ஜமாஅத்துத் தொழுகை – பிக்ஹுல் இஸ்லாம் – 38


வரிசையை சீர் செய்வதும் இடைவெளியை நிரப்புதலும்:
தொழுகையில் சிலர் வரிசையில் நேராக நிற்பதில்லை. சிலர் இடைவெளி விட்டு நிற்கின்றனர். மற்றும் சிலர் முன் வரிசை பூரணமாகாமலேயே அடுத்தவரிசையை ஆரம்பித்து விடுகின்றனர். இவை தவறான வழிமுறைகளாகும்.

இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களின் வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை மாற்றி விடுவான்.’ என நுஃமான் இப்னு பஷீர்(ர) அறிவித்தார்.
(புகாரி: 717, முஸ்லிம்: 436-127, அபூதாவூத்: 663, திர்மிதி: 227)

இந்த நபிமொழியில் வரிசை நேராக இல்லாமல் முன்பின்னாக இருப்பது மிகக் கண்டிக்கத்தக்கது என்பது விளக்கப்படுகின்றது. நபி(ச) அவர்கள் எங்களது தோள்களைத் தடவிப் பார்த்து நேராக இருங்கள், முரண்படாதீர்கள். உங்கள் உள்ளங்களுக்கிடையே அல்லாஹ் முரண்பாட்டை ஏற்படுத்திவிடுவான்…. என்று கூறுபவராக இருந்தார்கள். (முஸ்லிம்: 432-122, நஸாஈ: 812, இப்னு குஸைமா: 1542)

எனவே, வரிசை நேராக இருப்பது, நெருக்கமாக இருப்பது என்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நபித்தோழர்கள் நபி(ச) அவர்களின் வார்த்தைகளுக்கு எப்படி செயல் வடிவம் கொடுத்தார்கள் என்பதைப் பின்வரும் செய்தி காட்டுகின்றது.

அனஸ்(வ) கூறினார்: ‘உங்கள் வரிசைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளுங்கள்! நிச்சயமாக நான் என்னுடைய முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காண்கிறேன்’ என்று நபி(ச) அவர்கள் கூறியதும் எங்களில் ஒவ்வொருவரும் தம் தோள் புஜத்தை மற்றவரின் தோள் புஜத்துடனும் தம் பாதத்தை மற்றவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொள்ளலானார்கள்.’ (புகாரி: 725, அபூதாவூத்: 662)

இந்த அடிப்படையில் இமாம்கள், நிர்வாகிகள், தொழும் மக்கள் அனைவரும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

பள்ளியின் தூண்கள் காரணமாக வரிசைகள் உடைந்து நிற்பது கூட வெறுக்கத்தக்கதாகும். நிர்ப்பந்தத் தேவைகள் இல்லாவிட்டால் தூண்கள் வரிசைகளை உடைக்காத வண்ணம் தொழும் வரிசைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இமாமைப் பின்பற்றுதல்:
ஜமாஅத்தாகத் தொழும் போது இமாமைப் பின்பற்ற வேண்டும். இமாம் செய்யும் போது செய்வதும் இமாமை முந்திச் செய்வதும் பின்பற்றுதல் ஆகாது. அவ்வாறே இமாம் ஒரு செயலைச் செய்து அடுத்தடுத்த கடமைகளைச் செய்யும் வரை தாமதித்து மஃமூம் செயற்படவும் கூடாது.

இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள். ‘இமாம் ஏற்படுத்தப் பட்டிருப்பது பின்பற்றப் படுவதற்கே. எனவே, அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் ருகூஃ செய்தால் நீங்களும் ருகூஃ செய்யுங்கள். அவர் ஸமி அல்லாஹ§ லிமன் ஹமிதா எனக் கூறினால் நீங்கள் ரப்பனா வலக்கல் ஹம்து எனக் கூறுங்கள். அவர் ஸஜ்தா செய்தால் நீங்களும் ஸஜ்தாச் செய்யுங்கள். அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் அவரோடு சேர்ந்து உட்கார்ந்து தொழுங்கள்.’
அறிவிப்பவர்: அபூ ஹ§ரைரா(ர)
(புகாரி: 734, முஸ்லிம்: 414-416)

அனஸ்(வ) அறிவித்தார். ‘நபி(ச) அவர்கள் குதிரையிலிருந்து கீழே விழுந்ததால் அவர்களின் வலது புறத்தில் காயம் ஏற்பட்டது. அவர்களை நோய் விசாரிக்க நாங்கள் சென்றோம். தொழுகை நேரம் வந்ததும் அவர்கள் உட்கார்ந்து தொழுதார்கள். நாங்களும் உட்கார்ந்து தொழுதோம். (தொழுது முடித்ததும்) ‘இமாம் ஏற்படுத் தப்பட்டிருப்பது அவர் பின் பற்றப்படுவதற்கே. அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் ருகூஃ செய்தால் நீங்களும் ருகூஃ செய்யுங்கள். (ருகூஃவி லிருந்து) அவர் நிமிர்ந்தால் நீங்களும் நிமிருங்கள். அவர் ஸமி அல்லாஹ§ லிமன் ஹமிதா என்று கூறினால் நீங்கள் ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறுங்கள்’ என்று கூறினார்கள்.’ (புகாரி: 1114, 805, 378)

இமாம் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். இமாம் ருகூஃ செய்தால் நீங்களும் ருகூஃ செய்யுங்கள் என்று நபி(ச) அவர்கள் கூறியதன் மூலம் இமாமைப் பின்பற்ற வேண்டும். முந்தவும் கூடாது, பிந்தவும் கூடாது. இமாம் செய்யும் போது செய்யவும் கூடாது என்பதைப் புரியலாம்.

இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துவதால் அவரின் தலையைக் கழுதையுடைய தலையாகவோ அல்லது அவரின் உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?’
என அபூ ஹ§ரைரா(வ) அறிவித்தார்.’
(புகாரி: 691, முஸ்லிம்: 427-114, இப்னுமாஜா: 961, அபூதாவூத்: 623, திர்மிதி: 582)
இமாமை முந்தி செயற்படுவதை இவ்வளவு பெரிய குற்றமாக ஹதீஸ் கண்டிக்கின்றது. எனவே, எந்த அடிப்படையிலும் இமாமை முந்தி செயற்படக் கூடாது.

பராவு(ர) அறிவித்தார். ‘நபி(ச) அவர்களுக்குப் பின்னால் நாங்கள் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ஸமி அல்லாஹ§ லிமன் ஹமிதா என்று சொல்லி முடித்து (ஸ§ஜூதுக்குச் சென்று) பூமியில் தனது நெற்றியை வைக்கும் வரை எங்களில் யாரும் (ஸுஜூதுக்காகத்) தம் முதுகை வளைக்க மாட்டார்கள்.’ (புகாரி: 811, 690, முஸ்லிம்: 474-198, ஆபூதாவூத்: 621)

இமாம் ருகூஃ செய்தால் நீங்களும் செய்யுங்கள் என்றால் இமாம் ருகூஃ செய்யும் போது செய்வதும் தவறுதான்| செய்த பின் செய்ய வேண்டும். இதைத்தான் நபித்தோழர்களின் செயல் எடுத்துக் காட்டுகின்றது.

அதே வேளை, ருகூஃ செய்தால் நீங்களும் ருகூஃ செய்யுங்கள் என ஏவப்பட்டுள்ளதால் இமாம் ருகூஃ செய்த பின்னரும் செய்யாமல் ஓதிக் கொண்டிருப்பது தவறு என்பதையும் புரியலாம். இமாம் ருகூஃ செய்து இஃதிதாலுக்கு வந்த பின்னர் ஒருவர் ருகூஃ செய்யும் அளவுக்கு இமாமை விட்டும் பிந்தினால் தொழுகை முறிந்துவிடும் என்பது சில உலமாக்களின் கருத்தாகும்.

தொழுகை முடிந்த பின்:
இமாம் மக்களை முன்னோக்கி திரும்புவதும் தொழுத இடத்தில் சிறிது தாமதித்தலும்.

தொழுகை முடிந்த பின்னர் இமாம் ஒருபக்கமாக சரிந்து இருக்கும் பழக்கம் உள்ளது. இமாம் மறு பக்கம் திரும்பி மஃமூம்களை நோக்கி இருக்க வேண்டும். இதைத்தான் ஹதீஸ்கள் மூலம் அறிய முடிகின்றது.

ஸமுரா இப்னு ஜுன்துப்(வ) அறிவித்தார். நபி(ச) அவர்கள் தொழுகையை முடித்ததும் எங்களை நோக்கி நேராகத் திரும்புவார்கள். ‘ (புகாரி: 1386)

ஹுமைத் அத் தவீல்(ரஹ்) அறிவித்தார். ‘அனஸ்(வ) அவர்களிடம், ‘நபி(ச) அவர்கள் மோதிரம் எதையேனும் தயாரித்(து அணிந்)திருந்தார்களா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நபி(ச) அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையைப் பாதி இரவு வரை தாமதப்படுத்தினார்கள். (பின்னர் தொழுகை நடத்தினார்கள்.) பிறகு அவர்கள் எங்களை நோக்கித் திரும்பினார்கள். இப்போதும் நான் அவர்களின் (கல்) மோதிரம் மின்னுவதைப் பார்ப்பது போன்றுள்ளது. அப்போது நபி(ச) அவர்கள், ‘மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டார்கள். (ஆனால், நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருந்து தொழுதிருக்கிறீர்கள்.) நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வரை அந்தத் தொழுகையிலேயே உள்ளீர்கள். (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்)’ என்றார்கள்.’ (புகாரி: 5869)

இந்த நபிமொழிகள் தொழுது முடிந்து ஸலாம் கொடுத்த பின்னர் இமாம் மஃமூம்களை நோக்கித் திரும்பி இருக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறுகின்றன. மார்க்கம் தெரியாத சிலர் இவ்வாறு இருந்தால் இமாம் கிப்லாவுக்குப் பின்புறம் காட்டி இருப்பதாக ஆகிவிடுமே எனக் கூறி மறுப்புத் தெரிவிக்கின்றனர். இது தவறாகும்.

தொழுத இடத்தில் இமாம் சிறிது தாமதிக்க வேண்டும்:
உம்மு ஸலமா(ர) அறிவித்தார். ‘நபி(ச) அவர்கள் ஸலாம் கொடுத்ததும் அதே இடத்திலேயே சிறிது நேரம் இருப்பார்கள். பெண்கள் தம் இல்லம் திரும்பிச் செல்வதற்காகவே அப்படித் தங்கியுள்ளனர் என்று நாம் கருதுகிறோம் என இப்னு ஷிஹாப் குறிப்பிடுகிறார். ‘ (புகாரி: 849)

உம்மு ஸலமா(வ) அறிவித்தார். ‘நபி(ச) அவர்கள் ஸலாம் கொடுப்பார்கள். அவர்கள் இல்லம் செல்வதற்கு முன் பெண்கள் தம் இல்லங்களுக்குச் செல்வார்கள். ‘ (புகாரி: 850)

இமாம் தாமதிக்கும் அந்த நேரத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்திருந்தால் ஆண்கள் வெளியேறுவதற்கு முன் அவர்கள் வெளியேறி விட வேண்டும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வாயில்களும் பகுதிகளும் இருந்தால் அவர்கள் விரைவாக வெளியேற வேண்டியதில்லை.

தொழுகை முடிந்ததும் ஓதுவதற்கென நபி(ச) அவர்கள் பல துஆக்களைக் கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றை இமாம் தனியாகவும் மஃமூம்கள் தனியாகவும் அவரவர் வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப ஓதிக் கொள்ள வேண்டும்.
தொடரும்…

இன்ஷா அல்லாஹ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.