நவீன அறிவியல் எழுச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு (தொடர்-3)

தேக்க நிலையும் அதற்கான காரணங்களும்
ஏலவே குறிப்பிட்டது போன்ற காரணங்களால் அறிவியலின் உச்சநிலையை அடைந்து அகில உலகெங்கும் அறிவொளி பாச்சிய முஸ்லிம்கள் படிப்படியாக இத்துறையில் செல்வாக்கை இழந்தனர். அதனைத் தொடர்ந்து ஐரோப்பியர் இத்துறையில் எழுச்சி பெற்றனர்.

அறிவியல்துறையில் முஸ்லிம்கள் தேக்க நிலையை அடைந்தமைக்குப் பல காரணங்களை இனங்காட்ட முடியுமாயினும் பிரதானமான காரணங்கள் இங்கு கோடிட்டுக்காட்டப்படுகின்றன.
1. அல் குர்ஆன், சுன்னா புறக்கணிக்கப்பட்டமை
முஸ்லிம் சமூகம் குர்ஆன் சுன்னாவை விட்டும் தூரமானது அல்லது அவற்றை ஆன்மீக தேவைகளுக்கு மட்டுமுரியதாக காணமுற்பட்டமை பிரதான காரணங்களில் ஒன்றாகும். முஸ்லிம்கள் இபாதத் என்ற பரந்த விடயத்தைக் குறிப்பிட்ட சில கிரிகைகளுக்குள் சுருங்கிக் கொண்டனர். வானம், பூமி, நட்சத்திரம், கோள்கள் பற்றியெல்லாம் சிந்திப்பதும், அல்லாஹ்வின் படைப்புக்களின் அற்புதங்களை ஆராய்வதும் இபாதத்தாக அவர்களால் நோக்கப்படவில்லை. அல் குர்ஆனையும், சுன்னாவையும் முழுமையாக ஆராய்வது குறைவடைந்தது. பிக்ஹ் மஸாயில்களுக்குத் தீர்வு காண்பதற்காக மட்டும் குர்ஆன் சுன்னாவை அலசி ஆராய்ந்தார்கள். அதன் மறுபக்கங்களை மறந்து போனார்கள்.

குறிப்பாகப் பிற்காலத்தில் ஏற்பட்ட மத்ஹபு வேறுபாடுகள் முஸ்லிம்களின் முழுக்கவனத்தையும் அதன்பாலே ஈர்த்துக் கொண்டமையால் குர்ஆன், சுன்னா உரிய முறையில் ஆராயப்படவில்லை. ‘இல்முல் கலாம்’ என்ற பெயரில் தர்க்கவாதத்தை உருவாக்கி தேவையற்ற விடயங்களில் மயிர் பிளக்கும் ஆய்வில் ஈடுபட்டனர். ஒரு அறிஞரிடம் முஸ்லிம்கள் அறிவியல் துறையில் பின்தங்கியிருப்பதற்கும் கிறிஸ்தவர்கள் அத்துறையில் முன்னேற்றம் கண்டிருப்பதற்குமான காரணம் வினவப்பட்டபோது ‘மார்க்கத்தைப் புறக்கணித்ததால்’ என ஒற்றைவார்த்தையில் பதில் கூறினார்.
கிறிஸ்தவர்கள் தமது மதப் பிரகாரம் வாழ்திருந்தால் அறிவியலில் அவர்கள் முன்னேற்றம் கண்டிருக்க முடியாது. முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் புறக்கணிக்காது இருந்திருந்தால் இந்த தேக்க நிலை ஏற்பட்டிருக்காது என்பதை இது உணர்த்துகின்றது.
2. அரசியல் பலவீனம் அல்லது வீழ்ச்சி:
பிற்கால இஸ்லாமிய அரசியல் நலிவுற்று இறுதியில் கிலாபத் வீழ்ச்சி கண்டமையும் அறிவியல்துறை தேக்கமடைந்தமைக்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும். ஏற்கனவே குறிப்பிட்டது போன்று ஆட்சியாளர்களின் அனுசரணை பிற்காலத்தில் இத்துறைக்குக் கிடைக்கவில்லை. அதற்குக் கலீபா மன்சூர், மாமூன், ஹாரூன் அல் ரஷீத் போன்ற கல்வித்தாகமுடைய கலீபாக்கள் இல்லாது போனமை முக்கிய காரணமாகும். அறிஞர் அபுல் அஃலா மவ்தூதி(ரஹ்) அவர்கள், ஆரம்பகால அப்பாஸிய கலீபாக்களைத் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் இஸ்லாமிய கலைகள் விஞ்ஞானத்துறைகள் பற்றிய அறிவு அற்றவர்களாக இருந்தமையும் இத்துறையின் தேக்க நிலைக்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது.(20)

இவ்வாறான ஆட்சியாளர்களின் ஆர்வமின்மை பலவீனம், இஸ்லாமிய கிலாபத் வீழ்ச்சி கண்டமை என்பன இத்துறை தேக்கமடைய காலாயமைந்தன.
3. யுத்தங்களும் படையெடுப்புக்களும்:
வரலாறு நெடுகிலும் இஸ்லாம் பல்வேறு படையெடுப்புக்களைச் சந்தித்து வந்துள்ளது. இஸ்லாம் அல்லாத வேறு எந்தக் கொள்கையோ கோட்பாடோ இத்தகைய சவால்களை எதிர்கொண்டிருந்தால் அதன் சாயல்கூட உலகில் இல்லாது அழிக்கப்பட்டிருக்கும். ஆயினும், இஸ்லாம் இந்தளவு சவால்களுக்கும் ஈடு கொடுத்து நிலைத்து நிற்பதே அதன் தனிச்சிறப்பும் அற்புதமுமாகும் என்றால் மிகையாகாது.

முஸ்லிம் உலகு சந்தித்த உள்நாட்டுக் குழப்பங்களும் வெளிநாட்டுப் படையெடுப்புக்களும் முஸ்லிம்களின் கவனத்தைத் திசைதிருப்பியது. இவற்றில் நூறாண்டுகளைத் தாண்டியும் நீண்டு சென்ற சிலுவை யுத்தங்கள் பிரதானமானவையாகும். அப்போது சிலுவை வீரர்களால் முஸ்லிம் தேசங்கள் சிதைக்கப்பட்டன. முஸ்லிம் உலகின் முழுக் கவனமும் இந்த சவாலை எதிர்கொள்வதன் பால் திரும்பியிருந்தது. சிலுவை வெறியர்களால் முஸ்லிம்களின் தனிச் சிறப்புக்களும், கலைக்கூடங்களும் அழிக்கப்பட்டன.
இவ்வாறே இஸ்லாமிய உலகு சந்தித்த மிகப்பெரும் சோதனைகளில் ஒன்றான தாத்தாரிய படையெடுப்பின் போதும் முஸ்லிம்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். அவர்களது அறிவியல் செல்வங்கள் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான நூல் நிலையங்களிலிருந்த லட்சக் கணக்கான ஆய்வு நூல்கள் எரிக்கப்பட்டன.
நைல் நதியில் முஸ்லிம்களின் ஆய்வு நூல்கள் பாலமாகப் போடப்பட்டதாகவும், நூல்கள் எழுதப்பட்ட மை கரைந்ததால் நைல் நதி நீர் நீண்ட நாட்களாகக் கரும் நிறத்தில் காட்சியளித்ததாகவும் கூறப்படுமளவுக்கு இந்த அழிவு இருந்தது. இதனால் ஆண்டாண்டு காலமாகப் பல்வேறுபட்ட அறிஞர்களின் கடின உழைப்பால் முஸ்லிம்கள் சேகரித்து வைத்திருந்த அறிவியல் முதுசங்கள் அழிக்கப்பட்டன.
படையெடுப்புக்கள் ஏற்படுத்திய பாதிப்பு, கையிருப்பில் இருந்த அறிவியல் பொக்கிசங்கள் பறிபோனமை என்பன இத்துறையில் தேக்க நிலையை ஏற்படுத்தியது எனலாம்.
ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா, நாகரீகத்தின் தொட்டிலாகத் திகழ்ந்த ஈராக்கின் அரும்பொருள் காட்சியகத்தைக் கொள்ளையிட்டமை தாத்தாரிய படையெடுப்பின் போது எப்படி இஸ்லாமிய இலக்கியங்களும் அறிவியல் பொக்கிஷங்களும் அழிக்கப்பட்டிருக்கும் என்பதற்கான நிதர்சன சான்றாகும்.
4. முஸ்லிம்கள் காலனித்துவத்துக்கு உட்பட்டமை
பிரான்ஸ், பிரித்தானியா, இத்தாலி, ஹோலாந் போன்ற ஏகாதியபத்திய நாடுகளின் ஆக்கிரமிப்புக்கு முஸ்லிம் நாடுகள் உள்ளாகின. நவீன காலனித்துவமானது 1798ல் நெப்போலியனால் எகிப்து ஆக்கிரமிக்கப் பட்டதிலிருந்து துவக்கம் பெறுவதாகக் கொள்வர். இவர்கள் நிலங்களை மட்டுமன்றி மனிதமனங்களையும் மூளைகளையும் ஆக்கிரமித்தனர். நிலங்களை அவர்கள் விட்டுப் போனபோதும் அவர்கள் ஆக்கிரமித்திருந்த மனங்களை விட்டு அவர்கள் போகவில்லை. இது குறித்து யூசுப் அல் கர்ழாவி குறிப்பிடும் போது ‘நிலங்களை ஆக்கிரமித்ததை விட மூளைகள் மீதான ஆக்கிரமிப்பு பாரதூரமானதாக இருந்தது'(21) என்று குறிப்பிடுகின்றார்.

ஆக்கிரமிப்பாளர்கள் தாம் ஆக்கிரமித்த நிலம், மக்கள் அவர்களது மதம், கலாசாரம் என்பவற்றைக் கடுமையாக ஆராய்ந்து அவற்றின் தனிச்சிறப்பம்சங்களை இனங்கண்டு அவற்றை சிதைத்தார்கள். பலம் எது என அறிந்து அதைத்தகர்த்தனர். பலவீனம் எது என்பதை இனம் கண்டு அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். இவ்வகையில் முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் ஒழுக்கவீழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் அவர்களது அறிவியல் பொக்கிசங்களைத் திருடிச் சென்றனர்.
இந்த வகையில் காலனித்துவம் முஸ்லிம்களின் அறிவியல் துறைவளர்ச்சி தேக்கமடைய வழிவகுத்தது.
5. இஜ்திஹாத் தடைப்பட்டமையும் தக்லீத் கோட்பாடு தோற்றம் பெற்றமையும்
முஸ்லிம்கள் மத்தியில் பிற்காலத்தில் ஏற்பட்ட தனிமனித வழிபாடு, முன்னைய அறிஞர்களில் முழுமையாகத் தங்கி நிற்றல், சமகால அறிஞர்களின் தூய்மையற்ற வாழ்வினால் ஏற்பட்ட அவர்கள் மீதான அவநம்பிக்கை என்பன தக்லீத் கோட்பாடு ஆழமாக வேரூன்றவும், இஜ்திஹாத் புறக்கணிக்கப்படவும் வாய்ப்பளித்தது.

முன்னைய அறிஞர்களின் நூல்களுக்கு விளக்கம் எழுதுதல், பக்க, ஓரக்குறிப்புக்கள் வழங்குதல் என்பவற்றுடன் அறிஞர்கள் தமது பணியைச் சுருக்கிக் கொண்டனர். இதுவே பேணுதலானது என்றும் கருதினர். இதனால் முஸ்லிம்களது ஆய்வுக் கண் அடைக்கப்பட்டது. சிந்தனைச் சிறகுகள் முறிக்கப்பட்டன. இத்தகைய மந்த நிலை ஆரம்பத்தில் பிக்ஹ் துறையை ஆக்கிரமித்தாலும் போகப்போக அனைத்துத் துறைகளும் இந்த அவலத்திற்குள்ளாகின.
இதுகுறித்து விளக்க முனையும் உஸ்தாத் முஹம்மத் முபாரக்; ‘ஆரம்ப நூற்றாண்டுகளில் மார்க்கம், மற்றும் அறிவியல் துறைகளில் முஸ்லிம்களிடம் காணப்பட்ட முன்னேற்றம் தக்லீத் சிந்தனைப் போக்கினாலும், தனிமனித வழிபாட்டினாலும் வீழ்சியடைந்தன’ என்று குறிப்பிடுகின்றார்.(22)
இதே கருத்தை அபுல் அஃலா மவ்தூதி பின்வருமாறு விளக்குகின்றார். ‘பேனா முனையாலும், வாட்களாலும் நீண்டகாலமாக ஆட்சிக்காகப் போராடிய முஸ்லிம்களிடம் சோர்வு நிலை தோhன்றியது. இதனால் ஜிஹாதின் வேகம் தணிந்தது, இஜ்திஹாத் செய்யும் திறனும் நலிவடைந்தது. இதனால் இயல்பாகவே தமக்கு அறிவொளியையும் செயற்திறனையும் வழங்கிய அல் குர்ஆனை புனிதப்பொருளாகக் கருதி உரைகளில் இட்டுப் பாதுகாத்தனர். மேலும் தமது நாகரிகத்தைச் செம்மைப்படுத்திய சுன்னாவைப் பின்பற்றாமல் விட்டுவிட்டனர். இதன் விளைவால் முஸ்லிம்களது முன்னேற்றம் தடைப்பட்டது. பலநூற்றாண்டுகள் பொருக்கெடுத்தோடிய நதி தேங்கி ஒரு குட்டையாக மாறியது. எனவே, முஸ்லிம்களிடம் இருந்த உலக தலைமைத்துவம் (இமாமத்) பறி போனது. ஏனைய சமூகங்களை மிஞ்சியிருந்த இவர்களது சிந்தனை, அறிவு, ஆற்றல் என்பன பலவீனமடைந்தன.(23)
மேற்படி கூற்று இஜ்திஹாத் தடைப்பட்டமையும் தக்லீத் கோட்பாடு தலைதூக்கியமையும் முஸ்லிம் உலகில் ஏற்பட்ட அறிவியல் தேக்க நிலைக்கு முக்கிய காரணமாகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
6. இஸ்லாமியக் கோட்பாடுகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டமை
இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடுகள் தவறாகப் புரியப்பட்டமையும் அறிவியல் தேக்க நிலைக்கு வழிவகுத்தது. குறிப்பாக, கழாகத்ர் பற்றிய தவறான விளக்கம் விதியின் மீது பழியைப்போட்டு முடங்கிக் கிடக்கவும், ‘தவக்குல்’ பற்றிய தவறான எண்ணக்கரு முயற்சிகள் முடக்கப்படவும் வழிவகுத்தது. இவ்வாறான சிந்தனைகள் வலுப்பெற பிளேட்டோ, அரிஸ்டோட்டில் போன்றோரின் தத்துவங்கள் முஸ்லிம்களிடம் செல்வாக்குச் செலுத்தியமையும், முஸ்லிம் உலகில் அந்நிய கலாசார சிந்தனைத் தாக்கத்திற்குட்பட்ட சூபிகள் செல்வாக்குப் பெற்றமையும் முக்கிய காரணங்களாகும்.

இவர்கள் நோய்க்கு மருந்து செய்வதைவிட அல்லாஹ்வின் கழாவின் படியே நோய் ஏற்பட்டது. அந்தக் கழாவைப் பொருந்திக் கொள்வதே ஏற்றமானது என நம்பினர். எந்த முயற்சியும் இல்லாமல் வெறுமனே பிராத்தனையினால் எதனையும் சாதிக்கலாம் என நம்பினர். பிரபஞ்சம் பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டத்திற்கு மாற்றமான சிந்தனை இவர்களூடாக முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றது. துறவற சிந்தனையும், தவறான ஆன்மீக நாட்டமும் பெருகியது. இது முஸ்லிம்களின் செயற்திறனை மட்டுமன்றி, அவர்களின் உற்சாகமான செயற்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தியது.
இவ்வகையில் கழாகத்ர், தவக்குல், துஆ, உலகம், மறுமை பறறிய தவறான நோக்கு மாற்றுக் கலாசார தாக்கத்தினால் இஸ்லாமிய உலகில் செல்வாக்குப்பெற்றதுவும் அறிவியல்துறையில் தேக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.
முடிவுரை
வரலாறு என்பது கடந்கால பெருமை பேசுவதற்கான சாதனமல்ல. முஸ்லிம்கள் தமது கடந்தகால வரலாற்றையும், அவர்கள் வரலாற்றில் வகித்துவந்த மகோன்னத நிலையையும் அதற்கான காரணத்தையும் கண்டறிய வேண்டும். அத்தோடு தமது வீழ்ச்சிக்கு வழிவகுத்த அல்லது முன்னேற்றத்தை தடுத்த காரணிகளைக் கண்டறிந்து களைய வேண்டும். முன்னேற்றத்திற்கு வழிவகுத்த காரணிகளை ஏற்படுத்திக் கொள்ள அல்லது ஏற்படுத்த முடியாதவை இருப்பின் அதற்கு மாற்றீடான வழிமுறைகளை இனம்காண வேண்டும். அவற்றினூடாக இழந்த பெருமையை மீளப்பெறலாம். உலகின் தலைமைத்துவத்தைக் கையிலெடுத்து அதற்கு நல்ல முன்மாதிரியை வழங்கவும் முன்வரவேண்டும். அதற்கான முயற்சிகளை முடிந்தவரை முன்னெடுக்கத்தக்க அறிவும் ஆற்றலும் மிக்கதொரு குழுவின் செயற்பாட்டை காலம் கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. இத்தகையதொரு பாரிய பணிக்கு முஸ்லிம் சமூகத்தின் குறிப்பிட்ட சிலரையாவது ஆயத்தப்படுத்த அல்லாஹ் ஒருவனே போதுமானவனாவான்.

அடிக்குறிப்புக்கள்
20. அபுல் அஃலா மவ்தூதி
இஸ்லாமிய மறுமலர்ச்சி ஒரு வரலாற்று நோக்கு,
பேருவளை, மார்ச் 2001, பக் 55

21. பழீல் எஸ். எச். எம்
நவீன இஸ்லாமிய எழுச்சி ஒரு கண்ணோட்டம் (கட்டுரை),
மீள்பார்வை, முஹர்ரம்; மலர் 2001, பக்.40

22. அஸ்ஸகாபதுல் இஸ்லாமிய்யா
மலிக் அப்துல் அஸீஸ் பல் கலைக்கழக வெளியீடு,
ஜித்தா, பக் 104

23. அபுல்அஃலா மவ்தூதி (ரஹ்)
நஹ்னு வல் ஹழாரா அல்இஸ்லாமிய்யா,
தாருல்பிக்ர், பக்.44

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.