:
ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் நாட்டில் சிலருக்கு அரபு மொழி மீது வெறுப்பு உண்டாகியுள்ளது. சிலர் இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் இருக்கும் போது ஏன் அரபு கற்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

அரபு என்பது ஒரு மொழி என்ற அடிப்படையில் யார் வேண்டுமானாலும் அதைக் கற்கலாம். ஏன் கற்கிறீர்கள் என விளக்கம் பெற கேள்வி கேட்கலாமே தவிர கற்பதை எதிர்த்து கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை. யாரும் எந்த மொழியையும் கற்கலாம் எனும் போது ஏன் அரபு கற்கிறீர்கள் என எதிர்த்து நிற்பது மனித உரிமை மீறலாகும்.

இந்த நாட்டில் தொழில் நோக்கத்திற்காக சைனீஸ், கொரிய மொழி, ஜப்பான் மொழி என்பன கற்கப்பட்டு வருகின்றன. இலங்கை மக்கள் ஜப்பான், கொரியா, போன்ற நாடுகளில் தொழில் செய்வதை விட அதிகமாக அரபு நாட்டில் தொழில் செய்துவரும் நிலையில் அரபு மொழியை ஏன் கற்க வேண்டும் என்ற கேள்வி உலக அறிவற்ற அறிவீனர்களால் எழுந்ததாகவே நோக்க வேண்டியுள்ளது.

அத்துடன் இலங்கை O/L பாடத்திட்டத்தில் அரபு ஒரு பாடமாகக் கற்பிக்கப்படுகின்றது. இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் அரபுப் பிரிவு உள்ளது. O/L சித்தியடையாதவர்கள் அரசியல் தலைவர்களானால் இத்தகைய கேள்விகளை எதிர்கொண்டுதான் தீர வேண்டும்.

முஸ்லிம்கள் ஏன் அரபைக் கற்கின்றனர் என்றால் எல்லா முஸ்லிம்களும் கட்டாயம் குர்ஆன் ஓத வேண்டும். இஸ்லாத்தில் மதகுருமார்கள் மட்டுமின்றி அனைவரும் குர்ஆனை ஓதியாக வேண்டும். இதற்காக குர்ஆன் மத்ரஸாக்களில் குர்ஆன் ஓதுவதற்கு போதிய அளவு அரபு எழுத்துக்கள் கற்பிக்கப்படுகின்றன. இவ்வாறே அரபுக் கல்லூரிகளில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழியில் இருப்பதால் அங்கு அரபு மொழி கற்பிக்கப்படுகின்றன. இவ்வடிப்படையில் பாளி மொழிக்கென தனியாக பல்கலைக்கழகம் உள்ளது. எப்படி பாளி, சமஸ்கிருதம் என்பன வேத மொழிகளாக உள்ளனவோ அவ்வாறே அரபும் உயிர்வாழும் அதிக மக்களால் பேசப்படும் வேத மொழியாக உள்ளது.

பௌத்த, இந்து மதத்தினர்கள் தமது மதம் சார்ந்த மொழியை கற்பித்து அதைப் பரப்புவதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்களது வேத மொழியை அவர்கள் சார்ந்த சமூகத்திற்கு கற்றுக் கொடுக்கவில்லை என்பதற்காக அரபு மொழிக்கும் அரபு மத்ரஸாக்களுக்கும் எதிராகப் பேசுவது ஆரோக்கியமானது அல்ல.

இலங்கையில் அதிக அரபு மத்ரஸாக்கள் உள்ளன என்ற கேள்வியும் உள்ளது. இலங்கை முஸ்லிம்களிடம் தேவைக்கு அதிக மத்ரஸாக்கள் உருவாக்கியுள்ளமை உண்மை என்றாலும் இது பிற சமூக மக்கள் எதிர்க்க வேண்டிய அம்சம் அல்ல. பொதுவாக சிலர் பாடசாலைக் கல்வியில் நாட்டம் போதாமை, ஒழுக்க ரீதியான பிரச்சினைகள், மார்க்கத்தின் மீது கொண்ட பற்று என்பவற்றால் இன்று அதிகமாக மத்ரஸாக்களில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக ஒழுக்க ரீதியான சீர்கேடுகளுக்குப் பயந்த பெற்றோர், பெண் பிள்ளைகளை அதிகம் மத்ரஸாக்களில் இணைத்து வருகின்றனர்.

பிற சமூக மக்களும் மார்க்கத்தைக் கற்க வேண்டும் என ஆர்வப்பட்டால் அவரவர் சமயத்தைப் போதித்க சமயக் கூடங்களை நிறுவுவதில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. முஸ்லிம்கள் தமது மார்க்கத்தைத் தாம் கற்று மத்ரஸாக்களை அமைப்பதை இனவாதிகள் ஏன் எதிர்க்க வேண்டும்?

அரபு மத்ரஸாக்களும் தேசத்துக்கான பங்களிப்பும்:
இன்று இலங்கையில் இயங்கிவரும் அரபு மத்ரஸாக்களில் கற்றவர்கள் சமூகத்திற்குப் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும், விட்டுக் கொடுப்பையும் போதித்து வருகின்றனர். உயர்கல்வி மற்றும் அரச சேவைகள், கற்பித்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். அரபு மத்ரஸாக்கள் நாட்டுக்கு நல்ல பிரஜைகளை உருவாக்கி வருகின்றன. நாட்டுக்கு அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தருவதிலும் இவர்களுக்குப் பங்குள்ளது. இவ்வாறு அரபு மத்ரஸாக்களில் கற்று வெளியானவர்களால் நாடும், சமூகமும் நல்ல பல அணுகூலங்களை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அரபு மத்ரஸாக்கள் தீவிரவாதத்தைப் போதிக்கின்றதா?:
இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் இந்தக் கேள்வி பலமாக எழுந்துள்ளது. இதற்கு சிறு நியாயமான காரணங்கள் இல்லாமல் இல்லை. இலங்கை ஏப்ரல் 21 தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி அரபு மத்ரஸாவில் கற்றவர் என்ற அடிப்படையில் இந்த சந்தேகம் வலுவடைந்துள்ளது.

முதலில் இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட அனைவரும் அரபு மத்ரஸாக்களில் கற்றவர்கள் அல்லர். பல்வேறு துறைகளில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கற்றவர்கள் இதனுடன் சம்மந்தப்பட்டுள்ளனர். அப்படி இருக்கும் போது மத்ரஸா கல்வியில் மட்டும் எப்படி சந்தேகப்பட முடியும்?

அடுத்து இவரது இந்த பயங்கரவாத செயல்பாட்டுடன் இவரது மத்ரஸாவில் கற்ற வகுப்பு நண்பர்களாக இருந்தவர்கள் கூட சம்மந்தப்படவில்லை எனும் போது அவர் கற்ற மத்ரஸாவில் தீவிரவாதம் போதிக்கப்பட்டிருக்க முடியுமா? இலங்கையில் 250க்கும் அதிகமான மத்ரஸாக்கள் உள்ளன அவைகளில் சில நூறு வருடங்களைத் தாண்டிவை. 250க்கும் மேற்பட்ட மத்ரஸாக்களில் பல வருடங்களாகப் படித்து வெளியேறிய பட்டதாரிகள், இடையில் விலகியவர்கள் பல்லாயிரம் பேருக்கும் மத்தியில் 10 அரபுக் கல்லூரி பட்டதாரிகளைக் கூட பயங்கரவாதிகளால் ஈர்க்க முடியவில்லை என்றால் இந்த மத்ரஸாக்கள் தீவிரவாத்த்திற்கு எதிரான கல்வியைத்தான் போதித்துள்ளன என்பது மிக உறுதியாகும்.

இந்த அரபு மத்ரஸாக்களில் கற்ற அறிஞர்கள் அன்பையும், பொறுமையையும் கட்டுக் கோப்பையும் அதிகமதிகம் போதித்ததால்தான் தீவிரவாதிகளால் மக்களை ஈர்க்க முடியாமல் போனது. சில நண்பர்களையும் குடும்ப உறுப்பினர் களையும் மட்டுமே அவர்களால் ஈர்க்க முடிந்தது.

முஸ்லிம்களுக்கு எதிராக நூற்றுக் கணக்கான இனவாத செயல்பாடுகள் நடத்தப்பட்டு வந்த நிலையிலும், இஸ்லாத்திற்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டும் பயங்கரவாதிகளால் மக்களைத் திரட்ட முடியாது போனமைக்கு அரபு மத்ரஸாக்களில் கற்ற மார்க்க அறிஞர்களின் வழிகாட்டல்களே முக்கிய காரணமாகும். இந்த அடிப்படையில் அரபு மத்ரஸாக்கள் தேசத்தின் பாதுகாப்பிற்குப் பாரிய பங்காற்றியுள்ளன என்பது கண்கூடு.

இன்று இனவாதத்தையும், மதவாதத்தை யும் – மக்கள் மனங்களில் பல மதகுருக்கள் விதைத்து வருகின்றனர். இதற்கு நிச்சயமாக அவர்கள் பின்பற்றும் மார்க்கமோ அவர்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுத்த மத பீடங்களோ காரணமாக இருக்க முடியாது. அவர்களின் இயல்பும் குடும்ப மற்றும் சமூகப் பின்னணியும், அவர்களுக்குப் பின்னால் இருக்கும் தீய சக்திகளும், சுய விருப்பு-வெறுப்புக்களுமே முக்கிய காரணங்களாக இருக்கும். இந்த அடிப்படையில் அரபு மத்ரஸாக்களில் கற்ற ஒருவர் தீவிரவாத செயல்பாட்டில் ஈடுபட்டதால்அரபு மத்ரஸாக்கள் தீவிரவாத்த்தைப் போதிக்கின்றன என்ற குற்றச்சாட்டு போலியானதாகும்.

இன்று அரச அதிகாரிகள் இலஞ்சம் வாங்குகின்றனர். அவர்களுக்கு எந்த பாடசாலையில் இலஞ்சம் வாங்குமாறு போதிக்கப் பட்டது? அதிகாரிகள் ஊழல் செய்கின்றனர். மதகுருக்கள் மற்றும் உயர்அந்தஸ்த்தில் உள்ளவர்கள் கூட பாலியல் குற்றத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு எங்கும் இது போதிக்கப்படவில்லை. இருப்பினும் அவர்களது இயல்பு, குடும்பப் பின்னணி, சமூகக் கட்டமைப்பு, தவறான தொடர்புகள் போன்றவையே அவர்களை இந்நிலைக்கு உள்ளாக்குகின்றன.
தீவிரவாதம் சிலரது உள்ளத்திலும் உடம்பிலும் ஊறிப்போயுள்ளது. அது சிலரின் குறையே அல்லாமல் அவர்களுக்கு வழங்கப்பட்ட போதனையின் குறை அல்ல. எனவே அரபு மத்ரஸாவில் கற்ற ஒருவர் தீவிரவாத செயற்பாட்டில் ஈடுபட்டதற்காக அரபு மத்ரஸாக்களில் தீவிரவாதம் போதிக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு அர்த்தம் அற்றது. இஸ்லாத்தின் வளர்ச்சி மீதும் முஸ்லிம்கள் அளவுக்குத் தமது மக்களை மார்க்க ஆர்வம் உள்ளவர்களாக ஆக்க முடியவில்லையே என்ற பொறாமையினாலும் எழுந்த போலிக் குற்றச்சாட்டே இதுவாகும்.

மத்ரஸா கல்வியில் பல மாற்றங்கள், திருத்தங்கள் தேவை என்பது முஸ்லிம் சமூகத்தின் உள்ளகப் பிரச்சினையாகும். மத்ரஸா கல்வித்திட்டத்தின் மீது சந்தேகம் இருந்தால் அதை அரசு இன,மதவாத போக்கில் இல்லாது நடுநிலை மனதுடன் கண்காணிப்பது வரவேற்கத் தக்கதே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.