பெண்ணே பெண்ணே! – (தொடர் 2)

வீண் விரயம் வேண்டாம்! கண்ணே!

பெண் குடும்பத் தலைவி என்றும், இல்லத்தரசி என்றும் அழைக்கப்படுகின்றாள். வீட்டுக்கு அவள்தான் அரசியாம்! குடும்பத்துக்கு அவள்தான் தலைவியாம்! இல்லத்துக்கு அரசியாக இருப்பவள் பொறுப்பில்லாமல் செலவு செய்து கஜானாவைக் காலி பண்ணுபவளாக இருந்தால் நிலைமை என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள்! குடும்பம் நடு வீதிக்கு வந்து விடுல்லவா!

சில பெண்களின் கையில் காசு கிடைத்து விட்டால் அவர்களுக்குத் தலை-கால் விளங்காமல் போய் விடுகின்றது. பக்கத்து வீட்டு பாத்திமாவுக்கும், அடுத்த வீட்டு ஆயிஷாவுக்கும் கலர்ஸ் காட்டுவதற்காகப் பணத்தை நீர் போல் செலவு செய்கின்றனர். ஈற்றில் வீண் விரயத்தாலும், போலி ஆடம்பரத்தாலும் நடு வீதிக்கு வந்து நிற்கும் நிர்ப்பந்த நிலைக்கு ஆளாகின்றனர்.
“நான் போட்டிருக்கும் செருப்பு ஐயாயிரம் ரூபாய்!” எனப் பெருமைகொள்கின்றனர். வலது காலுக்குக் கீழே 2500 ரூபாவும், இடது காலுக்குக் கீழே 2500 ரூபாவும் இருந்தால் நடப்பது இலகுவாகப் போகின்றதா?
“தேவையில்லாததை வாங்குபவன் அவசியமானதை விற்பான்!” என்பார்கள். ஆடம்பரத்துக்காகவும், வீண்விரயத்துக்காகவும் தேவையற்ற பொருட்களை வாங்கி காணி-வீட்டை விற்றவர்கள் எவ்வளவு பேர் இருக்கின்றனர்!?
எனவே முதலில் வாழ்க்கையைப் புரிய வேண்டும். எமக்குத் தேவையான பொருட்கள் எவை? அவசியமானவை எவை? அத்தியவசியமானவை எவையென்ற தெளிவு இருக்க வேண்டும். அவற்றின் முக்கியத்துவத்துக்கு ஏற்பவே அவற்றை வாங்குவதில் முக்கியத்துவமளிக்க வேண்டும். இதில் தவறு விடும் போது வீணாகக் கடன் தொல்லைக்கும், அவமானத்துக்கும் ஆளாக நேரிடும். எனவே வீண் விரயத்தைத் தவிர்ப்பது இல்லத்தரசிகளுக்கு அவசியமான பண்பாகும்.
இன்று அதிகமான ஆண்கள் வெளிநாட்டில் பணி செய்கின்றனர். பணத்தை மனைவிக்கு அனுப்புகின்றனர். விடுமுறையில் வீடு வரும் கணவர் தாம் மீண்டும் வெளிநாடு செல்ல வேண்டிய அவசியத்தை உணர்கின்றனர். பணத்தைப் பயன்படுத்தும் அதிகாரம் முழுமையாகப் பெண்கள் கையில் வந்ததும் அவர்கள் ஆடம்பரத்துக்காகவும், அடுத்தவருக்குக் காட்டுவதற்காகவும் வீண் செலவுகளைச் செய்து கணவனைக் கண் காணாத நாட்டிலேயே வாழ வைக்கின்றனர்.
பெண்ணே பெண்ணே! கண்ணே கண்ணே! கண் போன்ற உன் கணவனுடன் வாழ்வதை விட காசுடன் வாழ்க்கை நடத்துவதுதான் உனக்கு விருப்பமா?

வெளி நாட்டில் பணி புரியும் ஒரு நல்ல மனிதரைக் குவைட்டில் சந்தித்தேன். அவர் 16 வருடங்களாக வெளி நாட்டில் பணி புரிவதாகக் கூறினார். குடும்பத்துடன் வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை. “உங்களுக்குக் குடும்பத்துடன் வாழும் ஆசை இல்லையா?” என்று நான் வினவிய போது அவரது கண்கள் கலங்கின. “அவ புரிஞ்சிக்க மாட்டேங்கிறா ஹஸரத்!” என அவர் கூறிய போது, எனது உள்ளம் உடைந்து சுக்குநூறாகியது. பேச்சோடு பேச்சாக “ஈராக் ஜனாதிபதி சதாமுக்கு அல்லாஹ் அருள் புரிய வேண்டும்! அவர் குவைட்டைக் கைப்பற்றிய போது ஊருக்குப் போனேன்! அந்த நேரத்தில் எனக்கொரு பெண் குழந்தை கிடைத்தது!” என்று கூறினார்.
அது மட்டுமன்றி மனைவி அதிகம் செலவளித்துப் பழகி விட்டதாகவும், தான் ஊருக்குச் சென்றால் தன்னால் அவளது செலவுக்கு ஏற்ப சம்பாதிக்க முடியாதென்றும் கூறினார்.
ஊதாரியான ஒரு மனைவியால் பாலைவன பூமியில் வெந்து வெதும்பி நொந்து நூலாகிக் காய்ந்து கருவாடாகித் தவிக்கும் ஒரு ஆணின் கண்ணீர்க் கதை மட்டுமல்ல இது!
பெண்களே!
இந்தக் கொடுமைக்கு அல்லாஹ்விடம் நீங்கள் கூறப் போகும் பதிலென்ன? “முடிந்ததை உழைத்துத் தாருங்கள்!” என்றால், “முடிந்த மட்டும் சிக்கனமாகச் செலவு செய்கின்றேன்! வறுமையுடன் வாழ்ந்தாலும் உங்களைப் பிரிந்து என்னால் வாழ முடியாது!” என்று கூற வேண்டிய பெண்கள் தமது வீண் விரயத்துக்காகக் கணவரை தூரத் தேசங்களுக்குத் துரத்துகின்றனர்.

வீண் விரயமென்றால் தேவைக்கு அதிகமாகச் செலவு செய்தல் என்று கூறலாம். இந்த வகையில் பெண்களாகிய உங்களிடம் பல அம்சங்களில் வீண் விரயம் குடிகொள்கின்றது. உங்கள் உடையில் வீண் விரயம் ஏற்படுகின்றது. கலர்-கலராக ஆடை வேண்டுமென்ற ஆசையைக் களையுங்கள்! சிக்கனமாகக் குறைந்த செலவில் ஆடைகளைத் தெரிவு செய்யுங்கள்! ஆடை விஷயத்தில் செலவைக் குறைக்க வழி செய்யும் ஒரே மார்க்கம் இஸ்லாம்தான். சாதாரண 750 ரூபா அபாயாவுடன் உங்கள் ஆடைச் செலவைக் குறைத்துக்கொள்ளலாம். இந்த வசதி வேறு எந்தக் கலாசாரத்தைப் பின்பற்றும் பெண்களும் அடைய முடியாதது. எனவே சிக்கனமான ஆடையைத் தெரிவு செய்யுங்கள்! அளவுக்கதிகமான ஆடைகளுக்கு ஆசைப்படாதீர்கள்!
அணிகலன் விடயத்திலும் வீண் விரயம் ஏற்படுகின்றது. பெண்களுக்கு ஆபரணங்களில் ஆசை வருவது இயல்புதான். இந்த ஆசையை அத்தியாவசியத் தேவைகள் முடிந்த பின்னர் பணம் மிச்சமிருந்தால் நிறைவேற்றலாம். இஸ்லாம் ஹிஜாப் முறையை வலியுறுத்துவதால் நகையணிந்து பிறருக்குக் காட்டித் திரிய அனுமதியில்லை. இந்த வகையில் முஸ்லிம் பெண்களுக்கு அதிக நகைச் செலவு வருவதற்கும் வழியில்லை. அதிகமாக நகையணிந்து வீதியில் வலம் வந்து கொள்ளையரினதும், திருடரினதும் தாக்குதல்களுக்குள்ளாகவும் தேவையில்லை. பல பெண்களின் உயிருக்கு அவர்கள் அணிந்திருக்கும் நகைகளே உலை வைத்திருக்கின்றன என்பது கவனத்திற்கொள்ளத் தக்கதாகும். எனவே, அதிக நகைகளைத் தவிருங்கள்!
சில பெண்கள் பவ்டர், க்ரீம் எனக் காசைக் கரைக்கின்றனர். கொஞ்சம் நாகரிக மோகம் தலைக்கேறி விட்டால் சிகையலங்காரம், பியூடி பாலர் என என்னென்னவோ செய்து செலவு செய்து கணவன் வெயிலில் வெந்து வியர்வை சிந்தி அனுப்பும் பணத்தைப் பாழாக்குகின்றனர். இவ்வகையில் அலங்காரத்தின் பெயரிலும் வீண் விரயம் செய்கின்றனர்.
ஆடம்பரமான அவசியமற்ற விருந்துகள் மூலமும் வீண் விரயம் ஏற்படுகின்றது. சில பெண்கள் விருந்துகள் மூலமாகப் பெருமையடிக்க முற்படுகின்றனர். எனவே பிறந்த தினம், பூப்பெய்திய திருவிழா என இல்லாத விருந்துகளை உண்டாக்கிக்கொள்கின்றனர். 50 பேருக்கு அழைப்பென்றால் 100 பேருக்குச் சமைத்து, அதிலும் வீண் விரயத்தைச் செய்கின்றனர். எனவே அர்த்தமற்ற ஆடம்பர விருந்துகளைத் தவிருங்கள்!
சிலருக்குக் கையிலே காசு கிடைத்தால் ஏதாவது செலவு தேடி வரும் வீட்டின் முன் “ஹோல் சரியில்லை! அதை உடைக்க வேண்டும்!”, “பின் வாசல் சரியில்லை! அதைச் சரி செய்ய வேண்டும்!” என உடைப்பதும் கட்டுவதுமாக இருப்பார். கட்டி முடிப்பதற்கிடையில் கணவன் கட்டிலில் படுக்கும் நிலைக்கு வந்து விடுவான்.
இவ்வாறு வீண் விரயம் எந்த ரூபத்தில் வந்தாலும் அது மார்க்கத்தில் ஹராமாகும் என்பதைப் பெண்கள் புரிய வேண்டும். உங்களது கணவன் செலவுக்குத் தரும் பணத்திலும் முடிந்த வரை சிக்கனமாகச் செலவு செய்து சேமிக்கப் பழகுங்கள்! வாழ்க்கையில் நெருக்கடிகள் வரும் போது அந்தச் சேமிப்பு உங்களுக்கு உதவியாகவும் இருக்கும். கணவனிடம் உங்கள் அந்தஸ்த்தையும் உயர்த்தும்.
வீண் விரயத்தினால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து தெளிவு பெறுங்கள்!
“நிச்சயமாக வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாகவே இருக்கின்றனர். ஷைத்தான் தனது இரட்சகனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான்.” (17:27)
வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். அல்லாஹ்வின் நேசம் உங்களுக்கு வேண்டாமா? வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாவர். நீங்கள் ஷைத்தானின் சகோதரராக இருப்பதில் சந்தோஷப்படுகின்றீர்களா?
வீண் விரயம் உங்களது செல்வங்களையும், உழைப்பையும் விழுங்கி ஏப்பம் விடுகின்றது. இதனால் வெகு விரைவிலேயே உங்களை வறுமை வாரி அணைத்துக்கொள்ளும். இந்த வறுமையை நீங்கள் அஞ்ச வேண்டாமா?
பணம் இல்லாமல் போனாலும், உங்களிடம் வீண் விரயம் காரணமாக ஏற்பட்ட ஆடம்பர மனம் இல்லாமல் போகாது. எனவே காசிருக்கும் போது வீசிச் செலவு செய்தது போலவே செலவு செய்ய ஆரம்பிப்பீர்கள். இதனால் இருக்கும் பொருட்களை விற்கவும், அடுத்தோரிடம் கடன் பெறவும், கடன் பெற முடியாத போது தவறான வழியில் பொருளீட்டவும் முற்படுவீர்கள். இதன் பின் உருட்டும் புரட்டுமாக உங்கள் வாழ்வு மாறி விடும். வீண் விரயம் என்பது எல்லா வகையான தீமைகளையும் கொண்டு வரும் என்பதால்தான் வீண் விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்கள் எனக் குர்ஆன் கூறுகின்றது.
எனவே பெண்களே!
வீண் விரயத்தைத் தவிருங்கள்!
சிக்கனமாக வாழப் பழகுங்கள்!

உங்கள் பெண் மக்களிடமும் சிக்கன குணத்தை ஏற்படுத்துங்கள்! வரவறிந்து செலவு செய்யும் பக்குவம் பெண்ணுக்கு அழகாகும்! இந்த அழகு உங்களை விட்டும் அகலாது இருக்கட்டும்!
தொடரும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.