பித்அத்தின் தீய விளைவுகள் – 2

(7) மூட நம்பிக்கை சார்ந்த குழப்பங்களில் வீழ்தல்:
மார்க்க ரீதியாக எழும் எந்தக் குழப்பமாக இருந்தாலும் அதில் அதிகம் வீழ்பவர்களாக பித்அத்காரர்கள் இருப்பார்கள்.

“இத்தூதரை அழைப்பதை உங்களுக்கிடையில் சிலர் சிலரை அழைப்பது போன்று ஆக்கிக் கொள்ளாதீர்கள். உங்களில் யார் மறைவாக நழுவிச் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் நன்கறிவான். அவரின் கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்கு ஒரு துன்பம் நேருவதையோ, அல்லது தமக்கு நோவினை தரும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக்கொள்ளட்டும்.”
(24:63)
பித்அத் செய்வோர் அல்லாஹ்வின் தூதருக்கு எதிராகச் செயற்படுபவர்கள் என்ற அடிப்படையில் பித்னாக்களில் வீழ்ந்து விடுகின்றனர்.
குறி சொல்வோர், சாஸ்திரக்காரர், ஜின் வஸியம் செய்திருப்பதாகக் கூறும் ஏமாற்றுப் பேர்வழிகள் போன்றோரின் பித்னாக்களில் அதிகம் விழுவோர் பித்அத்காரரே!
மக்காவில் கண்ட கனவு!
மதீனாவில் கண்ட கனவு!
குர்ஆனில் மயில் இரகு!
குர்ஆனில் செம்டம்பர் தாக்குதல்!
இவ்வாறு பல்வேறுபட்ட பித்னாக்களில் விழுவோரும் பித்அத்காரர்களே!
ஹதீஸ்களை உறுதியாக நம்பாத இவர்கள் வதந்திகள், கட்டுக் கதைகள், கற்பனைக் கதைகள், கனவுகள், உதாரணங்கள் என்பவற்றை உடனே நம்பி ஏமாந்து விடுவர்.
“இருண்ட இரவின் ஒரு பகுதி போன்ற பித்னாக்கள் தோன்றுவதற்கு முன்னர் நல்லமல்களைச் செய்துகொள்ளுங்கள்! அந்த நேரத்தில் ஒருவர் முஃமினாகக் காலைப் பொழுதை அடைவார்! மாலையைக் காபிராக அடைவார்! அல்லது முஃமினாக மாலையை அடைபவர் காபிராகக் காலையை அடைவார். உலகத்துக்காக ஒருவன் தனது மார்க்கத்தை விற்பான்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 118, 328, அபூதாவூத் 4261, 4264)

பித்அத்தான சிந்தனையும், பித்அத்தான செயற்பாடும் உடையவர்கள் மிக விரைவாக இத்தகைய பித்னாக்களில் வீழ்ந்து விடுவர்.
எனவே பித்அத் பித்னாக்களில் வீழ்த்தக் கூடியது என்ற அடிப்படையிலும் பித்அத் குறித்து விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியுள்ளது.
(8) ஷரீஆவில் பங்கு கோரும் பித்அத்:
பித்அத் செய்பவர் தனது செயற்பாடு மூலமாக மார்க்கத்தில் பங்கு கேட்கின்றார்.
அவர் “மார்க்கம் பூரணமற்றது!” என்று கூறுவதுடன், தானே மார்க்கத்தைப் பூரணப்படுத்த முற்படுபவர் போன்றவராகின்றார்.
“..இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்கு நான் முழுமைப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள் மீது பூரணப்படுத்தி விட்டேன். மேலும் நான் இஸ்லாத்தையே உங்களுக்கு மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன்..” (5:3)
மேற்படி வசனம் மார்க்கம் பூரணப்படுத்தப்பட்டு விட்டதாகக் கூறுகின்றது. பித்அத் செய்பவர் மார்க்கம் பூரணமாகி விட்டதில் உறுதியான நம்பிக்கை உடையவராக இருந்தால் மார்க்கத்தில் இல்லாததை மார்க்கமாகச் செய்ய முற்படமாட்டார்.
“அல்லாஹ் அனுமதிக்காததை அவர்களுக்கு மார்க்கமாக ஆக்கக் கூடிய இணை தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? தீர்ப்புக்குரிய விதி இல்லாவிட்டால் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப் பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு.” (42:21)
மேற்படி வசனம் மார்க்கத்தில் இல்லாததை மார்க்கமாக்குவது ஷரீஅத் உருவாக்கத்தில் பங்கு கேட்பதற்குச் சமனானதென்ற கருத்தைச் சொல்கின்றது.
எனவே பித்அத் தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டியதும், எச்சரிக்கையுடன் ஒதுக்கப்பட வேண்டியதுமாகும்.
(9) உண்மையுடன் பொய்யும் கலந்த நிலை:
பித்அத் செய்பவருக்கு உண்மை-பொய் இரண்டும் குழம்பிப் போன ஒரு மனநிலை உண்டாகி விடும். இது ஆபத்தானதாகும். யூத-கிறிஸ்தவர்களுக்கு நேர்ந்ததும் அதுதான்.

“வேதத்தையுடையோரே! நீங்கள் அறிந்து கொண்டே ஏன் சத்தியத்தை அசத்தியத்துடன் கலந்து சத்தியத்தை மறைக்கின்றீர்கள்?” (3:71)
குர்ஆன்-ஸுன்னா எனும் அறிவு மனிதனுக்கு நேர்வழியைக் காட்டும் ஒளியாகத் திகழ்கின்றது. இந்த ஒளியை இழந்த பித்அத்காரர்கள் நேர்வழியையும், சத்தியத்தையும் அறிந்துகொள்ளும் பாக்கியத்தை அடைந்துகொள்ள மாட்டார்கள்.
“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்தால் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்துக் காட்டும் வழிமுறையை உங்களுக்கு அவன் ஏற்படுத்துவான். மேலும், உங்கள் தீமைகளை உங்களை விட்டும் நீக்கி, உங்களை மன்னிப்பான். இன்னும், அல்லாஹ் மகத்தான அருளுக் குரியவன்.” (8:29)
மேற்படி வசனம் அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்குச் சத்தியத்தையும், அசத்தியத்தையும் பிரித்தறியும் பாக்கியத்தை அல்லாஹ் வழங்குவதாகக் கூறுகின்றன. பித்அத் செய்வோர் இந்தப் பாக்கியத்தை இழந்து விடுவர்.
(10) தனது பாவத்தையும், தன்னைப் பின்பற்றுபவர்களது பாவத்தையும் சுமந்துகொள்ளும் பித்அத்காரன்:
பித்அத் செய்பவன் – தனது பாவத்தை மட்டுமல்ல; தன்னைப் பின்பற்றி அந்த பித்அத்களைச் செய்பவர்களின் பாவங்களையும் சேர்த்தே சுமப்பான்.

அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
“யாரேனும் ஒருவர் வழிகேட்டின் பால் அழைத்தால் அதைப் பின்பற்றுகின்றோரின் பாவங்களையும் இவன் சுமப்பான்! அவர்களின் பாவங்களில் எதுவும் குறைந்தும் விடாது!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம் 2060, 2674)

இந்த வகையில் பித்அத் செய்வோர் தமது பாவங்களுடன் தம்மைப் பின்பற்றி யாரெல்லாம் அந்த பித்அத்தைச் செய்தார்களோ அவர்களது பாவங்களையும் சுமப்பார்கள். பித்அத்தின் பக்கம் மக்களை அழைக்கும் ஆலிம்கள், பொது மக்கள் இது குறித்து மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். விடுபட்ட பித்அத்களை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காகப் போராடும் இயக்க வாதிகளும், ஜமாஅத்தார்களும் வீணாக மக்களது பாவங்களைச் சுமந்து நரகம் செல்லும் இழிநிலையில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர்.
(11) பித்அத் சாபத்தைத் தேடித் தரும்:
பித்அத் செய்வது அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும், நல்ல மக்களினதும் சாபத்தைத் தேடித் தரும்.

இது குறித்து நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்;
“யார் மதீனாவில் பித்அத்தை உருவாக்குகின்றாரோ அல்லது பித்அத் செய்பவனுக்குப் புகலிடம் அளிக்கின்றாரோ அவர் மீது அல்லாஹ்வின் (லஃனத்) சாபம் உண்டாகட்டும்! மற்றும் மலக்குகள், (நல்ல) மனிதர்கள் அனைவரின் சாபமும் அவன் மீது உண்டாகும்! அவனிடமிருந்து எந்தச் சாக்குப் போக்குகளும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது!” (புகாரி 7306, முஸ்லிம் 1366)
இந்த நபிமொழி மதீனா குறித்துப் பேசினாலும் இதை நாம் பொதுவாகவே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
மற்றுமொரு அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்;
“பித்அத்காரனுக்குப் புகழிடம் அளிப்பவனை அல்லாஹ் சபிப்பானாக! (முஸ்லிம்)
பித்அத்காரனுக்குப் புகழிடம் அளிப்பவனே சபிக்கப்படுவானெனில் பித்அத் செய்வோர், அதைப் பரப்புவோர், அதற்காகப் போராடுவோரின் நிலையென்ன என்பது சிந்திக்க வேண்டியதாகும்.
(12) பித்அத் செய்வோர் சத்தியத்தை மறைப்போராவர்:
சத்தியத்தை மறுப்பதும், அதை மறைப்பதும் மார்க்க அடிப்படையில் பெரிய குற்றங்களாகும். பித்அத் செய்வோர் சத்தியத்தை அறிந்த பின்னரும் அதை மறைக்கின்றனர்; மறுக்கின்றனர். இதுவும் அல்லாஹ்வின் சாபத்தைத் தேடித் தரும் பெரிய குற்றமாகும்.

“மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவு படுத்திய பின்னர் நாம் இறக்கிய தெளிவான சான்று களையும், வழிகாட்டலையும் யார் மறைக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சபிக்கின்றான். சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கின்றனர்.”
(2:159)
சத்தியத்தை மறைப்போரை அல்லாஹ்வும் சபிக்கின்றான்; நல்லவர்களும் சபிக்கின்றனர். இந்தச் சாபத்திலிருந்து அவர்கள் விடுபட வேண்டுமென்றால் தமது தவறை விட வேண்டும். தவ்பாச் செய்ய வேண்டும். தாம் மறைத்த சத்தியத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனப் பின்வரும் வசனம் கூறுகின்றது;
“ஆனால், எவர்கள் (தம் தவறிலிருந்து) பாவ மன்னிப்புக் கோரித் தம்மைச் சீர்திருத்திக் கொண்டு, (தாம் மறைத்தவற்றைத்) தெளிவுபடுத்துகின்றார்களோ அவர்களை நான் மன்னிப்பேன். நான் மிக்க மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையவன்.” (2:160)
தொழுகையின் பின்னர் கூட்டு துஆ இல்லை என்பது தெரியும்; சொன்னால் மக்கள் குழம்புவார்கள் என நினைத்து சத்தியத்தை ஒருவர் மறைக்கிறார்; கூட்டு துஆவையும் ஓதுகின்றார்.
இவர் அல்லாஹ்வின் சாபத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால் பித்அத்தை விட வேண்டும்; தவ்பாச் செய்ய வேண்டும். மறைத்த உண்மையை மக்களுக்குப் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும்.
இல்லையென்றால் சாபத்திலிருந்து விடுபட முடியாது என்பதை இந்த வசனத்தின் மூலம் அறியலாம்.
(13) பித்அத் செய்வோர் சமூகத்தைப் பிரிக்கின்றனர்:
பித்அத் – அது கொள்கை சார்ந்ததாக இருந்தாலும், இபாதத் சார்ந்ததாக இருந்தாலும் அதுவே உம்மத்தைப் பிரிக்கக் கூடியதாகும்.

சிலர் ஸுன்னத்துத்தான் சமூகத்தைப் பிரிப்பதாகப் பார்க்கின்றனர். ஒற்றுமை மலர ஸுன்னத்தை விட்டு விட்டு பித்அத்தைச் செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். எல்லா பித்அத்களையும் எல்லோரும் விட்டு விடுவதாக முடிவு செய்தால் அதுவே ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடியதாகும்.
“நிச்சயமாக இதுவே எனது நேரான வழியாகும். எனவே, இதனையே நீங்கள் பின்பற்றுங்கள். பல வழிகளைப் பின்பற்றாதீர்கள். அப்பொழுது அது அவனது வழியை விட்டும் உங்களைச் சிதறடித்து விடும். நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடக்கும் பொருட்டு இதைக் கொண்டு உங்களுக்கு ஏவுகின்றான்.” (6:153)
மேற்படி வசனம் நபி(ஸல்) அவர்களது நேரான பாதையைப் பின்பற்ற வேண்டுமென்றும், பல பாதைகளைப் பின்பற்றினால் அது அல்லாஹ்வின் பாதையை விட்டும் எங்களைத் திசை திருப்பி விடும் என்றும் கூறுகின்றது.
நபி(ஸல்) அவர்கள் ஒரு நேர்கோட்டை வரைந்து அதன் இரு புறங்களிலும் கோடுகளைக் கீறி நேர்கோட்டைக் காட்டி “இதுவே எனது நேரான வழி! இவை பல வழிகள்!” எனக் கூறினார்கள். எனவே நபிவழியில் உறுதியாக இருப்பதும், பித்அத்தைத் தவிர்ப்பதும் பிரிவினையைத் தவிர்ப்பதற்கான வழிகளாகும். பித்அத் பிரிவினையை உண்டுபண்ணக் கூடியதென்பதால் அதனை அவசியம் தவிர்த்தேயாக வேண்டும்.
(14) மறுமையில் அல்கவ்தர் நீர் கிடைக்காது:
நபி(ஸல்) அவர்களுக்கு மறுமையில் “கவ்தர்” எனும் ஒரு நீர்த் தடாகம் வழங்கப்படும். அது பாலை விட வெண்மையானது; தேனை விட இனிமையானது. அதைக் குடித்தவருக்குச் சுவனம் போகும் வரை தாகமே ஏற்படாது. இந்த நீரை அருந்தச் செல்லும் சிலர் மலக்குகளால் அடித்து விரட்டப்படுவார்கள். “இவர்கள் எனது உம்மத் தினர்!” என நபி(ஸல்) அவர்கள் கூறும் போது, “உங்களுக் குப் பின்னர் இவர்கள் என்னென்ன புதிய விடயங்களை உருவாக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது!” என்று கூறப்படும். (புகாரி 6575, முஸ்லிம் 2297)

இந்த அடிப்படையில் பித்அத் செய்பவர்கள் கவ்தர் நீரைப் பருகும் பாக்கியத்திலிருந்து தடுக்கப்பட்டு விடுவர். இந்த உம்மத்துக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பம்சங்களில் ஒன்றான இதை இழப்பது சாதாரண விடயமல்ல. இந்த வகையில் சிந்திக்கும் போது பித்அத் எவ்வளவு பாரதூரமானது என்பதையும், நஞ்சைப் போன்று வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியது என்பதையும் உணரலாம்.
(15) பித்அத் நரகத்துக்கு இட்டுச் செல்லும்:
ஒவ்வொரு முஸ்லிமின் இலக்கும் சுவர்க்கம் ஆகும். ஆனால் பித்அத் மனிதனை நரகத்துக்கு இட்டுச்செல்லும் குற்றச் செயலாகும். செய்யும் பித்அத் ஷிர்க்கையோ, குப்ரையோ ஏற்படுத்தாததாக இருந்தால் அவர் நிரந்தர நரக வாதியாக இருக்க மாட்டார். இருப்பினும் “இன்றைய தினம் நானும், எனது தோழர்களும் எதில் இருக்கின்றோமோ, அதில் இருப்பவர்களே சுவனம் செல்லும் கூட்டத்தினர்!” என நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் ஸுன்னாவுக்கு மாற்றமான புதிய கொள்கைகள்-வழிபாடுகளை நம்பி நடப்பவர்கள் அஹ்லுஸ் ஸுன்னாவின் வட்டத்தில் இருந்து வெளியேறி விடுகின்றனர்.

இது நரகத்துக்கு இட்டுச் செல்லும் இழி நிலையாகும். இந்த இழிநிலையில் இருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்வதாக இருந்தால் பித்அத்களை விட்டும் விலகியிருப்பதே அதற்கான ஒரே வழியாகும்.
எனவே, அனைத்து பித்அத்களையும் விட்டு விலகி ஸுன்னாக்களை உயிர்ப்பித்து சுவனம் செல்ல முனைவோமாக!
(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.