நபிக்கு அதிகாரத்தில் பங்கில்லை | அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 16.

‘(நபியே!) அதிகாரத்தில் உமக்கு யாதொரு பங்கும் இல்லை. (அல்லாஹ்) அவர்களுக்கு மன்னிப்பு வழங்கலாம் அல்லது நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்கள் என்பதால் அவன் அவர்களைத் தண்டிக்கலாம்.’
(3:128)

உஹதுப் போரில் நபி(ச) அவர்களின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர்களது முகத்தில் இரத்தம் கசிந்தது. அப்போது, ‘தங்கள் நபியைக் காயப்படுத்திய ஒரு சமூகம் எப்படி வெற்றி பெறும் என்று நபி(ச) அவர்கள் கூறினார்கள். அப்போதுதான் மேற்படி வசனமும் அருளப்பட்டது.’ (முஸ்லிம்: 1791-104)

இந்த வசனத்தின் மூலம் இஸ்லாத்தின் ஏகத்துவத்தின் உண்மை நிலை உணர்த்தப் படுகின்றது. அதிகாரத்தில் அல்லாஹ்வின் தூதருக்கே பங்கில்லை எனும் போது நல்லடியார்கள், நாதாக்கள், பெரியார்கள், ஆன்மீகத் தலைவர்கள் போன்றவர் களுக்கெல்லாம் ஆற்றல்கள் இருப்பதாக நினைத்தும் பார்க்க முடியாது. இந்தப் பெரியாரின் கடைக்கண் பார்வை பட்டால் போதும். அந்தப் பெரியாரின் கோபப் பார்வைக்கு ஆளாகிவிடக் கூடாது! அவரின் கோபப் பார்வை எம்மை எரித்துவிடும் என்றெல்லாம் எண்ணிக் கூடப் பார்க்க முடியாது.

நபியின் முகத்தில் இரத்தம் வடியக் காரணமாக இருந்தவர்களைக் கூட அல்லாஹ் மன்னித்து அவர்களுக்கு நேர்வழியைக் காட்டி வெற்றியடையச் செய்தான் என இந்த வசனம் கூறுகின்றது.
அடுத்து, அல் குர்ஆன் நபி(ச) அவர்களால் இயற்றப்படவில்லை| அது அல்லாஹ்வால் அருளப் பட்டது. முஹம்மது நபியால் போதிக்கப்பட்டது என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது. முஹம்மது நபியால் இது இயற்றப்பட்டிருந்தால் தன்னைப் பற்றி தானே கண்டித்து வசனங்களை இயற்றியிருக்க முடியாது. எனவே, இந்த வசனம் இஸ்லாத்தின் ஏகத்துவத்தின் உறுதியையும் அல் குர்ஆன் உண்மையான இறைவேதம் என்பதையும் ஒருங்கே பறைசாற்றி நிற்கின்றது.

பெருகும் வட்டியை உண்ணாதீர்கள்:

‘நம்பிக்கை கொண்டோரே! பன்மடங்கு களாகப் பெருகும் வட்டியை நீங்கள் உண்ணாதீர்கள். நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்.’ (3:131)

இஸ்லாம் வட்டியை முழுமையாகத் தடுத்துள்ளது. கூடிய வட்டி, குறைந்த வட்டி என்ற எந்தப் பாகுபாட்டையும் இஸ்லாம் பார்க்கவில்லை. ஆனால், இந்த வசனத்தில் பன்மடங்காகப் பெருகும் வட்டியை நீங்கள் உண்ணாதீர்கள் என்று கூறப்படுகின்றது. எனவே, கூடிய வட்டிதான் தடை செய்யப்பட்டுள்ளது, குறைந்த வட்டிக்குத் தடையில்லை என்ற கோணத்தில் வாதிட முடியாது.

‘நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், வட்டியில் எஞ்சியுள்ளதை விட்டுவிடுங்கள்.’
‘(அவ்வாறு) நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனம் செய்யப்பட்டுவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் (வட்டியை விட்டு தௌபாச் செய்து) மீண்டுவிட்டால் உங்கள் செல்வங்களின் மூலதனம் உங்களுக்குரியதாகும். (இதன் மூலம்) நீங்கள் அநியாயம் செய்யவும் மாட்டீர்கள்| அநியாயம் செய்யப்படவும் மாட்டீர்கள்.’
(2:278-279)

இந்த வசனத்தில் கடந்த காலத்தில் வாங்கியது போக வட்டியை விட்டு விடுமாறு கூறப்படுகின்றது. நீங்கள் தவ்பா செய்தால் குறைந்த வட்டி வாங்கிக் கொள்ளலாம் என்று கூறாமல் உங்கள் முதல் மட்டுமே உங்களுக்குரியது என்று கூறப்படுகின்றது. எனவே, குறைந்த வட்டிக்கும் மார்க்கத்தில் இடம் இல்லை என்பது தெளிவு.

அப்படியென்றால் பன்மடங்காகப் பெருகும் வட்டியை நீங்கள் உண்ணாதீர்கள் என்று ஏன் கூறப்படுகின்றது? பன்மடங்காகப் பெருகும் வட்டியை உண்ணாதீர்கள் என்றால் பன்மடங்காகப் பெருகாத வட்டியை உண்ணலாம் என்று ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்கத் தோன்றலாம்.

குர்ஆனுக்கு குர்ஆனும் ஹதீஸும்தான் விளக்கமாகும். ஏனைய வசனங்களும் ஹதீஸ்களும் வட்டியை முழுமையாகத் தடை செய்திருக்காவிட்டால் இவ்வாறு சிந்திப்பதில் ஓரளவாவது நியாயம் இருக்கலாம். பொதுவான தடை இருக்கும் போது இப்படி சிந்திக்க இடமே இல்லை.

அடுத்து, வட்டியின் இயல்பே பன்மடங்காகப் பெருகுவதாகும். அடுத்து, இந்தத் தடை அந்தக்கால வழக்கத்தை மையமாகக் கொண்டுதான் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. வட்டிக்குக் கடன் கொடுத்து அதற்கு வரும் வட்டிக்கும் வட்டி வாங்குவார்கள். அந்த நடைமுறையை மையமாகக் கொண்டே இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘வறுமைக்குப் பயந்து, நீங்கள் உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக் கின்றோம். நிச்சயமாக அவர்களைக் கொலை செய்வது பெருங்குற்றமாகும்.’ (17:31)

வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தை களைக் கொன்றுவிடாதீர்கள்! என்று கூறப்படுகின்றது. அன்றைய கால பழக்கத்தை மையமாகக் கொண்டுதான் இந்தப் பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை வைத்து ஒருவர் வறுமைக்குப் பயந்து குழந்தையைக் கொல்லக் கூடாது என்றுதான் கூறப்பட்டுள்ளது. வறுமைக்குப் பயப்படாமல் குழந்தையைக் கொன்றால் குற்றமில்லை என்று யாரும் எடுத்துக் கொள்ள முடியாது.

இந்த வசனத்திலேயே மற்றொரு உதாரணத்தைக் கூறலாம். பன்மடங்காகப் பெருகும் வட்டியை உண்ணாதீர்கள் என்றுதான் அல்லாஹ் கூறுகின்றான். பன்மடங்காகப் பெருகும் வட்டியை எடுத்து வீடு கட்டப் போகின்றேன். உண்ணாதீர்கள் என்றால் உண்ணத்தான் கூடாது. மாறாக, வேறு வேலைகளுக்குப் பயன்படுத்தலாம் என்று எடுத்துக் கொள்ளலாம்தானே என்று ஒருவன் வாதிட்டால் அது எவ்வளவு தவறானதோ அதே போன்றதுதான் கூடிய வட்டிதான் கூடாது, குறைந்தை வட்டி ஆகுமானது என்ற வாதமாகும்.

சோதனைகள் ஏன்?:

‘உங்களுக்கு ஒரு காயம் (உஹதில்) எற்பட்டால் அது போன்றதொரு காயம் அந்தக் கூட்டத்திற்கும் (பத்ரில்) ஏற்பட்டே உள்ளது. இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம். (இவ்வாறு செய்வது) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் அறிந்து கொள்வதற்கும், உங்களிலிருந்து உயிர்த்தியாகிகளை எடுத்துக் கொள்வதற்குமேயாகும். அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிக்கமாட்டான்.’ (3:140)

‘அல்லாஹ் நம்பிக்கை கொண்டோரைப் புடம் போடவும், நிராகரிப்பாளர்களை அழிப்பதற்காகவுமே (இவ்வாறு செய்கின்றான்.)’ (3:141)

உஹதுப் போரில் முஸ்லிம்களுக்கு இழப்பு ஏற்பட்ட போது அல்லாஹ் கூறிய ஆறுதல் வார்த்தைகளே இவை. இதில் பல அம்சங்கள் கூறப்படுகின்றன.

* உங்களுக்கு ஒரு இழப்பு ஏற்பட்டால் அதே போன்று ஒரு இழப்பு அவர்களுக்கும் ஏற்பட்டது.

இது ஒரு அழகிய ஆற்றுப்படுத்தும் முறையாகும். உங்களுக்கு ஏற்பட்டது போன்ற இழப்பு உங்கள் எதிரிகளுக்கும் ஏற்பட்டது என்று கூறுவதன் மூலம் முஃமின்களின் மனதுக்கு அல்லாஹ் ஆறுதல் அளிக்கின்றான்.

* வெற்றி-தோல்வியை நாம் மாற்றி மாற்றிக் கொண்டாடி வருவோம். உஹதில் உங்களுக்கு இழப்பு என்றால் அந்த இழப்பு நிரந்தரமானதன்று. மீண்டும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! வெற்றியை மட்டுமன்றி தோல்வியையும் தாங்கப் பழக வேண்டும் என்று அல்லாஹ் ஆறுதல் அளிக்கின்றான்.

* உண்மையான முஃமின்களை அடையாளம் காட்டுவதற்காகவும் அல்லாஹ் இந்த சோதனை களை ஏற்படுத்துகின்றான்.

* உங்களில் சிலரை அல்லாஹ் உயிர்த் தியாகிகளாக்கி உயர் அந்தஸ்தை அளிக்க விரும்புகின்றான். தீங்கள் தியாகிகளாக வேண்டும் என்றால் எதிரிகளால் நீங்கள் கொல்லப்பட வேண்டும். எனவே, இது இழப்பு அல்ல.

* இழப்புக்கள் சோதனைகள்தான். ஒரு மனிதனைப் புடம் போடும் உங்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்தி அல்லாஹ் புடம் போடுகின்றான்.

* காபிர்களை அழிப்பதென்றால் கூட சும்மா அழிக்க முடியாது. அதற்கான நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும். அந்த நியாயங்கள் உருவாக வேண்டும் என்றால் அவர்களால் நீங்கள் இழப்புக்களைச் சந்திக்க வேண்டும்.

இவ்வாறு உஹதில் ஏற்பட்ட இழப்புக் களுக்கான காரணங்களைக் கூறி அல்லாஹ் முஃமின்களை ஆற்றுப்படுத்துகின்றான். இப்போது முஸ்லிம்களுக்கு ஏற்படும் இழப்புக்களையும் இந்தக் கோணத்தில் நாம் நோக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

தொடரும்…
இன்ஷா அல்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.