பிக்ஹுல் இஸ்லாம் – குனூத்

    குனூத் ஓதுவதை சிலர் தொழுகையில் செய்ய வேண்டியவற்றில் ஒன்றாகவும் மற்றும் சிலர் செய்யக் கூடாதவற்றில் ஒன்றாகவும் குறிப்பிட்டுள்ளனர். சுபஹுடைய குனூத் விடயத்தில் நபித்தோழர்கள் காலத்திலிருந்தே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இருப்பினும் சுபஹுடைய குனூத் விடயத்தில் சிலர் தீவிரப் போக்கைக் கைக்கொண்டு வருகின்றனர்.

சுபஹுடைய குனூத் ஸுன்னா எனக் கருதுபவர்கள் குனூத் ஓதாத இமாமைப் பின்பற்றித் தொழுவதைத் தவிர்த்து வருகின்றனர். சிலர் பின்பற்றித் தொழுதாலும் இமாம் ஸலாம் கொடுத்த பின்னர் இரண்டு ஸஜதாக்கள் மறதிக்காக தனியாகச் செய்துவிட்டு ஸலாம் கொடுக்கின்றனர்.

சுபஹுடைய குனூத் ஸுன்னா அல்ல எனக் கருதுபவர்கள் குனூத் ஓதும் இமாமைப் பின்பற்றித் தொழுவதைத் தவிர்த்து வருகின்றனர். மற்றும் சிலர் குனூத் ஓதும் இமாமைப் பின்பற்றி ஏனைய தொழுகைகளைக் கூட தொழுவதைத் தவிர்த்து வருகின்றனர். இந்த இரு பக்க தீவிரவாதமும் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

சுபஹுடைய குனூத் ஸுன்னா அல்ல என்ற கருத்தையே வலுவானதாக – ராஜிஹானதாக – மிகச் சரியானதாகக் கருதினாலும் இது தொடர்பில் இருக்கும் இருபக்க தீவிரவாதப் போக்குகளும் தவிர்க்கப்பட வேண்டியவை எனக் கருதுவதால் இது குறித்து விரிவாக விளக்குவது பொருத்தமானது என நினைக்கின்றேன்.

ஐவேளைத் தொழுகையில் ஓதப்படும் குனூத்:

முஸ்லிம் சமூகம் சந்திக்கும் சவால்களின் போது ஐவேளைத் தொழுகையிலும் ‘குனூத் நவாஸில்’ ஓதுவது குறித்தும் தொடராக சுபஹுடைய தொழுகையில் குனூத் ஓதுவது குறித்தும் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் உள்ளது.

சுபஹுடைய குனூத்:

    சுபஹுடைய குனூத் தொடர்பில் நான்கு விதமான கருத்துக்கள் உள்ளன. இந்தக் கருத்துக்கள் குறித்தும் அவற்றுக்கு அவரவர் காட்டும் ஆதாரங்கள் குறித்தும் சுருக்கமாக நோக்குவோம்.

1.    சுபஹுடைய குனூத் கட்டாய சுன்னாக்களில் ஒன்றாகும். அதனைத் தொடராகச் செய்து வருவது முஸ்தஹப் ஆகும் என்பது ஷாபிஈ, மாலிகீ மத்ஹபுடைய அறிஞர்களின் அபிப்பிராயமாகும். இதற்குப் பின்வரும் ஹதீஸ்களை அவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றனர்.

‘நபி(ச) அவர்கள் சுபஹிலும் மஃரிபிலும் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள்.’ அறிவிப்பவர்: அல்பராஉ இப்னு ஆஸிப்(வ) ஆதாரம்: முஸ்லிம் 678-305, தாரமி1638, நஸாஈ 1076

    இந்நபிமொழியில் சுபஹ், மஃரிப் ஆகிய இரு தொழுகைகளிலும் நபி(ச) அவர்கள் குனூத் ஓதினார்கள் என்று கூறப்படுவதை சுபஹ் தொழுகையில் குனூத் ஓதுவதற்கான ஆதாரமாகக் கொள்கின்றனர்.

‘நபி(ச) அவர்கள்  சுபஹில் குனூத் ஓதினார்களா என அனஸ் இப்னு மாலிக்(வ) அவர்களிடம் கேட்கப்பட்ட போது ‘ஆம்’ எனப் பதிலளித்தார்கள். ருகூஃ செய்வதற்கு முன்னர் ஓதினார்களா? என்று கேட்ட போது ருகூஃ விற்குப் பின்னர் சிறிது நேரம் ஓதினார்கள் எனப் பதிலளித்தார்கள்.’ அறிவிப்பவர்: முஹம்மத் இப்னு ஸீரீன்(ரஹ்) ஆதாரம்: புஹாரி 1001, தாரமீ: 1745

    முன்னர் கூறிய ஹதீஸை விட சுபஹில் குனூத் ஓத வேண்டும் என்று கூறுபவர்களுக்கு இது பலமான ஆதாரமாகத் தெரிகின்றது.

‘அபூ ஹுரைரா(வ) அறிவித்தார். இறைத்தூதர்(ச) அவர்கள் (தொழுகையில்) எவருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் ருகூவுக்குப் பிறகு ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதுவார்கள். சில வேளை ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்த்’ என்று சொன்ன பின்பு, ‘இறைவா! வலீத் இப்னு வலீத், ஸலமா இப்னு ஹிஷாம் மற்றும் அய்யாஷ் இப்னு அபீ ரபீஆ ஆகியோரைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக! (இறைத்தூதர்) யூசுஃப்(ர) அவர்களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் அவர்களுக்கு அளிப்பாயாக!’ என்று பிரார்த்திப்பார்கள். அதை சப்தமாகச் சொல்வார்கள். தம் ஃபஜ்ருத் தொழுகைகள் சிலவற்றில், ‘இறைவா! இன்னார், இன்னாரை உன் கருணையிலிருந்து அப்புறப் படுத்துவாயாக’ என்று சில அரபுக் குலங்களைக் குறிப்பிட்டுப் பிரார்த்திப்பார்கள். அல்லாஹ் ‘அவர்களை அல்லாஹ் மன்னிக்கும்வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’ எனும் (திருக்குர்ஆன் 03:128 வது) வசனத்தை அருளும்வரை இப்படிப் பிரார்த்தித்து வந்தார்கள்.’ (புஹாரி: 4560)

    இந்த நபிமொழியிலும் பஜ்ருத் தொழுகை சிலவற்றிலும் சில கோத்திரத்தாருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள் என்று கூறப்படுவதையும் சுபஹுடைய குனூத்திற்கான ஆதாரமாகக் கொள்கின்றனர்.

‘அப்துல்லாஹ் இப்னு உமர்(வ) கூறினார். (உஹுத் போரில் காயம் ஏற்பட்டதற்குப் பிறகு) ஃபஜ்ருத் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, ‘சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹு – ரப்பனா வல(க்)கல் ஹம்து’ என்று கூறியதற்குப் பின்னால், நபி(ச) அவர்கள், ‘இறைவா! இன்னான், இன்னான், இன்னானை உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!’ என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், ‘அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, (நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’ என்னும் (திருக்குர்ஆன் 03:128 வது) வசனத்தை இறக்கியருளினான். ‘ (புஹாரி: 4069)

    இந்த வசனம் இறங்கியதும் நபியவர்கள் சபிப்பதை விட்டு விட்டதாகவும் குனூத்தை விடவில்லை எனவும் சுபஹுடைய குனூத்தை சரிகாணும் அறிஞர்கள் கருதுகின்றனர்.

‘நபியவர்கள் பஜ்ர் தொழுகையில் உலகை விட்டும் பிரியும் வரையும் குனூத் ஓதினார்கள்.’

அறிவிப்பவர்: அனஸ்(வ) ஆதாரம்: ஹாகிம் முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் 4964, அஹ்மத் 12657

    இமாம் ஹாகிம் அவர்கள் இதனை ஸஹீஹ் என்று குறிப்பிட்டாலும் இது பலவீனமான அறிவிப்பாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஜஃபர் அர்ராஸி என்பவர் (இவரது இயற் பெயர் ஈஸா இப்னு மாஹான்) பலவீனமானவராவார். ஸஹீஹான அறிவிப்பாளர்களுக்கு முரணாக அறிவிக்கும் போக்குடையவர். இவர் குறித்து அறிஞர்கள் பல விமர்சனங்களைச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நாம் மேலே குறிப்பிட்டவை போன்ற ஹதீஸ்களை ஆதாரமாக வைத்து சுபஹுத் தொழுகையில் வழமையாக குனூத் ஓதி வர வேண்டும் என சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

2.    சுபஹ், ஏனைய தொழுகைகளில் குனூத் ஓதுவது மாற்றப்பட்டதும் பித்அத்தான நடைமுறையுமாகும்.

இமாம் அபூ ஹனீபா(ரஹ்) அவர்கள் இந்தக் கருத்தில் இருக்கின்றார்கள். இந்தக் கருத்துடைய அறிஞர்கள் பின்வரும் செய்திகளைத் தமக்குரிய ஆதாரமாகக் கொள்கின்றனர்.

1.    ‘அபூ மாலிகில் அஸ்ஜயீ(வ)  அவர்கள் தனது தந்தையிடம் ‘தந்தையே! நீங்கள் நபியவர்களுக்கும் அபூபக்கர், உமர், உஸ்மான் ஆகியோருக்கும் கூபாவில் சுமார் ஐந்து வருடங்கள் அலி(வ) அவர்களுக்கும் பின்னால் தொழுதுள்ளீர்கள். அவர்கள் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்களா?’ எனக் கேட்டார்கள். அதற்கு அவர் ‘இல்லை அருமை மகனே! இது புதிதாக உருவானது’ எனப் பதில் கூறினார்கள்.’
(ஆதாரம்: அஹ்மத் 15879, 27210, திர்மிதி- 402, 244)

சில அறிவிப்புக்களில் பஜ்ரில் குனூத் ஓதினார்களா? என்றும் கேட்டதாகவும் (ஷரஹ் மஆனியல் ஆதார் 1474) பல அறிவிப்புக்களில் பொதுவாகக் கேட்கப்பட்டதாகவும் இடம் பெற்றுள்ளது. குனூத்தே இல்லை என்பதற்கும் நபி(ச) அவர்கள் ஓதியது மன்ஸூஹ் – மாற்றப்பட்டுவிட்டது என்பதற்கும், குனூத் ஒரு பித்அத்தான செயல் என்பதற்கும் இதனை பலமான ஆதாரமாக முன்வைக்கின்றனர்.

‘நபி(ச) அவர்கள் சுபஹில் குனூத் ஓதுவதைத் தடுத்தார்கள்.’
அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரழி) ஆதாரம்: இப்னுமாஜா 1242, தாரகுத்ஸி 1688

இதன் அறிவிப்பாளர் வரிசையில் பலவீனமானவர் இடம்பெற்றுள்ளதாக அறிஞர் ஷுஐப் அல் அர்நாஊத் குறிப்பிடுகின்றார்கள். அல்பானி (ரஹ்) அவர்கள் இதனை இட்டுக்கட்டப்பட்டது என்று குறிப்பிடுகின்றார்கள். எனவே, இதனை இக்கருத்துக்கு வலுவூட்டும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

‘நபி(ச) அவர்கள் ஒரு மாதம் குனூத் ஓதினார்கள். அதற்கு முன்னரோ, பின்னரோ குனூத் ஓதியதில்லை என இப்னு மஸ்ஊத்(ச) அவர்கள் குறிப்பிட் டுள்ளார்கள்.’
ஆதாரம்: இப்னு அபீiஷபா-342, அல்பஸ்ஸார்-1569, ஷரஹ் மஆனியல் ஆதார்-1465, தபரானி (அல்கபீர்)-9973

குனூத் குறித்து இப்னு உமர்(வ) அவர்கள் ‘அல்லாஹ் மீது சத்தியமாக அது பித்அத்தாகும். நபி(ச) அவர்கள் ஒரு மாதம் ஓதினார்கள். பின்னர் விட்டு விட்டார்கள்.’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: பிஷர் இப்னு ஹர்ப்(ரஹ்)
ஆதாரம்: தபரானி (அல்கபீர்)- 14065, பைஹகி (குப்றா)-3158

இதுவும் பலவீனமான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்டதாகும்.

இது போன்ற தகவல்களை மையமாகக் கொண்டு சுபஹுடைய குனூத் மட்டுமன்றி பிரச்சினையான சந்தர்ப்பங்களில் ஓதப்படக் கூடிய குனூத்தும் மன்ஸூஹ் – மாற்றப்பட்ட சட்டத்தில் உள்ளது. அதனைச் செய்யக்கூடாது. சுபஹுடைய குனூத் பித்அத்தாகும் என்ற கருத்தை இச்சாரார் கொண்டுள்ளனர்.

03.    குனூத்தை ஓதவும் முடியும் விடவும் முடியும்:

மேற்குறிப்பிட்ட இரு சாராரின் ஆதாரங்களையும் அடிப்படையாக வைத்து ஓதுவதும் ஆகுமானது விடுவதும் ஆகுமானது என்ற கருத்தில் சில அறிஞர்கள் உள்ளனர். சில அறிஞர்கள் சுபஹுடைய குனூத்தை தவிர்ப்பதே மிகச் சரியானது என்று கருதிய போதிலும் ஓதுவதைக் கண்டிக்காது உள்ளனர். இமாம் இப்னுல் கையிம் ஜவ்ஸி(ரஹ்), இமாம் சுப்யானுத் தவ்ரீ(ரஹ்), தபரி(ரஹ்) போன்றோரை இக்கருத்துடைய அறிஞர் களுக்கு உதாரணமாகக் கூறலாம்.

சுபஹ் தொழுகையில் வழமையாக ஓதப்படும் குனூத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதே ராஜிஹான (வலுவான) கருத்தாகும். பிரச்சினையான சந்தர்ப்பங்களில் குறித்த பிரச்சினை தொடர்பில் ஐவேளைத் தொழுகையிலும் குனூதுன்னவாஸில் ஓதிக் கொள்ளலாம். இதுவே சரியான முறையாகும்.

இமாம் இப்னுல் கையூம் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் தமது ‘ஸாதுல் மஆத்’ எனும் நூலில் இது குறித்து கூறும் கருத்து கவனிக்கத் தக்கதாகும்.

அபூஹுரைரா(வ) அவர்கள் சுபஹ் தொழுகையில் இரண்டாம் ரக்அத்தில் ருகூஃ விற்குப் பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறிய பின் முஃமின்களுக்காகவும், காபிர்களுக்கு எதிராகவும் பிரார்த்தித்தார் என்ற ஹதீஸ் ஸஹீஹானதே! நபி(ச) அவர்கள் இதைச் செய்து விட்டு பின்னர் விட்டுவிட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. அபூஹுரைரா(வ) அவர்கள், இது போன்ற குனூத் ஸுன்னாவாகும். நபி(ச) அவர்கள் இதைச் செய்துள்ளார்கள் என்று அந்த மக்களுக்குக் கற்றுக் கொடுக்க விரும்பியிருக்கலாம். சுபஹிலும் பிரச்சினையான சந்தர்ப்பங்களிலும் குனூத் ஓதுவதை வெறுக்கக் கூடிய கூபாவாசிகளுக்கு இது மறுப்பாகும். அவர்கள் (குனூதுன்னவாஸில்) மாற்றப்பட்டுவிட்டது என்றும் அதைச் செய்வது பித்அத் என்றும் கூறுகின்றனர்.

அஹ்லுல் ஹதீஸுடைய அறிஞர்கள் கூபாவாசிகளுக்கும், பிரச்சினையான சந்தர்ப்பங்களிலும், பஜ்ரிலும் குனூத் ஓதுவதை முஸ்தஹப்பாகக் கருதக் கூடியவர்களுக்கும் மத்தியில் நடுநிலையான கருத்தைக் கொண்டுள்ளனர். இந்த இரண்டு கூட்டத்தை விடவும் இவர்களே ஹதீஸ் விடயத்தில் பாக்கியம் பெற்றவர்கள். அவர்கள் ஓதிய குனூத்தை (குனூதுன்னவாஸில்) ஓதுவார்கள். அவர்கள் விட்ட குனூத்தை விட்டுவிடுவார்கள். (நபியவர்கள் செய்ததை) செய்வதும் ஸுன்னத்துதான். (அவர்கள் விட்டதை) விடுவதும் ஸுன்னத்துதான் என அவர்கள் கூறுவார்கள். இதே வேளை இதைத் தொடராகச் செய்பவர்களை மறுக்கமாட்டார்கள். அதை பித்அத்தாகப் பார்க்கவும் மாட்டார்கள். அதைச் செய்பவரை ஸுன்னாவுக்கு முரண்பட்டவராகவும் கருதமாட்டார்கள். இவ்வாறே பிரச்சினையான சந்தர்ப்பங்களில் ஓதப்படும் குனூத்தை மறுப்பவர்களையும் எதிர்க்கமாட்டார்கள். அந்தக் குனூத்தை விடுவதை பித்அத்தாகவும் கருதமாட்டார்கள். அதை விடுபவரை ஸுன்னாவுக்கு முரண்பட்டவராகவும் பார்க்கமாட்டார்கள். மாறாக, யார் குனூத் ஓதினாரோ அவரும் நல்லதையே செய்தார். யார் விட்டாரோ அவரும் நல்லதையே செய்தார். இஃதிதாலுடைய நிலை, துஆவுக்கும் அல்லாஹ்வைப் புகழ்வதற்கும் உரிய இடமாகும். இஃதிதாலில் இவ்விரண்டையும் நபி(ச) அவர்கள் செய்துள்ளார்கள். (ஸாதுல் மஆத் : 1ஃ266)

இமாம் இப்னுல் கையூம் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் இவ்வாறு நடுநிலையான ஒரு கருத்தை முன்வைத்தாலும் சுபஹுடைய குனூத் ஸுன்னா இல்லை என்பதையே மிகச் சரியான வலுவான கூற்றாகக் கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இமாம் இப்னுல் கையூம் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் இந்தக் கருத்தைக் கூறிவிட்டு சுபஹுடைய குனூத் தொடர்பில் நீண்ட கருத்தாடலைச் செய்துள்ளார்கள்.

நபி(ச) அவர்கள் உலகைப் பிரியும் வரை பஜ்ரில் குனூத் ஓதினார்கள் என்ற செய்தி குறித்து இமாமவர்கள் பேசும் போது, இதன் அறிவிப்பாளர் அபூ ஜஃபர் அர்ராஸி என்பவர் பலவீனமானவர் என்பதை நிரூபித்துவிட்டு இந்த ஹதீஸ் ஸஹீஹ் என்று கூறினால் கூட இப்போது சுபஹில் ஓதப்படும் குனூத்திற்கு ஒரு போதும் ஆதாரமாக அமையாது என்று கூறுகின்றார். குனூத் என்றால் நிற்றல், மௌனமாக இருத்தல், ஒரு இபாதத்தில் தொடராக இருத்தல், துஆ, தஸ்பீஹ், உள்ளச்சம் என பல அர்த்தங்கள் உள்ளன. அல்லாஹ் தன் திருமறையில்,

‘வானங்கள் மற்றும் பூமியில் இருப்போர் அவனுக்கே உரியவர்களாவர். (அவர்கள்) அனைவரும் அவனுக்கே அடிபணிந்து வழி படுகின்றனர்.’ (30:26)

    என்று கூறுகின்றான். மேலும்,

‘(நிராகரிப்பவன் சிறந்தவனா?) அல்லது  மறுமையைப் பயந்து, தனது இரட்சகனின் அருளை ஆதரவு வைத்து, சுஜூது செய்தவராகவும், நின்றவராகவும் இரவு நேரங்களில் அடிபணிந்து வழிபடுபவரா? அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என (நபியே!) நீர் கேட்பீராக! சிந்தனையுடையோர்தாம் நல்லுபதேசம் பெறுவார்கள்.’ (39:09)

மேலும்,

‘இன்னும் இம்ரானின் மகள் மர்யமையும் (உதாரணமாகக் கூறுகின்றான்.) அவள் தனது கற்பைக் காத்துக் கொண்டாள். எமது ‘ரூஹி’ல் இருந்து அதில் நாம் ஊதினோம். அவள் தனது இரட்சகனின் வார்த்தை களையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினாள். மேலும், அவள் வழிப்பட்டு நடப்போரில் ஒருவராகவும் இருந்தாள்.’ (66:12)

    இந்த இடங்களில் எல்லாம் ‘குனூத்’ என்ற சொல்லின் தோற்றப்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நபி(ச) அவர்கள்,

தொழுகையில் சிறந்தது நீண்ட குனூத் உடைய தொழுகை என்று கூறியுள்ளார்கள். அதாவது, நீண்ட நேரம் நின்று தொழும் தொழுகை என்பதே இதன் அர்த்தமாகும். ஆரம்பத்தில் தொழுகையில் பேசுவது தடுக்கப்பட்டிருக்கவில்லை.

‘தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு ”(முற்றிலும்) அடிபணிந்த வர்களாக நில்லுங்கள்”’
(2:238)

    மேற்படி வசனம் அருளப்பட்ட பின்னர் நாம் தொழுகையில் மௌனமாக இருக்குமாறு ஏவப்பட்டோம், பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டோம் என ஸைத் இப்னு அர்க்கம்(வ) அவர்கள் கூறுகின்றார்கள். இந்த வசனங்களில் குனூத் என்பது ஏற்கனவே நாம் கூறிய அர்த்தங்களில் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் காணலாம்.

நபி(ச) அவர்கள் சுபஹுடைய தொழுகைகளில் ருகூஃ வுக்குப் பின்னர் அல்லாஹும்மஹ்தினி பீமன் ஹதைத்த என்று சப்தத்தை உயர்த்தி ஓதினார்கள். பின்னால் உள்ளவர்கள் ஆமின் கூறினார்கள் என அனஸ்(வ) அவர்கள் கூறவில்லை.

இஃதிதாலில்,

என்பது போன்ற நீண்ட துஆவை ஓதுவார்கள். புகழ்ச்சியும், துஆவுமுடைய இதுவும் ‘குனூத்’ தான்.

நீண்ட நேரம் இஃதிதாலில் நிற்பதும் குனூத் தான்É நீண்ட கிராஅத்துக்களை ஓதுவதும் குனூத் தான்É குறித்த இந்த துஆவும் குனூத்தான். குனூத் என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கும் போது அனஸ்(வ) அவர்கள் சுபஹில் குனூத் இருந்தது என்று கூறும் ஹதீஸின் அர்த்தம், குறித்த அந்த துஆவை ஓதுவதைத்தான் குறிக்கும் என்று எங்கிருந்து அர்த்தம் எடுப்பீர்கள்?

பஜ்ரில் குனூத் இருந்தது என பஜ்ருடைய தொழுகை விஷேடமாகக் கூறப்பட்டுள்ளதை வைத்து குறித்த இந்த துஆவைத்தான் குறிக்கும் என்று எடுக்க முடியாது.

குனூத் என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. பஜ்ர் தொழுகை மற்ற தொழுகை அனைத்தும் உள்ளடங்கக் கூடியதே! குனூத் பற்றிக் கூறும் போது அனஸ்(வ) அவர்கள் பஜ்ரை மட்டும் விஷேடமாக இங்கே குறிப்பிட்டுள்ளார்கள். இந்த குனூத்தை காபிர்களுக்கு எதிரான குனூத் என்று கூற முடியாது. முஃமின்களிலுள்ள பலவீனமானவர் களுக்கான துஆ என்றும் கூற முடியாது. ஏனெனில், அனஸ்(வ) அவர்களே இந்த குனூத்தை நபி(ச) அவர்கள் ஒரு மாதம் ஓதிவிட்டு பின்னர் விட்டுவிட்டார்கள் என்று கூறியுள்ளார்கள். எனவே, நபி(ச) அவர்களின் பஜ்ர் தொழுகையில் குனூத் இருந்தது என்ற அனஸ்(ச) அவர்களின் கூற்று, குறித்த இந்த துஆவை நபி(ச) அவர்கள் குனூத்தில் ஓதினார்கள் என்பதேயாகும். நான்கு கலீபாக்களும், அல் பராஜ் இப்னு ஆஸிப், அபூ மூஸல் அஸ்அரி, அனஸ் இப்னு மாலிக்(வ) ஆகியோர் குனூத் ஓதியுள்ளனர் என்று சிலர் வாதிடலாம்.

இதற்கு பல கோணங்களில் பதில் கூறலாம்.

01. நபி(ச) அவர்கள் சுபஹிலும் மஃரிபிலும் குனூத் ஓதினார்கள் என்றே அனஸ்(வ) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (புஹாரி) சுபஹை மட்டும் குறிப்பிட்டுக் கூறவில்லை. இவ்வாறே அல் பராஃ இப்னு ஆஸிப்(வ) அவர்களும் அறிவிக்கின்றார்கள். பஜ்ரில் மட்டும் குனூத் ஓத வேண்டும் என்று இதை வைத்து எப்படிக் கூற முடியும்?

இந்தக் கேள்விக்கு மஃரிபுடைய குனூத் மாற்றப்பட்டுவிட்டது என நீங்கள் கூறினால் உங்களுடன் முரண்பட்ட கூபாவாசிகளும்; அவ்வாறே பஜ்ருடைய குனூத்தும் மாற்றப்பட்டு விட்டது என்று கூறுவார்கள். நீங்கள் மஃரிபுடைய குனூத் மாற்றப்பட்டுவிட்டது என்பதற்கு எந்தவொரு ஆதாரத்தைக் கொண்டு வந்தாலும், அது சுபஹுடைய குனூத்தும் மாற்றப்பட்டுவிட்டது என்பதற்கு ஆதாரமாகவே அமையும். மஃரிபுடைய குனூத் மாற்றப்பட்டு விட்டது, சுபஹுடைய குனூத் மட்டும் சட்டமாக்கப்பட்டது என்பதற்கு நீங்கள் எந்தவொரு ஆதாரத்தையும் ஒரு போதும் கொண்டு வர முடியாது.

அனஸ்(வ) அவர்களது அறிவிப்பில் வரும் மஃரிபுடைய குனூத் என்பது பிரச்சினைக்காக ஓதப்பட்ட குனூத். வழமையாக ஓதப்படும் குனூத் அல்ல என்று நீங்கள் கூறினால் உங்களுடன் முரண்பட்டிருக்கும் அஹ்லுல் ஹதீஸைச் சேர்ந்தவர்கள், ஆமாம். அப்படித்தான் பஜ்ரில் குனூத் ஓதினார்கள் என்று வருவதும் பிரச்சினைக்காக ஓதிய குனூத்தே தவிர வழமையாக ஓதும் குனூத் குறித்து பேசும் செய்தி அல்ல அது என்று கூறுவார்கள். இரண்டு குனூத்துக்குமிடையில் என்ன வேறுபாடு இருக்கின்றது.

சுபஹுடைய குனூத் என்று வருவது வழமையான இந்தக் குனூத்தைக் குறிக்காது. பிரச்சினையான சந்தர்ப்பத்தில் ஓதப்பட்ட குனூத்தையே குறிக்கும். இதை அனஸ்(வ) அவர்களே அறிவிக்கின்றார்கள்.

சுபஹில் வழமையாக குனூத் ஓதுவதற்கு தூண் போன்று ஆதாரமாக அமைவதே அனஸ்(வ) அவர்கள்தான். அனஸ்(வ) அவர்களே அந்த குனூத் பிரச்சினைக்காக ஓதப்பட்ட குனூத் தான். பின்னர் அதை விட்டுவிட்டார்கள் என்று அறிவித்துள்ளார்கள்.

நபி(ச) அவர்கள் அறபிகளின் சில கோத்திரங்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள். பின்னர் விட்டுவிட்டார்கள்.

நபி(ச) அவர்கள் பஜ்ரில் தொடராக குனூத் ஓதியதாக சிலர் வாதிடுகின்றனர் என்று நாம் அனஸ்(வ) அவர்களைக் கேட்ட போது, ‘பொய் சொல்கின்றனர். நபி(ச) அவர்கள் ஒரு மாத காலம் சில அறபிக் கூட்டங்களுக்கு எதிராகக் குனூத் ஓதினார்கள்’ என பதிலளித்தார்கள்.

கைஸ் இப்னுர் ரபீக் எனும் இச்செய்தியின் அறிவிப்பாளரை யஹ்யா இப்னு மயீன்(ரஹ்) அவர்கள் பலவீனப்படுத்தியிருந்தாலும் மற்றும் சிலர் அவரை உறுதிப்படுத்தியுள்ளனர். அபூஜஃபர் அர்ராஸியைப் போன்றவர் அல்ல இவர். நபி(ச) அவர்கள் உலகைப் பிரியும் வரை சுபஹில் குனூத் ஓதினார்கள் என்ற செய்தியை அறிவிக்கும் பலவீனமான அபூஜஃபர் அர்ராஸியை ஆதாரமாக எடுப்பவர்கள் இந்த ஹதீஸை கைஸ் இப்னு ரபிஃயைக் காரணம் காட்டி ஏற்க முடியாது என்று எப்படிக் கூற முடியும்.

சுபஹுடைய குனூத்தை ஆதரித்துப் பேசும் அபூ ஜஃபர் அர்ராஸியை விட அதை மறுத்துப் பேசும் கைஸ் பலமானவர் அல்லது அவரின் நிலையில் உள்ளவர் என்று வேண்டுமானால் கூறலாம். கைஸ் பலவீனமானவர் என்று கூறியவர்களை விட அதிகமானவர்கள் அபூஜஃபர் அர்ராஸியை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

அடுத்து, அனஸ்(வ) அவர்கள் பிஃர்மஊனாவில் நபித்தோழர்கள் கொல்லப்பட்ட போது கொலை செய்தவர்களுக்கு எதிராக குனூத் ஓதியதாக அறிவிக்கின்றார்கள். இதுதான் குனூத்தின் ஆரம்பம் என்றும் கூறுகின்றார்கள். இதிலிருந்து குனூத் என்பது நபி(ச) அவர்களின் வழமையான நடவடிக்கையாக இருக்கவில்லை என்பதும், ‘குனூத் ஆரம்பமானது. ஒரு மாதத்திற்குப் பின்னர்’ விட்டுவிட்டார்கள் என்ற அனஸ்(வ) அவர்களின் வார்த்தைகளில் இருந்து இது பிரச்சினையான சந்தர்ப்பத்தில் ஓதப்படும் குனூத்தைத்தான் குறிக்கும் என்பது தெளிவாகின்றது.

நபி(ச) அவர்கள் சுபஹில் குனூத் ஓதினார்கள் என்றும் ழுஹர், அஸர், மஃரிப், இஷh, சுபஹ் (அபூதாவூத்) ஐவேளையும் குனூத் ஓதினார்கள் என்றும் ஹதீஸ்கள் இடம் பெற்றுள்ளன. எனவே, சுபஹில் மட்டுமன்றி ஏனைய தொழுகைகளிலும் ஓதப்பட்ட குனூத் குனூதுன்னவாஸில்தானே தவிர சுபஹில் மட்டும் ஓதப்படும் இந்த குனூத் ஆதாரபூர்வமானதல்ல என இமாமவர்கள் விரிவாக விளக்குகின்றார்கள். மேலதிகத் தகவல்களுக்கு ஸாதுல் மஆதைப் பார்வையிடலாம்.

முடிவாக,

சுபஹில் மட்டும் வழமையாக குனூத் ஓதப்படுவது ஸுன்னா அல்ல. பிரச்சினையான சந்தர்ப்பங்களில் குறித்த பிரச்சினை தொடர்பில் ஐவேளை குனூத் ஓதலாம்.

குனூத் விடயத்தில் ஒருவர் மற்றவரை எதிர்ப்பதும், விரோதிப்பதும் முன் சென்ற அறிஞர்களின் நடுநிலையான போக்கிற்கு எதிரானதாகும் என்ற உண்மைகளை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.