சுலைமான் நபியும் இன்ஷா அல்லாஹ்வும்

சுலைமான் நபியவர்கள் இன்ஷா அல்லாஹ் கூறியிருந்தால்….. என்று வரக்கூடிய நபிமொழியை மறுக்கும் வழிகெட்ட பிரிவினர் எடுத்து வைக்கும் வாதங்களுக்கான மறுப்புக்களைப் பார்த்து வருகின்றோம்.

தனது மனைவியர் ஆண் குழந்தைகளைப் பெற்றெடுப்பது. அவர்கள் அனைவரும் இறை வழியில் போராடுவார்கள் என சுலைமான் நபி கூறியது வேண்டுதல், பிரார்த்தனை என்ற அடிப்படையில்தான் என்பதை நாம் ஏற்கனவே விபரித்தோம். தனக்கு ஆண் குழந்தைகள் பிறக்க வேண்டும்; அவர்கள் இறை வழியில் போராட வேண்டும் என்ற அவாவைத்தான் இந்த வார்த்தைகள் மூலம் சுலைமான் நபி கூறினார்கள் எனும் போது பிரச்சினை எழ வாய்ப்பே இல்லை. இருப்பினும் ஹதீஸ்களை மனமுரண்டாக மறுக்கும் வழிகெட்ட பிரிவினர் வேண்டுமென்றே ஹதீஸில் குழப்பத்தை விளைவித்து மறுக்க முனைகின்றனர். அவர்களது வாதப்படியும் இந்த ஹதீஸை மறுக்க வழியில்லை என்பதை விபரித்து வருகின்றோம்.
வஹீ மூலம் சுலைமான் நபிக்கு உணர்த்தப்பட்டு இப்படிக் கூறியிருக்கவும் வாய்ப்புள்ளது என்ற ஒரு வாதத்திற்றாக நாம் குறிப்பிட்டு அதில் எழுப்பப்படும் வாதங்களுக்கு தற்போது பதிலளித்து வருகின்றோம்.
வாதம்:
வஹீ மூலம் உணர்த்தப்பட்டு சுலைமான் நபி இப்படிக் கூறியிருந்தால் -இன்ஷா அல்லாஹ்- கூற வேண்டிய அவசியமே இல்லையே! நடக்குமா? நடக்காதா? என்று தெரியாத விடயங்களுக்குத்தானே இன்ஷா அல்லாஹ் கூற வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.

நமது விளக்கம்:
இது ஒரு தவறான வாதம் மட்டுமல்ல குர்ஆன் ஹதீஸை முறையாக அறியாததன் விளைவாக எழுந்ததாகும்.

“அல்லாஹ் தனது தூதருக்கு (அவரது) கனவை உண்மைப்படுத்திவிட்டான். அல்லாஹ் நாடினால் மஸ்ஜிதுல் ஹராமில் நீங்கள் அச்சமற்றவர்களாகவும், உங்கள் தலை(முடி) களை சிரைத்தவர்களாகவும், குறைத்தவர்களாகவும் (எவருக்கும்) அஞ்சாது நுழைவீர்கள். நீங்கள் அறியாதவற்றை அவன் நன்கறிவான். இதுவல்லாது சமீபமான வெற்றியையும் அவன் (உங்களுக்கு) ஏற்படுத்துவான்.” (48:27)
இங்கே அல்லாஹுதஆலாதான் கூறும் செய்திக்கே இன்ஷா அல்லாஹ்வைப் பயன்படுத்தியுள்ளதைக் காணலாம்.
கப்ருகளை ஸியாரத் செய்யும் போது ஓதும் துஆ இப்படி அமைந்துள்ளது.
“முஃமின்களே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் இன்ஷா அல்லாஹ் நாமும் உங்களைச் சந்திக்கக் கூடியவர்களே!…..”
அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ),
ஆதாரம்: முஸ்லிம் 607

மரணம் என்பது உறுதியானதாகவும் குர்ஆன் சுன்னா மரணம் குறித்து சொல்லி இருந்தும் இங்கே இன்ஷா அல்லாஹ் பயன்படுத்தப்பட்டுள்ளமையைக் காணலாம்.
“நபி(ச) அவர்கள் மதீனாவைப் பற்றிக் கூறும் போது தஜ்ஜாலோ, தாஊன் எனும் கொலரா நோயோ இன்ஷா அல்லாஹ் மதீனாவை நெருங்காது என்றார்கள்.” (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(வ), ஆதாரம்: புஹாரி – 7473, 7134, 7035)
மதீனாவுக்குள் தஜ்ஜாலும் வரமாட்டான், காளரா (Cholera) நோயும் வராது என நபி(ச) அவர்கள் தன்னிச்சையாகக் கூறவில்லை. வஹீ மூலம் தகவல் பெற்றே அறிவிக்கின்றார்கள். இருப்பினும் இன்ஷா அல்லாஹ் கூறியிருப்பதை அறியலாம். வஹி மூலம் சுலைமான் நபி உணர்த்தப்பட்டிருந்தால் அவர் இன்ஷா அல்லாஹ் கூறவேண்டியதில்லை என வாதிப்பது அறிவீனமானது என்பதை இதிலிருந்து அறியலாம்.
பத்ர் போருக்கு முன்னர் நபி(ச) அவர்கள் முக்கியமான குப்பார் தலைவர்களின் பெயர் கூறி இன்னார் இந்த இடத்தில் கொல்லப்படுவார்கள் என்பதை முன்னறிவிப்புச் செய்தார்கள். அப்போது,
“நாளை இன்னான் இந்த இடத்தில் இன்ஷா அல்லாஹ் கொல்லப்படுவான் என அறிவித்தார்கள்.” (அறிவிப்பவர்: அனஸ்(ல), ஆதாரம்: முஸ்லிம் – 7402)
அல்லாஹ் அறிவித்துக் கொடுத்ததின் அடிப்படையில் நபியவர்கள் கூறினாலும் இன்ஷா அல்லாஹ் கூறியிருப்பதை இந்த ஹதீஸ்கள் உணர்த்துகின்றன. எனவே, அல்லாஹ் அறிவித்துக் கொடுத்திருந்தால் சுலைமான் நபி இன்ஷா அல்லாஹ் கூறவேண்டியதில்லையே என வாதிடுவது அறிவீனமும் குர்ஆன் சுன்னாவை முறையாக அறியாத குறைமதி கொண்டதுமான வாதமாகும்.
அடுத்து மற்றுமொரு கோணத்திலும் இந்த ஹதீஸை வழிகேடர்கள் மறுத்து வருகின்றனர்.
அவர்களது வாதம்:
இந்த அறிவிப்பில் காணப்படும் முரண்பாடுகள் இந்த ஹதீஸை ஏற்க முடியாது என்ற எமது முடிவை உறுதிப்படுத்துகின்றது.

சுலைமான் நபி உறவு கொண்ட பெண்களின் எண்ணிக்கை 100, 99, 90, 70 என புகாரியில் வரும் அறிவிப்புக்கள் கூறுகின்றன. இந்த அனைத்து ஹீதீஸ்களும் அபூஹுரைரா (ல) வழியாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பட்ட எண்ணிக்கை இந்த ஹதீஸிலும் சந்தேகத்தை அதிகமாக்குகின்றது.
நமது விளக்கம்:
இங்கே பொதுமக்களுக்கு ஒரு தவறான சித்திரம் வரைந்து காட்டப்பட்டுள்ளது. அபூஹுரைரா(வ) அவர்களே 100, 99, 90, 70 என மாற்றி மாற்றி அறிவித்தார்கள் என்ற தப்பான எண்ணம் ஏற்பட்டுவிடக் கூடாது. அபூஹுரைரா(வ) அவர்கள் இதில் ஏதோ ஒரு எண்ணிக்கையைத்தான் குறிப்பிட்டார்கள். அவர்களிடமிருந்து கேட்டவர்கள்தான் எண்ணிக்கையை மாற்றிக் கூறிவிட்டார்கள். அறிவித்தவர்கள் அனைவரும் நம்பகமான வர்கள் என்பதால் இமாம் புஹாரி அவர்கள் அனைத்தையும் பதிவு செய்தார்கள். இதில் எந்த எண்ணிக்கை சரியானது என்பதைக் கண்டறிவது மற்றுமொரு துறை சார்ந்த பணியாகும். அத்தகைய அறிஞர்கள் தொன்னூறு என்பதே மிகவும் சரியானது எனக் கூறுகின்றனர்.

இந்த எண்ணிக்கை முரண்பாடு என்பது முழு ஹதீஸையும் மறுப்பதற்கு ஆதாரமாக ஒருபோதும் அமையாது. பல எண்ணிக்கை கூறப்பட்டாலும் ஏனைய நிகழ்வுகள் அனைத்தும் ஒன்று போலவே அறிவிக்கப்படுவதால் இப்படி ஒரு நிகழ்வு நடந்தது உண்மை என்பது உறுதியாகும். அதே நேரத்தில் எத்தனை என்ற எண்ணிக்கையை உறுதியாகக் கூற முடியாது என்று வேண்டுமானால் கூறலாம்.
கடந்த காலத்தில் வாழ்ந்த ஒருவருக்கு 10 பிள்ளைகள் இருந்ததாக ஒருவரும், ஐந்து பிள்ளைகள் இருந்ததாக ஒருவரும், மூன்று பிள்ளைகள் இருந்ததாக ஒருவரும் கூறுகின்றனர். குழந்தைகளின் எண்ணிக்கையை முரண்பட்டுக் கூறுவதால் அவருக்குக் குழந்தையே இல்லை என்றோ, அப்படி ஒரு நபர் வாழ்ந்தார் என்பதையோ மறுத்துப் பேச முடியுமா?
எனவே, எண்ணிக்கையில் முரண்பாடுஎனக் கூறி ஹதீஸை மறுப்பது ஹதீஸ் கலைக்கும் அறிவுக்கும் பொருந்தாத தவறான வாதமாகும்.
எனவே, சுலைமான் நபி சம்பந்தப்பட்ட குறித்த ஹதீஸ் ஆதாரபூர்வமானதே! அதை நம்புவது கட்டாயமானதாகும். மறுப்பது வழிகேடாகும் என்பதைச் சந்தேகமின்றி அறிய முடிகின்றது.
குர்ஆன் மொழிபெயர்ப்பில் திருகுதாளம்:
“நிச்சயமாக நாம் சுலைமானைச் சோதித் தோம். அவரது சிம்மாசனத்தில் ஒரு முண் டத்தைப் போட்டோம். பின்பு, அவர் (நம்மி டம்) திரும்பினார்.”
(38:34)
மேற்படி குர்ஆன் வசனத்தில் கூறப்பட்ட செய்தி என்ன என்பதை விபரிப்பதில் அறிஞர்கள் அபிப்பிராயப் பேதப்படுகின்றனர். இது தொடர்பில் இட்டுக்கட்டப்பட்ட பல செய்திகள் இருக்கின்றன. எனினும் குறித்த இந்த ஹதீஸை மறுத்தவர்கள் இந்த வசனத்தை இப்படி மொழிபெயர்க்கின்றனர்.
எமது விளக்கம்:
“சுலைமானை நாம் சோதித்தோம். அவரது சிம்மாசனத்தில் (அவரை) ஒரு சடலமாகப் போட்டோம். பின்னர் அவர் திருந்தினார்.”

“அல்கய்னா” என்றால் நாம் போட்டோம் என்பதுதான் அர்த்தமாகும். நாம் அவரைப் போட்டோம் என்று வராது. அப்படிக் கூறுவதென்றால் “அல்கய்னாஹு” என்று வர வேண்டும். இது சாதாரண அரபு படிக்கும் மாணவர்களும்; அறிந்த விடயமாகும்.
“அலா குர்ஸிய்யிஹி” என்றால் அவரது சிம்மாசனத்தில் என்பது அர்த்தமாகும். “ஜஸதன்” என்றால் “முண்டத்தை” என்பது அர்த்தமாகும்.
“அல்கய்னா ஜஸதன்” என்றால் “ஒரு முண்டத்தைப் போட்டோம் என்பதே அர்த்தமாகும்.
2:102 ஆம் வசனத்தில் “பீஹி”யை விட்டவர்கள் இங்கு இல்லாத இடத்தில் “ஹு”வைச் சேர்த்துத் தப்பாக மொழி பெயர்த்தது மட்டுமில்லாமல் தான் சொல்வதை மட்டுமே தமது மக்கள் நம்புவார்கள் என்றஎண்ணத்தில் எல்லோரும் தவறாக மொழி பெயர்த்துவிட்டதாகவும் வேறு அவதூறு கூறப்படுகின்றது. இந்த வசனத்தைத் தவறாக மொழிபெயர்த்தவர்கள் இது பற்றி கூறும் போது,
“இவ்வசனத்திற்கு (38:34) பெரும்பாளான மொழிபெயர்ப்பாளர்கள் தவறாகவே மொழி பெயர்த்துள்ளனர்.
ஸுலைமானின் சிம்மாசனத்தின் மீது முண்டத்தைப் போட்டோம்; சடலத்பை; போட்டோம் என்று தங்கள் மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கேற்ப கட்டுக்கதைகளையும் விளக்கவுரை என்று குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வசனத்தில் “சுலைமானை ஒரு சடலமாகப் போட்டோம்” என்று கூறப்படுகிறது. இது, நோயுற்று பலவீனப்பட்டு படுக்கையில் விழுந்து கிடக்கும் நிலையைக் குறிக்கும் சொல்லாகும்.
ஸுலைமான் நபி ஒரு தவறு செய்ததாகவும் அத்தவறிலிருந்து பின்னர் திருந்திக் கொண்டதாகவும் இவ்வசனமும் இதற்கு அடுத்த வசனமும் கூறுகின்றது.
சோதிக்கும் முகமாக ஸுலைமான் நபிக்கு நோயை ஏற்படுத்தினோம் என்பது தான் அவரை சடலமாகப் போட்டோம் என்பதன் கருத்து.”
(பி.ஜே. தர்ஜுமா 338 ஆம் குறிப்பு…..)

சுலைமான் நபிக்கு ஏற்பட்ட நோயைத்தான் இந்த வசனம் இப்படிக் கூறுகின்றது என்றால் நோய் வந்தவர் ஏன் திருந்தினார்? மன்னிப்புக் கேட்டார்? நோய் வந்தது அவருடைய குற்றமா?
“இவ்வசனத்தில் சுலைமானை ஒரு சடலமாகப் போட்டோம்” என்று கூறப்படுகின்றது என எழுதுவது குர்ஆனில் இல்லாததைத் திணிக்கும் வழிகெட்ட சிந்தனையின் வெளிப்பாடாகவே தெரிகின்றது.
எனவே, இந்த வழிகெட்ட பிரிவினர் குறித்து விழிப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.