தராவீஹ் நீட்டிச் செய்வதா? கூட்டிச் செய்வதா? எது சிறந்தது?

“கியாமுல்லைல்” என்றால் இரவுத் தொழுகை என்பது அர்த்தமாகும். பொதுவாக, இஷாவின் சுன்னத்திலிருந்து பஜ்ர் வரை தொழப்படும் நபிலான வணக்கத்திற்கே இவ்வார்த்தை பயன்படுத்தப்படும். இது ரமழான் மற்றும் ரமழான் அல்லாத அனைத்துக் காலங்களிலும் ஆர்வமூட்டப்பட்ட ஆன்மீகப் பக்குவத்திற்கு அடிப்படையாக அமையக் கூடிய முக்கிய தொழுகையாகும்.

ரமழான் காலங்களில் இந்தத் தொழுகைக்கு அதிகூடிய முக்கியத்துவம் உள்ளது. பொதுவாக ரமழானில் தொழப்படும் கியாமுல்லைல் தொழுகைதான் “தராவீஹ்” என அழைக்கப் படுகின்றது.

இந்தத் தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கை எத்தனை என்பதில் அபிப்பிராயப் பேதம் உள்ளது. ஆரம்ப காலத்தில் அநேக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பதினொன்றா? இருபத்தி மூன்றா என்ற இரண்டு கருத்து வேறுபாடுகள் தற்போது உள்ளது.
மார்க்க அறிஞர்களில் பலரும் கியாமுல்லைல் தொழுகைக்கு வரையறுக்கப் பட்ட ரக்அத்துக்களின் எண்ணிக்கை எதுவும் இல்லை. அதனால் எத்தனை ரக்அத்துக்கள் வேண்டுமானாலும் தொழலாம் என்று கருதுகின்றனர். தராவீஹ் தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட கருத்து வேறு பாட்டுக்கு இது ஒரு அடிப்படைக் காரணமாகும்.
அடுத்து, நபி(ச) அவர்கள் பதினொன்றுதான் தொழுதுள்ளார்கள். உமர்(வ) அவர்கள் பதினொன்று தொழுமாறு ஏவினார்கள் என்றெல்லாம் ஹதீஸ்கள் வந்துள்ளன. பதினொன்று தொழும் சகோதரர்கள் இதைத் தமக்குரிய வலுவான ஆதாரமாகக் கொள்கின்றனர். நபி(ச) அவர்களைத் தொட்டும் நேரடியாக வந்த எண்ணிக்கையோடு நின்று கொள்வது பாதுகாப்பானதும் சர்ச்சைக்கு அப்பாற்பட்டதுமாகும்.
இருப்பினும், அதிகமாகத் தொழலாம் என்று கூறுபவர்கள் இது வரையறை அல்ல; அவர்கள் தொழுத எண்ணிக்கையைத் தெரிவிக்கும் தகவல் மட்டுமே. நபி(ச) அவர்கள் ஒரு முறைதான் தன் வாழ்நாளில் ஹஜ் செய்தார்கள். நான்கு முறைதான் உம்றா செய்தார்கள். இதை வைத்து ஒரு முறைக்கு மேல் ஹஜ் செய்யக் கூடாது என்றும் நான்கு முறைக்கு மேல் உம்றா செய்யக் கூடாது என்றும் யாரும் கூறுவதில்லை. எனவே, கூட்டித் தொழுவதில் தடையில்லை என்று கூறுகின்றனர்.
சரி, சர்ச்சையை விட்டும் வெளியேறு வதற்காக நபியவர்கள் தொழுததாக வந்த அந்த எண்ணிக்கையோடு நின்று கொண்டால் பிரச்சினை தீர்ந்துவிடுமல்லவா. பதினொன்று என்பதை அப்படியே பின்பற்றலாம்தானே என்றால் மாற்றுக் கருத்துடைய சகோதரர்கள் இப்படிக் கூறுகின்றனர்.
நபி(ச) அவகள் நீண்ட சூறாக்களை ஓதித் தொழுதுள்ளார்கள். அந்தளவு நீண்ட சூறாக்களை ஓதித் தொழுதால் மக்களில் யாரும் தொழவேமாட்டார்கள். மக்களைத் தொழுகையை விட்டும் துரத்திவிடாமல் இருப்பதற்காக எண்ணிக்கையில் குறித்த வரையறையும் இல்லை என்பதால் கிராஅத்தைக் குறைத்து தொழுகையின் நீளத்தைக் குறைத்து ரக்அத்துக்களின் எண்ணிக்கையைக் கூட்டியுள்ளோம் என்று கூறுகின்றனர்.
இந்த நிலையில், நீளமான சூறாக்களை ஓதி ரக்அத்துக்களைக் குறைத்துத் தொழுவது சிறந்ததா? அல்லது கிராஅத்தைக் குறைத்து ரக்அத்துக்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது சிறந்ததா? என்ற அடிப்படையில்தான் தராவீஹ் தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கையில் முரண்பாடு வந்தது. கடந்த காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் இந்த அடிப்படையில் சிந்தித்ததாலும், தராவீஹ் தொழுகைக்கான வரையறுக்கப்பட்ட எண்ணிக்கை இல்லையென அவர்கள் அபிப்பிராயப்பட்டதனாலும் தம்மை விடக் கூட்டி, குறைத்துத் தொழுதவர்களை பித்அத் வாதிகாளாகப் பார்க்கவோ, எதிர்த்துப் பிரச்சாரம் செய்யவோ இல்லை.
இந்த அடிப்படையைப் புரிந்து கொண்ட பின் தராவீஹ் தொழுகையின் ரக்அத்துக்களைக் கூட்டித் தொழுவது சிறந்ததா? தொழுகையை நீட்டித் தொழுவது சிறந்ததா? எது சிறந்தது என்பதை நோக்கி எமது பார்வையைத் திருப்புவோம்.
கூட்டிச் செய்வது சிறந்தது:
“நான் நபி(ச) அவர்களுடன் ஒரு இரவைக் கழித்தேன். அவர்களின் இயற்கைத் தேவைக்காகவும், வுழூச் செய்வதற்காகவும் தண்ணீரை எடுத்துக் கொடுத்தேன். “அப்போது ஏதாவது (வேண்டுமா) கேள்” என்று நபி(ச) அவர்கள் கூறினார்கள். “சுனத்தில் நான் உங்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என நான் உங்களிடம் வேண்டுகின்றேன்” என்றேன். “இதல்லாத வேறு ஏதும் உண்டா?” என நபி(ச) அவர்கள் கேட்டார்கள். “இல்லை, இதுதான் வேண்டும்” என்று நான் கூறினேன். அதற்கு நபி(ச) அவர்கள் “அப்படியாயின் அதிகமாக சுஜூது செய்வதன் மூலம் எனக்கு நீ உதவி செய்வீராக!” என நபி(ச) அவர்கள் கூறினார்கள்” என ரபீ அது இனுல் கஃபுல் அஸ்லமீ(வ) அவர்கள் கூறுகின்றார்கள். (முஸ்லிம்: 489 – 226)
அதிகமாக சுஜூது செய்ய வேண்டும் என்றால் அதிக எண்ணிக்கையில் தொழ வேண்டும்.
சுவனத்தில் நுழையக்கூடிய ஒரு அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள் என நபி(ச) அவர்களிடம் கேட்ட போது, “அல்லாஹ்வுக்காக நீ அதிகம் சுஜூது செய்! நீ அல்லாஹ்வுக்காக ஒரு சுஜூது செய்தால் அதன் மூலம் உனது அந்தஸ்த்தை உயர்த்தாமலும் பாவத்தை அழிக்காமலும் அல்லாஹ் விடுவதில்லை” என நபி(ச) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்) (முஸ்லிம்: 1121)
அதிகமாக சுஜூது செய்ய ஆர்வமூட்டும் இது போன்ற ஹதீஸ்களையும் மக்களுடைய நிலையைக் கவனித்து தொழுகையை நீட்டாமல் தொழுவிக்க வேண்டும் என்ற ஹதீஸ்களையும் இணைத்து கிராஅத்தைக் குறைத்து ரக்அத்தைக் கூட்டித் தொழுவதாக 23 ரக்அத்துக்கள் தொழுபவர்கள் கருதுகின்றனர்.
நீட்டித் தொழுவது சிறந்ததாகும்:
01.
“மேலும், அவர்கள் தமது இரட்சகனுக்கு சுஜூது செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் இரவைக் கழிப்பார்கள்.” (25:64)
இரவில் நீண்ட நேரம் தொழுவதை இந்த வசனம் சிறப்பிக்கின்றது! எண்ணிக்கை பற்றி இங்கு எந்தத் தகவலும் இல்லையென்றாலும் நீண்ட நேரம் தொழுதல் என்பது சிறப்பிக்கப்படுவதைக் காணலாம்.
02.
“போர்த்திக் கொண்டிருப்பவரே!
இரவில் சிறிது நேரம் தவிர (தொழுகைக்காக) எழுந்து நிற்பீராக!

அதில் அரைப்பகுதி அல்லது அதை விட சிறிதளவு குறைத்துக் கொள்வீராக!
அல்லது அதைவிட அதிகமாக்கிக் கொள்வீராக! மேலும், இக்குர்ஆனை நேர்த்தியாக ஓதுவீராக!”
(73:1-4)
இரவில் நீண்ட நேரத்தை இரவுத் தொழுகைக்காச் செலவிடுவதையும், கிராஅத்தை திருப்தியாக ஓதுவதையும் இந்த வசனம் வலியுறுத்துகின்றது. (இன்று தொழப்படும் தராவீஹ் தொழுகையில் கிராஅத் முறையாக ஓதப்படுகின்றதா என்பது சிந்திக்கப்பட வேண்டியது.)
03.
“இரவில் அவனுக்கு சுஜூது செய்வீராக! மேலும், இரவில் நீண்ட நேரம் அவனைத் துதிப்பீராக!” (76:26)
இரவில் தொழுவதுடன் நீண்ட நேரம் அல்லாஹ்வைத் துதிக்குமாறும் கட்டளையிடப்படுகின்றது. (தொழுகையில் முறையாக அல்லாஹ்வைத் தஸ்பீஹ் செய்யும் விதத்தில்தான் இன்று தராவீஹ் தொழுகை நடக்கின்றதா? என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.)
04.
“நிச்சயமாக பயபக்தியாளர்கள் தமது இரட்சகன் தமக்கு வழங்கியதைப் பெற்றுக் கொண்டவர்களாக, சுவனச் சோலை களிலும் நீரூற்றுக்களிலும் இருப்பார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்பவர்களாக இருந்தனர்.

இவர்கள் இரவில் குறைவாகவே தூங்குபவர்களாக இருந்தனர்.
மேலும் இவர்கள், இரவின் இறுதி வேளை களில் பாவமன்னிப்புக் கோருவார்கள்.” (51:15-18)
இதில் இரவு நேரத்தில் பெரும் பகுதியை அல்லாஹ்வுக்காகக் கழிப்பது சிறப்பிக்கப்படுகின்றது. முழு நேரமும் அவர்கள் தொழுததாக வராவிட்டாலும் அதிக நேரத்தை அல்லாஹ்வுக்காக இபாதத் செய்வதற்காக ஒதுக்குவது சிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரவுத் தொழுகையில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதை சிறப்பிக்கும் விதத்தில் பல்வேறு நபிமொழிகள் காணப்படுகின்றன.
05.
“அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான தொழுகை தாவூத் நபியின் தொழுகையாகும். அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நோன்பு தாவூத் நபியின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவுவரை தூங்குவார்கள். பின்னர், இரவின் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். ஒரு நாள் நோன்பு வைத்து மறுநாள் நோன்பை விட்டுவிடுவார்கள்” என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(வ)
ஆதாரம்: புஹாரி- 1131
உதாரணமாக, இரவு 06 மணித்தியாலம் என்றால் அதில் பாதி 03 மணி நேரம் தூங்குவார்கள். பின்னர் மூன்றில் ஒரு பகுதி அதாவது, 02 மணி நேரம் தொழுவார்கள். பின்னர் 1ஃ6 பகுதி அதாவது, மீதி ஒரு மணி நேரம் தூங்குவார்கள் எனவும் அவரின் இரவுத் தொழுகை சிறந்த இரவுத் தொழுகை என்றும் கூறப்படுகின்றது. இங்கும் இரவில் எவ்வளவு நேரத்தைத் தொழுகைக்காக எடுத்துக் கொள்கின்றோம் என்பது முக்கியத்துவம் பெறுகின்றது.
06.
“சில சமயம் நபி(ச) அவர்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்படும் போது, “நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?” என்று கேட்பார்கள்.”
அறிவிப்பவர்: முகீரா(வ)
ஆதாரம்: புஹாரி- 1130)
இங்கும் நீண்ட நேரம் நின்று தொழுதல் என்பது சிறப்பிக்கப்பட்டுள்ளது.
07.
“நான் நபி(ச) அவர்களுடன் தொழுதேன். நான் தவறான முடிவுக்கு வருமளவுக்கு அவர்கள் நின்று கொண்டே இருந்தார்கள் என இப்னு மஸ்ஊத்(வ) அவர்கள் கூறிய போது, அந்தத் தவறான முடிவு எது? என நான் கேட்டேன். அதற்கவர், நபி(ச) அவர்களுடன் தொழுவதை விட்டுவிட்டு தொழுகையை முறித்துவிடலாம் என்று எண்ணினேன்” எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ வயில்(வ)
ஆதாரம்: புஹாரி- 1135
நபி(ச) அவர்கள் நீண்ட நேரம் நின்று தொழுததை இந்த ஹதீஸ் உணர்த்துகின்றது.
08.
“தொழுகையில் சிறந்தது நீண்ட நேரம் நின்று தொழப்படும் தொழுகையேயாகும்” என நபி(ச) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(வ), ஆதாரம்: முஸ்லிம்)
09.
அபூ ஸலமா(வ) அவர்கள் அறிவிக்கின்றார்கள். “ரமழானில் நபி(ச) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என நான் ஆயிஷா(ரழி) அவர்களிடம் கேட்டேன். நபி(ச) அவர்கள் ரமழானிலோ ரமழான் அல்லாத காலங்களிலோ 11 ரக்அத்துக்களை விட அதிகப்படுத்துபவர்களாக இருந்ததில்லை. நான்கு ரக்அத்துக்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்துக்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்துக்கள் தொழுவார்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸலமா(வ)
ஆதாரம்: புஹாரி- 1147, 2013, 3569
முஸ்லிம்: 1757, அபூ தாவூத்: 1343
திர்மிதி: 439, நஸாஈ: 1697, அஹ்மத்: 24446
முஅத்தா: 394
நபி(ச) அவர்கள் ரமழான் மாதம் அல்லாத காலங்களில் பதினொரு ரக்அத்துக்களுக்கு மேல் அதிகப்படுத்தாமல் நீளமான ரக்அத்துக்களையுடைய தொழுகையாக இரவுத் தொழுகையைத் தொழுதுள்ளார்கள். எனவே, எண்ணிக்கையைக் கூட்டுவதை விட நீளத்தைக் கூட்டுவதையே தொழுகை விடயத்தில் சிறந்த செயற்பாடாகும் என்பதை எவரும் மாற்றுக் கருத்துக் கொள்ள முடியாது.
இப்போது நாம் நிதானமான சில முடிவுகளுக்கு வந்தாக வேண்டும்.
பதினொன்று தொழுபவர்களோ இருபத்தி மூன்று தொழுபவர்களோ யாராக இருந்தாலும் நபி(ச) அவர்களின் அளவுக்கு நீட்டி நிதானித்துத் தொழுவதில்லை. ஸஹர் நெருங்கும் அளவு அவர்கள் தொழுகையை நீட்டியுள்ளார்கள். இது விடயத்தில் யாரும் முழுமையான சுன்னாவைப் பேணவில்லை. தற்போதைய மக்களது ஈமானிய பலவீனம், உடல் மற்றும் உள நிலையை வைத்து நோக்கும் போது அப்படியொரு சூழல் வரும் என்றும் எதிர்பார்க்க முடியாது.
11, 23 தொழும் இரு சாராரும் தான் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படித் தொழுகின்றோம் என்பதை அறிந்திருக்கும் அதே வேளை, மாற்றுக் கருத்துடையவர்கள் என்ன அடிப்படையில் செயற்படுகின்றார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். ஜமாஅத்துகளும் தமத அங்கத்தவர்களுக்கு இரு பக்கக் கருத்துக்களுக்கான காரணத்தைத் தெளிவு படுத்த வேண்டும். அடுத்து சாராரின் கருத்துக்கான காரணத்தை அறியும் போது அவர்கள் மீது வெறுப்பு ஏற்படுவதைத் தவிர்க்கவும், நெருக்கம் ஏற்படவும் உதவும்.
மக்களுக்குத் தீர்ப்புக் கூறுபவர்கள் சந்திர மண்டலத்தில் இருந்து தீர்ப்புக் கூறுவது போல் மக்களின் இன்றைய நிலை என்ன என்பதை அவதானிக்காமல் தீர்ப்புக் கூறக் கூடாது. ஒரு தீர்ப்புக் கூறினால் அதை முறையாக நிறைவேற்றுவதற்கான வழிகாட்டலையும் வழங்குவது அவசியமாகும். நூறு கொலை செய்த மனிதர் தவ்பாவுக்கு வழி கேட்ட போது அவருக்கு பத்வாவும் வழங்கி நல்ல மக்கள் வாழும் ஊருக்குச் சென்று நல்லவனாக வாழ வழி காட்டிய மனிதர் பற்றி நபி(ச) அவர்கள் கூறிய அந்த சம்பவம் இதற்குச் சிறந்த ஆதாரமாகும்.
இருபத்தி மூன்றோ பதினொன்றோ எதுவாக இருந்தாலும் தொழும் முறையில் நபிவழிக்கு மாற்றம் செய்ய முடியாது. எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு கடந்த காலத்தில் இருந்தாலும் தொழுத முறையில் எல்லோரும் ஏகோபித்து ஏற்றுக் கொண்ட (இஜ்மா) வழிமுறைக்கு மாற்றம் செய்ய முடியாது.
இன்று பெரும்பாலும் 23 தொழப்படும் பள்ளிகளில் 30-45 நிமிடங்களுக்குள் தொழுகை முடிக்கப்படுகின்றது. இடையிடையே ஓதப்படும் ஓதல்கள் தராவீஹ், வித்ருக்குப் பின்னால் ஓதப்படும் கூட்டு துஆக்களும் இதற்குள் அடங்கிவிடுகின்றது.
பதினொன்று தொழும் பள்ளிகளில் பெரும்பாலும் 75-90 நிமிடங்களுக்குள் தொழுகை முடிக்கப்படுகின்றது.
இருபத்தி மூன்று தொழப்படும் பள்ளிகளில் முறையாகக் கிராஅத் ஓதப்படுவதில்லை? இரவுத் தொழுகையில் குர்ஆனைத் திருத்தமாக ஓதுங்கள் என்ற கட்டளை மீறப்படுகின்றது.
மிகச் சொற்பமாகவே குர்ஆனும் ஓதப்படுகின்றது. தொழுகையுடைய திக்ருகளும் சொற்பமாகவே செய்யப்படுகின்றது.
“(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னோக்கி வந்த அவர்களது கிப்லாவை விட்டும் அவர்களைத் திருப்பிவிட்டது எது என மனிதர்களில் அறிவீனர்கள் கேட்கின்றனர். கிழக்கும் மேற்கும் அல்லாஹ் வுக்கே உரியன. அவன் நாடுவோரை நேரான வழியில் செலுத்துகின்றான் என (நபியே!) நீர் கூறுவீராக!” (2:142)
மேற்படி வசனத்திற்கு ஏற்ப தொழும் முறை நயவஞ்சகர்களின் தொழுகைக்கு ஒப்பாகிவிடுகின்றது.
தொழுகையில் ருகூஃ மற்றும் சுஜூதுகள் ஒழுங்காகப் பேணப்படுவதில்லை. இமாமை வயோதிபர்கள் முறையாகப் பின்பற்ற முடியாத அளவுக்கு வேகமாகத் தொழுவிக்கப் படுகின்றது.
“உங்களில் அழகிய செயலையுடையவர் யார் என உங்களைச் சோதிப்பதற்காக அவனே மரணத்தையும் வாழ்வையும் படைத் தான். அவன் யாவற்றையும் மிகைத்தவன்ளூ மிக்க மன்னிப்பவன்.” (67:2)
தொழுகையை நிதானமாகத் தொழுவதுதான் சிறந்தது. அப்படித்தான் நபி(ச) அவர்களும் செய்து வந்துள்ளார்கள். எண்ணிக்கையைக் கூட்டுவோம் என தரத்தைக் குறைக்க முடியுமா? உங்களில் சிறந்த செயலைச் செய்பவர் யார்? என்றுதான் அல்லாஹ் பார்க்கின்றானே தவிர, அதிகமாகச் செய்கின்றவன் யார்? என அவன் பார்ப்பதில்லை.
இந்த வகையில் பார்க்கும் போது வேகமாக உரிய கிராஅத், ருகூஃ, சுஜூத் இல்லாமல் தொழப்படும் இருபத்தி மூன்று தொழுகையை விட நீளமான கிராஅத், நிதானமான ருகூஃ, சுஜூத் என்பவற்றைப் பேணித் தொழப்படும் பதினொன்று சிறந்ததாகும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு மனிதர் பள்ளிக்கு வந்து தொழுதுவிட்டு வந்து நபியவர்களுக்கு ஸலாம் சொன்னார். நபி(ச) அவர்கள் அவருக்கு பதில் சொல்லிவிட்டு, போய் மீண்டும் தொழு. நீர் தொழவில்லை என்றார்கள். அவர் சென்று தொழுதுவிட்டு மீண்டும் வந்த போதும் இப்படியே கூறினார்கள். மூன்று முறை இப்படி நடந்த பின்னர் எப்படித் தொழுவது என்பதை நபி(ச) அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள். அதில் ருகூஃ வில் தாமதித்தல், இஃதிதாலில் தாமதித்தல், சுஜூதில் தாமதித்தல், இரண்டு சுஜூதுகளுக்கிடையே தாமதித்தல் அவசியம் என்பதைக் கற்றுக் கொடுத்தார்கள். (பார்க்க: புஹாரி- 757)
குறித்த இடங்களில் தாமதிப்பது கட்டாயக் கடமையாகும். இவையெல்லாம் பேணப்படாமல் காகம் கொத்துவது போல் சுஜூது செய்யப்படும் இன்றைய இருபத்தி மூன்று ரக்அத்களைக் கொண்ட இருபத்தி மூன்று தராவீஹ் தொழுகையை நபி(ச) அவர்கள் பார்த்தால் போய் திருப்பித் தொழுங்கள், நீங்கள் தொழவே இல்லை என்றுதான் கூறிவிடுவார்களோ என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
எனவே, கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! பதினொன்றா இருபத்தி மூன்றா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால், அவசரமாகத் தொழக் கூடாது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. இருபத்தி மூன்றுதான் தொழுவேன் என்பதில் நீங்கள் பிடிவாதமாக இருந்தால் நீண்ட சூறாக்களையும் நிதானமான ருகூஃ மற்றும் சுஜூதுகளையும் பேணித் தொழுது வாருங்கள். (சுன்னாவுக்கு முரணான செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது)
பதினொன்று ரக்அத்கள் தொழும் சகோதரர்களைப் பொருத்தவரையில் தொழும் எண்ணிக்கையிலும் நபிவழியைப் பேணுகின்றனர். தொழும் முறையிலும் ஓரளவாவது நபிவழியைப் பேணுகின்றனர். இருபத்தி மூன்று தொழும் சகோதரர்கள் நேரடியான ஸஹீஹான ஆதாரத்தைக் கொண்டும் அவர்கள் செயற்படவில்லை. தொழும் முறையில் நிச்சயமாக நபிவழிக்கு மாற்றமாகச் செயற்படுகின்றனர். இதில் எதை ஏற்றுச் செயற்படுவது ஈருலக வெற்றிக்கு வழியமைக்கும் என்பதைப் பொதுமக்கள் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.