படிப்படியாகத் தடை செய்யப்பட்ட மது

‘(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘அவ்விரண்டிலும் பெரும்கேடும், மனிதர்களுக்கு (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப்பெரியதாகும்’ எனக் கூறுவீராக! மேலும், தாம் எதைச் செலவு செய்வது? என்றும் உம்மிடம் கேட்கின்றனர். ‘(தேவைக்குப் போக) மீதமுள்ளதை’ எனக் கூறுவீராக! நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறே அல்லாஹ்  வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்.’ (2:219)

அறபு மக்கள் மிகப்பெரும் மதுப் பிரியர்களாக இருந்தார்கள். குடிக்காமல் இருப்பது ஆண்மைக்கு அழகன்று என்று நினைத்தவர்களும் இருந்தனர். ஒரு ஆண், தான் மரணிக்கும் போது தன் மனைவியை அழைத்து நான் இறந்த பின்னர் நீ மறு மணம் செய்வதாக இருந்தால் மதுபானம் குடிக்காதவனை மணக்கக் கூடாது என்று கூறும் அளவுக்கு மது என்பது அவர்களின் வாழ்வில் இடம் பிடித்திருந்தது. நபி(ச) அவர்கள் தமது போதனையின் ஆரம்ப கட்டத்தில் மதுவைத் தடை செய்யவில்லை. ஆனால், மதுவின் தீமைகளை உணர்ந்த சிலர் மதுபானம் தடை செய்யப்பட்டால் நல்லது என்று நினைக்கும் நிலையைத் தன் போதனை மூலம் உருவாக்கினார்கள்.

அவர்களாகவே வந்து மது பற்றிக் கேட்டார்கள். அப்போது இந்த வசனம் அருளப்பட்டது.

‘(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘அவ்விரண்டிலும் பெரும்கேடும், மனிதர்களுக்கு (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப்பெரியதாகும்’ எனக் கூறுவீராக! மேலும், தாம் எதைச் செலவு செய்வது? என்றும் உம்மிடம் கேட்கின்றனர். ‘(தேவைக்குப் போக) மீதமுள்ளதை’ எனக் கூறுவீராக! நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறே அல்லாஹ்  வசனங்களை உங்களுக்குத் தெளிவு படுத்துகின்றான்.’ (2:219)

இதில் மது, சூது இரண்டிலும் நன்மைகள் இருக்கின்றன என்று கூறப்படுகின்றது. விற்பனை மூலம் பொருளாதார நலனை ஒரு கூட்டம் பெறலாம். ஆனால், மது மற்றும் சூது இரண்டிலும் ஏற்படும் பாதிப்புக்கள் அதனால் ஏற்படும் நன்மைகளை விடப் பெரியது என்று கூறி மது மீது வெறுப்பு ஏற்படுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக,

    ‘நீங்கள் போதையுடன் இருக்கும் போது தொழுகையை நெருங்காதீர்கள்’ (4:43)

என்ற வசனம் அருளப்பட்டது. ஒரு முஸ்லிம் தினமும் ஐவேளை தொழ வேண்டும். தொழும் போது போதையுடன் இருக்கக் கூடாது என்றால் தொழுகைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னராவது குடிப்பதை அவசியம் நிறுத்தியாக வேண்டும். இப்படிப் பார்க்கும் போது அதிகாலை சுபஹ் தொழுகைக்கும், பகல் ழுஹர் தொழுகைக்குமிடையில் அவர்கள் குடிப்பதற்கு ஓரளவு நேரம் இருந்தது. இந்நேரம் பணிகள் தொடர்பில் பிசியாக உள்ள நேரம். இரவுத் தொழுகைக்குப் பின்னர் குடிப்பதற்கு வாய்ப்பிருந்தது. இந்த சட்டத்தைப் போட்டு மதுப் பிரியர்கள் மதுவை விட்டும் தூரமாக்கப் பட்டார்கள்.

அடுத்த கட்டமாக பின்வரும் வசனம் அருளப்பட்டது.

‘நம்பிக்கை கொண்டோரே! மதுவும், சூதாட்டமும், (வணக்கத்திற்காக) நடப்பட்டவைகளும், குறிபார்க்கும் அம்புகளும் ஷைத்தானின் அருவருக்கத் தக்க செயலிலுள்ளவைகளாகும். எனவே, நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு அதைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.

 ‘ஷைத்தான் விரும்புவதெல்லாம் மது,  சூதாட்டம் என்பவற்றின் மூலம், உங்களுக்கிடையில் பகைமையையும், குரோதத்தையும் ஏற்படுத்தவும், உங்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும், மற்றும் தொழுகையை விட்டும் தடுத்து விடவுமேயாகும். எனவே, நீங்கள் விலகிக்கொள்வீர்களா?’ (5:90-91)

மது, சூது மூலம் கோபமும் குரோதமும் ஏற்படுகிறது. இறை நினைவையும், தொழுகையையும் விட்டும் iஷத்தான் உங்களைத் தூரமாக்குகின்றான். எனவே, இது கூடாது தடை செய்யப்;பட்டது. நீங்கள் விலகிக் கொள்வீர்களா? என்ற வசனம் அருளப்பட்டதும் விலகிக் கொண்டோம் விலகிக் கொண்டோம் என முஸ்லிம்கள் மதுவை முழுமையாக ஒழித்தனர். மதீனா வீதியெங்கும் மது ஆறு ஓடியது என்று கூறும் அளவுக்கு மதுப் பீப்பாக்கள் கொட்டிவிடப்பட்டன. மதுபானச் சட்டிகள் உடைக்கப்பட்டன. வாயில் ஊற்றிய மதுவையும் கீழே துப்பினர். இவ்வாறு படிப்படியாகப் போதித்து இஸ்லாம் மது ஒழிப்பில் ஒரு மகத்தான புரட்சியையே ஏற்படுத்தியது.

மாதவிடாயும் பெண் கொடுமையும்:

‘மாதவிடாய் பற்றியும் உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். ‘அது ஒரு அசௌகரியமாகும். எனவே, மாதவிடாயின் போது பெண்களை (உறவு கொள்வதை) விட்டும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் தூய்மை யடையும் வரை அவர்களிடம் (உறவுக்காக) நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மையடைந்து விட்டால் அல்லாஹ் உங்களுக்கு ஏவியவாறு அவர்களிடம் செல்லுங்கள்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்புத் தேடுபவர்களை நேசிக்கின்றான். மேலும் தூய்மையானவர்களையும் நேசிக்கின்றான்.’ (2:222)

மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் இயற்கையான அம்சமாகும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் இழிவாக நடத்தப்பட்டார்கள், அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். அவர்களை அக்காலத்தில் தீண்டத் தகாதவர்களாகப் பார்த்தார்கள். இஸ்லாம் அதைத் தடை செய்தது.

நபி(ச) அவர்கள் தமது மனைவியர் மாதவிடாயுடன் இருக்கும் போது அவர்களுடன் ஒன்றாக உணவு உண்டார்கள், உறங்கினார்கள். அவர்களின் மடி மீது தலை வைத்துப் படுத்துக் கொண்டு திருமறைக் குர்ஆனை ஓதினார்கள். இவ்வாறு மாதவிடாய் கொடுமைகளை ஒழித்தார்கள்.

இந்த வசனத்தில், மாதவிடாய் காலத்தில் பெண்களை ஒதுக்கி வைக்க வேண்டியதில்லை. அவர்களுடன் உடலுறவு கொள்வதை விட்டும் நீங்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள் என ஆண்களுக்குப் போதிக்கப்படுகின்றது. உடலுறவு அல்லாத அனைத்துத் தொடர்புகளையும் அவர்களுடன் பேணலாம். அவர்களுடன் இன்பமாகவும், உல்லாசமாகவும் ஏனைய நாட்களைப் போன்று இருக்கலாம் என இந்த வசனம் கூறுகின்றது.

மாதவிடாய் காலங்களில் உடலுறவைத் தவிர ஏனைய அனைத்தையும் பெண்களுடன் செய்யுங்கள் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.

இந்நிலையை அடைந்த பெண்கள் தொழுதல், நோன்பு நோற்றல், கஃபாவை வலம் வருதல், பள்ளிவாசலில் தரித்தல் போன்ற இஸ்லாமிய வழிபாடுகளைத் தவிர்க்க வேண்டும். இஃதல்லாத மார்க்க நிகழ்ச்சிகள், திக்ர் (தியானம்), பிரார்த்தனைகள் போன்ற ஏனைய கிரியைகளில் பெண்கள் ஈடுபடலாம். பெருநாள் தினத்தில் தொழுகை தவிர்ந்த ஏனைய பொது விடயங்களில் கலந்து கொள்ளலாம் எனக் கூறி இஸ்லாம் மாதத்தீட்டை வைத்து பெண்களை இழிவுபடுத்தும் சகல கொடுமைகளையும் ஒழித்தது!

மூட நம்பிக்கை ஒழிப்பு:

‘உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்களாவர். உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பிய விதத்தில் செல்லுங்கள். உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள். இன்னும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் அவனைச் சந்திக்கக் கூடியவர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நன்மாராயம் கூறுவீராக!’ (2:223)

இஸ்லாம் எல்லா வகையான மூடநம்பிக்கைகளையும் ஒழித்த மார்க்கமாகும். உடலுறவு தொடர்பில் யூதர்களிடம் ஒரு மூடநம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையின் தாக்கம் மதீனத்து முஸ்லிம்களிடம் இருந்தது.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(வ) அறிவித்தார். ‘ஒருவர் தம் மனைவியிடம் பின்பக்கத்திலிருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லி வந்தார்கள். எனவே, ‘உங்கள் பெண்கள் உங்களுக்குரிய ‘விளை நிலம்’ ஆவர். எனவே, உங்கள் விளை நிலத்திற்கு நீங்கள் விரும்பியபடி செல்லுங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 02:223 ஆவது) இறைவசனம் அருளப்பட்டது.’  (புஹாரி: 4528)

யூதர்களின் இந்த மூடநம்பிக்கையால் தாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இந்த வசனத்தின் மூலமாக எந்த அடிப்படையில் வேண்டு மானாலும் நீங்கள் உடலுறவு கொள்ளலாம் எனக் கூறி அந்த மூட நம்பிக்கையை இஸ்லாம் ஒழித்தது.

பின்புறமாக உறவு கொண்டால் குழந்தை மாறு கண் கொண்டதாகப் பிறக்கும் என்று கூறிய யூதர்கள் மல வழியை உறவுக்குப் பயன்படுத்தி வந்தனர். அதையும் இந்த வசனத்தில் இலக்கிய நயமாக இஸ்லாம் கண்டித்தது.

மனைவியை விளைநிலமாக ஒப்பிட்டு உடலுறவை பயிர் செய்வதாக ஒப்பிட்டுப் பேசிய இந்த வசனம் பயிரை எப்படி வேண்டுமானாலும் விதைக்கலாம். ஆனால், விதைக்கும் இடம் வயலாக – பயிர் வளரும் இடமாக இருக்க வேண்டும். வாய்க்காலாக இருந்துவிடக் கூடாது எனக் கூறி யூதர்களின் மூட நம்பிக்கையை மறுத்ததுடன் அசிங்கமான உறவு முறையையும் அழகாகக் கண்டித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.