கற்றுக்கொண்ட எட்டுப் பாடங்கள்

ஒரு ஆசிரியரிடம் மாணவர் ஒருவர் நீண்டகாலமாகக் கற்று வந்தார். ஒரு நாள் அந்த ஆசிரியர் தனது மாணவரிடம் எவ்வளவு காலமாக நீ என்னுடன் நெருக்கமாக இருக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு மாணவர் 33 வருடங்கள் என்று கூறினார். தொடந்து அந்த,

ஆசிரியர் : என்னிடமிருந்து நீ இந்தக் காலப் பகுதியில் எதைக் கற்றாய்?
மாணவன் : எட்டு விடயங்களைக் கற்றுக் கொண்டேன்.
(இது கேட்ட ஆசிரியர் அதிர்ந்து போனார். திறமையான மாணவன். ஆனால் இவ்வளவு காலமாக எட்டே எட்டு விடயங்களைத்தான் கற்றுக் கொண்டதாகக் கூறுகின்றானே! என ஆச்சரியப்பட்டார்.)
ஆசிரியர் : என் வாழ்நாள் எல்லாம் உன்னோடு கழிந்துவிட்டது. ஆனால் நீ எட்டே எட்டு விடயங்களைத்தான் கற்றுக் கொண்டதாகக் கூறுகின்றாயே!
மாணவன் : உண்மைதான் ஆசிரியரே! எட்டே எட்டு விடயங்களைத்தான் நான் கற்றுக் கொண்டேன். நான் பொய் சொல்ல விரும்பவில்லை.
ஆசிரியர் : சரி, நீ கற்றுக் கொண்ட பாடங்கள் என்னவென்று கூறு பார்க்கலாம்
மாணவன் :
முதலாவது பாடம்: இந்த உலகில் ஒவ்வொருவரும் மற்றவரை நேசிப்பதைக் கண்டேன். ஆனால் மரணித்து மண்ணறைக்குச் சென்றுவிட்டால் அந்த நேசர்கள் பிரிந்து விடுவதையும் கண்டேன். எனவே, நல்லறங்களையே என் நேசத்துக்குரியவைகளாக நான் எடுத்துக் கொண்டேன். ஏனெனில், நான் கப்றுக்குச் சென்ற பின்னரும் அவை என்னை விட்டும் பிரிந்து விடாமல் என்னுடன் கப்றுக்கும் வரும்.
(ஆசிரியர் உஷாரானார். தனது மாணவன் வித்தியாசமான கோணத்தில்தான் விடை கூறுகின்றான் என்று தொடர்ந்து கேட்க ஆசைப்பட்டார்.)
இரண்டாவது பாடம்: நான் ‘யார் தனது இரட்சகன் முன் நிற்பதை அஞ்சி, மனோ இச்சையை விட்டும் தன்னைத் தடுத்துக் கொண்டாரோ, நிச்சயமாக சுவர்க்கம் (அவரது) ஒதுங்குமிடமாகும். ‘ (79:40-41) என்ற குர்ஆன் வசனத்தைப் பார்த்தேன். எனவே, நான் முழுமையாக அல்லாஹ்வுக்குக் கட்டுப்படும் அளவுக்கு என் ‘ஹவா’ மனோ இச்சையைக் கட்டுப்படுத்த பகீரதப் பிரயத்தனத்தை மேற்கொண்டேன்.
மூன்றாவது பாடம்: உலகத்தில் இருக்கும் அனைவரும் ஏதோ ஒன்றைப் பெறுமதியாகக் கருதி அதைப் பாதுகாக்கக் கடுமையான முயற்சிகளில் ஈடுபடுவதைக் கண்டேன். பின்னர் ‘உங்களிடம் உள்ளவை முடிந்து விடக்கூடியவையே. அல்லாஹ்விடம் உள்ளவையோ நிலையானவையாகும். மேலும், பொறுமையுடன் இருந்தவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றிற்காக அவர்களது கூலியை நாம் வழங்குவோம்.’ (16:96) என்ற வசனத்தைப் பார்த்தேன். எனவே, என்னிடம் கிடைக்கும் பெறுமதிவாய்ந்த எதுவாக இருந்தாலும் அது பாதுகாப்பாக இருப்பதற்காக அல்லாஹ்விடமே ஒப்படைத்து விட்டேன்.
நான்காவது பாடம்: உலகத்தில் ஒவ்வொருவரும் தமது பணம், குடும்பப் பாரம்பரியம், பட்டம் பதவி மூலம் கண்ணியத்தையும் சிறப்பையும் பெற போட்டி போடுவதைக் கண்ணுற்றேன். பின்னர் ‘உங்களில் மிகப் பயபக்தியுடையவரே, நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக கண்ணியத்திற்குரியவர்.’ (49:13;) என்ற வசனத்தைப் பார்த்தேன். எனவே, அல்லாஹ்விடம் கண்ணியத்தைப் பெறும் முகமாக தக்வாவுடன் செயல்பட்டேன்.
ஐந்தாவது பாடம்: மக்களில் சிலர் சிலரைக் குறை கூறுகின்றனர். மற்றும் சிலர் சிலரை சபிக்கின்றனர். இதற்கான காரணம் என்ன என்று தேடினேன். பொறாமைதான் அதற்கு அடிப்படை என்று அறிந்து கொண்டேன். பின்னர் ‘(நபியே!) அவர்கள் உமது இரட்சகனின் அருளைப் பங்கிட்டுக் கொள்கின்றனரா? இவ்வுலக வாழ்க்கையில், அவர்களது வாழ்க்கைத் தேவைகளை அவர்களுக்கிடையில் நாமே பங்கிடுகின்றோம். அவர்களில் சிலர் மற்றும் சிலரைப் பணிக்கமர்த்திக் கொள்வதற்காக, அவர்களில் சிலரை மற்றும் சிலரைவிட அந்தஸ்துக்களால் நாம் உயர்த்தியிருக்கின்றோம். அவர்கள் ஒன்றுதிரட்டியிருப்பதை விட உமது இரட்சகனின் அருள் மிகச்சிறந்ததாகும்.’ (43:32) என்ற வசனத்தைப் பார்த்தேன். எனவே, நான் பொறாமையைக் கைவிட்டேன். மக்களை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன். எனவே, பொறாமைப்படுவதை விட்டும் ஒதுங்கிக் கொண்டேன்.
ஆறாவது பாடம்: மக்களில் சிலர் சிலரைக் கோபித்துக் கொள்வதையும், எதிரியாக எடுத்துக் கொள்வதையும், தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதையும் கண்டேன். பின்னர் ‘நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு விரோதியாவான். எனவே, அவனை நீங்கள் விரோதியாகவே எடுத்துக் கொள்ளுங்கள். அவன் தனது கூட்டத்தாரை, நரகவாசிகளில் அவர்கள் ஆகிவிட வேண்டும் என்பதற்காகவே அழைக்கின்றான்.’ (35:6) என்ற வசனத்தைப் பார்த்தேன். அல்லாஹ் ஷைத்தானை எதிரியாக எடுத்துக் கொள்ளுமாறு கூறியிருப்பதனால் படைப்பினங்கள் மீதான எதிர்ப்புணர்வை விட்டு விட்டு ஷைத்தானை மட்டும் எதிர்ப்பதை இலக்காகக் கொண்டு செயற்படுவதற்கு நான் என்னைத் தயார் பண்ணிக் கொண்டேன்.
ஏழாவது பாடம்: படைப்பினங்களில் அனைவரும் தனக்குரிய வாழ்வாதாரத்தைத் தேடுவதற்காகப் பெரும் பிரயத்தனத்தை மேற்கொள்வதைக் கண்டேன். சிலர் தடுக்கப்பட்ட வழிமுறைகள் மூலமாகவாவது தமக்குரிய ரிஸ்கைத் தேட முயற்சிப்பதைக் கண்டேன். இதற்காகவே தமது வாழ்வின் பெரும் பகுதியை கழிப்பதைக் கண்டேன். பின்னர் ‘பூமியில் உள்ள எந்த உயிரினமாயினும் அதற்கு உணவளிக்கும் பொறுப்பு அல்லாஹ்வின் மீதே உள்ளது. அதன் வாழ்விடத்தையும், அதன் சென்றடையும் இடத்தையும் அவன் நன்கறிவான். (இவை) அனைத்தும் தெளிவான பதிவேட்டில் இருக்கின்றன.’ (11:6) என்ற வசனத்தைப் பற்றி சிந்தித்தேன். அல்லாஹ் உணவளிக்கப் பொறுப்பெடுத்துக் கொண்ட உயிரினங்களில் நானும் ஒருவன் என்பதை அறிந்து கொண்டேன். அல்லாஹ் எனக்காகப் பொறுப்பெடுத்துக் கொண்ட ரிஸ்கைத் தேடுவதில் மூழ்குவதை விட்டு விட்டு அவனுக்காக நான் செய்ய வேண்டிய பணிகளில் ஈடுபாடு காட்டலானேன்.
எட்டாவது பாடம்: உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றின் மீது நம்பிக்கை வைத்து செயற்படுவதைக் கண்டேன். சிலர் தமது பணத்தில் நம்பிக்கை வைக்கின்றனர். சிலர் தமது பதவியில் சிலர் தமது கட்சியில், சிலர் தமது தொண்டரில், சிலர் தமது தலைமையில்…. என பொறுப்புச்சாட்ட, நம்பிக்கை வைக்க என்று வேறு படைப்பை நாடுவதைக் கண்டேன். பின்னர் ‘நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொண்டு, பின்னர் நிராகரித்ததே இதற்குக் காரணமாகும். எனவே, அவர்களது உள்ளங்கள் மீது முத்திரை குத்தப்பட்டுவிட்டது. ஆகவே, அவர்கள் விளங்கிக்கொள்ள மாட்டார்கள்.’ (63:3) என்ற வசனத்தைப் பார்த்தேன். எனவே, படைக்கப்பட்டவற்றின் மீது நம்பிக்கை வைப்பதை விட்டுவிட்டு படைத்தவனான அல்லாஹ்வின் மீதே நானும் தவக்குல் வைக்கலானேன்.
மாணவனின் பதில் கேட்ட ஆசிரியர் பெரிதும் மகிழ்ந்தார். தமது மாணவனுக்காக துஆச் செய்து இன்னும் உற்சாகமூட்டினார். மாணவன் பற்றிய தனது நல்லெண்ணம் வீண் போகவில்லை என்பதை அறிந்து கொண்டார்.

இது உண்மையில் நடந்த நிகழ்ச்சியா அல்லது கற்பனைச் சித்திரமா என்பதைப் பற்றிய அலசல் அவசியமல்ல. கூறப்பட்ட எட்டுப் பாடங்களும் எமக்கு அவசியமான வழிகாட்டல்கள் என்பது மட்டும் சர்வ நிச்சயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.