பித்அதுல் ஹஸனா (தொடர்-4)

சில அறிஞர்கள் பித்அதுல் ஹஸனா இருக்கிறது என்று கூறுகின்றனர். அதேவேளை அவர்கள் மற்றும் பல பித்அத்துக்களைக் கண்டித்துள்ளனர். இவர்கள் கண்டித்துள்ள பித்அத்துக்களுக்கும், இவர்கள் பித்அதுல் ஹஸனா என்று கூறும் பித்அத்துக்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. பித்அத்தை நல்லது, கெட்டது என்று எந்த அடிப்படையில் பிரிக்கின்றனர் என்பது புரியவில்லை.

நல்ல பித்அத், கெட்ட பித்அத் என்று கூறுகின்றனர். பித்அதுல் ஹஸனா எது என்று கேட்டால் நல்ல பித்அத் என்கின்றனர். பித்அதுல் ஸைய்யிஆ எது எனக் கேட்டால் கெட்ட பித்அத் என்கின்றர். அதேவேளை பல பித்அத்துக்களைக் கண்டித்துள்ளனர். அவை இவர்களின் பார்வையில் நல்லதாகத்தான் இருக்கின்றன. இவ்வகையில் நல்ல பித்அத் இருக்கின்றது என்று கூறும் அறிஞர்கள் கண்டித்துள்ள மற்றும் சில பித்அத்துக்கள் குறித்து சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தோம். பித்அதுல் ஹஸனா இருக்கிறது என்று கூறும் அறிஞர்கள் தமக்குத் தாமே முரண்படுவதையே இது எடுத்துக் காட்டுகின்றது. இதனை இன்னும் அதிகமாக உறுதி செய்வதற்காக மற்றும் சில அறிஞர்களின் கூற்றுக்கள் சிலவற்றைத் தொகுத்துத் தருகின்றோம்.
இமாம் நவவி(ரஹ்)
இஸ்லாமிய உலகு அறிந்த முக்கிய அறிஞர்களில் இவரும் ஒருவர். ஷாஃபிஈ மத்ஹபைச் செர்ந்த அறிஞர்களில் முக்கியமானவர். இவர் நல்ல பித்அத், கெட்ட பித்அத் என பித்அத்தைப் பிரிப்பதை சரிகாணும் அறிஞர்களில் ஒருவராவார். இவர் மக்களின் மத்தியில் காணப்பட்ட பல பித்அத்துக்களைக் கண்டித்தார். ஆனால் அவை எந்த அடிப்படையில் கெட்ட பித்அத்தாகியது என்பது தெரியாது. நபி வழியில் இல்லையென்பதைத் தவிர அவற்றைக் கெட்டது எனக்கூற எந்த முகாந்திரமும் இல்லை. பித்அதுல் ஹஸனாவை நியாயப்படுத்துவது என்றால் இவற்றையும் பித்அதுல் ஹஸனா என்று கூறிவிட்டுப் போகலாம்.

அதான் கூறும் போது ‘ஹய்ய அலா கைரில் அமல்’ என்று கூறும் பழக்கம் இருந்தது. அது பற்றி இமாமவர்கள் தமது அல் மாஜ்மூஃ எனும் ஏட்டில் குறிப்படும் போது,
அதானில் அமல்களில் சிறந்ததின்பால் விரைந்து வாருங்கள் என்று கூறுவது வெறுக்கத்தக்கதாகும். ஏனெனில் இது நபியவர்கள் செய்ததாக வரவில்லை. பைஹகி இமாம் இது குறித்து இப்னு உமர் மற்றும் அலி இப்னுல் ஹுஸைன்(வ) ஆகியோர் தொடர்புபட்ட மவ்கூபான செய்தியை அறிவிக்கின்றார். இந்த வார்த்தைகள் நபி(ச) அவர்களைத் தொட்டும் உறுதி செய்யப்படவில்லை என பைஹகி இமாம் கூறுகின்றார். அதானில் மேலதிக வார்த்தைகளை மேலதிகமாக சேர்ப்பதை நாம் வெறுக்கின்றோம் ‘அல்லாஹு அஃலம்’ (அல் மஜ்மூஃ : 3/98)
ஹய்ய அலா கைரில் அமல் என்று அதானில் கூறுவது நபிவழி அல்ல. எனவே, இதனையும் வெறுக்கின்றோம் என இமாம் நவவி(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். இங்கே குறிப்பிடப்படும் வார்த்தை தவறானதல்ல. அதன் கருத்தும் தவறானதல்ல. இருப்பினும் அதானில் அதைச் சேர்ப்பதற்கு நபி வழியில் எந்த ஆதாரமும் இல்லை என்பதால் தான் இமாமவர்கள் இந்தக் கருத்தை வலியுறுத்துகின்றார்கள். எல்லா பித்அத்துக்களுக்கும் இந்த நிலை பொருந்தும் அல்லவா? இந்த வார்த்தை நல்லது என்றாலும் ஆதாரம் இல்லாதது என்பதால் இந்தச் செயல் மறுக்கப்பட வேண்டும். என்றால் மற்ற பித்அத்துக்களையும் மறுக்கத்தானே வேண்டும்?
ஹஜ், உம்றா செய்பவர்கள் ஸபா-மர்வாவுக்கு இடையில ஸஈ முடிந்ததும் மர்வாவில் இரண்டு ரக்அத்துக்கள் சுன்னத்துத் தொழுவர். இதற்கு நபி வழியில் எந்த ஆதாரமும் இல்லை. இது குறித்து இமாம் நவவி(ரஹ்) அவர்கள் தமது அல் மஜ்மூஃ வில் குறிப்பிடும் போது,
ஷேக் அபூமுஹம்மத் அல் ஜுவைனி அவர்கள் ‘ஸயீ முடிந்ததும் மர்வாவில் மக்கள் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதை நான் கண்டேன் (இது குறித்து அல் ஜுவைனி குறிப்பிடும் போது) இது நல்லது. நன்மைகள் அதிகம் தரக்கூடியது என்று குறிப்பிடுகின்றார். எனினும் இது நபி(ச) அவர்களைத் தொட்டும் உறுதிப்படுத்தப்படவில்லை. இது அபூமுஹம்மதின் கூற்றாகும். அபூ அம்ர் இப்னுஸ் ஸலாஹ் அவர்கள் (இது குறித்துக் கூறும் போது); இது வெறுக்கப்பட வேண்டும். ஏனெனில் இது ஒரு அடையாளத்தின் ஆரம்பமாகும். இது குறித்து இமாம ஷாஃபி (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது ஸஈ செய்த பின் எந்தத் தொழுகையும் இல்லையெனக் குறிப்பிடுகின்றார்கள். இதைத்தான் அபூஅம்ர் அவர்களும் குறிப்பிடுகின்றார்கள். அல்லாஹு அஃலம். (அல் மஜ்மூஃ : 8/80)
ஸஈ செய்பவர்கள் ஸஈயின் முடிவாக மர்வாவில் தொழுவதில் என்ன தவறு இருக்கிறது இதை ஏன் வெறுக்க வேண்டும்? ஒரேயொரு காரணம் தான் இருந்துள்ளது. இதை நபி(ச) அவர்கள் செய்யவில்லை. மற்றப்படி தொழுபவர்களின் நோக்கத்திலும் தவறில்லை. செய்யப்படும் வேலையும் தொழுகை எனும் புனிதச் செயலாகும். அது செய்யப்படும் இடமும் ஹரம் எல்லைக்குள் உள்ளடங்கியுள்ள புனித மர்வாவுக்குரிய இடமாகும். புனிதமான ஒரு பணியைச் செய்து இந்தத் தொழுகையைத் தொழுகின்றனர். எல்லாம் நல்லதாக இருந்தாலும் நபி வழியில் ஆதாரம் இல்லை, வழிகாட்டல் இல்லை எனும் போது மறுக்கப்படத்தக்க தாகவும், வெறுக்கப்படத்தக்கதாகவும் மாறிவிடுகின்றது. நபிவழியில் இல்லையென்பதால் இதை மறுக்க வேண்டும் என்றால் கத்தம், கந்தூரி, பாத்திஹாக்கள், கூட்டு துஆக்கள் போன்ற அத்தனையும் அதே அடிப்படையில் மறுக்கப்பட வேண்டியவைகளே என்பதில் எப்படி மாற்றுக் கருத்து இருக்க முடியும்.
ஜனாஸா வீட்டில் அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக ஒன்று கூடும் பழக்கம் இன்றும் இருக்கிறது. தமக்கு ஆறுதல் கூறுவதற்காக மக்கள் வருவார்கள் என்பதற்காகவும், ஜனாஸாவுடைய உறவினர்கள் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்து இருப்பார்கள். இது குறித்து இமாமவர்கள் குறிப்பிடும் போது ,
ஆறுதல் பெறுவதற்காக (ஒரு இடத்தில் ஒன்றுகூடி) இருப்பது வெறுக்கத்தக்கது என இமாம் ஷாஃபி அவர்களும் எமது தோழர்களும் கூறுகின்றனர். அவர்கள் கூறுகின்றனர், ஆறுதல் கூற வருபவர்களுக்காக மையித்து வீட்டினர் ஒன்றுகூடி இருப்பதே இங்கு கருத்தில் கொள்ளப்படுகின்றது. மாற்றமாக அவர்கள் தமது பணிகளுக்காகப் பிரிந்து சென்றுவிட வேண்டும். இதற்காக ஒன்றுகூடி இருப்பது வெறுக்கத்தக்கது என்பதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. இது குறித்து அல்மஸாமிலீ வெளிப்படையாகப் பேசியுள்ளார். ஷாஃபி இமாமைத் தொட்டும் இதனை அறிவித்துள்ளார். ஆறுதல் கூறுபவர்களுக்காக இவ்வாறு ஒன்று கூடியிருப்பதுடன் வேறு பித்அத்துக்கள் எதுவும் நடக்கவில்லை என்றால் இது சாதாரணமான வெறுக்கத்தக்க நடவடிக்கையாகும். எனினும் அதிகமாக நடைமுறையில் இருப்பது போன்று இவ்வாறு ஒன்றுகூடியிருப்பதுடன் ஹராமான ஒரு பித்அத்தும் வந்துவிடுமானால் இவ்வாறு கூடியிருப்பது அசிங்கமான ஒரு ஹராமாக மாறிவிடும். ஏனெனில் இது மார்க்கத்தில் புதிய நடவடிக்கையாகும். மார்க்கத்தில் புதிதாக உருவான அனைத்தும் பித்அத் ஆகும். பித்அத் அனைத்தும் வழிகேடாகும் என்பது ஸஹீஹான ஹதீஸில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. (ஆதாரம்: முஸ்லிம் , அல் அத்கார் அந்நவவிய்யா (1/205))
ஒருவர் மரணித்து விட்டால் அந்த வீட்டிற்கு ஆறுதல் கூறுவதற்காக மக்கள் செல்வது வழக்கமாகும். மக்கள் வரவேண்டும் என்பதற்காக மையத்து வீட்டார் ஒரு இடத்தில் கூடியிருப்பதில் என்ன தவறு இருக்கிறது. இது ஏன் வெறுக்கப்பட வேண்டும். இது நபி வழியில் இல்லாத வழிமுறை என்பது தானே இந்த வெறுப்புக்குக் காரணம். இதே காரணத்திற்காகத்தான் அனைத்து பித்அத்துக்களையும் நாம் எதிர்க்கின்றோம்.
தராவீஹ் தொழும் போது ரமழான் ஏழாம் தினத்தில் இறுதி ரகாஅத்தில் சூரதுல் அன்ஆம் அத்தியாயத்தைப் பூரணமாக ஓதித் தொழுவிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது. இது பற்றி இமாம் நவவி(ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது,
மக்களுக்கு தொழுகை நடாத்தக்கூடிய அறிவீனர்களில் அதிகமானவர்கள் செய்யக்கூடிய மறுக்கப்படக்கூடிய பித்அத்துக்களில் ஒன்று தான் ‘சூரதுல் அன்ஆம் அத்தியாயத்தை ரமழான் மாதம் ஏழாம் அன்று இரவு இறுதி ரக்அத்தில் ஓதுவதாகும். இதனை விரும்பத்தக்கது என்ற எண்ணத்தில் ஓதி வருகின்றனர்…..'(அல் அத்கார்:1/152)
ரமழான் மாதம் ஏழாம் இரவில் தராவீஹ் தொழுகையில் இறுதி ரக்அத்தில் அன்ஆம் அத்தியாயத்தை ஓதுவதை இமாமவர்கள் பித்அத் என்று கடுமையாகக் கண்டிக்கின்றார்கள். அனைத்து பித்அத்துக்களும் இந்த அடிப்படையில் தான் கண்டிக்கத்தக்கதேயாகும். இதில் நல்லது, கெட்டது என்ற வேறுபாட்டிற்கு இடமேயில்லை.
பித்அதுல் ஹஸனா என்ற வாதம் தவறானது என்பது எள்ளளவும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதற்காக இது குறித்து இன்னும் சில தகவல்களை அடுத்த இதழில் நோக்குவேம். இன்ஷா அல்லாஹ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.