ஆயுதக் குழு பூச்சாண்டி

இலங்கை முஸ்லிம் அரசியல் தலைவர்களில் அலவி மௌலானா வித்தியாசமானவர். ஆழ்ந்த அனுபவமும், சமூகப்பற்றுமிக்கவராகவும் மதிக்கப்பட்டு வருபவர். ஏனைய அரசியல்வாதிகளை அரசியல்வாதிகளாகவே பார்த்து வந்த பொதுமக்களில் சிலர் அலவி மௌலானாவை ஆன்மீகத் தலைவர் போன்று மதித்து வந்தனர்.

மார்க்கப்பற்றுமிக்க அரசியல் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்படுபவர். பொதுமாக்களால் மொளலானா, மௌலானா என அன்பாக அழைக்கப்படுபவர். இவர் அண்மையில் வெளியிட்ட சமூகத்துரோகக் கருத்துக்களால் பொதுமக்களின் வெறுப்பையும், அதிருப்தியையும் சந்திக்க ஆரம்பித்துள்ளார்.

செத்துக் கொண்டிருக்கும் தமது அசத்தியக் கருத்துக்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அண்மைக் காலமாகச் சில கயவர்கள் தமக்கு மாற்றுக் கருத்தில் இருப்பவர்களைத் தீவிரவாதிகளாகவும், ஆயுதக் குழுக்களாகவும் சித்தரித்து வந்தனர். இந்த அவதூறைக் கூறியவர்கள் சமூக அந்தஸ்து அற்றவர்கள் என்பதால் அது சமூகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தவில்லை. ஆயினும் மௌலானா போன்ற சமூக அக்கறை கொண்டவர்களும் இந்தத் துரோகத்தைச் செய்வார்கள் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஆயுதக் குழுக்களின் நடிவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் பள்ளிவாசல்களில் இக் குழுக்கள் பிளவுகளை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்த மேல்மாகாண ஆளுனர் அலவி மௌலானா இக் குழுக்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளும், தீவிரவாத அமைப்புக்களும் குறிப்பாக குவைத் நாடும் நிதியுதவி வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.
கிழக்கில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் சூபி முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேற்ற இக் குழுக்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வஹாபி இஸ்லாமியப் பாடசாலையைப் பின்பற்றும் இந்தக் குழுக்கள் சூபி முஸ்லிம்களின் மசூதிகளையும் தர்காக்களையும் தாக்கி வருவதாகவும் தெரிவித்தார்.
‘வறுமைக் கோட்டின் கீழ் வாழும் முஸ்லிம் இளைஞர்கள் இந்தத் தீவிரவாதக் குழுக்களில் இணைந்து செயற்படுகிறார்கள். பாதுகாப்புத் தரப்பினர் ஆரம்பத்தில் இக் குழுவைச் சேர்ந்த சிலரைக் கைது செய்து ஆயுதங்களை மீட்டனர். என்றாலும், தொடர்ந்து இக் குழுக்கள் கிழக்கில் செயற்பட்டு வருகின்றன’ எனவும் அலவி மௌலானா தெரிவித்துள்ளார்.
வஹாபிகள் என மௌலானா கூறுபவர்களுடன் சவுதிக்குச் சென்றால் மௌலானா கொஞ்சிக் குழாவுவார். குடும்பம், பேரப் பிள்ளைகள் சகிதம் வஹாபிகளுடன் விருந்துண்டு மகிழ்வார். ஆனால் நாட்டுக்கு வந்து அவர்களை ஆயுக் குழுக்களாகச் சித்தரிப்பார் என்றால் இதை என்னவென்று சொல்வது?
முஸ்லிம்கள் மீது தீவிரவாதக் குற்றச்சாட்டை சுமத்துவதற்காகத் துடித்துக் கொண்டிருக்கும் பேரினவாத சந்ததிகளுக்கு மௌலானா துணை போவது சமூகத் துரோகமில்லையா! இலங்கை இஸ்லாமிய இயக்கங்களுக்கு மத்தியில் கடந்த காலங்களில் இடம் பெற்ற விரும்பத்தகாத நடவடிக்கைகளை எடுத்து நோக்கினால் அங்கே மௌலானாவால் ஆயுதக் குழுக்கள் என விமர்சிக்கப்பட்டவர்கள்தான் பாதிக்கப்பட்டிருப்பார்கள். (காத்தான்குடி இதற்கு சற்று விதிவிலக்காகும்.) இந்த உண்மை எதை உணர்த்துகின்றது.
மௌலானா சமூகத்தைக் காட்டிக் கொடுக்கின்றார் எனச் சிலர் கூறுகின்றனர். முஸ்லிம்கள் மத்தியில் ஆயுதக் குழு ஒன்று இருந்து அவர்களை மௌலானா காட்டிக் கொடுத்தால் நிச்சயமாக நாம் அதைக் குறை கூற மாட்டோம். அது சமூகத்திற்குப் பயனுள்ள ஒரு பணிதான். அவர்கள் செய்யும் தவறால் முழு முஸ்லிம் சமூகமும்தான் பாதிக்கப்படும். ஆனால், இல்லாத ஆயுதக் குழுக்கள் இருப்பதாகக் கூறுவது சமூகத் துரோகம் அல்லவா? அல்லாஹ்வை மறந்து அச்சமற்றுக் கூறும் அவதூறு அல்லவா? முழுக் கிழக்கு முஸ்லிம்கள் மீதும் சந்தேகத்தை உண்டுபண்ணும் விதமாகப் பேசுவதால் ஏற்படும் பாதிப்பு என்ன? என்பதை மௌலானா அறியாதவரா? மௌலானா இந்தத் தவறுக்காக அல்லாஹ்விடம் மட்டுமல்ல இலங்கை முஸ்லிம்களிடமும் குறிப்பாக கிழக்கு மாகாகண முஸ்லிம்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும். மௌலானா தனது இறுதிக் காலத்தில் மக்களின் அதிருப்தியைச் சம்பாதிக்காமல் அல்லாஹ்வைச் சந்திக்க உறுதிபூண்டால் நல்லது!
மௌலானாவின் இந்த அவதூறுக்கு எதிராகக் காத்தான்குடிப் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அதனை அப்படியே கீழே தருகின்றோம்.
ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இந் நாட்டில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள் சம்பந்;தமாக அவர்களுடைய இருப்பு நிலைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதத்தில் பல்வேறு சிங்கள மற்றும் தமிழ் கடும் போக்காளர்கள் அவ்வப்போது முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் விதத்தில் பல்வேறு அறிக்கைகளை விடுவதை நாம் அண்மைக் காலமாக அவதானித்து வருகின்றோம். குறிப்பாக கிழக்குவாழ் முஸ்லிம்களை மையப்படுத்தியதாக பல்வேறு பொய்யான, அபாண்டமான, ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட்டு முஸ்லிம்களின் இருப்பு நிலைக்கு அச்சுறுத்தல் விடுப்பதை நாம் அவதானிக்கின்றேம்.
அரசியலை வயிற்றுப் பிழைப்புக்காகப் பயன்படுத்தும் சில அரசியல் வாதிகள் தங்களது எஜமானர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுவதால் பாரிய சிக்கல்களை இந்த முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்றது. அறபு நாடுகளில் இருக்கின்ற போராட்டக் குழுக்களோடு கிழக்கு வாழ் முஸ்லிம்களைத் தொடர்புபடுத்தி அவர்கள் அடிப்படைவாதிகள் என்றும் வஹாபிகள் என்றும் கூறி அவர்களது தூய இஸ்லாமிய வாழ்வைக் கொச்சைப் படுத்துகின்ற நடவடிக்கைகளை எமது சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
எமது நாட்டின் கிழக்கு மாகாணத்தில் வஹாபி இயக்கம் உள்ளதாகவும், அவ்வியக்கத்திற்கு அறபு நாடுகள் உதவி வழங்கி வருவதாகவும், ஆயுதப் பயிற்சி வழங்குவதாகவும் மேல்மாகாண ஆளுனர் அலவி மௌலானா அவர்கள் அறிக்கை விட்டுள்ளார். வஹாபி இயக்கம் என்று ஓர் இயக்கம் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல உலகில் எங்குமே இல்லை. அறபு நாடுகளோடு எமது நாடு சிநோகபூர்வமான உறவினைப் பேணிவரும் இக் காலகட்டத்தில் அலவி மௌலானா இவ் அறிக்கையை விட்டிருப்பதானது இலங்கையின் அறபு நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
1991.10.27 ஆம் திகதி கொழும்பு கோட்டைப் பள்ளியில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மத்திய குழுக் கூட்டத்தில் ‘இலங்கையில் இஸ்லாமியப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வரும் தஃவா இயக்கங்களான (மார்க்கப் பிரச்சார அமைப்புக்கள்) தப்லீக் ஜமா-அத், தௌஹீத் ஜமா-அத், ஜமா-அதே இஸ்லாமி ஆகிய மூன்று இயக்கங்களில் இறுதி இலட்சியம் ஒன்றாக இருப்பினும் அவை கையாளும் பிரச்சார முறைகளைப் பொறுத்தே வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவே, இந்த ஜமாஅத்துக்களில் எதுவும் வழிகெட்டது என்றோ சுன்னத் வல் ஜமா-அத் அகீதாவுக்கு மாற்றமானவை என்றோ கூற முடியாது. மூன்று ஜமாஅத்துக்களும் நேர்வழியில் உள்ளவைதான் என்பது ஜம்இய்யாவின் நிலைப்பாடாகும்’ எனத் தெளிவாக பத்வா வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் இம் மூன்று தஃவா இயக்கங்களினதும் செல்வாக்குகள் கூடிக் குறைந்த அளவுகளில் மக்களால் பின்பற்றப்படுகின்றன. சில பிரதேசங்களில் தப்லீக் ஜமா-அத்தின் செல்வாக்கு கூடுதலாகவும் சில பிரதேசங்களில் தௌஹீத் ஜமா-அத்தின் செல்வாக்கு கூடுதலாகவும் இன்னும் சில பிரதேசங்களில் ஜமா-அதே இஸ்லாமியின் செல்வாக்கு கூடுதலாகவும் காணப்படுகின்றது. இதுதான் இன்றுள்ள யதார்த்தம்.
இந்த இயக்கங்களின் வருகையின் பின்னால் இஸ்லாத்தில் சடங்கு, சம்பிரதாயமாகப் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள், மௌட்டீக கலாச்சாரம் என்பன குறைந்து கொண்டே வருகின்றன. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரே இவ்வாறான உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை விட்டு பொய்யான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
எனவே, தயவு செய்து இவ்வாறான விசமப் பிரச்சாரங்களையும், பொய்யான கதைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் முஸ்லிம்களின் இருப்பு நிலைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், விடயங்களைத் தெளிவாக ஆராய்ந்ததன் பின்னர் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்குமாறும், இது போன்ற மடத்தனமான கருத்துக்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
அரசியல், ஆன்மீகத் தலைவர்கள் நாம் பல்லின சமூகங்களுக்கு மத்தியில் ஒரு சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றோம் என்ற உண்மையை மறக்காமல் கருத்துக்களை முன்வைக்க முனைய வேண்டும் என வினயமாக வேண்டிக் கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.