இயேசுவை இழிவுபடுத்தும் பைபிலும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும்

இயேசுவின் பிறப்பு பற்றி அல்குர்ஆன் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இரண்டாம் கருத்துக்கு இடமில்லாமலும் கூறி அவரை கண்ணியப்படுத்தியுள்ளமையும், பைபிள் இது பற்றிக் கூறும் போது அல்குர்ஆன் அளவுக்கு அவரது அற்புதப் பிறப்பு பற்றி உறுதிப்படக் கூறாத ஒரு போக்கைக் கடைப்பிடிப்பதுடன் அவர் யோசோப்பின் குமாரன் என அறியப்பட்டார் எனக் கூறி அதில் சந்தேகத் தன்மையையும் உண்டு பண்ணுகின்றது. இந்த அடிப்படையில் இயேசுவின் பிறப்பு விடயத்தில் அல்குர்ஆன் அவரை கண்ணியப்படுத்தும் அதே வேளை பைபிள் அவரை அசிங்கப்படுத்துகின்றது என்பதைச் சென்ற இதழில் நோக்கினோம்.
இயேசுவின் பரம்பரை:
இயேசுவின் பரம்பரை பற்றி குர்ஆனும் பைபிளும் கூறும் தகவல்களை எடுத்து நோக்கினாலும் அல்குர்ஆன் இயேசுவை கண்ணியப்படுத்தியுள்ளதையும் பைபிள் இயேசுவை இழிவுபடுத்துவதையும் குழப்பமான தகவல்களைத் தந்திருப்பதையும் தெளிவாக அறியலாம்.

இயேசுவின் பரம்பரை பற்றி அல்குர்ஆன்:
இயேசுவின் தாயார் மரியம்(ர) ஆவார்கள். அல்குர்ஆனும் நபி(ச) அவர்களது பொன்மொழிகளும் இப்பெண்ணைப் பற்றிப் போற்றிப் புகழ்கின்றன. சுவனத்துப் பெண் என்றும், உண்மையாளர் என்றும், கற்பொழுக்கம் உள்ளவர் என்றும் இவர் பற்றிக் குர்ஆன் பேசுகின்றது. இறை விசுவாசிகளுக்கு உதாரணமாகக் கூட குர்ஆனில் இவர் போற்றப்படுகின்றார்.

மரியம்(ர) அவர்களின் தந்தை இம்றான் என்பவர். இயேசுவின் தாயின் தந்தை இம்றானாவார். இந்த வகையில் இயேசு இம்றானின் சந்ததியாவார். இந்த சந்ததியினரை அல்குர்ஆன் போற்றுகின்றது. இம்றானின் சந்ததிகள் என்ற பெயரில் இயேசுவின் குடும்பத்தின் பெயரில் அல்குர்ஆனின் மூன்றாம் அத்தியாயம் அமைந்துள்ளது. இந்த அத்தியாயத்தில் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்ட்ட பரம்பரைகளில் இயேசுவின் பரம்பரையும் ஒன்று என்று சிலாகித்துப் பேசப்படுகின்றது.
‘நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியினரையும், இம்ரானின் சந்ததியினரையும் அகிலத்தார் அனைவரையும் விட தேர்ந்தெடுத் துள்ளான்.’ (3:33)
மர்யம்(ர) அவர்களின் தாயார் அதாவது, இயேசுவின் பாட்டி பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
”என் இரட்சகனே! என் வயிற்றில் உள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நேர்ச்சை செய்துவிட்டேன். எனவே, என்னிடமிருந்து நீ (அதை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் யாவற்றையும் செவியுறுபவனும், நன்கறிந்தவனுமாவாய்’ என இம்ரானின் மனைவி (பிரார்த்தித்துக்) கூறியதை (எண்ணிப்பாருங்கள்.)’
‘அவர் (தனது எதிர்பார்ப்புக்கு மாறாக) அதைப் பிரசவித்த போது, ‘என் இரட்சகனே! நிச்சயமாக நான் பெண் குழந்தையையே பிரசவித்துவிட்டேன்’ என்றார். அவர் பிரசவித்ததை அல்லாஹ் நன்கறிந்தவன். மேலும், ஆண், பெண்ணைப் போலல்ல. இன்னும் நான் அதற்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். ‘அவளையும் அவளது சந்ததியினரையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து நிச்சய மாக உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன்’ (என்றார்.)’
‘எனவே, அவரது இரட்சகன் அதை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டு, அவரை அழகிய முறையில் வளர்த்தான். மேலும், அதற்கு ஸகரிய்யாவைப் பொறுப்பாளராக ஆக்கினான். அவள் இருக்கும் தொழுமிடத்திற்குள் ஸகரிய்யா நுழையும் போதெல்லாம் அவர் அவளிடத்தில் உணவைக் கண்டு, ‘மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது! என (ஆச்சரியமாக)க் கேட்டார்’. ‘இது அல்லாஹ்விடமிருந்து வந்ததாகும். நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவோருக்கு கணக்கின்றி வழங்குவான்’ என்று அவள் கூறினாள்.’ (3:35-37)
இந்த வசனங்களில் இயேசுவின் தாயார் கருவில் இருக்கும் போதே இறைவனுக்காக அவரது தாயாரால் அர்ப்பணிக்கப்பட்டது பற்றியும், அவர் பிறந்த போது இயேசுவின் தாயாரையும் அவருக்கும் பிறக்கும் குழந்தைகளையும் iஷத்தான் தீண்டக் கூடாது என இயேசுவின் பாட்டி பிரார்த்தித்தது பற்றியும், அந்தப் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டது பற்றியும் ஸகரிய்யா என்ற இறைத்தூதர் மூலம் இயேசுவின் தாய் வளர்க்கப்பட்டது பற்றியும் பேசுகின்றது.
நபி(ச) அவர்களும் உலகில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் iஷத்தான் ஒரு முறை தீண்டுகின்றான். இயேசுவும் அவரது தாயாருமே இதிலிருந்து விதிவிலக்குப் பெற்றவர்கள் என்று கூறியுள்ளார்கள்.
அல்குர்ஆன் இயேசுவின் தாயார், பாட்டி, பாட்டன் அனைவரும் நல்லவர்கள், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், ஒழுக்கசீலர்கள் என்று பறை சாட்டுகின்றது.
மர்யம்(ர) அவர்கள் ஆண் தொடர்பு இல்லாமலேயே அற்புதமான முறையில் இயேசுவை ஈன்றெடுத்து வந்த போது அந்த சமூகம் இயேசுவின் தாய் தவறு செய்துவிட்டதாக எண்ணி அவர்கள் மர்யம்(ர) அவர்களைக் கண்டித்துக் கேள்வி எழுப்பும் போது இப்படிக் கேள்வி எழுப்பியதாக அல்குர்ஆன் கூறுகின்றது.
‘(ஈஸாவாகிய) அவரைச் சுமந்தவராக தனது கூட்டத்தாரிடம் (மர்யம்) அவரைக் கொண்டு வந்தபோது, ‘மர்யமே! விபரீதமான ஒரு செயலைச் செய்துவிட்டாயே!’ எனக் கூறினர்.’
‘ஹாரூனின் சகோதரியே! உமது தந்தை கெட்ட மனிதராக இருக்கவும் இல்லை. உமது தாயும் நடத்தை கெட்டவளாக இருக்கவில்லையே! (எனவும் கூறினர்.)’
(19:27-28)

உன் தந்தையும் நல்லவர், உன் தாயும் நல்லவர் நீ மட்டும் ஏன் இப்படித் தவறு செய்தாய் என்று கேட்டனர். இந்தக் கேள்விக்கு மர்யம்(ர) அவர்கள் பதிலளிக்கவில்லை. அல்லாஹ் மழழை இயேசுவைப் பேசச் செய்து மர்யம்(ர) அவர்களின் தூய்மையைப் பறைசாட்டினான். அந்த மக்கள் கேட்ட கேள்வியிலிருந்தே இயேசுவின் மூதாதையர்கள் அந்த சமூகத்தால் மதிக்கப்படத்தக்க நன்மக்களாக, கற்பொழுக்கம் உடையவர்களாக இருந்துள்ளார்கள் என்பது உறுதியாகின்றது.
இவ்வாறு அல்குர்ஆன் இயேசுவின் மூதாதையர்கள் பற்றிப் புகழ்ந்து பேசும் போது பைபிள் என்ன கூறுகின்றது என்பதைக் கவனியுங்கள்.
மத்தேயு – லூக்கா இருவரும் இயேசுவின் பரம்பரைப் பட்டியலைத் தருகின்றனர். அந்தப் பட்டியல் எம்மைக் குழப்பத்தின் உச்சக் கட்டத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகின்றது. இயேசுவுக்குத் தந்தை இல்லை தாய் மட்டுமே! உலகில் உள்ள மற்றைய அனைவரையும் விடவும் இவரது பரம்பரைப் பட்டியலைத் தருவதுதான் இலகுவானது. எனினும், மத்தேயு, லூக்கா இருவரும் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு எழுதிய சுவிஷேஷங்கள் இயேசுவின் பரம்பறை பற்றிக் கூறுவதை அவதானியுங்கள்.
dawood-to-jesus
இதில் இருவரும் ஏராளமான வித்தியாசமான தகவல்களைத் தருகின்றனர்.
1. இயேசுவின் தந்தையான யோசோப்பு அறியப்பட்டதாக இருவரும் கூறுகின்றனர். அந்த யோசோப்பின் தந்தை யார்?
‘யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்,அவளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.’ (மத்தேயு 1:16)
யோசோப்பின் தந்தை யாக்கோபு என இங்கே கூறப்படுகின்றது.
‘அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்’ (லூக்கா 3:23)
இயேசுவின் பாட்டன் பெயர் ‘ஏலி’ என்கின்றார் லூக்கா. இதில் இயேசுவின் தந்தை வளிப் பாட்டன் யார்? யாக்கோபா? ஏலியா? இருவருமா? இருவரும் இல்லையா? அல்குர்ஆன் அவருக்குத் தாய்வழி மூதாதையர் மட்டுமே உள்ளனர் என்கின்றது. இந்த இரண்டுமே சரியாக இருக்க முடியாது. வாதத்துக்காக வேண்டுமென்றால் இரண்டில் ஏதாவது ஒன்று சரியாக இருக்கலாம் என்று கூறலாம். ஒன்று சரியயென்றால் மற்றொன்று பிழையென்றாகிவிடும். எனவே, பைபில் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு எழுதப்பட்டது என்பது பொய்யாகிவிடும்.
இந்த இரண்டில் ஒன்று பொய்யாகவே இருக்க வேண்டும். இரண்டுமே உண்மையாக இருக்க எள்ளளவும் இடமில்லை என்பது மட்டுமே உறுதியானதாகும்.
2. ‘பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான், சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்’ (மத்தேயு 1:12)
அகொனியாவின் மகன் சாலாத்தியேல் வழியில் இயேசு பிறந்ததாக இங்கே கூறப்படுகின்றது.
‘யோவன்னா ரேசாவின் குமாரன், ரேசா சொரொபாபேலின் குமாரன், சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன், சலாத்தியேல் நேரியின் குமாரன்.’ (லூக்கா 3:27)
நேரி என்பவரின் மகன் சாலாத்தியேல் வழியில் இயேசு வந்ததாக லூக்கா கூறுகின்றார். தந்தை யார் என்பதைக் கூறுவதில் ஏன் இந்தத் தடுமாற்றாம்? ஒருவரின் தந்தை யார் என்பதை அடையாளப்படுத்துவதில் ஆட்டம் காண்பதை விட அவமானமான செய்தி ஏதாவது உண்டா? அதுவும் சராசரி மனிதர்கள் தள்ளாடவில்லை, பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டவர்களே இப்படித் தடுமாற்றமும், தள்ளாட்டமும் காணலாமா?

3. ‘சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்,அபியூத் எலியாக்கீமைப் பெற்றான், எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்,’ (மத்தேயு 1:13)
சொரொபாபேல் என்பவரின் மகன் அபியூத் வழியில் இயேசு பிறந்ததாக மத்தேயு கூறுகின்றார்.
‘யோவன்னா ரேசாவின் குமாரன், ரேசா சொரொபாபேலின் குமாரன், சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன், சலாத்தியேல் நேரியின் குமாரன்.’ (லூக்கா 3:27)
அவரின் மகன் ரேசா வழியில்தான் இயேசு பிறந்ததாக லூக்கா கூறுகின்றார். இதில் யார் கூறுவது சரி? யார் கூறுவது பிழை? யாரோ ஒருவர் பிழையாகக் கூறியவராகத் தானே இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு பைபிள் எழுதப்பட்டிருந்தால் அதில் எப்படி இந்தப் பிழை ஏற்பட்டிருக்க முடியும் என்பதைக் கிறிஸ்த்தவ சமூகம்தான் சிந்திக்க வேண்டும்.
இது மட்டுமன்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்ட பிரகாரம் இயேசுவிற்கும் தாவீதுக்குமிடையில் இயேசுவின் பரம்பரை மூதாதையர்களாக மத்தேயு 26 பெயர்களைக் குறிப்பிட லூக்காவோ 41 பெயர்களைக் குறிப்பிடுகின்றார். மத்தேயுவில் இல்லாத பல பெயர்களை லூக்கா கூறுகின்றார். இருக்கும் பெயர்களிலும் நாம் கூறியது போன்ற பல முரண்பாடுகள் உள்ளன. இவை அனைத்துக்கும் மேலாக இயேசுவின் மூதாதையர்களை ஒழுக்கம் கெட்டவர்களாக பைபிள் அறிமுகப்படுத்துவதுதான் வேதனையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.