காஸா – இரத்தம் சிந்தும் பூமி

புனித பூமியான பலஸ்தீனம் யூத இன வெறியர்களால் இரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பலஸ்தீனத்தை ஆக்கிரமித்த யூதர்கள் ஐரோப்பா முழுவதும் சிதறி வாழ்ந்த இஸ்ரேலியர்களைக் குடியமர்த்தி இஸ்ரேல் எனும் சட்டவிரோத தேசத்தை உருவாக்கினர். இதற்கு அமெரிக்காவும் பிரிட்டனும் ஒத்து ஊதின.

இன்றைய இஸ்ரேலின் குடிமக்களில் 80 சதவீதமானோர் வந்தேறு குடிகளாவர் இதனால் பலஸ்தீனர்களின் பூமி பறிபோனது. அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல் உயிர்களும் பறிக்கப்பட்டு வருகின்றன. வளைகுடாப் பிராந்தியத்தில் எந்தவொரு முஸ்லிம் நாடும் பலம் பெற்றுவிடக் கூடாது என்பது இஸ்ரேலின் இலட்சிய இலக்காகும். அண்மைக் காலமாக ஹமாஸ்; தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருகின்றது. ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவுத் தளபதி “அஹமட் அல் ஜபரி” அவர்களே ஹமாஸின் ஆயுத வளர்ச்சியின் சூத்திரதாரி என்பதை மோப்பம் பிடித்த மொஸாட் அவரைப் படுகொலை செய்தது. இதனைத் தொடர்ந்தே தற்போதைய பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக இஸ்ரேல் பலஸ்தீனத்தைத் தாக்கும் போது அமெரிக்கா ஒரு பக்கவாத்திய பல்லவியைப் பாடும். அதுதான், “தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உண்டு” என்பதாகும். அதே பழைய பல்லவியைத்தான் அமெரிக்கா இன்றும் பாடியுள்ளது.
நியாயமில்லாமல் ஒரு நாட்டுக்குத் தாக்குதல் நடாத்தும் போது இப்படிக் கூறினால் அது நியாயமானதா? பறிக்கப்பட்ட தமது பூமியை மீட்கும் உரிமை பலஸ்தீனியர்களுக்கு இல்லையா? இழந்த உரிமைகளை மீட்கும் உரிமை அவர்களுக்கு இல்லையா? தனது ஆயுத பலத்தை அதிகரித்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு இல்லையா? என்றெல்லாம் அமெரிக்கா சிந்திக்கத் தவறுகின்றது. அதற்கு ஒருபக்க மூளை மட்டும்தான் வேலை செய்யும். தனது செல்லக் குழந்தை, இல்லை இல்லை கள்ளக் குழந்தை செய்யும் கொடூரங்களை நியாயப்படுத்த அர்த்தமே இல்லாத வாதங்களை முன்வைக்க மட்டும் அது பழகியுள்ளது.
இலக்குகளை மட்டுமே குறிவைத்துத் தாக்குகின்றோம் என்ற போர்வையில் பொதுமக்கள், பொதுக் கட்டமைப்புக்களை இஸ்ரேல் சிதைத்து வருகின்றது. அதன் தாக்குதல்களில் இறந்தவர்களில் அதிகமானோர் அப்பாவிப் பொதுமக்களும், சிறுவர்களும்தான் என்பதே அதன் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குத் தக்க சான்றாகும்.
பல மாதங்களாக ஆய்வு நடாத்தப்பட்ட உளவுத் தகவலின் அடிப்படையிலேயே தாக்குதல் நடாத்தப்பட்டதாக இஸ்ரேல் பீற்றிக் கொண்டாலும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த கட்டிடங்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதன் மூலம் கண்மூடித்தனமான தாக்குதல்தான் நடாத்தப்பட்டுள்ளது என்பது மீண்டும் உறுதி செய்யப்படுகின்றது. BBC காஸா கிளை, ITN தொலைக்காட்சி, SKY தொலைக்காட்சி நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடம் தாக்குதலுக்கு உள்ளானமை இதையே உணர்த்துகின்றது.
இஸ்ரேல் காஸா மீது தாக்குதல் நடாத்துவது இதுதான் முதல் தடவையல்ல. இது போன்ற பல தாக்குதல்களை இஸ்ரேல் நடாத்திவிட்டது. தற்போது வான் தாக்குதலுடன் கடல் தாக்குதலும், தரைவழித் தாக்குதலும் நடாத்த இஸ்ரேல் எண்ணியுள்ளது. ஆனால் தற்போது நடக்கும் தாக்குதல்களுக்கும் முன்னர் நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்குமிடையில் பலத்த வேறுபாடுகள் உள்ளன.
ஏற்கனவே காஸா மீது இஸ்ரேல் தனது இரத்த வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிடும் போது எகிப்து தனது எல்லைகளை மூடி இஸ்ரேலுக்கு ஒத்து ஊதியது. ஆனால் தற்போதுள்ள எகிப்திய அரசு காஸாவுக்கான வாசல்களை அகலத் திறந்து வைத்துள்ளது.
எகிப்து “ரபா” எல்லையைத் திறந்துவிட்டிருப்பதால் சர்வதேச உதவியை காஸா பெறும் வாய்ப்பு உள்ளது. எகிப்தின் பிரதமர் “ஹிஷாம் கன்தில்” ( தூனுஷீய வெளியுறவு அமைச்சர்) போன்றோரின் காஸா விஜயம் என்பது முன்னைய தாக்குதல்களுடன் ஒப்பிடும் போது பலஸ்தீனுக்கு சாதகமான நிலை இருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
அத்துடன் ஆண்டாண்டு காலமாகத் தமக்குள் மோதிக் கொண்டிருந்த ஹமாஸ், அல்பதாஹ் அமைப்புக்கள் இந்தத் தாக்குதல் சந்தர்ப்பத்தில் ஒன்றிணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளதுடன் அதைப் பகிரங்கமாக அறிவித்தும் விட்டது. இந்தத் தாக்குதல் மூலம் கிடைத்த பெரிய இலாபமாக இதனை எடுத்துக் கொள்ளலாம். இதுவும் பலஸ்தீனுக்கு சாதகமாக உள்ளது.
அடுத்து ஏற்கனவே ஹமாஸிடம் வெகுதூரம் சென்று தாக்கும் ராக்கெட்டுகள் இருக்கவில்லை. சுமார் 12 கி.மீ. வரை சென்று தாக்கும் ராகெட்டுக்களையே பலஸ்தீன் வைத்திருந்தது. தற்போது “பஜ்ர்-5″ ரொக்கட் மூலம் 75 கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறனை ஹமாஸ் பெற்றுள்ளது.
இஸ்ரேல் – பலஸ்தீன 40 வருடகால முறுகல் வரலாற்றில் இஸ்ரேலின் இதயமான “டெல் அவிவ்” பலஸ்தீனத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
பலஸ்தீனியர்கள் போன்று இஸ்ரேலியர்கள் உறுதியானவர்கள் அல்ல. மரணத்திற்கு அஞ்சி வாழ்பவர்கள். இஸ்ரேல் தனது தொழில் நுட்பத்தின் மூலம் ரொகட் தாக்குதலில் இருந்து தப்பிக் கொண்டாலும்; அஞ்சி அஞ்சி வாழும் நிலைக்கே இஸ்ரேலியர் செல்வர். துப்பாக்கி வேட்டுகளுக்கு முன்னால் வேங்கை போன்று வீரத்துடன் நிற்கும் பலஸ்தீனிய சிறுவர்களின் இரும்பு இதயம் இஸ்ரேலியர்களிடம் இல்லை. எனவே, அவர்கள் நிம்மதியிழந்த ஒரு வாழ்க்கை வாழ வேண்டியுள்ளது.
ரொக்கட் தாக்குதலில் மூவரை இஸ்ரேல் இழந்தது. ஆனால் “டெல் அவிவ்” கடற்கரை, பூங்காக்கள், ஹோட்டல்கள் ஈ எறும்பில்லாத அளவுக்கு வெறிச்சோடிப்போயுள்ளது. இது இஸ்ரேலின் கோழைத்தனத்துக்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.
தற்போது நிலமை இஸ்ரேலுக்குச் சாதகமாக இல்லை என்பதால்தான் ஐ.நா. வும் தலையிடுகின்றது. “பான்கீன் மூன்” அங்கே விஜயம் செய்யவுள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றமை தோல்வியை ஒப்புக்கொள்ளாத இஸ்ரேல் பின்னடைவுகளை ஏற்க தயாராக இருப்பதையே இது உணர்த்தி நிற்கின்றது.
உலகைத் துச்சம் என எண்ணிப் போராடுபவர்களுக்கு முன்னால் உலகை அனுபவித்தலை மட்டுமே தமக்கு மிச்சம் என எண்ணி வாழ்வோர் துணிந்து நிற்க முடியாது. இப்போது இஸ்ரேல் அச்சத்தின் உச்சத்தில் உள்ளது. ஆதனால்தான் உலகச் சண்டியன் அமெரிக்காவின் மூன்று போர் கப்பல்களும், 2500 கூலிப்படையினரும் இஸ்ரேலுக்கு உதவிக்காக விரைந்துள்ளனர். அமெரிக்காவின் இந்த உதவிப்படையே இஸ்ரேலின் தோல்விக்குச் சான்றாகும்.
உயிரைப் பணயம் வைத்துப் போராடும் போராளிகளுக்காகவும், அனுதினமும் இஸ்ரேலின் ஈவிரக்கமற்ற மிருகத்தனமான கொடூரங்களுக்கு உள்ளாகும் மக்களுக்காகவும் உலக முஸ்லிம்கள் உள்ளம் உருக இருகரம் ஏந்திப் பிரார்த்திப்போமாக!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.