அஹ்லுல் பித்ஆ | அடிப்படை அடையாளம். | Article.

நபி(ச) அவர்களது மரணத்திற்குப் பின்னர் இஸ்லாத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட சிந்தனைகள், செயல்கள், வார்த்தைகள் அனைத்தும் பித்அத்துக்கள் ஆகும். இந்த பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகளாகும். தனக்குப் பின்னர் இந்த உம்மத்தில் பித்அத்துக்கள் தோன்றும் என்றும் அப்போது நபி(ச) அவர்களது சுன்னாவையும் நேர்வழி நடந்த கலீபாக்களின் வழிமுறைகளையும் இறுகப் பற்றிப் பிடிக்கும் படியும் நபி(ச) அவர்கள் எமக்கு வஸிய்யத் செய்துள்ளார்கள். ஒரு பித்அத்தான செயல் உருவாக்கப்பட்டால் அந்த பித்அத்தைச் செய்யும் பித்அத்வாதி சுன்னாவும் மார்க்கமும் விதித்த கடமைகளுக்குக் கொடுக்காத முக்கியத்துவத்தை அதற்குக் கொடுப்பதைக் காணலாம்.

பித்அத்வாதிகளின் நிலை என்ன?
இவ்வாறே பித்அத்தான சிந்தனையை உருவாக்கும் பித்அத்வாதிகள் அதையே மார்க்கத்தின் அடிப்படையாக ஆக்குவார்கள். அதை ஏற்றவர்களை ஏற்பார்கள், ஏற்காதவர்களைக் கடுமையாக எதிர்ப்பார்கள். அவர்களின் மூச்சும் பேச்சும் ஏன் ஏச்சும் கூட அதையே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும். இது பற்றி இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும் போது இப்படி விபரிக்கின்றனர்.

منهاج السنة النبوية (5/ 95)

من شأن أهل البدع أنهم يبتدعون أقوالا يجعلونها واجبة في الدين، بل يجعلونها من الإيمان الذي لا بد منه ويكفرون من خالفهم فيها، ويستحلون دمه كفعل الخوارج والجهمية والرافضة والمعتزلة وغيرهم. وأهل السنة لا يبتدعون قولا ولا يكفرون من اجتهد فأخطأ، وإن كان مخالفا لهم مكفرا لهم مستحلا لدمائهم، كما لم تكفر الصحابة الخوارج، مع تكفيرهم لعثمان وعلي ومن والاهما، واستحلالهم لدماء المسلمين المخالفين لهم

பித்அத்வாதிகளின் நிலை என்னவென்றால் அவர்கள் மார்க்கத்தில் புதிய கொள்கைகளை உருவாக்கி அதை மார்க்கத்தில் வாஜிபானதாக ஆக்குவார்கள். அது இல்லாமல் (இஸ்லாமே) இல்லை எனும் நிலைக்கு ஈமானில் உள்ளதாக ஆக்குவார்கள். ஜஹ்மிய்யாக்கள், ராபிழாக்கள், முஃதஸிலாக்கள் போன்று அதை ஏற்காதவர்களைக் காபிர்கள் என்று கூறுவதுடன் அவர்களது இரத்தத்தை ஹலாலாகவும் ஆக்குவார்கள்.

ஆனால், அஹ்லுஸ் சுன்னாவுடையோர் புதிய கொள்கையை உருவாக்கவும் மாட்டார்கள் இஜ்திஹாத் செய்து பிழை விட்டவர்களை காபிர் என்று கூறவும் மாட்டார்கள். பித்அத்வாதிகள் தம்மைக் காபிர் என்று கூறினாலும் தமது இரத்தைத்தை ஹலாலாக ஆக்கினாலும் அஹ்லுஸ் சுன்னாவுடைய யோர் அப்படி செய்யமாட்டார்கள். உஸ்மான்(ர), அலி(ர) ஆகிய இருவரையும் அவ்விருவரின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டவர்களையும் ‘கவாரிஜ்கள்’ காபிர் என்று கூறியதுடன் இது விடயத்தில் தமக்கு முரண்பட்டால் முஸ்லிம்களின் இரத்தத்தை அவர்கள் ஹலாலாக்கிய போதும் ஸஹாபாக்கள் கவாரிஜ்களைக் காபிர்கள் என்று கூறாதது போல் அஹ்லுஸ்சுன்னாக்களும் நடந்து கொள்வார்கள்.”
(மின்ஹாஜுஸ்சுன்னா அன்னபவிய்யா: 5/95)

இமாம் இப்னு தைமிய்யாவின் இந்தக் கூற்று ஆழ்ந்து அவதானிக்கத்தக்கதாகும்.

நபி(ச) அவர்களுக்குப் பின்னர் அலி(ர) அவர்கள்தான் கலீபாவாக வர வேண்டும். இதுதான் மார்க்கத்தின் முடிவு என்ற தவறான ஒரு கருத்தை ஷீஆக்கள் உருவாக்கினர். பின்னர் அலி(ர) அவர்களுக்கு வரவேண்டிய தலைமைத்துவத்தை அபூபக்கர்(ர), உமர்(ர), உஸ்மான்(ர) ஆகியோர் தட்டிப் பறித்துவிட்டார்கள் என்றனர். அதற்கு ஏனைய நபித்தோழர்கள் துணை நின்றார்கள் என்றனர். இதனால் ஸஹாபாக்கள் முர்த்ததுகள் என்றனர். ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாக அல் இமாமா – முஸ்லிம்களின் தலைமை அஹ்லுல் பைத்துகளுக்கு வர வேண்டும் என்று நம்ப வேண்டும் என்றனர். ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாக இதை ஆக்கினார்கள். இன்று வரை இந்த சிந்தனையின் அடிப்படையில் முஸ்லிம் உம்மத்தில் வெறுப்பை விதைத்துக் கொண்டிருக்கின்றனர்.

பெரும்பாவம் செய்பவர்கள் காபிர்கள் என்ற கொள்கையைக் கவாரிஜ்கள் உருவாக்கினர். அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்காதவர்கள் காபிர்கள் என்றனர். இந்த அடிப்படையில் அலி(ர) மற்றும் முஆவியா(ர) ஆகிய இருவரையும் காபிர்கள் என்றனர். காபிர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டவர்களையும் காபிர்களைக் காபிர்கள் என்று கூறாதவர்களையும் காபிர்கள் என்றனர். பின்னர் முஸ்லிமாக இருந்து காபிர்களாக மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்றனர். சுவனத்தைக் கொண்டு சுபசோபனம் செய்யப்பட்ட உஸ்மான், அலி (ர) ஆகியவர்களைக் கொலை செய்தால் நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கொலையும் செய்தனர். பாவத்தை நன்மை எனச் செய்யும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டனர். இவ்வாறே முஃதஸிலாக்கள் உருவாகினர். இவர்கள் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற ஒரு புதிய கொள்கையை உருவாக்கினர். அதை மார்க்கத்திற்கு அடிப்படையாக ஆக்கினர். அதை ஏற்றவர்களை முஸ்லிம்கள் என்றனர். எதிர்த்தவர் களைக் காபிர்கள் என்றனர். எதிர்த்த உலமாக்களைக் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கினர்.

இவ்வாறே வரலாறு நெடுகிலும் பித்அத்வாதிகள் புதிய கொள்கையை உருவாக்கிவிட்டு தான் உருவாக்கிய அந்தக் கொள்கைக்கு அல்லாஹ்வின் வார்த்தைக்கு இல்லாத முக்கியத்துவத்தைக் கொடுத்தனர். முஸ்லிமையும் காபிரையும் பிரித்தறிவதற்கான அடையாளமாகவும் அதை ஆக்கினர்.

இவ்வாறே ‘பைஅத் பார்ட்டி’ என்று ஒரு குழு உருவானது. அவர்கள் தமக்கென அழகான ஒரு பெயரை சூட்டிக் கொண்டனர். தமது தலைவருக்கு பைஅத் செய்தவர்கள் முஸ்லிம்கள். பைஅத் செய்யாதவர்கள் காபிர்கள். பைஅத்தை முறித்தவர்கள் முர்தத் என்றனர். அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்தவர்களைப் பாவி என்றவர்கள் அமீருக்கு மாறு செய்தவர்களை முர்தத் என்றனர். அல்லாஹ்வின் வார்த்தையை விட அமீரின் வார்த்தை முக்கியத்துவ மாக்கப்பட்டது. கலிமா சொன்னாலும் எமது அமீருக்கு பைஅத் செய்யாத வரை நீங்கள் முஸ்லிம் ஆக முடியாது என்றனர்.

நீங்கள் அல்லாஹ்வை நம்பினாலும் மலக்குகளை நம்பினாலும் வேதங்களையும் தூதர்களையும் மறுமையையும் கழா கத்ரையும் நம்பினாலும் எமது தலைவரை தலைவராக ஏற்று பைஅத் செய்யாவிட்டால் முஸ்லிம் ஆக முடியாது என்றனர். இங்கே அல்லாஹ் மீதான நம்பிக்கையை விடவும், நபி மீதான நம்பிக்கையை விடவும் அமீர் மீதான நம்பிக்கை முக்கியத்துவமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறே சூனியம் இல்லை, சூனியத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை, அல்லாஹ் நாடினால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என யாராவது நம்பினால் அவர்கள் முஷ்ரிக்குகள் என்றும் சூனியம் பற்றி ஹதீஸ்கள் இருந்தாலும் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என நம்புவதில் நுணுக்கமான ஷிர்க் இருக்கின்றது. எனவே சூனியத்திற்கு பாதிப்பு உண்டு என நம்புபவர்கள் முஷ்ரிக்குகள் என்று ஒரு புதிய கொள்கையை உருவாக்கினர். பின்னர் அவர்களின் பேச்சும், மூச்சும், ஏச்சும் அதையே சுற்றிச் சுழன்றது. அதை ஏற்றவர்களை ஆய்வாளர்கள், அறிவாளிகள் என ஏற்றிப் போற்றினர். ஏற்காதவர்களைக் கூழ்முட்டைகள், அரைவேக்காடுகள், முட்டாள்கள், ஆய்வறிவற்றவர்கள் எனத் தூற்றினர். யாரெல்லாம் இந்தக் கொள்கைகளை எதிர்த்தார்களோ அவர்களைக் காபிர்கள், முஷ்ரிக்குகள், அவர்களுக்குப் பின்னால் தொழக் கூடாது என தஃவா செய்தனர். மக்கள் மத்தியில் அவர்களை அவமதிப்பதற்காக அவதூறுகளை அள்ளி வீசினர், கேவலமாகப் பேசினர். சபை மரியாதை, மேடை நாகரிகம் இல்லாமல் கேலி-கிண்டல் செய்தனர். கள்ளன் என்றனர். கமிஷன் பேர்வழிகள் என்றனர். ரியாழ் அடிமைகள் என்றனர்.

இத்தனைக்கு மத்தியிலும் அன்று ஸஹாபாக்கள் கவாரிஜ்கள் விடயத்தில் நடந்து கொண்டது போல் சுன்னா அறிஞர்கள் இவர்களுக்கு காபிர் பத்வா கொடுக்கவில்லை. கொள்கைப் பிழையை மட்டுமே எடுத்துச் சொன்னார்கள். இவர்களை அசிங்கப்படுத்த முற்படவில்லை. அவர்கள் செய்தது போல் இவர்களைப் பற்றி விமர்சனம் செய்ய இடமிருந்தும் அந்த நிலையிருந்தும் அவற்றைத் தவிர்த்து வந்தனர். இதுதான் அஹ்லுஸ்சுன்னாவின் நிலைப்பாடாகும். அல்லாஹ்வின் நாட்டம் என்னமாதிரியான குற்றச்சாட்டுக்களை அடுத்த அமைப்பினர் மீது அவர்கள் சுமத்தினார்களோ அவை அத்தனையையும் அதைவிடக் கேவலமாக அவர்களே அவர்களுக்கு ஒருவர் மற்றவரைப் பற்றி சொல்லும் நிலையை அல்லாஹ் உருவாக்கியுள்ளான்.

இதைக் கூட அவர்களைக் காயப்படுத்து வதற்காக இங்கே நாம் கூறவில்லை. இவர்கள் பற்றியெல்லாம் நாம் எவ்வளவு விமர்சனம் செய்தோம், இவர்கள் எம்மைப் பற்றி இப்படி விமர்சனம் செய்ய வில்லையே! இவர்களின் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் சின்னச் சின்ன சறுகல் வந்தாலும் அவற்றை எடுத்து இவர்களைக் கேவலப்படுத்த நாம் முற்பட்டோமே எம்மை இவர்கள் கேவலப்படுத்த எம் தொடர்பாக எத்தனை செய்திகள் வந்தன. அவற்றைப் பரப்பி எம்மைப் பழிவாங்க நினைக்காமல் அவர்கள் ஒதுங்கித்தானே நின்றனர். இவர்களுடனா நாம் இவ்வளவு கேவலமாக நடந்து கொண்டோம் என்று அவர்களின் ஈரமான இதயமுள்ளவர்கள் சிந்திப்ப தற்காகவே கூறுகின்றோம்.

இவ்வாறே உலகம் அழியும் வரை பித்அத்தான, கொள்கைகள் உருவாகிக் கொண்டே இருக்கும் அவற்றை மார்க்கத்தின் அடிப்படைகளாக மாற்றிக் கொண்டேதான் இருப்பார்கள். எந்தக் கொள்கை வந்தாலும் இது நபி(ச) அவர்களிடமும் அவர்களின் நல்லறத் தோழர்களிடமும் இருந்ததா என்று பார்க்க வேண்டும். இருந்திருந்தால் அது அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்துக்குரியது. இல்லையென்றால் நரகம் செல்லும் அஹ்லுல் பித்அத்துக்குரியது என்பதைப் புரிந்து அவற்றை விட்டும் விலகி இருக்கக் கற்றுக் கொள்வோமாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.