மிம்பர் மேடைகள் உயிரோட்டமாகட்டும்…

அழைப்பாளர்களுக்கு!,…

மிம்பர் மேடைகள் உயிரோட்டமாகட்டும்…

தஃவாப் பணியில் குத்பாக்களின் பங்கு மகத்தானதாகும். முஸ்லிம் சமூகத்திற்கு அல்லாஹ் தந்த மிகப்பெரும் ஊடகமாகவும் அது திகழ்கின்றது. ஒரு இடத்தில் ஆயிரம் பேரைச் சேர்க்க வேண்டும் என்றால் பல்லாயிரம் விளம்பரங்கள் செய்ய வேண்டும்.

ஆனால் எந்த விளம்பரமும் இன்றி முழு முஸ்லிம் உலகும் அல்லாஹு அக்பர் என்கின்ற அதான் ஓசைக்கு ஒன்று கூடும் ஒரு அற்புதமான திட்டத்தை இஸ்லாம் அறிமுகப்படுத்தி அதை நடைமுறைப்படுத்துவதில் வெற்றியும் கண்டுள்ளது.

ஏனைய சமூகங்களின் சமய நிகழ்ச்சிகளுக்கு மக்கள் கூடவேண்டும் என்றால் அது விடுமுறை தினமாக இருக்க வேண்டும். வர்த்தக நிலையங்களை மூடும் நேரமாக இருக்க வேண்டும். ஆனால் ஜும்ஆ நேரம் உணவு விடுதிகள் பரபரப்பாக இயங்கும் பகல் நேரமாகும். வர்த்த நிலையங்கள் பிசியாக இயங்கும் நேரம். அடுத்து வரும் இரு நாட்களும் விடுமுறை தினங்கள் என்பதால் வர்த்தக, வங்கி நடவடிக்கைகள் பரபரப்பாக இடம் பெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் யாருடைய வேண்டுதலோ, வற்புறுத்தலோ, எச்சரிக்கையோ இல்லாமல் எல்லா முஸ்லிம்களும் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு மஸ்ஜிதில் ஒன்று கூடுகின்றனர். இது இஸ்லாத்தின் மகத்தான வெற்றியின் அடையாளமாகும்.
ஜும்ஆ என்பது இஸ்லாமிய அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும். இதில் வெற்றி கண்ட நாம் ஜும்ஆ மூலம் அடைய வேண்டிய பயனை அடைந்து கொள்கின்றோமா? இத்தகைய தியாகத்தோடு வந்த மக்களுக்கு பயன்மிக்க பயான்கள் செய்யப்படுகின்றனவா? என்பது கட்டாயம் அழைப்பாளர்கள் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
உயிரோட்டமிழந்து செல்லும் மிம்பர்கள்:
குத்பாவின் முக்கியத்துவத்தை முதலில் மிம்பர் உரை நிகழ்த்தும் கதீப்கள உணர்ந்து கொள்ள வேண்டும். சாதாரண நேரத்தில் ஆற்றுகின்ற உரைக்கும் ஜும்ஆ குத்பாவுக்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. சில உலமாக்கள் சட்டைப் பையில் இருக்கும் துண்டுக்கு ஏற்ப குத்பா ஓதுகின்றனர். சிலர் எதையாவது சொல்லி அரைமணி நேரத்தை கழித்தால் சரியென்ற அடிப்படையில் செயற்படுகின்றனர். மற்றும் சிலர் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு குத்பாக்கள் அதன் உயிரோட்டத்தை இழந்துவிட்டதால் நன்மையை நாடும் மக்கள் சிலர் நேரத்திற்கு வந்து கடமைக்காக குத்பாவுக்குக் காதுகொடுத்துக் கேட்கின்றனர். மற்றும் சிலர் கடைசி நேரத்தில் வந்து கலந்து கொள்கின்றனர். இந்த நிலை நீங்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீக எழுச்சியிலும், சமூக மறுமலர்ச்சியிலும் குத்பாக்களுக்கு முக்கிய பங்குள்ளது. எனவே, கதீப்கள் சில விடயங்களை சிந்தனைக்கு எடுக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

மலக்குகளும் கேட்கின்றனர்:
ஜும்ஆ மிம்பருக்கு ஏறுவதற்கு முன்னர் ஒவ்வொரு கதீபும் எனது உரையைக் கேட்க மக்கள் மட்டுமன்றி மலக்குகளும் வந்துள்ளனர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

“வெள்ளிக்கிழமை தினத்தில் மஸ்ஜித்களின் வாயில்களில் மலக்குளால் பள்ளிக்கு வருபவர்களைப் பதியப்படுகின்றது. இமாம் (குத்பா நிகழ்த்துவதற்காக) வந்துவிட்டால் மலக்குகள் ஏட்டை மூடிவிட்டு குத்பா உரையை செவிமடுப்பார்கள் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.”
அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ)
ஆதாரம்: நஸாஈ: 1386, இப்னுமாஜா: 1092, இப்னு குஸைமா: 17691

கதீபின் உரைக்கு அல்லாஹ் கொடுத்துள்ள அந்தஸ்த்தை இந்த ஹதீஸ் எடுத்துக் காட்டுகின்றது. கதீபின் உரையை மலக்குகளும் செவிதாழ்த்திக் கேட்பார்கள் என்று நபி(ச) அவர்கள் கூறும் போது குத்பா உரையை ஏனோதானோ என்று அமைத்துக் கொள்வது எவ்வளவு அசட்டுத்தனமானது என்று சிந்தித்துப் பாருங்கள்.
கேட்பது கடமை:
குத்பா உரை நிகழ்த்தும் இமாமின் உரையை மௌனமாக இருந்து கேட்பதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. அதாவது நீங்கள் ஒரு கதீப் என்றால் அந்தப் பகுதி மக்கள் எல்லோருக்கும் உங்களது உரையை மௌனமாக இருந்து கேட்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் என்பது அர்த்தமாகும். மக்களும் தமது தொழில்களை யெல்லாம் விட்டுவிட்டு வந்து கடமைக்காக அமர்ந்து கொண்டிருக்கின்றனர். ஒரு நாட்டுத் தலைவருக்கு முன்னால் அவரது படைகள் அணிவகுத்து நிற்பது போல் உங்கள் பேச்சை அந்த மக்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த பொன்னான நேரத்தை வீணடித்து உங்களுக்கு அல்லாஹ் அவர்களுக்குக் கட்டுப் படுத்தித் தந்ததையே அர்த்தமற்றதாக நீங்கள் ஆக்கினால் இது எவ்வளவு பெரிய துரோகம் என்று எண்ணிப் பார்த்தீர்களா?

“இமாம் குத்பா ஓதும் போது உன் தோழனைப் பார்த்து நீ பேசாதே என்று கூறினாலும் நீ உனது ஜும்ஆவின் பலனை இழந்துவிட்டாய் என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.”
(புஹாரி: 934)

கதீபின் உரையைக் கேட்பதைக் கடமையாக்கி அந்த சந்தர்ப்பத்தில் தேவைக்குக் கூட அடுத்தவருடன் பேசுவதைத் தடுத்து உங்கள் உரைக்கு அல்லாஹ் அந்தஸ்த்துத் தந்திருக்கும் போது குத்பா நடத்தும் இமாம் தமது குத்பாவின் அந்தஸ்த்தையும் அதன் முக்கியத்துவத்தையும் உணராமல் ஏனோதானோ என அசட்டுத்தனமாக நடந்து கொள்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
அல்லாஹ் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான்:
ஒவ்வொரு கதீபும் இன்றைய இந்த ஜும்ஆ உரைக்காக அல்லாஹ் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான், சொல்வதை மலக்குகள் கூட கேட்டுக் கொண்டிருக்கின்றனர், நான் சொல்வதைக் கேட்பதை இந்த மக்களுக்கு அல்லாஹ் கடமையாக்கியுள்ளான், அல்லாஹ் தந்த இந்த சந்தர்ப்பத்தை என்னுடன் தனிப்பட்ட முறையில் முரண்பட்டவர்களைத் தாக்குவதற்கு, அடுத்தவர்களது மானத்தை வாங்குவதற்கு, நான்தான் பெரிய ஆள் என்பதை நிலைநாட்டுவதற்கு, இயக்க வெறியையும் வேறுபாட்டையும் வளர்ப்பதற்குப் பயன்படுத்தினால் அது மிகப்பெரும் துரோகம் என்பதை ஒவ்வொரு கதீபும் உணர வேண்டும்.

“பின்னர் நமது அடியார்களில் நாம் தேர்வு செய்தோரை அவ்வேதத்திற்கு உரித்துடையோராக்கினோம். அவர்களில் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டோரும் உள்ளனர். இன்னும் அவர்களில் நடுநிலையானோரும் உள்ளனர். அல்லாஹ்வின் அனுமதிப்படி நன்மைகளின் பால் முந்திச் செல்வோரும் அவர்களில் உள்ளனர். இதுவே பெரும் அருளாகும்.”
(35:32)
நீங்கள் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளீர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதி தனது சுயநலத்துக்காக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதைக் கண்டிக்கும் உலமாக்கள் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டு நீ சொல்வதை அவர்கள் கேட்க வேண்டும், மார்க்கத்தைச் சொல் என்று கூறி அதிகாரத்தைக் கையில் தந்ததும் அந்த மிம்பர் மேடையைப் பயன்படுத்தி சுய கோபதாபங்களைத் தீர்த்துக் கொள்ளலாமா? இது பெரிய துரோகமல்லவா?
அல்லாஹ்வைச் சார்ந்திருங்கள்:
“எந்த ஒரு மனிதருக்கும் அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் வழங்கியிருக்க, பின்னர் அவர் மக்களிடம் “அல்லாஹ்வை விட்டுவிட்டு எனக்கே அடிமைகளாக இருங்கள்” என்று கூறுவதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. எனினும், நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுப்போராக இருப்பதனாலும், கற்றுக் கொண்டிருப்பதனாலும் “இரட்சகனைச் சார்ந்தோராக நீங்கள் ஆகிவிடுங்கள்” என்றே கூற வேண்டும்.”
(3:79)

வேதத்தை மக்களுக்குக் கற்றுக் கொடுக்கக் கூடிய, வேதத்தைக் கற்ற உலமாக்கள் ரப்பானியூன்களாக எச்சந்தர்ப்பத்திலும் ரப்பைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இயக்கம் சார்ந்தவர்களாக, தனிநபர் விருப்பு-வெறுப்பு சார்ந்தவர்களாக, மனோ இச்சை மற்றும் சுயஇலாபம் சார்ந்தவர்களாக இருக்கக் கூடாது.
இந்த அடிப்படையில் கதீப்கள் மக்களை திருப்திப்படுத்த வேண்டும், நிர்வாகிகளைச் சார்ந்திருக்க வேண்டும் என்றில்லாமல் எல்லா சந்தர்ப்பங்களிலும் நீதி நெறி தவறாது ஜும்ஆ மேடையை தவறுக்கோ, தப்புக்கோ, தனிப்பட்ட விமர்சனங்களுக்கோ பயன்படுத்தாது அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். கதீப்கள் தாம் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட நபிமார்களின் வாரிசுகள்É மார்க்கத்தைச் சுமப்பவர்கள்É அதை அடுத்தவர்களுக்குக் கற்றுக் கொடுப்பவர்கள் என்ற தூய்மையான நிலைப்பாட்டைப் புரிந்து கையாண்டு பணியாற்ற வேண்டும்.
இந்த உணர்வு பிறந்துவிட்டால் குத்பாக்கள் உயிரோட்டம் பெற்றுவிடும். ஆன்மீக சக்தியைப் பெற்றுவிடும். குத்பா என்பது அல்லாஹ்வின் அஜண்டா! அது எந்த இயக்கமும் போட்ட திட்டமும் இல்லை, அரசியல் தலைமைகளின் சட்டமும் இல்லை. அது அல்லாஹ் போட்ட சட்ட-திட்டம். எனவே, அது உரிய முறையில் பேணப்பட்டால் நிச்சயமாக அது பெரிய மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் உண்டுபண்ணும் என்பதில் அணுவளவும் ஐயமில்லை. உயிரோட்டமும் உளத் தூய்மையயும் கொண்ட கதீப்களின் குத்பா உரைகள் தூக்கத்தைத் தராது. மாறாக உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தரும்.
கதீப்களின் குத்பா சம்பந்தமான மதிப்பீடு மாறி கதீப்கள் உணர்வு பெற்றுவிட்டால் குத்பா உரைகளை எப்படி நாம் அதிகூடிய பயன்தரக் கூடியதாக மாற்றிக் கொள்ளலாம் என்பது குறித்து கவனம் செலுத்தலாம். ஜும்ஆ உரை நிகழ்த்தும் இமாம்களே பழைய துண்டை தூக்கிக் கொண்டு ஏறி கடமையைச் செய்தால் சரியென்று செயற்பட்டால் அதில் நாம் பெரிய மாற்றத்தைக் காண முடியாது. கதீப்களின் மனநிலை மாறிவிட்டால், தூய உள்ளமும் உணர்வும் ஏற்பட்டுவிட்டால் குத்பாக்கள் ஆக்கபூர்வமாக அமைய என்ன செய்யலாம் என்பது குறித்து நாம் கவனம் செலுத்தலாம்.
அடுத்த இதழில் ஒரு இஸ்லாமிய ஆக்கபூர்வமான ஜும்ஆ உரை நிகழ்த்தும் கதீபாகப் பரிணமிக்க என்ன வழி என்பது குறித்து சிந்திப்போம்.
வளரும் இன்ஷா அல்லாஹ்!..

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *