மக்கா விபத்தை ஏன் அல்லாஹ் தடுக்கவில்லை?

            மக்காவில் கிரேன் விழுந்த விபத்தில் சுமார் 107 பேர் பலியானதோடு 238 பேர் காயமடைந்துள்ளனர். பொதுவாகவே முஸ்லிம்கள் அல்லாஹ்வின் விதியின் மீது நம்பிக்கை வைப்பதால் எது நடந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் என்று நம்பிவிட்டுப் போய்விடுவர்.

இம்முறை மக்கா விபத்தை ஏராளமான மக்கள் இணையதளங்களினூடாகவும், சமூக வலைத்தளங்களினூடாகவும் கண்ணுற்றனர். இதனால் சில மாற்று மதத்தவர்கள் அபயமளிக்கப்பட்ட பூமியான மக்கா பூமியில் அவ்விபத்தை ஏன் அல்லாஹ்வினால் தடுக்க முடியாமல் போய்விட்டது? என்ற தோரணையில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மற்றும் சில மாற்று மத சகோதரர்கள் துக்கம் விசாரிப்பது போல் பாசாங்கு செய்து கொண்டு உங்களது புனிதத் தலத்திற்குச் செல்பவர்களுக்கு அதுவும் அபயமளிக்கப்பட்ட பூமிக்குச் செல்பவர்களுக்கு இப்படியெல்லாம் ஏற்படுகின்றதே என்ற தோரணையில் கதையை நகர்த்திச் செல்கின்றனர்.

முஸ்லிம்களில் சிலர் கூட அல்லாஹ்வின் விருந்தினர்களான ஹாஜிகளுக்கு இப்படி நடக்க வேண்டுமா? என எண்ணும் விதத்தில் சிந்திக்கின்றனர்.

மக்கா விபத்து நடந்ததே அல்லாஹ்வின் நாட்டப்படிதான் என்பதே இஸ்லாத்தின் நம்பிக்கை! நன்மை, தீமை அனைத்தும் அவன் விதித்த விதியின் அடிப்படையில்தான் நடக்கின்றது என்பதே இஸ்லாமிய நம்பிக்கையாகும். மக்கா விபத்தை அல்லாஹ் தடுக்க நாடியும் தடுக்க முடியாமல் போனது (நஊதுபில்லாஹ்!) என்றால்தான் ஏன் தடுக்கவில்லை என்று கேட்க முடியும். இது போன்ற நிகழ்வுகள் உண்மையான முஸ்லிமைப் பொருத்த வரையில் அவனுக்கு அருளாகவே அமைகின்றன. நபி(ச) அவர்களது காலத்திலும் இது போன்ற விபத்துக்கள் நடந்துள்ளன.

    ‘இப்னு அப்பாஸ்(வ) அறிவித்தார். (இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் தம் வாகனத்தின் மீதிருந்தார். திடீரென தன்னுடைய வாகனத்திலிருந்து அவர் கீழே விழுந்துவிட்டார். அது அவரின் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அப்போது நபி(ச) அவர்கள் ‘அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரண்டு ஆடைகளால் கஃபனிடுங்கள்; அவரின் உடலுக்கு நறுமணம் பூசவேண்டாம்;, அவரின் தலையை மறைக்கவும் வேண்டாம்;. ஏனெனில், (இஹ்ராம் அணிந்திருந்த) அவர் கியாமத் நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்ப வராக எழுப்பப்படுவார்’ எனக் கூறினார்.’  (புஹாரி: 1265, 1266, 1268)

    இஹ்ராம் உடையணிந்த நிலையில் மரணித்தவர்கள் அதே நிலையில் தல்பியா கூறியவாறே மறுமையில் மீண்டும் எழுப்பப்படுவார்கள் எனும் போது தூய்மையான உள்ளத்துடன் ஹஜ் செய்யச் சென்றிருக்கும் நிலையில் இந்த விபத்தில் உயிரை இழந்தவர்கள் உண்மையில் பாக்கியசாலிகள் அல்லவா?

திடீர் விபத்துக்கள், தீராத நோய்கள், தொற்று நோய்கள் கூட நல்ல நிலையில் உள்ள மக்களுக்கு அருளாகும் என நபிமொழிகள் கூறுகின்றன.

    ‘நபி(ச) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(Ê) கூறினார்கள். நான் இறைத்தூதர்(ச) அவர்களிடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அது, தான் நாடியவர்களின் மீது அல்லாஹ் அனுப்புகிற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கை யாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்’ என்று தெரிவித்தார்கள். மேலும், ‘கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமை யுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள (விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்’ என்று கூறினார்கள்.’ (புஹாரி: 3474)

    ”உயிர்த்தியாகி என்று யாரைக் கூறுவீர்கள்?’ என நபி(ச) அவர்களின் தோழர்களிடம் கேட்ட போது, ‘அல்லாஹ்வின் பாதையில் போராடி மரணிப்பவர்களையே ‘ஷஹீத்’ (உயிர்த்தியாகி) என்று கூறுவோம்’ என தோழர்கள் கூறினார்கள். அதற்கு நபியவர்கள், ‘அப்படியாயின் எனது சமூகத்தில் உயிர் தியாகிகள் குறைந்து போவார்கள்’ என்று கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள் ‘அப்படியாயின் உயிர்த்தியாகிகள் யார் யாரஸூலுள்ளாஹ்?’ என்று கேட்டனர். அதற்கு நபியவர்கள், ‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுபவர் உயிர்த்தியாகியாவார். அல்லாஹ்வின் பாதையில் மரணிப்பவர் உயிர்த்தியாகியாவார். கொலரா நோயால் மரணிப்பவர் உயிர்த்தியாகியாவார். வயிற்று வழியால் மரணிப்பவர்கள் தியாகிகளாவார்கள். நீரில் மூழ்கி மரணிப்பவர்கள் உயிர்த்தியாகி களாவார்கள்.’ (முஸ்லிம்: 1915)

    (மற்றும் சில அறிவிப்புக்களில் தீயில் எரிந்து மரணிப்போர், கட்டிடங்கள் இடிந்து விழுந்து மரணிப்போர் ஆயியோரும் இணைத்துக் கூறப்பட்டுள்ளனர்.)

எனவே, நல்ல உள்ளத்துடன் இந்த விபத்தில் மாட்டியவர்கள் பாக்கியசாலிகள் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். தினம் தினம் பாதையோர விபத்துக்களில் எத்தனையோ மக்கள் கோர விபத்துக்களை சந்தித்து மரணிப்பதைப் பார்த்திருக்கின்றோம். இப்படியான மரணங்களுக்கு மத்தியில் புனிதத் தளத்தில் நல்லதொரு பணியை செய்யச் சென்றுள்ள நேரத்தில் தூய்மையான நிலையில், பாவங்களை விட்டும் ஒதுங்கிய நிலையில் இப்படியொரு மரணத்தைச் சந்திப்பது எவ்வளவு பாக்கியமானது என்று சிந்தித்துப் பாருங்கள்.

கோரமான விதத்தில் மரணித்த சிலரின் முகங்கள் புன்னகை பூத்த நிலையிலேயே மரணத்தைத் தழுவியுள்ள காட்சிகளைக் காணலாம்.

எனவே, இது போன்ற விபத்துக்கள் ஒரு போதும் இஸ்லாத்திற்கு பலவீனமாகாது! இது ஈமானுக்கும் இஸ்லாத்திற்கும் பலம் சேர்க்கும் அம்சமாகவே நோக்கப்பட வேண்டும்.

மக்கா பாதுகாக்கப்பட்ட பூமி என்றால் அங்கு எந்த பாதிப்பும், விபத்தும் ஏற்பட மாட்டாது என்பது அர்த்தமல்ல. கஃபாவை அல்லாஹ் பாதுகாப்பான், அங்கு தஜ்ஜால் நுழைய முடியாது. புனித பிரதேசத்தில் பழிக்குப் பலி வாங்கக் கூடாது போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

அங்கு சென்றவர்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்பது அதன் அர்த்தம் இல்லை. அங்கு ஆபத்துக்கள், தீங்குகள் எற்படும் வித்தில் எவரும் நடக்கக் கூடாது என்பதே இதன் அர்த்தம். என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.