அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)

மனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே! எனவே, தவறு செய்யும் இயல்புடைய மனிதனுக்கு நன்மையை ஏவுவதும், தீமை குறித்து எச்சரிக்கை செய்வதும் அவசியமாகும்.

நாலுபேர் எடுத்துச் சொன்னால் தனது நடத்தைகளையும், செயற்பாடுகளையும் மாற்றிக் கொள்ளும், அல்லது அதுகுறித்து நடுநிலையோடு சிந்திக்கும் மனோ நிலையுடனேயே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். “இதைச் செய்யுங்கள்” அல்லது “அதைச் செய்யாதீர்கள்” என பலரால் அல்லது பலவிடுத்தம் வேண்டப்பட்டால் அதற்கு இணங்கி நடக்க, தீயவன்கூட முற்படலாம். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது பழமொழியாகும். மனிதனது இந்த மனோ இயல்பைப் பயன்படுத்தி அவனிடம் எழுச்சி பெறும் தீய உணர்வுகளை அழிக்கவும், அடக்கவும் மங்கி மறைந்து செல்லும் நல்லனவற்றை துலக்கி மெருகூட்டவும் அழைப்புப்பணி அவசியமாகின்றது.
மனிதர்களிலேயே சிலர் இருக்கின்றனர். அவர்கள் மற்றவர்கள் மனதில் தீய சிந்தனைகளை விதைப்பதையே வினையாகக் கொண்டவர்கள். அத்தகையவர்கள் உலோபித்தனம் செய்வார்கள்; (மற்ற) மனிதர்களை உலோபித்தனம் செய்யும்படியும் தூண்டுவார்கள். அல்லாஹ் தன் பேரருளிலிருந்து தங்களுக்குக் கொடுத்ததை (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்தும் கொள்வார்கள் அத்தகைய காபிர்களுக்கு இழிவுதரும் வேதைனையை நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (4:37) (பார்க்க 57:24) என்று கூறுகிறான்.
“அல்லாஹ்வின் பாதையைவிட்டும் மக்களைத் தடுக்கின்றான்” (4:167, 9:9, 47: 32)
இம்மறை வசனங்கள் தீமையை ஏவி நன்மையைத் தடுக்கும் சில மனிதர்களும் மக்கள் மத்தியில் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
இவ்வாறே “முனாபிக்”கான ஆண்களும் பெண்களும் நன்மையைத் தடுப்பதிலும், தீமையை ஏவுவதிலும் ஒருவர் மற்றவருக்குத் துணையாக இருப்பதாக” அல்குர்ஆன் கூறுகின்றது. (9:67)
தீமையை ஏவி நன்மையத் தடுக்கும் இச்சூழலில் தஃவாவின் அவசியம் அத்தியவசியமாகின்றது.
மக்கள் நன்மைகளை விட்டும் வெகுவேகமாக வெருண்டோடிக் கொண்டிருக்கின்றனர். தீமைகளில் கிடைக்கும் அற்பசுகம், உலகாதாயம் என்பவற்றால் கவரப்பட்டு விளக்கை நோக்கிச் செல்லும் விட்டில்களாக தீமைகளை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.
இதேவேளை ஷைய்த்தானின் தோழர்கள் நரகத்தின் வாயில்களில் நின்று கொண்டு அதன்பால் மக்களை அழைக்கும் பிரச்சாரத்தை மூலை முடுக்கெல்லாம் முடுக்கிவிட்டுள்ளனர்.
வட்டி ஹராம் என்பது இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படையாகும். இந்த வட்டியின் பக்கம் வாருங்கள் என தொலைக்காட்சி, வானொலி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் அழைப்புவிடுக்கின்றன. பத்திரிகையில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள், இனிப்பான திட்டங்கள் அன்றாடம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு தீமைக்காக தஃவா நடக்கின்றது. இஸ்லாமிய இரத்தங்கள் பலவும் வட்டியால் வார்த்தெடுக்கப்பட்டுள்ளன.
சூதாட்டம் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட ஷைய்த்தானின் செயல்களில் ஒன்றாகும். அதிஷ்டலாபச் சீட்டு லொத்தர்கள் என்ற பெயரில் நிமிடத்துக்கு நிமிடம் வானொலி தொலைக்காட்சிகளில் இதற்காக தஃவத் நடக்கிறது. பத்திரிகைகளில் பரபரப்பான விளம்பரங்கள், வீதிகள் தோறும் ஒலிபெருக்கி வைத்து இதற்காக தஃவா செய்யப்படுகிறது. இந்த ஷைய்த்தானிய அழைப்பு வீட்டுக் கதவுகளைக்கூட தட்டத் தவறவில்லை. இலங்கையில் அதிகமாக இந்தச் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களாக எமது சமூகத்தினர் காணப்படுகின்றனர்.
மது, பாவங்களின் தலைவாயிலாகும். இந்த மது பானத்திற்கான அழைப்பும் பரவலாக நடைபெறுகின்றது. இதற்காக பத்திரிகைகளில் அரைப்பக்க முழுப்பக்க கலர் விளம்பரங்கள் என்ற பெயரில் தஃவா நடைபெறுகின்றது. இவ்வாறே புகைத்தலின் பக்கம் அழைப்பதற்கும் நவீன பிரச்சார யுக்திகள் கையாளப்படுகின்றன.
ஆபாசத்தையும், வன்முறையையும், கவர்ச்சியையும் சதையையும் மட்டுமே மூலதனமாகக் கொண்ட இன்றைய சினிமாக்கள் சமூகத்தை சீரழித்து வருகின்றன. பத்திரிகை, தொலைத் தொடர்பு சாதனங்கள், பாதையோர சுவர்கள் அனைத்திலும் இன்றைய இளம் தலை முறையினரை இந்த இழிவின் பக்கம் இழுத்தெடுப்பதற்கான கவர்ச்சியான ஆபாசமான அழைப்பு(தஃவா) நடந்து கொண்டிருக்கின்றது.
வீண் கேளிக்கைகள், ஆடல் பாடல், இசைக் கச்சேரிகள், ஆண் பெண் கலப்பு நிகழ்ச்சிகள் என்பவற்றின் மூலம் எல்லா வகையான தீமைகளின் பக்கமும் மக்களைக் கவர்ந்திழுக்க கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவளிக்கப்படுகின்றன, இதற்காக சகல விதத்திலும் தொடர் பூடகங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வளவு பரவலாக தீமைக்கு ஆதரவான குரல் பலத்து ஒலிக்கும் போது நன்மையின் பால் அழைக்கும் குரல் மட்டும் பலமிழந்து போய் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தீமையின் பக்கம் மக்கள் இழுபட்டுச் செல்லும் வேகத்தையும், அதற்காக செய்யப்படும் முயற்சிகளையும் பார்க்கும் போது நன்மையின்பால் அழைத்து தீமைக்கு எதிராகக் குரல் கொடுப்பது எவ்வளவு அவசியமானது என்பதை விளங்கமுடிகின்றது.
தவறைத் தடுக்காதிருக்கலாமா?
மேலே குறிப்பிடப்பட்டது போன்று தீமைகள் புயலாய் வீசும் போது உண்மையான இறைவிசுவாசி தானுண்டு தன்பாடுண்டு என்று இருக்கமுடியுமா? அவனது உடன்பிறப்புக்கள், உற்றார் உறவினர்கள், ஊரார், மற்றார்கள் அனைவரும் அழிவின் பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கும் போது இவன் வெறுமனே பள்ளியில் முடங்கிக் கிடக்கலாமா? ஒரு நாளும் இருக்கமுடியாது. இதனைப் பின்வரும் சம்பவங்கள் எமக்கு உணர்த்துகின்றன.

சுலைமான்(அலை) அவர்கள் தன் பட்டாளத்துடன் போகும் போது ஒரு எறும்பு தனது மற்ற எறும்புக் கூட்டங்களைப் பார்த்து “எறும்புகளே! நீஙகள் உங்கள் புதருக்குள் புகுந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய படையினரும் தாம் அறியாமலேயே உங்களைத் திண்ணமாக மிதித்து விட வேண்டாம்” எனக்கூறியது. (பார்க்க 27: 17-18)
இந்த சம்பவம் மூலம் ஓர் எறும்பு தனது மற்றைய எறும்புகள் அழிந்துவிடக் கூடாது என்பதில் காட்டியிருக்கும் அக்கறையை உணரமுடிகின்றது. ஓர் எறும்பே சமூக உணர்வுடன் நடந்திருக்கும் போது எமது சகோதரர்கள் அறியாமையால், ஷிர்க்கிலும் பித்அத்துக்களிலும் ஹராம்களிலும் மூழ்கியிருக்கும் போது மது, போதை, சினிமா, புகைத்தல், வட்டி, சூது என தம்மைத்தாமே அழித்துக் கொள்ளும் காரியங்களில் ஈடுபடும் போது நாம் அவற்றைத் தடுக்காது இருக்கலாமா? அப்படி இருந்தால் இந்த எறும்பைவிட கீழான நிலைக்கல்லவா சென்றுவிடுவோம்.
இதே அத்தியாயம் மற்றுமொரு நிகழ்ச்சியைக் கூறுகின்றது. சுலைமான்(அலை)அவர்கள் தனது படையைப் பார்வையிட்டுக் கொண்டு வருகின்றார்கள். அங்கே “ஹுத்ஹுத்” என்ற பறவையைக் காணவில்லை. இந்தப் பறவை தாமதித்து வந்து அதற்குரிய காரணத்தைக் கூறாவிட்டால் அதை அறுத்துவிடுவேன்; அல்லது கடுமையாகத் தண்டிப்பேன் என்று போபத்தோடு கூறுகிறார்கள். அப்போது அந்தப் பறவை வந்து சுலைமான் நபியிடம் பின்வருமாறு கூறுகின்றது.
நீங்கள் அறியாத ஒரு செய்தியை நான் அறிந்து வந்துள்ளேன். ஸபாவில் இருந்து உறுதியான ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்துள்ளேன். அவர்களை ஒரு பெண் ஆட்சி செய்கிறாள். அந்த நாட்டில் சகல வளங்களும் காணப்படுகின்றன. மகத்தானதொரு சிம்மாசனமும் அவளுக்குண்டு. அவளும் அவளது சமூகமும் அல்லாஹ்வை வணங்காது சூரியனை வணங்குகின்றனர். ஷெய்த்தான் அவர்களது செயல்களை அவர்களுக்கு அழகாக்கி அவர்களை நேர்வழியைவிட்டு தடுத்துவிட்டான். அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டாமா? என்று கூறியது. (பார்க்க 27: 20-26)
இந்தச் செய்தியைக் கேட்ட பின் அந்தப் பெண்ணுக்கு சுலைமான் நபி தஃவா செய்து, அவள் இஸ்லாத்தில் இணைந்ததை அல்குர்ஆன் தொடந்து கூறுகின்றது.
ஒரு நாட்டு மக்கள் சூரியனை வணங்குவதைக் கண்டு ஒரு பறவை கவலை கொண்டுள்ளது. எமது சகோதரர்களில் பலர் அறியாமல் கப்று வழிபாட்டிலும் ஷிர்க்கான சடங்குளிலும் மூழ்கியுளளனர். இவற்றால் தாம் செய்கின்ற நல்லமல்களை அழித்து கொள்வதுடன், தம்மைத்தாமே நரகிற்குத் தயார்படுத்திக் கொண்டுமிருக்கின்றனர்.
இதனைக் கண்டு எமக்கு சிறிதளவாவது கவலை வரவில்லையென்றால் நாம் இந்தப் பறவையை விடக் கீழானவர்களாகவல்லவா இருப்போம். சாதாரணமாக ஒருவன் தனது அரசியல் தலைவன் அவமதிக்கப்படுவதை தாங்கிக்கொள்வதில்லை. தனது தலைவர் போட்ட கடையடைப்பை யாராவது மீறினால் இவன் சீறுகிறான், தாக்குகிறான் சாதாரண தலைவனையே இப்படி ஒருவன் வெறி கொண்டு மதிக்கும் போது ஷிர்க் செய்வதன் மூலம் அல்லாஹவுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. அல்லாஹ்வின் கட்டளைகள் பகிரங்கமாக மீறப்படுகின்றன. அப்போது அவன் சீறாமல் சிணுங்காமல் சின்னதொரு எதிர்ப்பையும் காட்டாது குறைந்தபட்சம் முகச் சுளிப்பையாவது காட்டாது கல்லுப்போல் நிற்கிறானெனில் இவனது இறை விசுவாசத்திற்கு அது ஒரு களங்கமாகிறது.
ஈமானுக்கு சிறப்பு:
அல்லாஹ்வை முஸ்லிம்களாகிய நாம் ஈமான் கொண்டுள்ளோம். நாம் சத்தியப் போதனையில் ஈடுபடும் போதுதான் எமது ஈமான் சிறப்புப்பெறுகின்றது. இந்த தஃவத் எனும் பணியால்தான் நாம் ஏனைய சமூகங்களை விட சிறப்புப் பெற்றிருக்கின்றோம். இதனை,

“மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதா யத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள், தீயதைவிட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின் மீது திடமாக நம்பிக்கை கொள்கிறீர்கள்…” (3: 110)
என்ற மேற்படி வசனத்தை நோக்கும் போது ஏலவே நாம் குறிப்பிட்டதை உணரலாம்.
பற்று:
அடுத்து ஒருவன் ஒரு கொள்கையில் எவ்வளவு தூரம் நம்பிக்கை வைத்தவன் என்பதை அந்தக் கொள்கைக்காக அவன் செய்யும் தியாகம், அது வாழ அவன் எடுக்கும் முயற்சி என்பவற்றின் மூலமே நாம் உணரமுடியும். அல்லாஹ்வை நான் ஈமான் கொண்டுள்ளேன். இஸ்லாத்தை என் வாழ்க்கைத் திட்டமாகவும், இறைதூதரை என் தலைவராகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுள்ளேன். நான் இந்த அடிப்படையில் வாழ்வேன் மற்றவர்கள் இப்படி வாழ்வதற்காக எந்த முயற்சியையும் நான் எடுக்கமாட்டேன். அதேவேளை நான் ஏற்ற கொள்கைக்கு எதிராக எவராவது செயல்பட்டால் எனக்கு எரிச்சலோ கோபமோ வராது. அதைத்தடுப்பதற்கு முற்படமாட்டேன் என்ற நிலையில் ஒருவர் வாழ்ந்தால் அவர் கொள்கைப் பற்றுடையவர் என்று எவரும் கூற மாட்டர். உண்மையும் அதுதான்.

இவ்வகையில் இஸ்லாத்தை இதயத்தில் ஏற்று அதைப்பிறருக்கும் எடுத்துச் செல்லும் போதுதான் ஒருவன் இஸ்லாம் என்ற கொள்கையில் பற்றுடையவனாக இருக்க முடியும். எனவே, இறைவன் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் தராதரத்தை மதிப்பிடும் சாதனமாக இந்த அழைப்புப்பணி அமைந்துள்ளது எனலாம்.
வாழ்க்கையின் வெற்றி:
மனித வாழ்வின் வெற்றியே இதில் தங்கியிருப்பதாக அல்குர்ஆன் கூறுகின்றது.
“நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு (நல்ல) அமல்கள் செய்து சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக் கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)” என்ற சூறா அல் அஸ்ரின் கூற்றை நோக்கும் போது அழைப்புப்பணி என்பது ஒரு இஸ்லாமியனின் இலட்சியத்துடன் இரண்டறக் கலந்ததாக இருக்க வேண்டும் என்பதை விளங்கலாம்.

முஸ்லிம் என்பதன் சிறப்பு:
முஸ்லிம் என நம்மை நாம் அறிமுகம் செய்து கொள்வதில் பெருமிதம் கொள்கின்றோம். இந்த முஸ்லிம் என்ற பெயர் அழகைப் பெறவேண்டுமானால் நாமும் நல்லமல் செய்வதுடன் பிறரையும் அதன்பால் அழைத்துக் கொண்டு நம்மை நாம் ஒரு முஸ்லிமாகப் பிரகடனப்படுத்த வேண்டும். வெறுமனே முஸ்லிம் எனக் கூறிக்கொள்வதில் அழகோ சிறப்போ இல்லை என்பதை பின்வரும் வசனம் உணர்த்துகின்றது.

“அல்லாஹ்வின்பால் (மக்களை) அழைத்து, (தானும்) நற்செயல்செய்து; நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன் என்று கூறுபவனை விட சொல்லால் மிக அழகானவன் யார்?” (41:33)
இதிலிருந்து நான் முஸ்லிம் எனக்கூறும் நமது வார்த்தை அழகு பெறவேண்டுமென்றால் தஃவாப் பணியில் நாம் ஈடுபடுதல் வேண்டும் என்பதை உணரலாம்.
மார்க்கக் கடமை:
தஃவாப் பணிபுரிவது “பர்ழுஅய்ன்” அனைவரும் அவசியம் செய்தேயாக வேண்டிய கடமையாகும். இப்பணியைச் செய்யாதபோது குற்றவாளியாக நேரிடும் என்ற கருத்தை சில அறிஞர்கள் கூறுகின்றனர். மற்றும் சிலரோ “இல்லை இது “பர்ழுகிபாயா”, சிலர் செய்துவிட்டால் மற்றவர்கள் மீதுள்ள கடமை நீங்கிவிடும். அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள்” என்பர்.
தஃவாப் பணியைப் பொறுத்த வரையில் சில போது பர்ழுஅய்னாக உள்ளது. சிலபோது பர்ழுகிபாயாவாக மாறலாம். உதாரணமாக, ஒரு சபையில் மார்க்க முரணான செயல் நடை பெறுகிறது. ஒருவர் அதனைத் தடுக்கின்றார் அத்தோடு அந்தத் தவறு கைவிடப்படுகின்றது. இந்த வேளையில் அங்கிருந்த ஒவ்வொருவரும் அந்தத் தவறைக் கண்டிக்க வேண்டியதில்லை. இப்போது ஒருவர் செய்தால் மற்றவர்கள் மீதுள்ள பொறுப்பு நீங்கிவிட்டது எனலாம்.

மேற்குறித்த அதே சந்தர்ப்பத்தில் ஒருவர் கூறியபின்னரும் அத்தவறு நடைபெறுகின்றதென்றால் அங்கிருக்கக்கூடிய மற்றவர்களும் இவருக்குத் துணையாக தமது அதிருப்தியை வெளிக்காட்டக் கடமைப்படுவர். இப்போது தஃவா பர்ழு அய்னாக மாறும் எனக்கூறலாம்.
எது எப்படியிருப்பினும் தஃவத் பணி பர்ழு-கட்டாயமானது என்பதில் கருத்து வேறுபாடில்லை. நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றும் அனைவரும் இப்பணியைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை சூறா யூசுப்பின் 108-வது வசனம் கூறுகின்றது.
தண்டனைக்கு ஆளாக நேரிடும்:
தவறைத் தடுக்கத் தவறும் போது அல்லாஹ்வின் தண்டனைக்குள்ளாக நேரிடும் அந்தத் தண்டனை தீயவர்களை மட்டுமன்றி நல்லவர்களையும் பீடித்துக் கொள்ளும். இதனை,

“உங்களில் அநியாயக்காரர்களுக்கு மட்டுமே ஏற்படாது (அனைவருக்கும் சேர்த்து ஏற்படுகின்ற) தண்டனையை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடினமானவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்” (8:25) என்ற வசனம் தெளிவாக உணர்த்துகின்றது.
ஒரு தவறு பகிரங்கமாக நடந்து அதனைத் தடுப்பதற்கான ஆற்றல் இருந்தும் தடுக்கப்படவில்லையானால் நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் அல்லாஹ்வின் தண்டனைக்குள்ளாக நேரிடும் என்பதை பல நபி மொழிகள் உணர்த்துகின்றன.
எப்படிச் செய்வது?
அழைப்புப்பணி புனிதமானதுதான். அதற்கு ஈடுஇணையற்ற நற்கூலியுள்ளது. ஆயினும் அனைவரும் இப்பணியை ஆற்றமுடியுமா? எல்லோருக்கும் மேடையில் ஏறி நின்று பயான் பண்ண முடியுமா? இது சாத்தியம்தானா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படுவது இயல்பு.

தஃவத் என்றதும் குத்பா ஓதவேண்டும்; பயான் செய்யவேண்டும் என்று கருதுவதே இதற்குக் காரண மாகும். தஃவாவில் மேற்குறித்தவை அடங்கினாலும் அவை மட்டும்தான் தஃவத் என்பதற்கில்லை.
தான் அறிந்த மார்க்கச் செய்தியை பிறருக்கு எடுத்துக் கூறுவதே தஃவத்தாகும். இதற்காக முழுமையாக மார்க்கத்தை அறிந்து தெளிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் சொல்லும் விடயத்தில் மட்டும் தெளிவு இருந்தாலும் போதுமானதாகும். இதை உணராத பலர் அழைப்புப்பணி ஆலிம்களின் கடமை என நினைக்கின்றனர்.
ஆலிம்களைவிட அதிகமாக தனிநபர் தஃவாவை செய்யும் வாய்ப்பை பொதுமக்கள் பெற்றுள்ளனர். பள்ளிக்கூட தோழர்கள், நண்பர்கள், காரியாலத்தில் சேர்ந்து பணியாற்றுகின்ற அனைவரிடமும் உரையாடல் மூலமாக தஃவாவை முன்னெடுத்துச் செல்லலாம். இதனைச் செய்வதற்கு முன்கூட்டியே தலைப்புத் தெரிவு செய்து திட்டமிட்டு உரையாட வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.

பேச்சோடு பேச்சாக, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நல்ல கருத்துக்களை முன்வைக்க முடியும். அவரிடம் காணப்படும் தவறான கருத்துக்களைக் களைய முடியும் இதற்கு யூசுப்(அலை) அவர்களது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உதாரணமாகக் கூறமுடியும்.
நபி யூசுப்(அலை) அவர்கள் சிறையில் நீண்டகாலம் இருந்தார்கள். அவர்களுடன் இன்னும் இருவர் அச்சிறையில் இருந்தனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட கனவுகளுக்குரிய விளக்கத்தை அறிந்து கொள்வதற்காக யூசுப் நபியிடம் வந்து தாம் கண்ட கனவுகளை எடுத்துக்கூறி விளக்கம் கேட்டனர். யூசுப்(அலை) அவர்கள் விளக்கம் கூறுவதற்கு முன்னரே பல தெய்வங்களை வழிபடுவது சிறந்ததா? அல்லது அனைத்தையும் அடக்கியாளும் அல்லாஹ் சிறந்தவனா? என்று கேட்டார்கள். இதன் மூலம் அவர்களது சிந்தனையில் ஏகத்துவத்தின் சிறப்பைப் பதியச் செய்தார்கள்.
இதனைத் தொடந்து அல்லாஹ்வை விட்டுவிட்டு நீங்கள் வணங்குபவைகள் அனைத்தும் போலியானவை. அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் அதுதான் சரியான மார்க்கம். என்ற கருத்துக்களை முன் வைத்தார்கள். (பார்க்க 12: 36-40)
இங்கே சிறைச்சாலையில் தன்னுடன் இருந்த வர்களிடமே யூசுப்(அலை) அவர்கள் பேச்சோடு பேச்சாக தஃவாவை முன்வைத்திருப்பதைக் காணலாம். இத்தகைய வாய்ப்புக்கள் அன்றாடம் அனைவருக்கும் ஏற்படலாம். தருணம் பார்த்திருந்து தக்க நேரத்தில் கருத்துக்களை முன்வைப்பதில் நாம் முனைப்போடு செயல்பட வேண்டும்
அழைப்புப்பணிக்காக தன்னால் முடிந்தவரை ஒத்துழைப்பு நல்குவதுகூட ஏற்றமான இபாதத்தாகவே திகழ்கின்றது. பின்வரும் இரண்டு சம்பவங்களும் இதனைத் தெளிவாக உணர்த்துகின்றன.
ஒரு கிராமத்துக்கு அல்லாஹ் இரண்டு தூதர்களை அனுப்பினான். அவ்விருவரையும் அம்மக்கள் பொய்ப்படுத்தவே, மூன்றாவது ஒரு தூதரையும் அல்லாஹ் அனுப்பினான். இருப்பினும் அம்மக்கள் நேர்வழிபெறவில்லை. மாறாக இந்தப் போதனையை நிறுத்திக் கொள்ளாவிட்டால் கல்லெறிந்தே கொன்றுவிடுவோம் என்று தூதர்களை எச்சரிக்கின்றனர். தாக்கவும் முற்படுகின்றனர்.
அப்போது அந்த ஊரின் எல்லைப்புறத்திலிருந்து ஒருமனிதர் வருகிறார். அவருடைய பெயரை ஹபீ புன்னஜ்ஜார் என அல்குர்ஆன் விளக்கவுரைகள் கூறுகின்றன. அவர் வந்து தனது சமூகத்தவர்களைப் பார்த்து;
“மக்களே! இந்த இறைதூதர்களைப் பின்பற்றுங்கள். இவர்கள் நேர்வழியில் இருக்கின்றனர். அதேவேளை உங்களிடம் மார்க்கத்தைச் சொல்வதற்காக அவர்கள் கூலியும் கேட்கவில்லை” என்றார். அப்போது ஊர்மக்கள் “நீயும் இவர்கள் கூறுவதை நம்பிவிட்டாயா?” என்று வினவுகின்றனர்.

“என்னைப் படைத்தவனை நான் எப்படி வணங்காமல் இருக்கமுடியும். நீங்களும் மறுமையில் அவன் பக்கமே மீட்டப்படுவீர்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வத்தை நான் வழிபடமாட்டேன். அல்லாஹ் எனக்கு ஒரு கஷ்டத்தைத் தர நாடிவிட்டால் இந்த போலி தெய்வங்களால் அதைத் தடுக்கமுடியாது. நிச்சயமாக நான் உங்கள் இரட்சகனை ஈமான் கொண்டுள்ளேன். நான் சொல்வதைக் கேளுங்கள்” என்றார்.
ஆத்திரப்பட்ட மக்கள் அவரைக் கொலை செய்து விட்டனர். அவர் மரணித்ததும் “நீ சுவனத்தில் நுழைந்துவிடு என்று கூறப்பட்டது” இப்பாதகத்தைச் செய்தவர்கள் அழிக்கப்பட்டார்கள். (பார்க்க 36: 13-29)
இங்கே அந்த இறைதூதர்களின் முடிவு என்ன என்பது பற்றிக் கூறப்படவில்லை. தூதர்களின் தஃவாப் பணிக்குத்துணை நின்ற மனிதர் பற்றியே பேசப்படுகின்றது. சத்தியப் போதனைக்கு துணைநின்ற அவர் செய்த தியாகத்திற்கு கூலியாக அல்லாஹ் அவருக்கு சுவனத்தை வழங்குகிறான்.
ஆலிம்கள் அழைப்புப்பணி செய்தால், அதற்கு துணை நிற்பவர்களாக பொது மக்கள் செயல்பட முடியும். நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, அவர் கூறுவதைக் கேட்க மக்களை அழைத்துவருவது, அவருக்குப் பாதுகாப்பளிப்பது, பக்கபலமாக இருப்பது, அவர் விடயத்தில் எல்லைகடந்து செல்பவர்களை அடக்குவது ஆகிய அனைத்துப் பணிகளும் அழைப்புப்பணியின் வட்டத்துக்குள் அடங்கக் கூடியவையே.
மற்றுமொரு நிகழ்ச்சியையும் இங்கே இதற்கான ஆதாரமாகக் கொள்ளமுடியும்.
மூஸா(அலை) பிர்அவ்னிடம் பிரச்சாரத்துக்காக சென்றார்கள். அப்போது பிர்அவ்னின் சபையில் அவனது குடும்பத்தைச் சேர்ந்த மறைமுகமாக ஈமான் கொண்ட ஒரு மனிதரும் இருந்தார். மூஸா(அலை) அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த பிர்அவ்ன், “நான் மூஸாவைக் கொல்லப்போகிறேன்” என்றான்.
இந்த சந்தர்ப்பத்தில் ஈமானை மறைத்துக் கொண்டிருந்த அம்மனிதர் “அல்லாஹ்தான் என் இரட்சகன் எனக் கூறியதற்காகவா ஒரு மனிதனைக் கொல்லப் போகிறீர்கள். அத்தோடு அவர் உங்களது இரட்சகனிடமிருந்து அத்தாட்சிகளை வேறு கொண்டு வந்துள்ளார். அவர் பொய் சொல்லுகிறாரெனின் அவரது பொய் அவரோடே இருக்கட்டும். அவர் உண்மை சொல்லுபவராக இருந்து, அவரைத் தண்டித்து விட்டால் அவர் எச்சரிக்கை செய்வது போன்ற அழிவுகள் நமக்கு ஏற்பட்டால் என்ன செய்வது என்று கூறினார்.
தொடர்ந்து பிர்அவ்னிடம் பேசி, கொலை செய்யும் முடிவில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றார்.
(பார்க்க 40: 28-44)

ஒரு அழைப்பாளனுக்கு ஆபத்து ஏற்படும் போது சாதுரியமாகப் பேசி அதிலிருந்து அவரைக் காத்த இந்த மனிதரை அல்லாஹ் எமக்குப் படிப்பினையாக அல்குர்ஆனில் நினைவு கூறுகின்றான். இவ்வாறு செயல்படுவது கூட தஃவாவில் ஒரு அங்கம்தான்.
எனவே, அழைப்புப்பணி அவசியமான பணியாகும். அது மார்க்கக் கடமை மட்டுமல்ல, இம்மையில் தவறுகளின் தீங்குகளிலிருந்து நம்மையும் , மனித சமூகத்தையும் காக்கும் பணியாகவும் காணப்படுகின்றது. ஒவ்வொருவரும் தனது வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப இப்பணியில் பங்கேற்க வேண்டும். இப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதன் மூலம் இம்மை மறுமையில் பயன் பெறலாம்.
இம்மாபெரும் பணியில் ஈடுபடும் பலரும் தஃவத் தப்லீகின் பெயரால் மார்க்கத்தை மறைக்கின்றனர். அது மட்டுமன்றி மறைப்பதுதான் சரியான தஃவத் அணுகுமுறை என்றுவேறு கூறி வருகின்றனர். இக்கருத்து எவ்வளவு தூரம் இஸ்லாமிய சிந்தனையை விட்டும் மாறுபட்டது என்பதைத்தொடர்ந்து நோக்குவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.