அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-5)

கருத்து வேறுபாடுகளைக் கண்டுகொள்ளக் கூடாதா?
“பிரச்சாரப் பணி புரிவோர் பிரச்சினைகளை உருவாக்கு பவர்களாக மாறிவிடலாகாது. எனவே “தஃவத்” செய்யும் போது கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் ஒரு “தாயி” தலையிடக் கூடாது. ஏனெனில், கருத்தொருமித்த விடயங்களில் தான் பிரச்சாரம் கடமையாகும். கருத்து வேறுபாட்டிற்குரிய விடயங்களில் தஃவத் என்பது இல்லை. எனவே, சமூகத்திற்கு முரணான விடயங்களை விட்டு விட்டு, சமூகத்திற்கு உடன்பாடான விடயங்களையே நாம் எமது பிரச்சார இலக்காகக் கொள்ள வேண்டும் என சில சகோதர அழைப்பாளர்கள் கருதுகின்றனர்.

மேற் குறிப்பிட்ட சிந்தனை நம்நாட்டில் கணிசமானவர்களிடம் தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது. இந்த உஸ்லூபில் (அமைப்பில்) தஃவத் பணி புரிவதே “ஹிக்மத்” தான வழியெனவும் இத்தரப்பினர் கருத்துக் கொண்டுள்ளனர். இச்சிந்தனை சரியானதா என்பதை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஆராய்வோம்.
ஒரு தனி நபருடனோ அல்லது சமூகத்துடனோ நாம் உரையாடும் போது அவர்களுக்கு உடன்பாடான விடயங்களையே நாம் தொனிப் பொருளாக கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு ஆரம்பத்திலேயே அவர்களது பாரம்பரிய நம்பிக்கைகள் அல்லது அவர்கள் சரிகண்ட விடயங்கள் போன்றவற்றைத் தாக்கும் வண்ணமோ, விமர்சிக்கும் விதத்திலோ எம் பிரச்சார அணுகுமுறை அமைந்து விடக்கூடாது. அப்படி இருந்தால் அது அவர்களை எமது எதிரிகளாக்குகின்ற அதே நேரம் தஃவத்திற்கான வாய்ப்பையும் இல்லாமலாக்கிவிடும்.
எனவே சமூக முரண்பாடான விடயங்களை ஆரம்பகாலப் பிரச்சாரத்தில் தவிர்த்தல் வேண்டும். அவ்லியாக்கள் மீது மோகமும், பக்தியும் உள்ள இடங்களில் நாம் அவ்லியாக்கள் பற்றிய தப்பான நம்பிக்கைகளை எதிர்த்துப் பேச முடியுமா? தரீக்காக்களின் செல்வாக்கு நிறைந்த இடங்களில், மத்ஹபு தலை விரித்தாடும் ஊர்களில் அவற்றை விமர்சனம் செய்யலாமா? அப்படி விமர்சனம் செய்வது உண்மையான “உஸ்லூபுத் தஃவா” வாக இருக்குமா?
எனவே, பிரச்சார களத்தில் நாம் சந்திப்பவர்கள் கொண்டுள்ள கருத்துக்கு மாற்றமான கருத்துக்களை விட்டு விட்டு இரு தரப்பிற்கும் உடன்பாடான, பிரச்சினைகளே எழ வாய்ப்பில்லாத மறுமை, ஒழுக்கம், தக்வா போன்ற பொது விடயங்களையே மையமாகக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை சில தௌஹீத் சிந்தனையாளர்களிடத்திலும் கூட எழுவதுண்டு.
எமக்கு ஏற்படும் கஷ்ட நஷ்டங்களைப் பற்றிய பயத்தை ஒரு புறம் ஓரங்கட்டி விட்டு, நடுநிலையாக சிந்தித்தால் மேற்கூறிய பிரச்சார அணுகுமுறையின் போலித் தன்மை புரிய ஆரம்பிக்கும். ஓர் இடத்தில் தவறு அல்லது தவறான சிந்தனை ஆதிக்கம் பெற்றிருந்தால் அந்த இடத்தில் அந்த தவறை அல்லது தவறான சிந்தனையை கண்டிப்பதற்கே கூடிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைத் தர்க்க ரீதியாக சிந்திப்பவர்கள் உணர முடியும். நோயுள்ளவருக்குத்தானே மருத்துவம் செய்ய வேண்டும்? அதுவும் உள்ள நோயை விட்டு விட்டு வேறு நோய்க்கு மருந்து கொடுக்க முடியாதல்லவா? அவ்லியா மோகம், தரீகத் என்பன எந்த இடத்தில் ஆதிக்கம் பெற்றுள்ளதோ அந்த இடத்தில் தானே அவை பற்றி விபரிக்க வேண்டும். நபி மார்களின் அழைப்புப் பணி பற்றிய வரலாறும் நமக்கு இதைத்தானே பாடமாகப் புகட்டுகின்றன. நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கும் போது அங்கு ஆதிக்கம் பெற்றிருந்த சிலை வணக்கத்தைதானே அதிகம் கண்டித்தார்கள்?
பிர்அவ்ன் எனும் கொடுங்கோலன் தன்னைத் தானே “உங்களில்” உயர்ந்த தெய்வம் நான் தான் எனப் பிரகடனப்படுத்தி மக்களைக் குறிப்பாக இஸ்ரவேலர்களை அடிமைப்படுத்தி அராஜகம் புரிந்து வந்தான். இவனிடம் தஃவத்திற்காக அனுப்பப்பட்ட மூஸா, ஹாரூன்(அலை) ஆகிய இருவரும் அவனிடம் சென்று பின்வருமாறு கூற வேண்டும் என அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
“அவனிடம் நீங்களிருவரும் வந்து, “நிச்சயமாக நாங்கள் உன்னுடைய ரப்பின் ரஸூல்கள் இருவர் (ஆவோம்). ஆகையால் இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பி வைப்பாயாக! அவர்களை நீ வேதனை செய்ய வேண்டாம்! உன்னுடைய ரப்பிடமிருந்து ஓர் அத்தாட்சியை உன்னிடம் திட்டமாக நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ஸலாம் (சாந்தி) ஆகிறது நேர்வழியைப் பின்பற்றியவர் மீது உண்டாவதாக என்று இருவரும் கூறுங்கள்.” (20:47)
எங்களுக்கு, “நிச்சயமாக (அல்லாஹ் விதியாக்கும் வேதனையாகிறது (நாங்கள் கொண்டு வந்ததைப்) பொய்யாக்கி புறக்கணித்துச் செல்பவனின் மீது உண்டாகும் என்று திட்டமாக வஹி அறிவிக்கப்பட்டுள்ளது” (என்றும் கூறுங்கள்) (20:48)
இங்கு உரையாடல் உடன்பாடான விடயத்தில் இருந்துதானா ஆரம்பிக்கப்படுகின்றது என்பதை அவதானித்துப் பாருங்கள்.
தன்னைத்தானே இறைவன் எனக்கூறுபவனிடம் போய் நாம் இருவரும் உன்னுடைய ரப்பின் தூதர்கள் எனக்கூறி முதல்வாக்கியத்திலேயே முரண்படுகின்றார்களே! முரண்பட்ட விடயங்களை வெளிப்படையாகப் பேசுதல் சரியல்ல என்றிருக்குமென்றால் “நாம் இருவரும் எங்களுடைய இறைவனின் தூதர்கள்” என்று மறைமுகமாகவாவது கூறியிருக்க வேண்டுமே? ஏன் பொட்டில் அடித்தாப் போல் “உன்னுடைய ரப்பின்” எனக் கூற வேண்டும்? தொடர்ந்து மூஸா, ஹாருன் (அலை) அவர்கள் கூறிய இஸ்ரவேலர்களை எம்முடன் அனுப்பிவிடு, அவர்களை சித்திரவதை செய்யாதே, நாம் கூறும் சத்தியத்தை பின்பற்றுபவர்களுக்கே அமைதியுண்டாகும். அதைப் புறக்கணித்து பொய்யாக்குபவர்களுக்கு கடின தண்டனை கிடைக்கும் போன்ற எந்த விடயமாவது பிர்அவ்னுக்கு உடன்பாடானவைகளாக உள்ளனவா? இல்லையே.!
அளவை நிறுவைகளில் மோசடி செய்து மக்களின் பொருளைச் சுரண்டி வாழ்ந்த “மத்யன்” வாசிகளிடத்தே அனுப்பப்பட்ட “ஷுஅய்ப்”(அலை) அவர்கள் மக்களுடன் முரண்படக்கூடாது என்பதற்காக இது பற்றி வாயே திறக்காமல் இருந்தார்களா? இல்லையே.
“மத்யனின் (சமூகத்தின்) பால் அவர்களுடைய சகோதரர் ஷுஅய்பை (நபியாக அனுப்பினோம்), என் சமுகத்தினரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனைத்தவிர (வேறு) எந்த நாயனும் உங்களுக்கு இல்லை. உங்களுடைய ரப்பிடமிருந்து தெளிவான ஆதாரம் திட்டமாக உங்களுக்கு வந்து விட்டது;. எனவே, அளவையும் (சரியாக அளந்து) எடையையும் (சரியாக நிறுத்து) நிறைவாக்குங்கள். மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைத் (தக்க அளவில் கொடுப்பதை)க் குறைக்காதீர்கள்: பூமியில் அது சீர்திருத்தமான பின் குழப்பம் உண்டாக்காதீர்கள்; நீங்கள் (உண்மையான) முஃமின்களாக இருந்தால் உங்களுக்கு அதுவே நன்மையாக இருக்கும் என்று அவர் கூறினார்.” (7:85)
மேற்படி வசனமும் 17:35, 12:54, 26:15, 14:84, 85 போன்ற வசனங்களும் அவர் ஏகத்துவத்திற்கு அடுத்தபடியாக இந்த மோசடியைக் கண்டித்ததாகத் தானே கூறுகின்றன.
ஒழுக்கக் கேட்டில் ஊறித்திழைத்த ஒரு கூட்டத்தில் “லூத் (அலை) அவர்கள் வாழ்கிறார்கள். நாம் வாழும் சமூகத்தில் ஒழுக்கக் கேடு சமூக அங்கீகாரம் பெற்றது என்ற அளவுக்கு முற்றிப்போயுள்ளது. எனவே இப்போதைக்கு இது பற்றி நாம் எதையும் பேசக் கூடாது. அவர்களுக்கு உடன்பாடான விடயங்களை மட்டும் பேசி “நைஸாக” ஆட்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு -அதன்பிறகு ஒரு ஐந்து பத்து வருடம் கழித்து இது கூடாது எனக் கூறினால் உள்ளம் பண்பட்ட மக்கள் உடனேயே ஏற்றுக் கொளவார்கள் என லூத் (அலை) அவர்கள் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்களா? இல்லையே!.
லூத்தையும் (நபியாக நாம் அனுப்பி வைத்தோம்). அவர் தம் சமூகத்தாரிடம், “மானக்கேடானதொரு காரியத்தை நீங்கள் செய்கின்றீர்களா? அகிலத்தாரில் எவரும் அதை (செய்வது) கொண்டு உங்களை முந்திவிடவில்லை” என்று கூறியதை (நினைவு கூறுங்கள்) ! (7:80)
நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு விட்டு இச்சைக்காக ஆண்களிடம் வருகிரீர்கள். அன்றியும், நீங்கள் வரம்பு மீறுகின்ற சமூகத்தவராக இருக்கின்றீர்கள்.” (என்றும் அவர் கூறினார்) (7:81)
மேற்படி வசனத்தின் மூலமும் 26:165, 27:54, 24:28,29 போன்ற வசனங்கள் மூலமும் அன்றைய சமூகத்தின் அங்கீகாரத்தை பெற்ற ஒழுக்கக் கேட்டை கண்டித்து சமூக எதிர்ப்பை லூத் (அலை) அவர்கள் சம்பாதித்துக் கொண்டதை உணரலாம்.
எல்லா நபிமார்களும் முதன் முதலில் போதித்த ஏகத்துவக் கொள்கை கூட அந்தந்த சமூகத்திற்கு முரண்பாடானதாக இருந்ததே ஒழிய உடன்பாடானதாக இருந்ததில்லை. இருப்பினும், கொலை, கொள்ளை, மது, விபச்சாரம் போன்ற சமூக உடன்பாட்டைத் தேடித்தரும் விடயங்களைக் கண்டிப்பதில் கவனத்தைச் செலுத்தாமல் மொத்த சமூகத்தினதும் எதிர்ப்பைத் தேடித்தரும் ஏகத்துவப் போதனையில் இருந்தே தமது தஃவத் பணியை ஆரம்பித்தனர்.
சமூகத்திற்கு முரணான விடயங்களை ஆரம்ப காலத்தில் போதிப்பது (“உஸ்லூபுத் தஃவத்”) அழைப்புப் பணியின் அணுகுமுறைக்கு முரணானது எனின் எந்த நபிக்கும் அழைப்புப் பணியின் அணுகுமுறை பற்றி சரியாகத் தெரியாது எனக் கூறப்போகின்றோமா?
மேலே நாம் குறிப்பிட்ட ஆதாரங்களினூடாக நமது “தஃவா” வை சமூகத்திற்கு உடன்பாடான விடயங்களில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்ற சிந்தனை சந்தர்ப்பத்திற்கு எமக்குச் சரியெனப்பட்டாலும் கூட நபிமார்களின் பிரச்சார அணுகுமுறைக்கு மாறுபட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அடுத்து “கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் தஃவத் பணி இல்லை” என்ற கருத்துத் தவறானது என்பது பற்றியும் நாம் விபரிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
கருத்து வேறுபாடுள்ள விடயங்களைத் தப்லீக் பணி புரிவோர் தீர்க்காவிட்டால் அல்லது குறைந்த பட்சம் கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற தெளிவையாவது மக்களுக்குக் கொடுக்காவிட்டால் வேறு யார்தான் அதைச் செய்யப் போகிறார்கள்? கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் நாங்கள் தலையிடாமல் இருந்தால் அவை தாமாக நீங்கிவிடுமா? தீர்வுதான் பிறக்குமா? இது விடயத்தில் நாம் ஒதுங்கிச் செல்வது பிரிவினையும், வேற்றுமையும் வளர துணை போவதாகவல்லவா இருக்கும்?.
“கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் தீர்ப்புக் கூறுவதற்காகவே (அல்லாஹ்) நபிமார்களுக்கு சத்திய வேதத்தை அருளினான்” (2:213)
மேலும், எதில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களோ அதனை அவர்களுக்கு நீர் விளக்கி வைப்பதற்காகவும் முஃமினான கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டியாகவும், ரஹ்மத்தாகவும் இருப்பதற்கே தவிர (இந்த) வேதத்தை (நபியே) உம்மீது நாம் இறக்கவில்லை. (16:64)
இவை போன்ற பல வசனங்கள் கருத்து முரண்பாடுள்ள விடயங்களில் தலையிட்டு அவற்றைத் தீர்வு செய்வதே சத்திய வேதத்தினதும், அதன் போதகர்களினதும் பணியாகும் என்பதைக் கூறிக் காட்டுகின்றன. தஃவத் பணிபுரியும் ஒருவர் எப்படி இம்முக்கிய பணியைப் புறக்கணித்து ஒதுங்கி வாழ முடியும்? இவ்வசனத்தை ஆழமாக நோக்கின் கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் தெளிவைக் கொடுப்பது “தாயி”யின் பணி என்பதையும், அது தான் ரஹ்மத்திற்கு மாற்றமான பிரிவினையைத் தவிர்ப்பதற்கான வழியாகவும் இருக்கும் என்பதையும் உணரலாம்.
கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் தஃவத் இல்லை என்ற கருத்து, தூரநோக்கின்மையாலும் இமாம்களின் கருத்துக்களைச் சரிவரப் புரிந்து கொள்ளாமையினாலும் விளைந்த தொன்றாகும். இது பற்றிய இமாம்களின் நிலைப்பாடு என்ன என்பதையும் ஆராய்வோம்.
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் இதுபற்றி பின்வருமாறு விபரிக்கின்றார்கள்.
நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தல் பற்றி நூற்களைத் தொகுத்த ஷாஃபி மதஹபுடைய இன்னும் ஏனைய சிந்தனையுடைய மார்க்க அறிஞர்களின் கருத்து என்னவெனில் ஆழிய ஆய்வுக்குட்பட்ட இஜ்திஹாத்துடைய அம்சங்களில் கரம் கொண்டு (பலவந்தமாக) தடுக்கப்பட மாட்டாது என்பதாகும். இஜ்திஹாத் மூலம் பெறப்பட்ட அந்த முடிவைப் பின்பற்றுமாறு எவரும் இது விடயத்தில் மாற்றுக் கருத்துடையவர்களை நிர்ப்பந்திக்க முடியாது. எனினும், இது பற்றி மாற்றுக் கருத்துடையோருடன் அறிவாதாரத்துடன் (சமரச உணர்வுடன்) உரையாடலாம். அந்த உரையாடலினூடாக ஏதாவது ஒரு கருத்து உறுதியான ஆதாரத்தையுடையது எனக்கண்டால் அதைப் பின்பற்ற வேண்டும். இது விடயத்தில் ஒருவர் மற்றொருவரைத் “தக்லீத்” பண்ணினாலும் அது மறுக்கப்படமாட்டாது.
இவ்வாறு கூறிய இமாம் அவர்கள் மனித ஆய்வுக் (இஜ்திஹாதிற்) குரிய விடயங்களுக்கு உதாரணமாக மர்மஸ்தானத்தையும், பெண்ணையும் தொட்டால் வுழு முறியுமா, முறியாதா? உண்ணக் கூடிய கால் நடைகளின் சிறுநீர் சுத்தமானதா? அசுத்தமானதா? என்பன போன்ற பல உதாரணங்களைக் குறிப்பிடுகின்றார்கள்.
(பார்க்க: பதாவா இப்னு தைமிய்யா பாகம் 30: பக்கம் 80)

இது போன்ற விடயங்களில் மாற்றுக் கருத்துடையவர்களைக் கரம் கொண்டு தடுக்கவோ அல்லது எனது கருத்தைத் தான் பின்பற்ற வேண்டும் என நிர்ப்பந்திக்கவோ எவருக்கும் அதிகாரம் இல்லை. இவற்றின் உண்மை நிலையை உரையாடலின் மூலம் கண்டறிய முயற்சிக்க வேண்டும். ஒரு முடிவுக்கு வர முடியாமல் போனாலும் கூட மாற்றுக் கருத்துடையோருடன் புரிந்துணர்வுடன் நடக்க வேண்டும். என்பதே இமாம் அவர்களின் தீர்ப்பாகும்.
இஜதிஹாத்துடைய விடயங்களில் தஃவத் இல்லை என்பதைத்தான் மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள் இஹ்திலாபான (கருத்து வேறுபாடுள்ள) விடயங்களில் தஃவத் இல்லை எனத் தவறாகப் புரிந்துள்ளனர்.
இது பற்றி குறிப்பிட முனையும் அறிஞர் கஸ்ஸாலி அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். “நாம் தடுக்க முனைகின்ற தீமை இஜ்திஹாத் செய்யாமலேயே அது தீமை என சந்தேகமற அறியக் கூடியதாக இருக்க வேண்டும்.” இஜ்திஹாத்துடைய விடயத்தில் (கருத்து வேறுபாடுள்ள விடயத்தில் அல்ல) நாம் நடவடிக்கை எடுக்க (அதாவது மாற்றுக் கருத்துடையோரைத் தடுக்க) முடியாது.
(பார்க்க: இஹ்யாஉல் உலூமுத்தீன் பாகம் 2 பக்கம் 300)

(குறிப்பு : இக்கருத்தைக் கூறிய நூலாசிரியர் அதற்கு உதாரணங்களாகக் கூறும் விடயங்களில் எமக்கு உடன்பாடு இல்லை)
இமாம் இப்னு கையிம் ஜவ்ஸி அவர்கள் இது விடயமாக “இஃலாமுல் மூவ்கியின்” எனும் தமது கிரந்தத்தில் கூறும் முடிவை இது தொடர்பான தீர்க்கமான கூற்றாக நாம் கொள்ளலாம்.
“இஹ்திலாபுடைய (கருத்து வேறுபாடுடைய) விடயங்களில் மறுப்பு (தஃவத்) செய்வது கூடாது என்ற கருத்து சரியானதல்ல. ஒரு கருத்து சுன்னாவிற்கோ, முஸ்லிம் உலக அறிஞர்களின் ஏகோபித்த முடிவுக்கோ முரணாக இருக்குமெனின் அதை மறுப்பது அவசியமானது என்பதே ஏகோபித்த முடிவாகும்.” (3/288 – 284)
எனவே, எமது பிரச்சாரத்தை சமூக உடன்பாடான கருத்துக்களுடன் சுருக்கிக் கொள்ள வேண்டும். சமூக சிந்தனைக்கு முரண்பட்ட விடயங்களை ஆரம்ப காலத்தில் பிரச்சாரம் செய்யக் கூடாது. கருத்து வேறுபாடுள்ள விடயங்களை நாம் கண்டு கொள்ளவே கூடாது, என்ற கருத்துக்கள் இஸ்லாமிய அழைப்புப் பணியின் அணுகு முறைக்குட்பட்டவையல்ல என்பதைப் புரிய முடிகின்றது.
ஆகவே, எத்தனை துன்பங்கள் துரத்தினாலும், தொல்லைகள் நிழலாக தொடர்ந்தாலும் போற்றுவோர் போற்றட்டும். புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற துணிவுடன் சத்திய முழக்கம் செய்ய வேண்டும். நீங்கள் பணிபுரியுங்கள். முடிவை அவன் கையில் விடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.