பலரின் கண்களைத் திறக்கச் செய்து கண்மூடிய மங்கை

09.01.2013 அன்று 11.40 மணியளவில் ரிஸானாவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்வு பாரிய அதிர்வுகளை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட சிலர் இதைச் சாட்டாக வைத்து ஷரீஆ சட்டம் காட்டு மிராண்டித்தனமானது, கொடுமையானது எனக் கூப்பாடு போடுகின்றனர். மற்றும் சிலர் கொள்கை ரீதியாகவும் நடத்தை ரீதியாகவும் சவுதி மீதுள்ள கோபத்தைக் கக்குவதற்கான ஊடகமாக இந்த சம்பவத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

மற்றும் சிலர் ரிஸானாவை மன்னிக்காத அந்த இறந்த பிள்ளையின் தாயின் கல்மனதைச் சாடுகின்றனர். இவ்வாறு குற்றம் சாட்டி சுட்டு விரலை ஒவ்வொரு பக்கமாக நீட்டும் வேளையில் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது குறித்து விரிவாக அலச வேண்டியுள்ளது. இந்த ஆக்கத்தின் மூலம் சில தெளிவுகளை மட்டும் வழங்க முனைகின்றோம்.
ஷரீஆ சட்டம் கொடூரமானதா? தேசிய பிக்குகள் முன்னனி போன்ற அமைப்புக்கள் சவுதிக்கு எதிர்ப்பைத் தெரிவித்தும் அங்கு பணிப் பெண்களை அனுப்புவதைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மற்றும் பலரும் இந்ததண்டனையை ஒட்டி ஷரீஆ சட்டம் குறித்து விமர்சித்துள்ளனர். மியன்மாரில் காவி உடை தரித்த மத குருக்களே பச்சிளம் குழந்தைகளைப் பதை பதைக்க கொன்று கருவருத்தார்களே! அப்போது இவர்கள் எங்கே சென்றார்கள்? இவர்களது மனிதாபிமான உணர்வுகள் ஏன் அப்போது ஊமையானது?
இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்த போது சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோஷமிட்டவர்கள் (சட்டத்தின் பார்வையில் சகோதரி ரிஸானா குழந்தையைக் கொன்றவர். அந்த அடிப்படையை வைத்துத்தான் இந்தக் கட்டுரை வரையப்படுகின்றது.) குழந்தையைக் கொள்வது சிறுவர் துஷ்பிரயோகம் இல்லையென்று கூறுவார்களா?
இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தில் கொலைக் குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்படும். இந்த சட்டத்தை நீக்கும் உரிமையை இஸ்லாம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு வழங்கியுள்ளது. கொலைக்கு மரண தண்டனை என்பதை சிலர் விமர்சிக்கின்றனர். கொன்றவனைக் கொள்வதால் போன உயிர் மீண்டும் வரவா போகின்றது என புத்திசாதுர்யமாக(?) கேட்கின்றனர். கொலையாளிக்கு சிறைத்தண்டனை கொடுத்தால் மட்டும் போன உயிர் வந்துவிடுமா என்ன? அப்படியென்றால் எந்தக் குற்றச் செயலுக்கும் எந்தத் தண்டனையையும் அழிக்க முடியாது. சமீபத்தில் டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி மிகவும் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்ட போது கற்பழித்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. கற்பழித்தவர்களைக் கொன்று விட்டால் போன கற்பு மீண்டும் வருமா?
தண்டனைகளின் நோக்கம் தவறு செய்தவன் மட்டுமன்றி தண்டனையைப் பார்ப்பவர்களும் இனி தவறு செய்யக் கூடாது என்பதுதான். இது விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலைக்கு இஸ்லாம் முக்கியத்துவம் கொடுக்கின்றது. பாதிக்கப்பட்டவர்கள் நினைத்தால் கொலையாளிக்கு மரண தண்டனை கொடுக்கலாம் அல்லது நஷ்டஈடு பெற்றுக் கொண்டு மன்னிப்பளிக்கலாம் அல்லது எதுவுமே பெறாமலே மன்னிப்பு வழங்கலாம்.
சில நாடுகள் மரணதண்டனையை இரத்துச் செய்யும் உரிமையை நாட்டுத் தலைவருக்கு வழங்கி உள்ளது. இஸ்லாம் இந்த உரிமையைப் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கியுள்ளது. எனது தந்தையைக் கொன்றவனை நான் மன்னிக்கலாம். நான் மன்னிக்கக் கூடாது எனும் போது நாட்டுத் தலைவர் மன்னிப்பதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கின்றது என்று சிந்தித்துப் பாருங்கள்.
இந்த வகையில் இஸ்லாமிய குற்றவியல் சட்டம் நீதியானது, நியாயமானது, அறிவுபூர்வமானது, குற்றங்கள் நிகழ்வதைக் குறைக்கும் ஆற்றல்மிக்கது என்பதில் எல்லளவும் சந்தேகமில்லை.
சவுதி அரசு அநீதியிழைத்ததா?
இலங்கைப் பணிப்பெண் ரிஸானாவுக்கு சவுதி அரசு அநீதி இழைத்துவிட்டதாக விமர்சிக்கப் படுகின்றது. இந்த நிகழ்வையொட்டி சவுதி மீது வெறுப்புணர்வு வளர்ந்துள்ளது. பொதுவாகவே பணிப்பெண்கள் வெளிநாடுகளில் மட்டுமன்றி உள்நாட்டில் கூட பல பாலியல் ரீதியாகவும், உடல்-உள ரீதியாகவும் உபாதைகளைச் சந்தித்து வருகின்றனர். ஹஜ், உம்றா போன்ற மார்க்கக் கடமைகள் விடயத்தில் உரிய ஆண்துணை இல்லாமல் பெண்களுக்கு வீஸா வழங்க மறுக்கும் சவுதி அரசு பணிப்பெண்கள் விடயத்தில் தனிமையில் அவர்கள் வர வீஸா வழங்குவது அதன் முரண்பாட்டையே எடுத்துக் காட்டுகின்றது. ஆனால் ரிஸானாவின் மரண தண்டனை விடயத்தில் சவுதி அநீதி இழைத்ததா என்றால் இல்லையென்பதே பதிலாக இருக்கும்.
ரிஸானா பாலூட்டும் போது பால் புரையேறியதால் குழந்தை இறந்ததாகவே கூறப்படுகின்றது. எனினும் மருத்துவ அறிக்கைகளில் கழுத்து நெறிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்ட அடிப்படையிலேயே நடந்தது கொலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் பணிப்பெண்கள் கஷ்டங்களை அனுபவிப்பது போன்றே பணிப்பெண்களால் சிறுவர்கள் குறிப்பாக, பேச முடியாத குழந்தைகள் கொடுமைப்படுத்தப் படுவதும், சித்திரவதைக்குள்ளாவதும் வீடியோக்கள் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்திற்கு முன்னர் ரிஸானாவிற்கும் வீட்டு எஜமானிக்குமிடையில் வாய்த் தர்க்கம் நடந்ததாகவும் கூறப்படுகின்றது.
கொலைக் குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு ரிஸானா நிர்ப்பந்திக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இது தவறான தகவலாகும். ஏனெனில், மரண தண்டனை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே சவுதி அரசின் நோக்கமாக இருந்தது.
பொதுவாக தீர்ப்பு வழங்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் தண்டனை வழங்கப்படுவது சவுதியின் வழக்கமாகும். இருப்பினும் தந்தை மன்னிக்கத் தயார், இறந்த பிள்ளையின் தாயும் மன்னித்துவிட்டால் தண்டனையை இரத்துச் செய்துவிட முடியும். அந்தத் தாயிடம் மனமாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் தண்டனை வழங்குவது ஏழு வருடங்கள் பிற்போடப்பட்டது. இறுதிக் கட்டத்தில் கூட தாயிடம் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு பயனளிக்கவில்லை. இப்படிச் செய்தவர்கள் செய்யாத குற்றத்தைச் செய்ததாக ஒப்புக் கொள்ளுமாறு நிர்ப்பந்திப்பார்களா?
ரிஸானாவை மன்னிக்காத அந்தத் தாயின் ஒரு பிள்ளை சவுதி மருத்துவமனையில் குணப்படுத்த முடியாத பெரியதோர் நோய்க்குள்ளாகியுள்ளது. சவுதியின் இளவரசர் சல்மான் அவர்கள் நோயுற்ற குழந்தையை சொந்த செலவில் ஜெர்மனியில் மருத்துவம் பார்ப்பதாகவும், ரிஸானாவால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குழந்தைக்கு இழப்பீடாக 30 இலட்சம் ரியால் தருவதாகவும் கூறியும் கூட அந்தத் தாய் மன்னிக்க மறுத்துவிட்டார். ஜனாதிபதியின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்புச் செயலாளர் அப்துல் காதர் மஸுர் மௌலானா ஊடாகத்தான் இந்தத் தகவல் கூறப்பட்டுள்ளது. இப்படி சவுதி அரசு ரிஸானாவுக்காக கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்க முன்வந்தது என்றால் அவர்களே நிர்ப்பந்தித்துக் கொலைக் குற்றத்தை ஏற்கச் செய்தார்கள் என்று எப்படிக் கூற முடியும்.
இந்தச் சட்டத்தை நீக்கும் அதிகாரம் அரசின் கையில் இருந்திருந்தால் அரசு நீக்கியிருக்கும். ஆனால், அந்த உரிமை பாதிக்கப்பட்ட பெற்றோர் கையில்தான் இருந்தது. சவுதி அரசின் மன்னர் பஹ்த் அவர்களின் புதல்வி இளவரசி மிஸ்ஸால் என்பவர் தனது 19 ஆம் வயதில் விபச்சாரக் குற்றத்திற்காக 1977 ஜுலை 15 இல் மரண தண்டனையை அனுபவித்துள்ளார் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மன்னிக்காத தாய்
ரிஸானாவை மன்னிக்காத தாய் மீது மக்களின் கோபம் திரும்புகின்றது. இவளும் ஒரு பெண்ணா என பெண்களே கேள்வி எழுப்புகின்றனர். ரிஸானாவின் தாய்க்கு சவுதி அரசு உதவ முன் வந்தும் அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். வறுமையில் வாடும் அந்தத் தாயின் உள்ளத்தில் ஏற்பட்ட ரணமே இதற்குக் காரணமாகும். ஆனால் எமது ஜனாதிபதி வழங்கிய 10 இலட்சம் நன்கொடையை அவர் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார்.
இதே தாயின் ரணம் ரிஸானாவின் எஜமானியிடமும் தென்படுகின்றது. ஒரு குழந்தை தீராத வியாதியில் இருக்கும் போது தனது மறு குழந்தையைக் கொன்ற அரக்கியாக அவர் ரிஸானாவைப் பார்க்கிறார். சவுதி மீது ரிஸானாவின் தாய்க்கு ஏற்பட்ட கோபம் ஒட்டுமொத்தமாக ரிஸானாவின் எஜமானிக்கு ரிஸானா மீது ஏற்பட்டுள்ளது.
குற்றவாளியை மன்னிப்பதா? தண்டிப்பதா? என முடிவு செய்யும் உரிமையை இஸ்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்துள்ளது. அந்தத் தாய் மன்னித்திருந்தால் அல்லாஹ்வின் அருளை அதிகமாகப் பெற்றிருப்பாள். உலக மக்களின் துஆவைப் பெற்றிருப்பாள். குறிப்பாக ரிஸானாவினதும் அவளது பெற்றோர், சகோதரர்களினதும் துஆவைப் பெற்றிருப்பாள். ரிஸானா விடுதலையாகி வந்திருந்தால் ரிஸானாவின் குடும்பம் மட்டுமல்ல நாமும் இலங்கை மக்களும் பெரிதும் மகிழ்ந்திருப்போம். அந்தத் தாய் இந்தப் பாக்கியங்களை இழந்துவிட்டாள்.
அவள் மன்னிக்காததற்கு அவளைச் சாடலாமா? என்றால் அல்லாஹ் உரிமை வழங்கியுள்ளான். அந்த உரிமையைப் பயன்படுத்தியதற்காக அவள் சாடப்பட்டாள் உரிமை வழங்கிய அல்லாஹ்வையே குற்றம் காண்பதாக அது ஆகிவிடும். எனவே, இது விடயத்தில் ஷரீஆவின் வரையறைகளை யாரும் மீறிவிடக் கூடாது. ரிஸானாவின் தாய் அந்த எஜமானியை மன்னித்துவிட்டதாக அறிவித்ததை நாம் வரவேற்கின்றோம்.
ரிஸானா குற்றமிழைத்திருந்தால் இந்தத் தண்டனை அவரது குற்றத்திற்குப் பரிகாரமாக அமைந்துவிடும். அவர் தண்டனை அளிக்கப்படாமல் நீட்டப்பட்ட காலங்களில் செய்த து ஆக்கள், இறுதி நேரத்தில் தொழுத தொழுகை போன்றவற்றை அல்லாஹ் ஏற்று அவளது மறுமை வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக ஆக்கி அருள் புரிய அனைவரும் துஆச் செய்வோமாக!
ரிஸானா குற்றமிழைக்காமல் திட்டமிட்டு அவள் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவளுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் குற்றவாளிகளை அல்லாஹ் தண்டித்து அவர்களின் நண்மைகளை ரிஸானாவிற்கு வழங்கி ரிஸானாவின் பாவங்களை அநீதி இழைத்தவர்களுக்கு வழங்கி ரிஸானாவின் மறுமை வாழ்வை வளம் பெறச் செய்வானாக என்றும் துஆச் செய்வோம்! அவள் குற்றமிழைக்காமல் விசாரனையின் கவனயீனத்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலையாலும் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் அனைவரையும் அல்லாஹ் மன்னித்து ரிஸானாவுக்குப் பாக்கியத்தை வழங்கப் பிரார்த்திப்போம்!
ரிஸானா கண் மூடி பலரின் கண்களைத் திறக்கச் செய்துள்ளார். சவுதி அரசுகூட பணியாற்கள் சம்பந்தமான பல திருத்தச் சட்டங்களைக் கொண்டு வர தீர்மானித்துள்ளது.
வறுமையின் கோரம், சீதனக் கொடுமையின் எதிர் விளைவுகள், ஸகாத்தின் முக்கியத்துவம், வெளிநாட்டு வேலைவாய்ப்பின் பெயரில் நடக்கும் தில்லுமுல்லுகள் அங்கே எமது பெண்களுக்கு நடக்கும் அநீதிகள் என பல விடயங்கள் குறித்து சிந்திக்கத்தக்கவாறு பலரின் சிந்தனைக் கண்களையும் ரிஸானா திறந்துள்ளார்.
ரிஸானாவின் மரணம் எமக்கொரு பாடமாகும். வெளிநாட்டுக்குப் பெண்களை அனுப்பும் அவலம் ஒழிய அனைவரும் பாடுபட வேண்டும். தேசிய பிக்குகள் முன்னனியில் ஒரு கோரிக்கையை நாமும் அரசுக்கு முன்வைப்போம். எமது நாட்டுப் பெண்களை அந்நியருக்கு அடிமையாக்கும் “வெளிநாட்டுக்குப் பணிப்பெண்களை அனுப்பும் நடவடிக்கையை” அரசு முற்றாகத் தடுக்க வேண்டும் என வேண்டுதல் முன்வைக்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.